கட்டுரைகள்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: “இந்த நாற்காலியையும் பறிச்சுடாதீங்க..!”

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

- கோரிக்கை வைத்த ஓ.பி.எஸ்; நம்பிக்கையளித்த அப்பாவு!

உலகையே சுற்றிவந்த முருகனுக்குக் கிடைக்காத ஞானப்பழம், அம்மையப்பனைச் சுற்றிவந்த பிள்ளையாருக்குக் கிடைத்த கதையாக இருக்கிறது சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் நாற்காலி. அந்த சீட்டை உதயகுமாருக்கு வாங்கிக்கொடுப்பதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு கூட்டமே போராட்டம், வெளிநடப்பு, கறுப்புச்சட்டை என்று அமளி துமளி செய்கிறது. ஆனால், ஓ.பி.எஸ்-ஸோ வெறுமனே சபாநாயகர் அப்பாவுவைச் சுற்றிவந்தே காரியத்தைச் சாதித்துவிட்டார் என்கிறார்கள்

அ.தி.மு.க-வினர். சட்டப்பேரவையில் எப்போதெல்லாம் இடைவேளை அறிவிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் சபாநாயகருடனேயே வலம்வந்திருக்கிறார் ஓ.பி.எஸ். “கட்சிக்குள் பெரிய நெருக்கடி இருக்கிறது. பொதுக்குழு தொடர்பான வழக்கின் முடிவும் எப்படி வரும் எனத் தெரியாது. எல்லாவற்றையும் இழந்து, தனியாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு இருக்கும் ஒரே பிடிப்பு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் நாற்காலிதான். அதுவும் பிடுங்கப்படாமல் நீங்கள்தான் பார்த்துக்கணும்” என உருகியிருக்கிறார். ‘‘கோர்ட் தீர்ப்பு வரும் வரைக்கும் எந்தச் சிக்கலும் வராது” என்று சபாநாயகரும் நம்பிக்கை தந்திருப்பதாக புளகாங்கிதம் அடைகிறார்கள் ஓ.பி.எஸ்-ஸுக்கு நெருக்கமானவர்கள்!

மிஸ்டர் கழுகு: “இந்த நாற்காலியையும் பறிச்சுடாதீங்க..!”

“கொடுத்த பணம் திரும்பவில்லை... உச்சகட்ட கோபத்தில் மாஜி!”

கடந்த ஆட்சிக்காலத்தில் தென்தமிழகத்தில் கோலோச்சிய கான்ட்ராக்டரிடம் மிகப்பெரிய தொகையைக் கொடுத்து வைத்திருந்திருக்கிறார் முன்னாள் முக்கிய மந்திரி ஒருவர். தற்போது அதைத் திருப்பிக் கேட்கையில், எதற்கும் பிடிகொடுக்காமல், டிமிக்கி கொடுத்துவந்திருக்கிறார். சமீபத்தில் நெல்லையைச் சேர்ந்த தன் ஆதரவாளர் ஒருவரை நேரில் அனுப்பி என்ன விவரம் எனப் பார்த்துவரச் சொல்லியிருக்கிறார் மாஜி. ‘சும்மாவா கொடுத்தாரு... அந்தப் பணத்தைப் பாதுகாக்க நான் பட்ட பாடு எனக்குத்தானே தெரியும்... எத்தனை ரெய்டு...” என்று எகிறிவிட்டாராம் கான்ட்ராக்டர். தூது சென்றவர் அங்கிருந்தபடியே மாஜிக்கு போன் போட்டுக் கொடுத்து பேசச் சொல்ல, பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த ‘போன் காலை’ கட் செய்ததோடு, கடுமையான வார்த்தைகளால் தூதரை வசையும் பாடியிருக்கிறார். கூடவே, ‘‘இனிமே இந்த மாதிரி வேலைக்கு வராதீங்க” என்று எச்சரித்து அனுப்பிவைத்திருக்கிறார்.

‘‘தி.மு.க முக்கியப் பிரமுகர்கள் மூலம் அந்தக் கட்சிக்குச் செல்வதற்கான ரூட்டுகளை க்ளியர் செய்துகொண்டதே கான்ட்ராக்டரின் இந்த அதீத துணிச்சலுக்குக் காரணம் என்ற தகவலை மோப்பம் பிடித்த மாஜி, ‘விட்டுப் பிடிக்கலாம்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!

வணிக வளாகம் அமைக்க எதிர்ப்பு... சரிக்கட்டிய அமைச்சர்கள்!

