Published:Updated:

``நாதுராம் கோட்சே அம்பேத்கரைத்தான் கொன்றிருக்க வேண்டும்..!” - சீறிய திருமாவளவன் எம்.பி

திருமாவளவன்

``உள்துறை அமைச்சராக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தடைசெய்த சர்தார் வல்லபாய் பட்டேல், அது ஓர் அபாயகரமான, பயங்கரவாத, நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய இயக்கம் என்று வாக்குமூலம் கொடுத்தார்.” – நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன்.

``நாதுராம் கோட்சே அம்பேத்கரைத்தான் கொன்றிருக்க வேண்டும்..!” - சீறிய திருமாவளவன் எம்.பி

``உள்துறை அமைச்சராக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தடைசெய்த சர்தார் வல்லபாய் பட்டேல், அது ஓர் அபாயகரமான, பயங்கரவாத, நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய இயக்கம் என்று வாக்குமூலம் கொடுத்தார்.” – நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன்.

Published:Updated:
திருமாவளவன்

புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் ‘கூட்டாட்சிக் கோட்பாடும் நாடாளுமன்ற சனநாயகமும்’ என்ற தலைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று இரவு கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான தொல்.திருமாவளவன் தலைமை தாங்கிய அந்தக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சலீம், தி.மு.க சார்பில் புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், மாநில அமைப்பாளருமான சிவா உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் பேசிய திருமாவளவன், அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய பாபாசாகேப் அம்பேத்கர், எந்த நோக்கத்துக்காக அதை இயற்றினார், அதன் மூலம் இந்தியா அடைய விரும்புகிற அரசியல், சமுதாய மற்றும் பொருளாதார சூழல்களோடு ஃபெடரல் கூட்டாட்சித் தத்துவத்துவத்தின் அவசியத்தையும் எடுத்துக் கூறினார். மேலும், The Preamble அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையிலுள்ள Sovereign – இறையாண்மை, Socialist – சமதர்மம், Secular – மதச்சார்பின்மை, Democratic – மக்களாட்சி, Justice – சமூகம், பொருளாதார மற்றும் அரசியல் நீதி, Liberty – உரிமை, சுதந்திரம், Equality – சமத்துவம், Fraternity – சகோதரத்துவம் போன்ற முக்கிய கலைச் சொற்கள் சேர்க்கப்பட்டதற்கான விளக்கத்தை சாமானியரும் புரிந்துகொள்ளும் வண்ணம் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ``மாநில அரசுகளுக்கு ஒத்திசைவு பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகள் தொடர்பாக சட்டம் இயற்றக்கூடிய அதிகாரம் உண்டா இல்லையா... மாநில அரசுகளின் அதிகாரங்கள் என்னென்ன... ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான உறவு என்ன... இந்திய அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்தக்கூடிய கூட்டாட்சிக் கோட்பாடு எந்த நிலையில் இருக்கிறது... இவை விவாதிக்கப்படவேண்டிய, உரையாடலாக மாற்றப்படவேண்டிய, தேசிய அளவிலான உரையாடலாக முன்னெடுத்துச் செல்லப்படவேண்டிய ஒரு தேவையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உணர்ந்திருக்கிறது. அதனால்தான் இந்தக் கருத்தரங்கை ஒருங்கிணைத்திருக்கிறோம்.

கருத்தரங்கு மேடையில் தலைவர்கள்
கருத்தரங்கு மேடையில் தலைவர்கள்

தமிழ் பேச, தமிழுக்கென்று ஒரு மாநிலம் இருக்கிறது. ஒரு நிலப்பரப்பு இருக்கிறது. ஆனால் இந்தி பேசுவதற்கு இந்தி என்ற ஒரு மொழியே கிடையாது. 13 மொழிகளை ஒன்றிணைத்து அதை இந்தி என்கிறார்கள். இந்தி என்று தனியாக ஒரு மொழியே கிடையாது. அந்த 13 மொழிகளுக்கும் ஒரேயொரு ஸ்க்ரிப்ட் இருக்கிறது. அதுதான் தேவநாகரி ஸ்கிரிப்ட். சத்தீஸ்கர், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் தனித்தனி மொழியைப் பேசுகிறார்கள். ஆனால், அவர்கள் அத்தனை பேரும் பயன்படுத்தக்கூடிய ஒரே ஸ்கிரிப்ட் தேவநாகரிதான்.

