கட்டுரைகள்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: “பேசாம தி.மு.க-வுக்குப் போயிடுங்க...” - அட்வைஸ் கொடுத்த பா.ஜ.க நிர்வாகிகள்!

தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
News
தினகரன்

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரிபோல, கவுன்சிலருக்கு கார் கொடுத்து ஆதரித்திருக்கிறார் தலைநகரில் இருக்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவர்.

தமிழ்நாடு பா.ஜ.க-விலிருந்து சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட அதிரடி அரசியல் பெண்மணி ஒருவரை தி.மு.க-வுக்குப் போகச் சொல்லி சிலர் அட்வைஸ் கொடுத்துவருகிறார்களாம். “இங்கே உங்கள் உழைப்புக்கும் திறமைக்கும் மரியாதையே இல்லை. அண்ணாமலை இருக்கிறவரைக்கும் எதிர்காலமும் இல்லை. உங்களுக்கான இடம் தி.மு.க-தான். சினிமாக்காரர் என்ற முறையில் உதயநிதியை அணுகவும் முடியும்” எனச் சில நிர்வாகிகள் அவருக்கு தினமும் தூபம் போட்டுக்கொண்டிருக்கிறார்களாம். “நான் தி.மு.க-வுக்குப் போனால், இவ்வளவு நாளும் நான் பேசியதெல்லாம் இதை முன்னிட்டுத்தான் என வார் ரூம் பார்ட்டிகள் கிளப்பிவிடும். நீங்களும் அங்கிருந்துதான் வந்திருக்கிறீர்கள் என எனக்கு நன்றாகவே தெரியும். என்ன நடந்தாலும் சரி, நான் தி.மு.க-வுக்குக் கிளம்பும் ஐடியாவே இல்லை” எனத் தன் ஸ்டைலில் பட்டென பதிலளித்து `ஷாக்’ கொடுத்திருக்கிறார் அம்மணி!

மிஸ்டர் கழுகு: “பேசாம தி.மு.க-வுக்குப் போயிடுங்க...” - அட்வைஸ் கொடுத்த பா.ஜ.க நிர்வாகிகள்!

திடீரென வெளிநாடு பறந்த விஜய்... இசை வெளியீட்டுவிழா நெருக்கடி காரணமா?

சென்னையில் நடந்த விஜய்யின் ‘வாரிசு’ பட இசை வெளியீட்டுவிழாவுக்கு, ஆளும் தரப்பிலிருந்து ஏகப்பட்ட நெருக்கடிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. விஜய் போஸ்டருக்கான தடையில் தொடங்கி, ரசிகர்களை அனுமதிப்பதில் காவல்துறை காட்டிய கெடுபிடி, விழா முடிந்ததும் சேர்கள் சேதமானதாகச் சொல்லித் தயாரிப்புத் தரப்புக்குப் போடப்பட்ட அபராதம் எனப் பல்வேறு வகையில் வாட்டி வதைத்துவிட்டார்களாம். முதலில் இந்த விழாவே ‘லைவ்’ நிகழ்ச்சியாகத்தான் டி.வி-யில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். திடீரென விஜய் அரசியல் எதுவும் பேசிவிடுவார் என்ற காரணத்தால், அதைச் செய்யவில்லையாம். ‘வழக்கமாக விஜய் படப் பாடல்கள் ஹிட் அடிக்கும். இந்த முறை சுமார்தான்’ என்று ஒரு தரப்பு வேறு ட்ரோல் செய்திருக்கிறது. இந்தத் தொடர் சம்பவங்களால் அப்செட் ஆனதாலேயே விஜய் வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டார் என்கிறார்கள். ‘‘இந்தச் சின்னப் பிரச்னையையே சமாளிக்க முடியாமல் தவிக்கும் இவரை நம்பி எப்படி அரசியலில் குதிப்பது?” என கன்ஃபியூஷன் மோடில் இருக்கிறார்களாம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்!

கவுன்சிலருக்கு கார் கொடுத்த எம்.எல்.ஏ... தலைமைக்கு `நோட்’ அனுப்பிய உளவுத்துறை!

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரிபோல, கவுன்சிலருக்கு கார் கொடுத்து ஆதரித்திருக்கிறார் தலைநகரில் இருக்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவர். ஏற்கெனவே அவர்மீது பல புகார்கள் இருக்கும் நிலையில், இந்தப் புகாரையும் ரிப்போர்ட்டாக மேலிடத்துக்கு அனுப்பிவைத்துவிட்டது உளவுத்துறை. கட்சிரீதியான விசாரணை ஒரு பக்கம், ‘பெண் கவுன்சிலருக்கு மட்டும்தான் காரா... எங்களுக்குக் காராபூந்திகூட கிடையாதா?’ என்று வயிற்றெரிச்சலில் குமுறும் ஆண் கவுன்சிலர்கள் மறுபக்கம் எனக் கிளம்ப, இந்த விவகாரத்தை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறாராம் அந்த எம்.எல்.ஏ.

மிஸ்டர் கழுகு: “பேசாம தி.மு.க-வுக்குப் போயிடுங்க...” - அட்வைஸ் கொடுத்த பா.ஜ.க நிர்வாகிகள்!

23%-தான் வேணும்... அடம்பிடிக்கும் மேயர்...பொங்கியெழுந்த தி.மு.க கவுன்சிலர்கள்!

தென்மாவட்ட மாநகராட்சி ஒன்றில், ஆளுங்கட்சி மேயரின் நடவடிக்கையால் தி.மு.க கவுன்சிலர்களே கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம். எந்த வேலையாக இருந்தாலும், ‘‘என் கைக்கு 23% வந்தால் மட்டுமே அதற்கான கோப்புகளில் கையெழுத்துப் போடுவேன்” என்று அடம்பிடிக்கிறாராம். ஒரு சதவிகிதம் குறைந்தால்கூட கோபப்படுகிறாராம். ‘‘அது என்ன 23 சதவிகிதம்?” எனக் கேட்டால், “அதுதான் எனக்கு ராசியான நம்பர்” எனச் சிரிக்காமல் சொல்கிறாராம். சமீபத்தில் நடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் அமைதியாக இருக்க, ஆளும் தி.மு.க கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராகப் பொங்கித் தீர்த்துவிட்டார்களாம். இவ்வளவு கறாராகக் கேட்டு வாங்குபவர், தங்களுக்கு வழக்கம்போல ‘அல்வா’ கொடுத்துவிட்டார் என்ற கோபமே அவர்களின் கொந்தளிப்புக்குக் காரணமாம். அவரைப் பற்றித் தலைமைக்குப் புகார் மேல் புகார் அனுப்பி, விளக்கம் கேட்கவே வைத்துவிட்டார்களாம் அந்த கவுன்சிலர்கள்!

‘ஹலோ... நான் ___ பேசுறேன்...’ ஆட்டம்போடும் ஒன்றியம்... அரவணைக்கும் அமைச்சர்!

தி.மு.க-வில் பெரிய பொறுப்பில் இருக்கும் அந்த மூத்த அமைச்சர், தன்னுடைய சொந்தத் தொகுதியில் வரும் ஓர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக, கிட்டத்தட்ட தன் பெயரைக்கொண்ட ஒருவரையே நியமித்திருந்தார். நடமாடும் நகைக்கடையாக வலம்வரும் அந்த நபர், அமைச்சரின் சமூகத்தைச் சேர்ந்தவர். பலே பசை பார்ட்டியும்கூட. ஏற்கெனவே கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, மணல் திருட்டைத் தொழிலாக வைத்திருந்தவர், இப்போது பதவிக்கு வேறு வந்துவிட்டதால் ஆட்டம் அதிகமாகிவிட்டதாம். ‘அவரின் மிரட்டலுக்கு பயந்து, பா.ம.க பிரமுகர் ஒருவர் சமீபத்தில் தற்கொலையே செய்துகொண்டார்’ என்கிறார்கள். ஆனாலும், ‘ஹலோ... நான் ___பேசுறேன்...’ என்று தன்னுடைய வழக்கமான மிரட்டலைத் தொடர்ந்துவருகிறார். ‘‘என்ன நடந்தாலும், இவரைக் காப்பாற்றத்தான் அந்த மூத்த ‘அவர்’ இருக்கிறாரே?” என்று வேதனைச் சிரிப்பை உதிர்க்கிறார்கள் உடன்பிறப்புகள்!

மிஸ்டர் கழுகு: “பேசாம தி.மு.க-வுக்குப் போயிடுங்க...” - அட்வைஸ் கொடுத்த பா.ஜ.க நிர்வாகிகள்!

திக்கற்றவருக்கு டெல்லியே துணை... டி.டி.வி.தினகரனின் நம்பிக்கை ஈடேறுமா?

சித்தியின் ஆதரவோடு அ.ம.மு.க-வை வளர்த்துவிடலாம்; அப்படியே அ.தி.மு.க-வை வளைத்துவிடலாம் என்ற டி.டி.வி.தினகரனின் திட்டம் பகல் கனவாகவே போய்விட்டது. சரி, தி.மு.க-வுக்கு எதிரான கூட்டணியில் இடம் பிடித்தாவது குறைந்த

பட்சம் அ.ம.மு.க-வை நிலைநிறுத்திவிடலாம் என்ற எண்ணத்திலும் மண்ணள்ளிப் போட்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. எல்லாக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகிவரும் நிலையில், நம் கட்சியிலிருந்து மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி, தொண்டர்கள் வரை கொத்துக் கொத்தாக விலகி, மாற்றுக்கட்சியில் சேருகிறார்களே அதை எப்படிச் சமாளிப்பது என விழித்துக் கொண்டிருக்கிறாராம் தினகரன். ‘‘இப்போது அவரது ஒரே நம்பிக்கையாக டெல்லி மட்டுமே இருக்கிறது. எனவேதான், தேசியக் கட்சியோடு கூட்டணிவைக்க ஆர்வமாக இருக்கிறோம் என்று வெளிப்படையாகவே தூதுவிட்டிருக்கிறார் அவர். எதிர்பார்க்கும் சீட்டு கிடைக்கிறதோ இல்லையோ, தேர்தல் செலவுக்கு ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது அ.ம.மு.க” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!