சென்னையை ஒட்டியுள்ள நகராட்சி ஒன்றில், விதிகளை மீறி இரண்டு வணிக வளாகங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அது தொடர்பாக நகராட்சி கமிஷனர், சம்பந்தப்பட்ட வணிக வளாகங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். வேறு வழியில்லாமல் கட்டடப் பணிகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. உடனடியாக சம்பந்தப்பட்ட இரண்டு வணிக வளாகங்களின் உரிமையாளர்கள், இரு அமைச்சர்களை இனிப்புகளோடு போய்ப் பார்த்திருக்கிறார்கள். அங்கே கிரீன் சிக்னல் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட நகராட்சி கமிஷனர், நகராட்சித் தலைவர் ஆகியோருக்கும் லட்டுகளைக் கொடுத்திருக்கிறார்கள். வெயில்பட்ட பனி போல வணிக வளாகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை சட்டென நீங்கிவிட்டதாம்.

மிஸ்டர் கழுகு: “இந்த நாற்காலியையும் பறிச்சுடாதீங்க..!”

“தேர்தல் வருதுல்ல... அதுதான் பணியுறார்..!” - மன்னர் பிரமுகரின் மனமாற்ற அரசியல்!

கொங்கு நாட்டு பவர்ஃபுல் அமைச்சருக்கும், மலைநாட்டு மன்னர் எம்.பி-க்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்துவந்தது. கட்சி நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகக் கலந்துகொள்வதைக்கூட தவிர்க்கும் அளவுக்கு, அதிகாரப் போட்டியும் இருந்தது. ஆனால், சமீபகாலமாக நிகழ்ச்சிகளில் ஒன்றாகத் தலைகாட்டுவது, கட்சிக்காரர்கள் ஏதாவது கோரிக்கை என்று வந்தால் ‘அவர்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க’ என்று இறங்கிப்போவது என்று அநியாயத்துக்கு பம்முகிறாராம் மன்னர் நிர்வாகி. ‘‘அமைச்சரின் அசுர வளர்ச்சியைப் பார்த்து, இப்படியாகிவிட்டாரா எம்.பி?” என்று ஆச்சர்யப்படுகிறார்கள் உடன்பிறப்புகள். விசாரித்தால், ‘நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அமைச்சரின் தேர்தல் வியூகங்களும், நிதியும் தனக்குப் பெரும் உதவியாக இருக்கும்’ என்ற கணக்கே மன்னர் நிர்வாகியிடம் இந்த மனமாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது என்கிறார்கள்!

“தொகுதியும் பறி போய்விடுமோ?” - காவியால் நிம்மதியிழந்த அ.தி.மு.க நிர்வாகி!

டாலர் சிட்டியில் முன்னாள் எம்.எல்.ஏ-வாக இருந்த குணமானவர், அ.தி.மு.க மாநகர் செயலாளராகும் கனவில் இருந்தார். ஆனால், கடைசியில் அதை இளநீர் தொகுதி எம்.எல்.ஏ-வுக்குக் கொடுத்துவிட்டார் எடப்பாடி. ‘‘கட்சிப் பொறுப்புதான் கிடைக்கலை. வரும் மக்களவைத் தேர்தலில் தொகுதியையாவது கேட்டு வாங்கிடணும்” எனக் மனக்கோட்டை கட்டியவர், அதற்கான வேலைகளையும் தொடங்கியிருந்தார். ஆனால், அண்மையில் நடைபெற்ற காவிக் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் மாஜி காக்கித் தலைவர், ‘‘விரைவில் இந்தத் தொகுதி பா.ஜ.க உறுப்பினரின் குரல் மக்களவையில் ஒலிக்கும்” எனப் பேசியது குணமானவரின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டது. ‘‘மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தால், எனக்கு சீட் கிடைக்காமல் போய்விடுமே” என்று தன் ஆதரவாளர்களிடம் புலம்பியவர், இது குறித்து எடப்பாடியிடம் முறையிட்டிருக்கிறார். ‘‘கூட்டணி குறித்து அவர் என்ன சொல்லுவது... நீங்க வேலையைப் பாருங்க. யார் போட்டியிடுவது என்பதைப் பிறகு யோசிக்கலாம்” என்று பதில் வந்திருக்கிறது. ‘ஆறுதல் கேட்டுவந்தால் மையமாக பதில் சொல்லி அனுப்புகிறாரே...’ எனச் சோகத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாராம் குணமானவர்!