
ஈரோடு அ.தி.மு.க வேட்பாளருக்கு வாக்குறுதி!
ஈரோடு இடைத்தேர்தலில், `எடப்பாடி அணி சார்பில் மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம் களமிறங்குவார்’ என்று பேசப்பட்ட நிலையில், திடீரென நந்தகுமார் பெயர் அடிபட்டது. கடைசியில் யாரும் எதிர்பாராதவிதமாக முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். நடந்தது இதுதான்... கே.வி.ஆரைப் போட்டியிடச் சொன்னபோது, ‘‘இரட்டை இலைச் சின்னம் கிடைத்தால் உறுதியாகப் போட்டியிடுகிறேன்” என்றிருக்கிறார். இந்த பதிலால் கடுப்பான எடப்பாடி தரப்பு, “இரட்டை இலை இருந்தால்தான் யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக நிற்கவைத்திருப்போமே...” என்று கோபப்பட்டதோடு, அவருக்கு பதில் நந்தகுமாரைக் களமிறக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது. குறைந்தது 5 ஸ்வீட் பாக்ஸ் செலவு செய்தால் போதும், மற்றதைத் தாங்கள் பார்த்துக்கொள்வதாகச் சொல்லியிருக்கிறது எடப்பாடி தரப்பு. “இப்போதைக்கு என்னிடம் அவ்வளவு ஸ்வீட் பாக்ஸ் இல்லை” என நந்தகுமாரும் நழுவியதாலேயே, அதே சமூகத்தைச் சேர்ந்த தென்னரசுவை வேட்பாளராக்கியிருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றாலும், மாநிலங்களவைப் பொறுப்பு நிச்சயம் என்ற உத்தரவாதத்தோடுதான் தென்னரசு வேட்பாளராக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.

‘ரெய்டு பயம் போயே போச்சு...’ மீண்டும் திறப்புவிழா நடத்திய மாஜி!
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர் தஞ்சாவூரில் பிரமாண்ட பல்நோக்கு மருத்துவமனையைக் கட்டியிருக்கிறார். ஏற்கெனவே திறப்புவிழா நடத்தப்பட்டு, செயல்பட்டுவந்த மருத்துவமனைக்கு, கடந்த வாரம் மீண்டும் விமரிசையாகத் திறப்புவிழா நடத்தியிருக்கிறார் மாஜி. முதல் திறப்புவிழா சமயத்தில் அவரது வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், இந்த மருத்துவமனையும் தப்பவில்லை. இதனால் யாருடைய கண்ணையும் உறுத்திவிடக்
கூடாது என்று அப்போது விழாவை எளிமையாக நடத்தினாராம். இப்போது அவர், சில ஸ்வீட் பாக்ஸ்களைக் கொடுத்து ஆளும் தரப்புடன் சமரசமாகிவிட்டாராம். “இனி ரெய்டு ஏதும் இல்லை!” என்று ஆளும் தரப்பு உறுதியாகச் சொன்னதாலேயே, திறக்கப்பட்ட மருத்துவமனைக்கு மீண்டும் பிரமாண்டமாக திறப்புவிழா நடத்தி மகிழ்ந்தாராம் மாஜி.

‘எம்.பி சொல்வதே வேதம்...’ கட்சிக்காரர்போலச் செயல்படும் ஆட்சியர்!
கோழிமுட்டை மாவட்ட ஆட்சியர், அந்த மாவட்ட தி.மு.க செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ‘குமாரர்’ சொல்வதே வேதம் என்று செயல்படுகிறாராம். தான் மட்டுமல்லாமல், அனைத்துத் துறை ஊழியர்களையும் ஆட்சியர் அப்படிப் பழக்கிவருவதால், ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் எம்.பி-யின் கட்டுப்பாட்டில் போனதுபோலாகிவிட்டது என்று புலம்புகிறார்கள் எதிர்க்கட்சியினர். ஒருகட்டத்தில் தி.மு.க கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களே, ‘ஆளுங்கட்சிக்கு இவ்வளவு விசுவாசியாக இருக்கும் ஓர் ஆட்சியரைப் பார்த்ததே
இல்லை’ என்று அங்கலாய்க்கின்றனர். ஆனால், தன் பெயர் கெட்டாலும் பரவாயில்லை; மேலிடத்துக்கு நெருக்கமானவரின் அனுக்கிரகம் இருந்தால் போதும் என்று எதையும் சட்டை செய்வதே இல்லையாம் அந்த மாவட்ட ஆட்சியர்.

‘ஒரே ஒரு தலைவர் வாரார் வழிவிடுங்கோ...’ இனிஷியல் தலைவருக்கு நேர்ந்த அவமானம்!
‘அ.தி.மு.க-வை மீட்பதே லட்சியம்’ என்று இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கும் அந்த டிரிபிள் இன்ஷியல் தலைவருக்கு, மற்ற ஊர்களில் எப்படியோ, நெல்லையில் கணிசமாகக் கூட்டம் கூடுவது வழக்கம். சமீபத்தில் நெல்லை சென்றவருக்குப் பேரதிர்ச்சி. அவரை வரவேற்கச் சென்றவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்று சொல்லுமளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டதாம். அப்செட் ஆன இனிஷியல் தலைவர், சில பேரின் பெயர்களைச் சொல்லி அவர்களை எங்கே என்று விசாரித்திருக்கிறார். அவர்களெல்லாம் நம்பிக்கையிழந்து எடப்பாடி அணியிலும், தி.மு.க-விலும் சேர்ந்துவிட்டார்கள் என்று பதில் வந்திருக்கிறது. இதில் மனிதர் ரொம்பவே கடுப்பாகி, கத்திவிட்டாராம். “செயல் திட்டமும் இல்லை... காசையும் கண்ணில் காட்டுவதில்லை... பிறகெப்படி கூட்டம் சேர்ப்பது?” என்று புலம்புகிறார்கள் நெல்லை மாவட்ட நிர்வாகிகள்.