`ஒழுங்கா வேலை பாக்கலைனா...கட்டாய ஓய்வு!' - மத்தியப்பிரதேச அரசு கண்டிப்பு

சரியான முறையில் பணியாற்றாத அரசு ஊழியர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப மத்தியப்பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது.
மத்தியப்பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு இருந்து வருகிறது. பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் கமல்நாத், சரியான முறையில் பணியாற்றாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளும், தங்கள் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் குறித்தும் அவர்கள் பணியாற்றியவிதம் குறித்தும் ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.

ஆய்வின் முடியில் தங்கள், பணிகளை உரிய முறையில் செய்யாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார். இதுதொடர்பாக பேசிய மத்தியப்பிரதேச அரசு அதிகாரி ஒருவர், ``ஆய்வின் முடிவில், குறிப்பிட்ட ஊழியர் 50 வயதை நிறைவு செய்தவராகவோ அல்லது 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவராகவோ இருக்கும்பட்சத்தில் அவர்களை கட்டாய ஓய்வில் செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதேநேரம், இந்த நிபந்தனைகளுக்கு உட்படாத மற்ற ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டிருக்கிறது'' என்றார்.
இது பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேசிய கமல்நாத், ``அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை அதிகரிக்கவும் அரசின் துறைகள் செயல்பாடுகள் மேம்பட வேண்டும். இதற்காக, அரசு ஊழியர்கள் தங்கள் பணித்திறனை மேம்படுத்திக் கொள்வதுடன், உரிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கும் விதத்தில் விரைந்து செயலாற்ற வேண்டியது அவசியம். அதற்காக சரியான முறையில் பணியாற்றாத ஊழியர்களை அகற்ற வேண்டியது முக்கியமானது'' என்றார்.

அரசு ஊழியர்கள் தொடர்பான இந்த ஆய்வுக்கு ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த கால அவகாசத்துக்குள் ஊழியர்களின் கடந்த சில ஆண்டுகள் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட இருப்பதாகவும் தலைமைச் செயலாளர் எஸ்.ஆர்.மோகன்டி கூறியிருக்கிறார்.
``பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, சுகாதாரத் துறை, கல்வி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட முக்கியமான பல துறைகளின் செயல்பாடுகள் முதல்வருக்குத் திருப்தி அளிக்கவில்லை.

அங்கு பணியாற்றும் சில ஊழியர்கள் வேலை பார்ப்பதில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. அதேபோல், தங்கள் பணித்திறனை மேம்படுத்திக் கொள்வதிலும் அவர்களுக்கு எந்த ஈடுபாடும் இல்லை. அதனாலேயே இந்த அதிரடி முடிவை முதல்வர் கமல்நாத் எடுத்துள்ளார்'' என்கிறார்கள் மத்தியப்பிரதேச தலைமைச் செயலக ஊழியர்கள்.