நாம் பார்க்கும் இந்தி எழுத்துகளுக்குப் பெயர் தேவநாகரி ஸ்க்ரிப்ட். இந்து என்று ஒரு தனி மதம் இல்லை என்பதைப்போல இந்தி என்றும் தனியாக ஒரு மொழி இல்லை. வெள்ளைக்காரர்கள் வந்த பிறகு அவர்கள் உருவாக்கிய ஒரு சொற்றொடர்தான் இந்து. சைவம். வைணவம், சக்தியை வழிபடும் சாந்தம், முருகனை வழிபடக்கூடிய கௌமாரம், கணபதியை வழிபடக்கூடிய காணாபத்தியம், சூரியனை வழிபடக்கூடிய சௌரம் போன்ற மதங்கள் இருந்தன. இந்த ஆறு மதங்களையும் ஆதிசங்கரர் ஒருங்கிணைத்தார். அப்போது அவர்கூட இந்து என்று பெயர் வைக்கவில்லை. கடந்த 200 வருடங்களில் வெள்ளைக்காரர்கள் வந்த பிறகுதான் அந்தப் பெயர் உருவெடுத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போஜ்புரி என்று ஒரு மொழி இருக்கிறது. ஆனால் இவர்கள் அதை இந்தி என்கிறார்கள். மைதிலி என்று ஒரு மொழி இருக்கிறது அதையும் இந்தி என்கிறார்கள். பந்தேலி என்று ஒரு மொழி இருக்கிறது அதை இந்தி என்கிறார்கள். இந்த மொழிகளையெல்லாம் இணைத்துத்தான் அதை இந்தி என்று கூறுகிறார்கள். அப்படிப் பார்த்தால் இந்திக்கென்று ஒரு தனி நிலப்பரப்பு கிடையாது. ஆனால் தமிழுக்கென்று ஏழு கோடி மக்கள் வசிக்கக்கூடிய ஒரு நிலப்பரப்பு இருக்கிறது. ஆக மொழி அடிப்படையில், தேசிய இனங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மாநிலத்தை `தேசிய இனத்தின் நிலப்பரப்பு’ என்று கூறலாம். இந்த அரசுகள் ஒன்று சேர்ந்து, ஒருங்கிணைந்து இயங்கக்கூடிய அரசாக இந்திய ஒன்றிய அரசு இருக்கிறது.

அதனால் இதில் கூட்டமைப்பு கட்டமைப்பு இருக்கிறது. கூட்டாட்சி தன்மை இருக்கிறது. அதைச் சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். நாதுராம் கோட்சே காந்தியடிகளை ஏன் சுட்டுக் கொன்றார்? சொல்லப் போனால் நாதுராம் கோட்சே அம்பேத்கரைத்தான் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும். அவர் ஒருவர்தான் இந்திய அளவில் அந்தச் சக்திகளின் முகத்திரையை கிழித்தவரே தவிர, காந்தியடிகள் அல்ல. நான் பிறக்கும்போது இந்துவாகப் பிறந்திருக்கலாம். ஆனால் இந்துவாக சாக மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்து ஒரே நாளில் பல லட்சம் பேருடன் ஒரு மதத்திலிருந்து வெளியேறிய அரசியல் நிகழ்வு உலகத்தில் வேறு எங்கும் இல்லை. இந்தியாவில் புரட்சித் தலைவர் அம்பேத்கர் அவர்களின் தலைமையில்தான் நடந்தது.

காந்தியடிகள் - கோட்சே
காந்தியடிகள் - கோட்சே

சனாதன சக்திகளின் உண்மையான எதிரி அம்பேத்கர்தான். அப்படி இருக்கும்போது நாதுராம் கோட்சே அம்பேத்கரைச் சுடாமல் ஏன் காந்தியாரைச் சுட்டார் ? பட்டேலுக்கு சிலை வைக்கும் சனாதன கும்பல் ஏன் காந்தியாருக்குச் சிலை வைக்கவில்லை என்பதை நுட்பமாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ்காரரான பட்டேல், நேரு காலத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தடைசெய்த பட்டேல், ‘ஆர்.எஸ்.எஸ் என்பது ஓர் அபாயகரமான இயக்கம், பயங்கரவாத இயக்கம், நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய இயக்கம்’ என்று உள்துறை அமைச்சராக இருந்தபோது வாக்குமூலம் கொடுத்தார்.

