கட்டுரைகள்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: அரசு பங்களாவுக்குக் குடிபுகும் உதயநிதி... வீட்டை விட்டுக்கொடுத்த அப்பாவு!

உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதி

சமீபத்தில் உதயநிதியைச் சந்திக்கச் சென்ற அமைச்சர் ஒருவர் நீண்ட நேரமாக வீட்டு வாசலிலேயே காத்திருந்திருக்கிறார். இந்த விவகாரம் சர்ச்சையாவதற்கு முன்பே, உதயநிதிக்குப் புது வீடு ஒதுக்கிவிட வேண்டும் என்று மேலிடத்தில் முடிவுசெய்திருக்கிறார்கள்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு, தமிழக அமைச்சர்கள் தங்கியிருக்கும் கிரீன் வேஸ் சாலையிலுள்ள குறிஞ்சி இல்லம் ஒதுக்கப்படவிருக்கிறது. இதுநாள் வரையில் அவர் முதல்வருடன், செனடாப் சாலை வீட்டில்தான் இருக்கிறார். அமைச்சரான பிறகு அவரைச் சந்திக்க வரும் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பார்வையாளர்கள் கூட்டம் அதிகரித்துவிட்டதால், வீட்டைச் சுற்றிக் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இளைஞரணி உள்ளிட்ட சார்பு அணிகளில் நிர்வாகிகள் நியமனம் வேறு நடந்துகொண்டிருப்பதால் அதையொட்டி, சந்திக்க வரும் கட்சிக்காரர்களின் கூட்டமும் அதிகரித்திருக்கிறது. வீட்டுக்குள் இடமில்லாததால் பலரும் வாசலில், ரோட்டில் நீண்ட நேரம் நிற்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. சமீபத்தில் உதயநிதியைச் சந்திக்கச் சென்ற அமைச்சர் ஒருவர் நீண்ட நேரமாக வீட்டு வாசலிலேயே காத்திருந்திருக்கிறார். இந்த விவகாரம் சர்ச்சையாவதற்கு முன்பே, உதயநிதிக்குப் புது வீடு ஒதுக்கிவிட வேண்டும் என்று மேலிடத்தில் முடிவுசெய்திருக்கிறார்கள். அதைக் கேள்விப்பட்டவுடனேயே, சபாநாயகர் அப்பாவு, தான் இருக்கும் குறிஞ்சி இல்லத்தை விட்டுக்கொடுக்க முன்வந்தாராம். ஏற்கெனவே, மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த வீடு அது என்பதால் சென்டிமென்ட்டாக மேலிடமும் ஓ.கே சொல்லிவிட்டதாம்.

மிஸ்டர் கழுகு: அரசு பங்களாவுக்குக் குடிபுகும் உதயநிதி... வீட்டை விட்டுக்கொடுத்த அப்பாவு!

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்..! - அரைகுறையாகப் புத்தகம் வெளியிட்டதா பள்ளிக்கல்வித்துறை?

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பாக ‘சென்னை இலக்கியத் திருவிழா 2023’-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஜனவரி 6-ம் தேதி தொடங்கிவைத்தார். அப்போது, ‘தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்’தின் சார்பாக 100 நூல்களை முதல்வர் கையால் வெளியிடவைத்தார்கள். ஆனால், முதல்வர் வெளியிட்ட அந்த 100 நூல்களில் இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் இன்னும் முழுமையடையவே இல்லையாம். அவசர அவசரமாக விழா ஏற்பாடு செய்யப்பட்டதால், முழுமையடையாத, பிழை திருத்தம் முடியாத நூல்களையெல்லாம் வெளியிட வைத்திருக்கிறார்கள். சில நூல்களுக்கு வெறும் அட்டை மட்டும்தான் தயாராகியிருந்ததாம். ‘‘இதையெல்லாம் முதல்வரிடம் சொல்லிவிட்டுச் செய்தார்களா அல்லது அவருக்கே தெரியாமல் செய்தார்களா?” என்று பள்ளிக்கல்வித்துறையில் சர்ச்சையாகி யிருக்கிறது. விவகாரம் வெளியே கசிந்துவிட்டதால், புத்தகத் திருவிழா முடிவதற்குள் புத்தகப் பணிகளை முடிக்கும் எண்ணத்தோடு தீயாக வேலை செய்கிறதாம் பாடநூல் கழகம்.

மிஸ்டர் கழுகு: அரசு பங்களாவுக்குக் குடிபுகும் உதயநிதி... வீட்டை விட்டுக்கொடுத்த அப்பாவு!

டி.வி சேனல் தொடங்கும் டி.டி.வி..? - கொந்தளிக்கும் சசிகலா ஆதரவாளர்கள்! - அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.

தினகரன், ஏற்கெனவே செயல்பட்டுவரும் ஒரு தனியார் செய்தி சேனலைப் பெரும் தொகை கொடுத்து வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப் புதிய சேனல், பொங்கல் முதலே செயல்பாட்டுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள். ‘‘தனக்கு ஆதரவாக எந்த சேனலும் செய்தி வெளியிடுவதில்லை. ஆதரவாக இருந்த ஒரு சேனலும், தான் சம்பந்தப்பட்ட செய்திகளை இருட்டடிப்பு செய்கிறது” என்று சொல்லியே இந்த முடிவை அவர் எடுத்ததாகச் சொல்கிறார்கள் ராயப்பேட்டை அலுவலகத்தினர்.

‘‘அ.தி.மு.க-வைக் கைப்பற்றும் நடவடிக்கைகளுக்காக சின்னம்மா கொடுத்த பணத்தை முறையாகச் செலவு செய்யாத தினகரன், அந்தப் பணத்தைத் தற்போது தன் வளர்ச்சிக்குப் பயன்படுத்திவருகிறார்” எனக் கொந்தளிக்கிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள்.

அதிகாரி வளைக்கும் நிலத்துக்குப் பாதை... விவசாயிக்கு நெருக்கடி கொடுக்கும் அவலம்!

மாங்கனி மாவட்டத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ‘ஏழைகளின் ஊட்டி’ என அழைக்கப்படும் மலைப்பிரதேசத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை வளைக்கத் திட்டமிட்டாராம். ஆனால், அங்கு சென்றுவர வழித்தடம் இல்லாததால் தனக்குக் கீழுள்ள அதிகாரிகளிடம், ‘‘என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது. அந்த நிலத்துக்கு விரைவில் வழித்தடம் அமைக்க வேண்டும்” என உத்தரவிட்டதாகச் சொல்கிறார்கள். உத்தரவை மீற முடியாத அதிகாரிகள், அந்த இடத்துக்கு எளிமையாகச் சென்று வரக்கூடிய வகையில், ஒரு விவசாயியின் நிலத்தின் வழியே பொதுப்பாதை அமைக்க முயன்றிருக்கிறார்கள். அதற்கு விவசாயி மறுக்க, அவரைப் பழிவாங்கும்விதமாக, பாறைக்கு வெடிவைத்ததாக அவர்மீது வழக்கு பதியவைத்துவிட்டாராம் மேலதிகாரி. அதிகாரிகளுக்கு எதிராக விவசாயியும் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார். ‘‘தனது சுயலாபத்துக்காக அடுத்தவர் நிலத்தை அடாவடியாகப் பறிக்க முயல்கிறார். இந்த விவகாரத்தில் நம்மையும் இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார்” எனப் புலம்பி வருகிறார்களாம் இரண்டாம் கட்ட அதிகாரிகள்!

மிஸ்டர் கழுகு: அரசு பங்களாவுக்குக் குடிபுகும் உதயநிதி... வீட்டை விட்டுக்கொடுத்த அப்பாவு!

தேசியத் தலைவரைக் குறிவைக்கும் மாஜி காக்கி... டெல்லி வரை போன பஞ்சாயத்து!

காவிக் கட்சியின் தேசியத் தலைவர் ஒருவருடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்துவருகிறார் மாஜி காக்கி. மக்கள் பிரதிநிதியாக இருக்கும் அந்த தேசிய தலைவர் கட்சி மாறப்போவதாகவும் கிளப்பிவிட்டிருக்கிறது காக்கியின் வார் ரூம். இதன் பின்னணி குறித்து விசாரித்தால், ‘‘தமிழ்நாட்டில் கட்சியின் செயல்பாடுகள், நிர்வாகிகள்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், அதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து டெல்லியில் ஏகப்பட்ட புகார்கள் வரிசைகட்டி யிருக்கின்றன. இவற்றையெல்லாம் காரணம் காட்டி, மாஜி காக்கியை மாற்றுவதற்காக ஆர்.எஸ்.எஸ் பின்னணிகொண்டவர்கள் தீயாக வேலை செய்கிறார்கள். அப்படி காக்கியார் மாற்றப்பட்டால், டெல்லியின் முதல் சாய்ஸாக அந்த தேசியத் தலைவர்தான் இருப்பார் என்பதாலேயே, அவரை காலி செய்யும் வேலையில் வார் ரூம் இறங்கியிருக்கிறது” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். பத்திரிகையாளர் சந்திப்பு சர்ச்சையோடு, இந்த விவகாரமும் டெல்லிக்குப் புகாராகச் செல்ல, டென்ஷனான மாஜி காக்கி ஆன்மிக மலையேறிவிட்டாராம்!