தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் பேரவையின் சார்பில், ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு முறையான ஓய்வூதியம், ஊதிய உயர்வு உட்பட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று அறப்போராட்டம் நடைபெற்றது. இதில், வி.சி.க தலைவரும், எம்.பி-யுமான திருமாவளவனும் கலந்துகொண்டார். அதன் பிறகு திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது ஆதீனத்தை பல்லக்கில் தூக்குவதற்கு அரசு தடைவிதித்தது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், ``ஆதீனத்தில் பணியாற்றுபவர்கள் விரும்பினால் அதைச் செய்யட்டும், அதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் மரபு, நடைமுறை என்கிற பெயரில் உழைக்கிற மக்களின் தோள்களில் இதைச் சுமத்துவது ஏற்புடையது அல்ல" என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து, மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட விவகாரத்தில், திருமாவளவன் மற்றும் முதல்வரைக் குறித்து கங்கை அமரன் விமர்சித்தது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ``அவர் எங்களை விமர்சிக்கவில்லை, கேள்வி எழுப்பியிருக்கிறார். திருமாவளவனை ஒப்பிடலாமா, முதல்வரை ஒப்பிடலாமா என்றெல்லாம் கேள்வியெழுப்பியிருக்கிறார். அவருக்கு இதை யாரோ சொல்லித் தந்திருக்கிறார்கள். சங்கிகள் அல்லது சங் பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்கள். அதாவது, கொள்கை அடிப்படையில் ஒருமித்த கருத்துள்ளவர்களை ஒப்பிடுவது தவறு இல்லை. அம்பேத்கர் யாருடனும் ஒப்பிடக் கூடாதவர் என்று நாம் சொல்லவில்லை. யாரோடும் ஒப்பிடலாம், ஒப்பிடுவதில் தவறில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், மோடி அவர்களின் அரசியல் என்பது, அம்பேத்கரின் அரசியலுக்கு நேர் எதிரானது. அவர் (மோடி) சங் பரிவாரங்களின் கும்பலில் உள்ள ஒரு தலைவர். அவர் பிரதமராக இருந்தாலும்கூட அவருடைய கொள்கை, நிலைப்பாடு, செயல்பாடு எல்லாம் சமத்துவத்துக்கு எதிரானவை. சமூகநீதிக்கு எதிரானவை. ஜனநாயகத்துக்கு எதிரானவை. விளிம்புநிலை மக்களுக்கு எதிரானவை. சாதியை காப்பாற்றக் கூடியவை. வர்ணாசிரமத்தை காப்பாற்றக்கூடியவை. மனுதர்மத்தைக் காப்பாற்றக்கூடியவை. இது இசைஞானிக்குத் தெரியாது. அவர் உடன்பிறப்புக்கும் தெரியாது. யாரோ அவர்களை இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள்மீது நான் பரிதாபப்படுகிறேன்" என்றார்.