ஆனால் அப்படிப்பட்ட பட்டேலுக்கு இவர்கள் சிலை வைத்ததற்குக் காரணம், காந்தியாரைச் சிறுமைப்படுத்துவதற்காக. நாதுராம் கோட்சேவை இவர்கள் இன்று உயர்த்திப் பிடிப்பதற்குக் காரணமும் அதுதான். `இந்தியாவின் தேசத் தந்தை’ என்று போற்றப்படக்கூடிய காந்தியடிகளுக்கு அல்லவா அவர்கள் ரூ.5,000 கோடியில் சிலை எழுப்பியிருக்க வேண்டும்? பட்டேலுக்கு சிலை வைத்ததன் நோக்கம் பட்டேல் சாதியினரின் வாக்கு மட்டுமல்ல, காந்தியடிகளைச் சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்குத்தான். ஏனென்றால், இந்தியா மதம் சார்ந்த நாடு என்று அறிவிப்பதற்கு காந்தியடிகள் ஒப்புக்கொள்ளவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காந்தியடிகள் தீவிரமான மதவாதிதான். அவர் சுட்டுக்கொல்லப்பட்டபோது ‘ஹே ராம்’ என்று சொல்லிவிட்டுத்தான் மண்ணிலே சாய்ந்தார். அதை யாரும் மறுப்பதற்கில்லை. அவர் தீவிரமான ராம பக்தர்தான். சொல்லப்போனால் இந்த சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர். `சாதியமைப்புகள் இருக்கட்டும், தீண்டாமை வேண்டாம். சகோதரர்களாக வாழ்வோம்’ என்று சொன்னவர்தான். வருணாசிர தர்மத்தை இறைவன்தான் உருவாக்கினான் என்று நம்பிக்கை கொண்டவர். அப்படிப்பட்டவரை ஏன் கொன்றார்கள் என்றால் இந்து ராஷ்டிரம் அமைவதற்கு அவர் உடன்படவில்லை. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று சொன்னவர்.

`ஒரு களிமண்ணை எடுத்து இந்து, முஸ்லிம் என்று இரு வேறு பானைகளைச் செய்திருக்கிறோம். ஆனால் இரண்டும் ஒரே மண்தான். நாம் அனைவரும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான். இந்தப் பானைகளைப் போட்டு உடைத்துவிடாதீர்கள்’ என்று சொன்னவர் காந்தியடிகள். பாகிஸ்தான் பிரிந்துபோனபோது இரு தரப்பிலும் வன்முறைகள் நிகழ்கின்றன. லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள். சொத்துகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட நேரத்தில் ’பாகிஸ்தான் உருவாவதற்கு இந்த அரசு தருவதாக ஒப்புக்கொண்ட தொகையின் இறுதித் தவணையை உடனே கொடுங்கள்’ என்று நேருவிடம் கோரிக்கை வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் காந்தியடிகள்.

அம்பேத்கர்
அம்பேத்கர்

பாகிஸ்தானுக்குச் செல்லாமல், `இந்தியா என் தாய்நாடு’ என்று கூறி இங்கேயே இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு கொடு என்றார். இதுதான் அவர் செய்த பிழை. இதற்காக காந்தியடிகளை சுட்டுக் கொன்ற கும்பல்தான் நாதுராம் கோட்சே கும்பல். இந்து முஸ்லிம் ஒற்றுமையை, முஸ்லிம்களின் உரிமையைப் பாதுகாப்பதற்காக தனது உயிரைத் தியாகம் செய்தவர் காந்தியடிகள். அவர் இந்து மதத்தை ஆதரித்தவர் என்றாலும் மதவெறி தேசியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மதவெறி அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நாட்டை மதச்சார்பற்ற நாடு என்றுதான் அறிவிக்க வேண்டும் என்றார்.

