Published:Updated:

``அண்ணாமலை பேசுவதையெல்லாம் சிரித்துவிட்டுக் கடந்துவிட வேண்டும்!” - சொல்கிறார் எம்.பி செந்தில்குமார்

செந்தில்குமார் எம்.பி

மழைக்காலக் கூட்டத்தொடர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து தருமபுரி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேர்காணல்...

``அண்ணாமலை பேசுவதையெல்லாம் சிரித்துவிட்டுக் கடந்துவிட வேண்டும்!” - சொல்கிறார் எம்.பி செந்தில்குமார்

மழைக்காலக் கூட்டத்தொடர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து தருமபுரி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேர்காணல்...

Published:Updated:
செந்தில்குமார் எம்.பி

மழைக்காலக் கூட்டத்தொடர், இலவசங்கள் குறித்து எழுந்திருக்கும் விமர்சனங்கள், பா.ஜ.க-வின் செயல்பாடுகள், தி.மு.க-வின் செயல்பாடுகள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்.

எம்.பி. செந்தில் குமார்
எம்.பி. செந்தில் குமார்

``மழைக்காலக் கூட்டத்தொடர் விரைவாக முடிந்துவிட்டது. இதற்கிடையே நீங்கள் நினைத்ததைப் பேசிவிட்டீர்களா?”

``நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை விவாதம், கேள்வி நேரம், நேரமில்லா நேரம் ஆகிய மூன்று சந்தர்ப்பங்களில் மட்டுமே நாம் பேச முடியும். இந்த முறை கூட்டமே ஒழுங்காக நடைபெறவில்லை. நடந்த நாள்களில் கிடைத்த நேரங்களும் சீனியர்களுக்கே கொடுக்கப்பட்டன. அதுதான் நடைமுறையும்கூட. எனக்கு நேரம் போதிய அளவு கிடைக்கவில்லை. என்றாலும், நான் கேட்க வேண்டியவற்றை துறைசார் அமைச்சர்களிடம் கொண்டு சேர்த்துவிட்டேன்.”

முதல்வர்  ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

``இலவசங்களைவைத்து வாக்கு வாங்கத்தான் முயல்கிறீர்கள் என பா.ஜ.க அரசு உங்களைக் குற்றம்சாட்டுகிறதே?”

``அரசியல் அனைவருக்கும் பொதுவானது. மக்களின் நலனுக்காக நாங்கள் சில வாக்குறுதிகளைச் சொல்கிறோம். ஆனால், அவர்கள் பாகிஸ்தானையும், இந்துத்துவாவையும்வைத்து தேர்தலை எதிர்கொள்கிறார்கள். ஆனால், எங்களுக்கு மக்கள் நலம்தான் முக்கியம். தி.மு.க-வினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வுசெய்து அங்கு என்ன தேவை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் என்ன தேவை என்பதைவைத்தே தேர்தலை எதிர்கொள்கிறோம். இது எங்கள் பாணி. இந்த பாணியைத் தேசிய அளவில் பல கட்சிகளும் பின்பற்றி வெற்றியைக் குவித்துக்கொண்டிருப்பதால் தி.மு.க-வைப் பார்த்து பா.ஜ.க-வினர் பயப்படுகிறார்கள். அதனால் இதை எதிர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள்.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பல சந்தர்ப்பங்களில் நேரடியான பல்வேறு விமர்சனங்களை வைக்கிறீர்கள். இது உங்களுக்குச் சிக்கல்களை ஏற்படுத்தாதா?”

``நான் பெரியாரின் கொள்கைகளை, கலைஞரின் கொள்கைகளைத்தானே பேசினேன்... அ.தி.மு.க-வில் நான் இல்லையே... நான் இழப்பதற்கு ஒண்ணுமே இல்லை. சின்ன வயசிலிருந்தே நான் எம்.பி-யாக வேண்டும், மருத்துவராக வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அவை நிறைவேறிவிட்டன. என் வாழ்க்கையில் இனி வேறு என்ன இருக்கிறது... என்னால் அரசியலில் என்ன மாற்றம் செய்ய முடியுமோ அதைச் செய்துவிட்டு நகர்ந்துவிட வேண்டும் என நான் நினைக்கிறேன். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை. தலைவர் கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு. அதனால்தான் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். திராவிடக் கொள்கைகளைப் பேசுவதால் எனக்கு யாரும் அறிவுரை சொல்லத் தேவையில்லை.”

செந்தில் குமார் எம்.பி ட்வீட்
செந்தில் குமார் எம்.பி ட்வீட்

``தி.மு.க கூட்டங்களுக்கு ஆள்பிடிக்கும் வேலையைத்தான் அமைச்சர்கள் செய்கிறார்கள் என அண்ணாமலை விமர்சித்திருக்கிறாரே?”

``நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, நாட்டின் பல மாநிலங்களின் சட்டப்பேரவையில் பா.ஜ.க-வின் பின்னணியில் இருப்பவர்கள் எத்தனை பேர் மாற்றுக்கட்சியினர் என்ற கணக்கைச் சொன்னால் அண்ணாமலை என்ன செய்வார்... அண்ணாமலை பேசுவதையெல்லாம் சிரித்துவிட்டுக் கடந்துவிட வேண்டும். சீரியஸாக எடுத்து விவாதித்துக்கொண்டிருக்கத் தேவையில்லை.”

``தமிழ்நாட்டு பா.ஜ.க - தேசிய பா.ஜ.க... யார் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்?”

``தேசிய பா.ஜ.க-வைப் பாராட்ட வேண்டும். அவர்களின் ஒரே நோக்கம் தேர்தலில் வெற்றிபெறுவது மட்டும்தான். ஒரு தேர்தலில் வெற்றிபெற்றால் அடுத்த தேர்தலுக்கு நேரம் இருக்கிறதே என உறங்கப் போய்விட மாட்டார்கள். அடுத்த தேர்தலுக்கு எப்படித் தயாராக வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துவார்கள். தமிழ்நாட்டில் வளர்வதற்கான வாய்ப்புகளை அவர்களே கெடுத்துக்கொள்கிறார்கள். மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல் நோக்கத்துக்குச் செயல்படுகிறார்கள். தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டு ஆட்சியைப் பிடிப்போம் பிடிப்போம் எனச் சொல்வது நகைச்சுவையாக இருக்கிறது.”

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி

``அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சொன்ன பிறகு ஆகமம் என்ற ஒன்று தேவையா?”

``ஆகமங்களைக் கற்றவர்களைத்தான் நாம் முதன்முதலில் தேர்வு செய்திருக்கிறோம். சொல்லப்போனால், ஆகமம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. அவர்கள் என்ன நோக்கத்தில் சொன்னார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு பேசுகிறேன்.”

``சமூகநீதியில் தி.மு.க சமரசம் செய்துகொண்டிருக்கிறதா?”

``பட்டியலினத்துக்கு எதிரானவர்களுக்கு நடக்கும் வன்முறைகள் ஆண்டாண்டு காலமாக இருக்கிறது. அதைக் குறைப்பதற்கான முன்னெடுப்புகளை தி.மு.க அரசு தீவிரமாகச் செய்துகொண்டிருக்கிறது. சமூகநீதியில் தி.மு.க-வினர் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. இந்து மதப் பற்றாளர்களை வைத்துக்கொண்டுதான் இதுநாள்வரை அண்ணாவும் கலைஞரும் தி.மு.க-வை வழிநடத்தி வந்திருக்கிறார்கள். திராவிடக் கொள்கையை வைத்து இறங்கி அடிக்கத் தயங்கக் கூடாது. திராவிடம்தான் பலம். கடவுள் ஏற்பாளர்களும் பெரியாரை நேசிப்பவர்களாக இருப்பார்கள். தனது கொள்கையில் அந்த அளவுக்கு தி.மு.க உறுதியாக நிற்கிறதே அதுதான் அதன் பலம்.”

கலைஞர் கருணாநிதி- அண்ணா
கலைஞர் கருணாநிதி- அண்ணா

``இப்போது இருக்கும் தி.மு.க இளைஞர்களுக்கு, இனி வருபவர்களுக்கு நீங்கள் சொல்லும் அட்வைஸ் என்ன?”

``இளைஞர்களால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி தி.மு.க. இடையில் சிறு தொய்வு ஏற்பட்டாலும், கலைஞரின் இறப்பின்போது எத்தனை லட்சம் இளைஞர்கள் இன்னும் தி.மு.க-மீது அதீத பற்றுடன் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி பல லட்சம் பேரைக் கட்சியில் சேர்த்தார். சேர்த்தால் மட்டும் போதாது. தி.மு.க குறித்து அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாசறைகலை நடத்திவருகிறார். கலைஞர் வாழ்க்கையை ஆவணப்படுத்த வேண்டும். இப்படிச் செய்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. நம்மை நம்பி வரும் இளைஞர்களை நாம் பயன்படுத்த வேண்டும்.”