கட்டுரைகள்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: எகிறிய பார் கமிஷன்... கடுப்பில் தி.மு.க புள்ளிகள்!

டாஸ்மாக்
பிரீமியம் ஸ்டோரி
News
டாஸ்மாக்

மத்திய அமைச்சராக இருந்தபோது ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் வாங்கிய லஞ்சப் பணத்தில் பினாமி பெயரில் சொத்து வாங்கியதாக, மன்னர் பிரமுகர்மீது முன்பே வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கரூர் கம்பெனி உத்தரவின்பேரில், நீலகிரியின் குக்கிராமங்களில்கூட அவசரகதியில் பல டாஸ்மாக் பார்களைத் திறந்தார்கள் ஆளுங்கட்சிப் புள்ளிகள். ஆரம்பத்தில், “மாதம் ரூ.20,000 கமிஷன் கொடுத்தால் போதும்... மீதியை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்” என கம்பெனித் தரப்பு சொன்னதால், ஆளுங்கட்சிப் புள்ளிகள் பலர் சும்மா ‘ஹாலோ பிளாக்’ கற்களை அடுக்கித் தொடங்கிய பார்கள் இவை. கொஞ்சம் கொஞ்சமாக கமிஷனை உயர்த்தி, ஒரே ஆண்டில் 40,000 ரூபாய் வரை அது வளர்ந்து நிற்கிறதாம். தற்போது அதுவும் போதவில்லை என்று சொல்லி, இன்னும் கூடுதலாகப் பணம் தர வேண்டும் என கறார் காட்டுகிறதாம் கரூர் கம்பெனி. “சொந்தக் கட்சிக்காரன் என்றுகூடப் பார்க்காமல் கமிஷனை உயர்த்திக்கொண்டே போனால், நாங்கள் எப்படிப் பிழைப்பது... வேறு யாரையாவது வைத்து பாரை நடத்தி, எவ்வளவு கமிஷன் வேண்டுமானாலும் கேட்டு வாங்கட்டும். நாங்கள் ஒதுங்கிக் கொள்கிறோம்” என கரூர் ‘தலை’க்கு நெருக்கமானவர்களிடம் புலம்பித் தீர்த்திருக்கிறார்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பார் உரிமையாளர்கள்!

மிஸ்டர் கழுகு: எகிறிய பார் கமிஷன்... கடுப்பில் தி.மு.க புள்ளிகள்!

“பாயின்ட் கிடைச்சுடுச்சு...” - வழக்கு தொடரத் தயாராகும் ஓ.பி.எஸ்!

2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட அ.தி.மு.க வரவு-செலவு ஆடிட் ரிப்போர்ட்டைத் தேர்தல் ஆணையம் ஏற்றிருக்கிறது. இதனால், எடப்பாடி பழனிசாமியைக் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக நியமிக்கும் தீர்மானம், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரைக் கட்சியிலிருந்து நீக்கும் சிறப்புத் தீர்மானம் உள்ளிட்டவற்றையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும் என்று எடப்பாடித் தரப்பு நம்புகிறது. ஆனால், பன்னீர் தரப்போ, “ஓ.பி.எஸ் பொருளாளராக இருந்தபோது தயார் செய்யப்பட்டதுதான் அந்த ஆடிட் ரிப்போர்ட். எனவே, அதை ஏற்றுக்கொண்டிருப்பது செல்லாது” என்ற ஒரு பாயின்டைப் புதிதாகக் கண்டுபிடித்திருக்கிறது. இதைவைத்து, ‘தேர்தல் ஆணையம் செய்தது தவறு’ என வழக்கு போடும் முடிவில் இருக்கிறதாம் பன்னீர் தரப்பு.

மிஸ்டர் கழுகு: எகிறிய பார் கமிஷன்... கடுப்பில் தி.மு.க புள்ளிகள்!

முடக்கிய சொத்து... செக் வைக்கப்பட்ட பின்னணி!

