Published:Updated:

ஈஷாவுக்கு ஆதரவாக நின்றேனா..?! ’காவேரி கூக்குரல்’ சர்ச்சையை விளக்கும் ரவிக்குமார் எம்.பி.

அவருடன் இத்தனை வகைகளில் முரண்படும் நான் எப்படி என் முழுமனதோடு அந்தப் பதாகையை ஏந்தியிருக்க முடியுமா என யோசித்துப் பாருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காவிரி நதியின் போக்கை மறு சீரமைப்பது மற்றும் காவிரியை நம்பி விவசாயம் செய்யும் மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்துவது என இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் "காவேரி கூக்குரல்" என்கிற முழக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

Isha
Isha

அவருடைய ஆதரவாளர்களாலும், திரைப் பிரபலங்களாலும் `காவேரி கூக்குரல்’ என்கிற பதாகை தாங்கியபடி பரப்புரை செய்யப்படுகிறது. ஒரு பக்கம், ஈஷா அமைப்பின் மீது ஏற்கெனவே இருந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவருடைய இந்தப் பரப்புரையின் மீது நம்பிக்கையற்று, விமர்சனங்களும் எழுகின்றன. இத்தகையச் சூழலில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விசிக'வின் பொதுச்செயலாளருமான ரவிக்குமார் `காவேரி கூக்குரல்' பதாகையைத் தாங்கியபடி இருக்கும் புகைப்படம் வெளியானது

கார்ப்பரேட் மர வணிகமா... காவிரி மீட்டெடுப்பா... ஈஷாவின் `காவேரி கூக்குரல்' சிக்கல்கள்!

அதிலிருந்து அவர் மீது சமூக வலைதளங்களின் வழியாக கடும் விமர்சனங்களும் வைக்கப்பட்டுள்ளன. எதன் அடிப்படையில் ஈஷா மையத்தின் பதாகையை ரவிக்குமார் தன் கையில் ஏந்தினார் என்றும் பலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதற்கான பதிலை அவரிடமே கேட்டோம்...

"என் தொகுதி மக்களுக்கு ஒரு நாளுக்கு ஆயிரம் மரக்கன்றுகள் எனக் கடந்த இருபது நாள்களுக்கும் மேலாக விநியோகித்துக் கொண்டிருக்கிறேன். காரணம் தமிழகத்திலேயே மரங்கள் குறைவாக இருக்கிற மாவட்டம் விழுப்புரம்தான். அதனால்தான் அங்கே நிலத்தடி நீரும் குறைவாக இருக்கிறது. அதற்குத் தீர்வுகாணும் பொருட்டுதான் மரக்கன்றுகள் விநியோகித்துக் கொண்டிருக்கிறேன். நான் இதைச் செய்வதால் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்னைச் சந்தித்து வருகின்றனர்.

Ravikumar MP
Ravikumar MP
Vikatan

அவ்வகையில், என் தொகுதியைச் சார்ந்த தி.மு.கவைச் சார்ந்த ஒரு குடும்பம் என்னைப் பார்ப்பதற்காக வந்திருந்தார்கள். மரக்கன்று விநியோகத்தை நான் தொடர வேண்டுமென ஊக்கப்படுத்தினார்கள். வந்தவர்கள் கிளம்பும்முன் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டுமென விரும்பினார்கள். அப்போது, வந்திருந்த தி.மு.க பிரமுகரின் மகள்தான் ஈஷாவின் பசுமை அமைப்பில் இருப்பதாகவும், அந்தத் திட்டத்தைப் பரப்பும் பொருட்டு இந்தப் பதாகையை நான் கையில் ஏந்தி ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். ஆகவே அதை எடுத்துக் கொண்டேன். அவர்கள் வற்புறுத்தியதால் மட்டுமே பதாகையைக் கையில் ஏந்தி படமெடுக்க ஒப்புக் கொண்டேன்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"புகைப்படம் எடுக்க விருப்பமில்லையா அல்லது ஜக்கிவாசுதேவ் மரக்கன்று திட்டத்தின் மீதே நம்பிக்கையில்லையா?"

Jaggi Vasudev with kollywood Actors
Jaggi Vasudev with kollywood Actors

"சமகால சூழலியல் போக்கில் தமிழகத்தில் மரக்கன்று நடுவதென்பது அவசியம். ஆனால், கர்நாடகத்தைச் சார்ந்த ஜக்கி வாசுதேவ் நம் மாநிலத்தில் பசுமையைக் கொண்டுவர, ‘காவேரி கூக்குரல்’ என முன்னெடுக்க ஏன் இவ்வளவு அக்கறை காட்டி வருகிறார் என்பதே புதிராக இருக்கிறது. கர்நாடகத்தைச் சார்ந்த அவர், கோயம்புத்தூருக்கு வந்து அங்கே ஓர் அமைப்பை உருவாக்கி தன் சிந்தனையைப் பரப்பி தமிழகத்தில் மெல்ல மெல்ல ஊடுருவப் பார்க்கிறார். அவர் காவிரியின் மீது இத்தனை உரிமை கொண்டாடுவதே நாம் சற்று கவனமாக அணுகக்கூடியது என்றுதான் சொல்லுவேன். நம்முடைய மாநிலத்தைக் காப்பாற்றுவதற்கு அவரையும் விட நமக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. காவிரியின் பெயரால் அவர் செய்யும் இந்தப் பரப்புரை அடிப்படையிலேயே சந்தேகம் எழுப்புகிறது. தமிழகத்து உரிமையான காவிரி என்கிற குறியீட்டையே அவர் தனதாக்கிக் கொள்ள முயல்கிறார், கையகப்படுத்த நினைக்கிறார் அதுதான் அடிப்படையாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம். அது மட்டுமன்றி, ஒரு மரக்கன்றின் விலை 42 ரூபாய் என அவருடைய அமைப்பு பிரசாரம் செய்கிறது. இந்தத் தொகை பலமடங்கு அதிகம். ஏன், இவ்வளவு தொகை எனக் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம். நான் என் தொகுதியில் விநியோகிக்கும் ஒரு மரக்கன்றின் விலை 8 ரூபாய் மட்டுமே. ஒரு பெரிய அமைப்பை வைத்து நடத்தும் அவர் அதைவிடக் குறைவான தொகையில்தானே விநியோகம் செய்ய வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது. இதுதவிர, அவர் காட்டை ஆக்கிரமித்தார், யானைகளின் வழித்தடங்களை கபளீகரம் செய்தார் போன்ற குற்றச்சாட்டுகளும் அவர்மீது இருக்கின்றன. அவையெல்லாம் வேறொரு தளத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை என வைத்துக் கொள்வோம். அவருடன் இத்தனை வகைகளில் முரண்படும் நான் எப்படி என் முழுமனதோடு அந்தப் பதாகையை ஏந்தியிருக்க முடியுமா என யோசித்துப் பாருங்கள்."

"இதுகுறித்து சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாள்களாக உங்கள் மீது எழும்பிய விமர்சனம் குறித்து?"

Jaggi Vasudev with Kamalhassan
Jaggi Vasudev with Kamalhassan

"சமூக வலைதளங்களின் மீதிருந்த நம்பிக்கையே தளர்ந்து வருகிறது. நாளுக்குநாள் எதிர்மறையான கருத்துகளை உருவாக்குவதற்கு மட்டுமே ஆன களமாக அது மாறிவிட்டது. யோசித்துப் பாருங்கள், கடந்த இருபது நாள்களாக நாளுக்கு ஆயிரம் மரக்கன்று என என் தொகுதி மக்களுக்கு விநியோகித்து வருகிறேன். அது தொடர்பான செய்திகளை, படங்களை என் சமூக வலைதளக் கணக்கில் பகிர்ந்து வருகிறேன். இதுவரை, அதை ஒரு செய்தியாகக் கூட யாரேனும் பகிர்ந்து இருப்பார்களா? ஆனால், நானொரு பதாகையைப் பிடித்துவிட்டேன் எனத் தெரிந்ததும் என் மீது அவதூறு கருத்துகளைப் பரப்ப ஓடி வருகிறார்கள். இதை எப்படிப் புரிந்து கொள்வது... இந்துத்துவ எதிர்ப்பாளர், சாதி, மத அடிப்படைவாதிகளின் எதிரி என்கிற என்னுடைய நிலைப்பாட்டிற்காக யாரிடமும் சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை. கடந்த முப்பதாண்டுகளாக நான் செய்த பணிகள் நான் யாரென்று அடையாளப்படுத்தும்."

கார்ப்பரேட் மர வணிகமா... காவிரி மீட்டெடுப்பா... ஈஷாவின் `காவேரி கூக்குரல்' சிக்கல்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு