தமிழக அரசு அனுப்பிய நீட் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருக்கிறார் எனப் பல்வேறு அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக அண்மையில் மக்களவையில் டி.ஆர்.பாலு பேசுகையில், ``தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 7-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அதில் ஒரு மசோதாவுக்குக்கூட ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ரவியை மாற்ற வேண்டும்'' என்றார்.

இந்த நிலையில், மாநிலங்களவையில் இன்று மதியம் தனிநபர் மசோதாவுக்கான நேரத்தில், சட்டமன்றங்களில் இயற்றப்படும் சட்டங்கள்மீது ஆளுநருக்கு `காலக்கெடு' நிர்ணயிக்க, சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கு மேல் இது போன்ற மசோதாக்களை நிலுவையில் வைக்கக் கூடாது எனக்கோரி தனிநபர் மசோதாவை தி.மு.க எம்.பி வில்சன் தாக்கல் செய்திருக்கிறார். மேலும், அரசியலமைப்புச் சட்டம் 200-ல் திருத்தம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கையும் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மசோதா தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், தமிழக அரசின் நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