காந்தியடிகளுடன் நாம் உடன்படும் புள்ளி அதுதான். ஆனால் கோல்வாக்கரால் உருவாக்கப்பட்ட அந்தக் கும்பல் அந்தக் காலத்திலிருந்து இந்த நாட்டை இந்து ராஷ்டிரம் என்று அறிவிக்க வேண்டும் என்கிறார்கள். அந்த நாளில் தொடங்கிய முஸ்லிம் வெறுப்புதான் இன்றைக்கும் தொடர்கிறது. ஏனென்றால், அவர்கள் இந்த நாட்டுக்கு இந்து ராஷ்டிரம் என்று பெயர் வைக்க வேண்டும். அதற்குத் தடையாக இருப்பது அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டம்தான். அப்புறம் ஏன் அவர்கள் அம்பேத்கருக்கு ஜயந்தி கொண்டாடுகிறார்கள்? அதுதான் சூழ்ச்சி. இந்தியா முழுவதிலும் 30% இருக்கும் தலித் மற்றும் பழங்குடி மக்களை அரசியல்ரீதியாக பகைத்துக்கொள்ளக் கூடாது என்ற முடிவை எடுக்கிறார்கள்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் பா.ஜ.க-வில் இருக்கிறான் என்றால் அவன் அப்பட்டமான சுயநலவாதி என்றுதான் அர்த்தம். தனிப்பட்ட முறையில் அவன் பதவி வாங்கலாம். ஆனால் இந்த சமூகத்துக்கு என்ன பலன் உள்ளது... அவர்களால் சாதியை ஒழிக்க முடியுமா? `இந்தியாவில் நாங்கள் சாதியை ஒழிப்போம், சகோதரத்துவத்தை நிலைநாட்டுவோம், அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் சமத்துவத்தை வென்றெடுப்போம்’ என்று பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவரைப் பேசச் சொல்லுங்கள். நான் இந்த அரசியலைவிட்டே வெளியேறுகிறேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைக் கலைத்துவிடுகிறேன்.

ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்

ஆனால், அதை அவர்கள் சொல்ல மாட்டார்கள். சனாதன இந்தியாவில் சமத்துவம், சகோதரத்துவம், நீதி, சுதந்திரம் என எதுவுமே கிடையாது. சகோதரத்துவம் இருந்தால்தான் சமத்துவம் வரும், சுதந்திரம் இருந்தால்தான் சகோதரத்துவம் இருக்கும். நீதி கிடைத்தால்தான் இந்த மூன்றும் கிடைக்கும். ஒன்றோடொன்று இவை தொடர்புடையவை. சனாதனத்தை வளர்ப்பதற்கு இவர்கள் பாபர் மசூதியை இடிக்க கடப்பாறையை தூக்கியதைப்போல நாம் போகவேண்டிய அவசியமில்லை. அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் ஒன்றே போதும்.

உழைக்கிற மக்களை ஏய்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பகுத்தறிவு மூலமாகச் சிந்திக்கக் கூடாது என்கிற வகையிலே புராண குப்பைகளை இவர்களது மூளையில் திணித்துள்ளனர். இந்திய சமூகக் கட்டமைப்பை இந்த நிலைக்கு ஆளாக்கியதில் இரண்டு முக்கிய புராண இதிகாசங்களுக்கு பங்கிருக்கிறது. ஒன்று, ராமாயணம். மற்றொன்று, மகாபாரதம். இந்த இரண்டு இதிகாசங்கள்தான் இந்திய சமூகத்தை, சகோதரத்துவத்தை, சுதந்திரத்தைச் சிதைத்து, காட்டுமிராண்டி சமூகங்களைப்போல எந்தத் தொடர்பும் இல்லாமல், தனித்தனித் தீவுகளாக இந்தச் சமூகங்களை மாற்றி அமைத்திருக்கின்றன. ஆனா ஆவன்னா அரிச்சுவடி படிக்காதவனுக்குக்கூட ராமன் லட்சுமணன் கதை தெரியும். பள்ளிக்கூடம் பக்கமே போயிருக்க மாட்டான்.

ஆனால் அவனுக்கு மகாபாரதத்தின் பஞ்ச பாண்டவர்கள் பற்றிய கதை தெரியும். இப்படி படிக்காதவன் உள்ளத்தில் கொண்டு போய் விதைத்தார்கள். குலத்துக்கு ஒரு நீதி, பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு, பிராமணர்களே எல்லாருக்கும் மேலானவன், உயர்ந்தவன் என்கிற இந்தக் கதைகளெல்லாம் கற்பிதமாக நிலை நிறுத்தினார்கள். இந்தச் சமூக கட்டமைப்பு மீது யாராலும் கைவைக்க முடியவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்தச் சமூக ஒழுங்கை ஒரே நபர் தனது பேனாமுனையால் அடித்து நொறுக்கி, சிதைத்துக்கொண்டிருக்கிறார் என்றால் அந்தப் பெருமை அம்பேத்கரையே சாரும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது வெறும் சட்டம் அல்ல, அது ஒரு கோட்பாடு” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism