கட்டுரைகள்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: “கடும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்...” - கல்வீச்சு அமைச்சரை எச்சரித்த தலைமை!

நாசர்
பிரீமியம் ஸ்டோரி
News
நாசர்

கட்சியிலும் ஆட்சியிலும் தலைமைக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அந்த அமைச்சருக்கு, சொந்த மாவட்டத்திலேயே எதிரிகள் அதிகமாகிவிட்டார்கள்.

கட்சிக்காரர்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறார், பொசுக்கெனக் கைநீட்டிவிடுகிறார் என்று அமைச்சர் நாசர் மீது புகார்கள் சென்றபோது, ‘அவரது கோமாளித்தனங்களில் இதுவும் ஒன்று’ என்று தலைமை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லையாம். ஆனால், சமீபத்திய கல்வீச்சு சம்பவம், தி.மு.க அமைச்சரவைக்கே கெட்ட பெயரை ஏற்படுத்தியிருப்பதால் கடுப்பாகிவிட்டதாம் தலைமை. “ஒரு அமைச்சர் மாதிரி நடந்துக்கோங்கய்யா... இதுக்கப்புறமும் போக்கை மாத்திக்கலைன்னா, கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என எச்சரிக்கவும் செய்திருக்கிறதாம். மறுநாள் நடந்த வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், பக்கத்து இருக்கையில் நாசர் அமர்ந்திருந்தாலும் முகம் கொடுத்துக்கூடப் பேசவில்லை முதல்வர். “அமைச்சர் இல்லத் திருமணவிழாவில் அவரை அவ்வளவு பாராட்டிப் பேசிய முதல்வரை, தன் செயலால் ஒரே மாதத்தில் இவ்வளவு கடுப்பேற்றிவிட்டாரே... இனியாவது வாயையும் கையையும் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்” என அங்கேயே முணுமுணுத்திருக்கிறார்கள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள்!

“யானையின் காதில் கட்டெறும்புகள்...” - சுதாரித்துக்கொள்வாரா மூத்த அமைச்சர்?

கட்சியிலும் ஆட்சியிலும் தலைமைக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அந்த அமைச்சருக்கு, சொந்த மாவட்டத்திலேயே எதிரிகள் அதிகமாகிவிட்டார்கள். மரியாதை இல்லாமல் நடத்துவது, திட்டமிட்டு ஓரங்கட்டுவது போன்ற அந்தப் பெரிய மனிதரின் சிறிய செயல்களால் உருவான எதிரிகள்தான் இவர்கள். இத்தனை காலமும் உதிரிகளாக இருந்த அவர்கள் இப்போது ஒன்றுகூடி, “கட்சி போஸ்டர்கள், பேனர்களில் பெரியவரின் பெயரையும், புகைப்படத்தையும் போட வேண்டாம். தவிர்க்க முடியாத நிகழ்ச்சி என்றால் சிறிதாகப் போடலாம். அவரின் ஆதரவாளர்களை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கவே கூடாது” என ரகசியத் தீர்மானமே போட்டிருக்கிறார்களாம். சமீபத்தில் ‘குடி’யான ஊரில் நடந்த தியாகிகளை வணங்கும் பொதுக்கூட்டத்துக்கான போஸ்டரில், அந்த முடிவை உடனடியாக அமல்படுத்தவும் செய்திருக்கிறார்கள். கடுப்பான பெரியவரின் ஆதரவாளர்களோ, “காலுக்கடியில் இருந்த கட்டெறும்புகள், இப்போது தலை மேலேயே ஏறிவிட்டன. காதுக்குள் போவதற்குள் சுதாரிச்சுக்கோங்கண்ணே” என்று பெரியவரிடம் வத்திவைத்திருக்கிறார்களாம்!

மிஸ்டர் கழுகு: “கடும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்...” - கல்வீச்சு அமைச்சரை 
எச்சரித்த தலைமை!

‘இடைத்தேர்தல் முடியட்டும்...’ - மேயர் விவகாரத்தில், அமைச்சரின் வாக்குறுதி!

‘வேலி தாண்டும் வெள்ளாடுபோல, அதிகார மமதையில் ஆட்டம் போடுகிறார்’ என்று அந்த தென்மாவட்ட மேயர்மீது

தி.மு.க கவுன்சிலர்கள் மட்டுமன்றி, உள்ளூர் எம்.எல்.ஏ-வும் கடுகடுத்துவந்தார். அதோடு, அவர்மீது தலைமைக்குப் புகாரும் அனுப்பியிருந்தார்கள். உடனடி நடவடிக்கை இல்லாததால், துணை மேயர் தலைமையில் தி.மு.க கவுன்சிலர்கள் படை திரண்டு துறை அமைச்சரை நேரில் சந்தித்திருக்கிறார்கள். “பணமே குறியா இருக்குறது மட்டுமில்லைங்க... எதிர்க்கட்சி கவுன்சிலருக்குக் கொடுக்கிற மரியாதையைக்கூட நம்ம கட்சி கவுன்சிலர்களுக்குத் தர்றதில்ல...” என ஒவ்வொருவரும் கொட்டித்தீர்த்துவிட்டார்களாம். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அமைச்சர், ‘தேர்தல் வேலையில பிஸியா இருக்கேன். ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு எல்லாவற்றையும் சரிசெய்துடுவோம்’ என்று சொல்லி கவுன்சிலர்களைச் சமரசப்படுத்தி அனுப்பிவைத்தாராம்.

கல்லூரி முதல்வரின் விளையாட்டு... லட்டுக்கு மயங்கிய காவல் அதிகாரி!

சென்னையில் ஒரு கல்லூரி முதல்வர், மாணவியிடம் எல்லை மீறிப் பேசியது ஆடியோ ஆதாரத்துடன் போலீஸில் புகாரானது. ‘வேட்டை’ முதல்வர்மீது ‘பேட்டை’ மகளிர் போலீஸாரும் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்தார்கள். உஷாரான அந்தக் கல்லூரி முதல்வர், காவல்துறை அதிகாரி ஒருவரையும், தி.மு.க வழக்கறிஞர் ஒருவரையும் சில லட்டுகளுடன் சந்தித்து கைது நடவடிக்கையைத் தள்ளிப்போட்டிருக் கிறார். இந்த அவகாசத்துக்குள் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வாங்கியவர், ஹாயாக கல்லூரிக்கும் வரத் தொடங்கிவிட்டாராம். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டும் கூட, கல்லூரி முதல்வர்மீது காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ‘வாங்கிய லட்டுகளுக்கு அந்த ஒரு போலீஸ் அதிகாரி விசுவாசமாக இருப்ப தாலேயே நடவடிக்கை எடுக்க முடியவில்லை’ என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

மிஸ்டர் கழுகு: “கடும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்...” - கல்வீச்சு அமைச்சரை 
எச்சரித்த தலைமை!

‘என் மகனுக்குக் கிடைக்கும்னு எதிர்பார்த்தேன்...’ - விரக்தியில் ‘தங்க’மானவர்!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களம் காண்கிறார். இதையடுத்து, கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தேர்தல் பணிக்குழு அமைத்திருக்கிறார். அதன் தலைவராக மோகன் குமாரமங்கலம் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அதில்தான் பிரச்னையே. ‘தங்க’மானவரும் தன் மகனுக்குத் தேர்தல் பணிக்குழுத் தலைவர் பதவியைப் பெற முயன்றுவந்தாராம். ஆனால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “என் நண்பரின் மகன் மோகன் குமாரமங்கலமே இருக்கட்டும். ஏனெனில், அவரின் தந்தையால் வளர்க்கப்பட்ட ஏராளமானோர் காங்கிரஸ், தி.மு.க மட்டுமல்லாமல் அ.தி.மு.க-விலும்கூட ஈரோட்டில் இருக்கிறார்கள். இதன் மூலம் அ.தி.மு.க-வுக்குச் செல்லும் வாக்குகளையும் நாம் பெற முடியும்” என உறுதியாகத் தெரிவித்து விட்டாராம். இதையடுத்துதான், மோகன் குமாரமங்கலத்துக்குப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ‘இதனால் விரக்தியடைந்த தங்கமானவர், தேர்தல் பணிகளைச் சரியாகப் பார்ப்பதில்லை.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராகவும் செயல்படுகிறார்’ என்கிறார்கள் ஈரோடு பணிக்குழுப் புள்ளிகள்!