மத்திய அமைச்சராக இருந்தபோது ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் வாங்கிய லஞ்சப் பணத்தில் பினாமி பெயரில் சொத்து வாங்கியதாக, மன்னர் பிரமுகர்மீது முன்பே வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேற்கு மாவட்டத்திலிருக்கும் அந்த 45 ஏக்கர் நிலத்தை இப்போது முடக்கியிருக்கிறது அமலாக்கத்துறை. இதன் பின்னணியில் அரசியல் காய்நகர்த்தல்களும் இருக்கின்றன என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஏற்கெனவே, அமலாக்கத்துறை வளையத்திலிருந்து அமைச்சர் கீதா ஜீவன் வெளியே வந்துவிட்டார். விரைவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் விடுபட்டுவிடுவார். செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை விசாரணை கோரிய மனு இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருக்கிறது. இப்படித் தொடர்ந்து தி.மு.க-வினர் மீது அமலாக்கத்துறை மூலம் இறுக்கி வைக்கப்பட்டிருந்த பிடி இளகுவதை டெல்லி மேலிடம் ரசிக்கவில்லை. எனவே, தி.மு.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான மன்னர் பிரமுகர் மீது 2015-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கைத் தூசுதட்டி தற்போது சொத்துகளை முடக்கியிருக்கிறது அமலாக்கத்துறை என்கிறார்கள்.

பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர் ஒருவர், மன்னர் பிரமுகரின் தொகுதியைக் குறிவைத்திருப்பதும் இந்த செக்குக்கு முக்கியக் காரணமாம்.

மிஸ்டர் கழுகு: எகிறிய பார் கமிஷன்... கடுப்பில் தி.மு.க புள்ளிகள்!

தீயிலிருந்து சிலைக் கடத்தலுக்கு... டெல்லி ரூட்டைப் பிடித்த ஐ.பி.எஸ் அதிகாரி!

தீயணைப்புத்துறையின் முன்னாள் இயக்குநராக இருந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரின் இடமாறுதல் சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லையாம். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் அவர்மீது தொடர்ந்து டி.ஜி.பி அலுவலகத்தில் குற்றச்சாட்டுகள் குவிந்துகொண்டிருப்பதால், ‘சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கலாமா?’ என உள்துறையும், டி.ஜி.பி அலுவலகமும் ஆலோசித்துக்கொண்டிருக்கின்றன என்கிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியோ, விரைவில் காலியாகவிருக்கும் ‘சிலைக் கடத்தல் பிரிவு’ டி.ஜி.பி பதவிக்குக் காய்நகர்த்திக்கொண்டிருக்கிறாராம். அவரின் ரத்த சொந்தம் ஒருவர், பா.ஜ.க எம்.பி-யாக இருந்தவர் என்பதால், டெல்லி ரூட்டைப் பிடித்து முயல்கிறாராம் அவர்.

“ஊழல்வாதிகள் என நம்மைத்தான் சொல்கிறார்!” கொதிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்!

பா.ஜ.க மீது அ.தி.மு.க-வினர் செம கடுப்பில் இருக்கிறார்களாம். உதயநிதி அமைச்சரானதும் உடனே ‘வாரிசு அரசியல்’ என தி.மு.க மீது அழுத்தமான முத்திரை குத்தும்படியாக, மாவட்டம்தோறும் கூட்டங்கள் நடத்திப் பேசச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. ஆனால் அந்த நேரத்தில், தேவையே இல்லாமல் அண்ணாமலை வாட்ச் விவகாரத்தில் சர்ச்சையைக் கிளப்ப, அதையே பெரிதாக்கி உதயநிதி அமைச்சரானதைப் பேசுபொருளே இல்லாமல் செய்துவிட்டார்கள் தி.மு.க-வினர். அதுமட்டுமல்லாமல், அண்ணாமலை எப்போது பேசினாலும் ‘தமிழ்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுக்காலமாக ஊழல் மலிந்துகிடக்கிறது’ என்றுதான் பேசிவருகிறார்.

‘‘கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதிக முறை ஆட்சிக்கட்டிலில் இருந்தது நாம்தான். எனவே, தி.மு.க-வைவிடஅ.தி.மு.க-வைத் தாக்கித்தான் பெரும்பாலும் பேசிவருகிறார் அண்ணாமலை. அவரைச் சும்மாவிடக் கூடாது. பா.ஜ.க-வின் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்ற வேண்டும். சி.வி.சண்முகம், ஜெயக்குமார் மட்டும் போதாது. நாங்களும் பேசுகிறோம்... அண்ணாமலைக்குப் பாடம் புகட்டுகிறோம்” என எடப்பாடியிடம் சில மூத்த நிர்வாகிகள் கொதித்திருக்கிறார்கள். “ஜனவரி 4 வழக்கு விசாரணை முடியட்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என அவர்களைச் சமாதானப்படுத்தி வைத்திருக்கிறாராம் எடப்பாடி. தீர்ப்பு வந்த பிறகு இந்த முட்டல் மோதல் அதிகரிக்கும் என்கிறார்கள்!