கட்டுரைகள்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: எடப்பாடி - பன்னீரின் போட்டிக்குப் போட்டி கிறிஸ்துமஸ் விழா!

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

முன்னாள் அமைச்சர் வேலுமணிமீது போடப்பட்ட டெண்டர் முறைகேடு வழக்கிலிருந்து விடுவித்த நீதிமன்ற உத்தரவைப் பார்த்து அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டதாம் ஆளும் தரப்பு

அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் கிறிஸ்துமஸ் விழாவை சென்னை வானகரத்தில் பெரிய அளவில் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். பா.ஜ.க-வுடனான உறவால் இழந்த சிறுபான்மை வாக்குகளைச் சீர்செய்யவே இந்த ஏற்பாடாம். ‘‘அம்மா காலத்திலிருந்து சிறுபான்மையினருக்கு ஆதரவாளர்கள் நாங்கள். எங்கள் கூட்டணியில் இருப்பவர்களின் கருத்துக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று பேசத் தயாராகிறார் எடப்பாடி என்கிறார்கள். ‘‘எங்ககிட்டேயும் சீப்பு இருக்கு. நாங்களும் சீவுவோம்” கதையாக, ஜே.சி.டி.பிரபாகர் மூலம் தனியாக கிறிஸ்துமஸ் விழாவை நடத்த ஓ.பி.எஸ் முடிவு செய்திருக்கிறாராம். ஆர்.சி சபை முதல்வர் ஸ்டாலினை வைத்தும், சி.எஸ்.ஐ சபை எடப்பாடியை வைத்தும் விழா நடத்துவதால், வேறு ஏதாவது கிறிஸ்தவ சபை சிக்குமா என்று தேடிக்கொண்டிருக்கிறதாம் ஓ.பி.எஸ் தரப்பு!

மிஸ்டர் கழுகு: எடப்பாடி - பன்னீரின் போட்டிக்குப் போட்டி கிறிஸ்துமஸ் விழா!

வேலுமணிக்கு உதவிய அந்த இரண்டு அதிகாரிகள்... கொதிப்பிலிருக்கும் ஆளும் தரப்பு!

முன்னாள் அமைச்சர் வேலுமணிமீது போடப்பட்ட டெண்டர் முறைகேடு வழக்கிலிருந்து விடுவித்த நீதிமன்ற உத்தரவைப் பார்த்து அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டதாம் ஆளும் தரப்பு. இவ்வளவு ஆவணங்கள் இருந்தும் வேலுமணி தப்பியது எப்படி என்ற விசாரணையில் இறங்கிய போதுதான், ‘‘சிக்கிய ஆவணங்களெல்லாம் டம்மி... அதனால் எந்தப் பயனும் இல்லை” என்ற தகவல் மேலிடத்துக்குக் கிடைத்திருக்கிறது. மேலும் விசாரித்ததில், வேலுமணி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு நடக்கவிருப்பதை ஜெயமான அ.தி.மு.க எம்.எல்.ஏ-வின் நெருங்கிய உறவினரான ஓர் அதிகாரியும், மூன்றெழுத்து பெயரைக் கொண்ட பெண் அதிகாரி ஒருவரும் முன்கூட்டியே வேலுமணிக்குத் தகவல் சொன்ன விஷயம் வெளிவந்திருக்கிறது. இருவரும் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் என்பதால், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ரெய்டையே வெறும் கண்துடைப்புக்காக மட்டுமே நடத்தியிருக்கிறார்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது. இதற்குக் கைமேல் பலன் பெற்றதாகவும் சொல்கிறார்கள். எனவே, எப்போது வேண்டுமானாலும் அந்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

மிஸ்டர் கழுகு: எடப்பாடி - பன்னீரின் போட்டிக்குப் போட்டி கிறிஸ்துமஸ் விழா!

`அந்நியன்’ பாதி `அம்பி’ பாதி கலவை... புதுவை முதல்வரின் ஸ்பிலிட் பர்சினாலிட்டி!

பா.ஜ.க-வுக்கு எதிராகக் காய்நகர்த்த ஆரம்பித்த புதுச்சேரி முதல்வர், மீண்டும் பம்ம ஆரம்பித்திருக்கிறார். இதன் உச்சகட்டமாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் புதுச்சேரியில் நடந்த ‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தக வெளியீட்டுவிழாவில், பா.ஜ.க-வினரே வெட்கப்படும் அளவுக்கு மோடியைப் புகழ்ந்து தள்ளிவிட்டாராம் முதல்வர். பின்னணியில் மத்திய அரசின் கைவரிசை இருக்கிறது என்கிறார்கள். அதாவது, மின்துறையைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் கொடுத்த முதலமைச்சர் ரங்கசாமி, மறுபுறம் மின்துறை ஊழியர்களை நீதிமன்றத்துக்கு அனுப்பி டபுள் கேம் ஆடிவிட்டார் என நினைக்கிறதாம் பா.ஜ.க தலைமை. இதனால், ஆளுநர் தமிழிசையை அழைத்து ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுக்கச் சொல்லியிருக்கிறது. இதனால், எந்த ஃபைலிலும் கையெழுத்து போடாமல் தேக்கி வைத்துவிட்டதாம் ஆளுநர் மாளிகை. இதுதான் முதல்வர் ரங்கசாமி மீண்டும் குனிந்ததற்குக் காரணம் என்கிறார்கள். இதற்கிடையே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை வலியுறுத்தக் கோரி, 60 அமைப்புகள் சேர்ந்து முதல்வரைச் சந்தித்திருக்கின்றன. அவர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, ‘‘மாநில அந்தஸ்து தரக் கோரி பலமுறை கேட்டோம், கிடைக்கவில்லை. மக்கள் தேர்வுசெய்த அரசுக்கு அதிகாரம் இல்லை. ‘ஓட்டு உங்களுக்குத்தானே போட்டோம்... நீங்கள்தான் செய்ய வேண்டும்’ என்று மக்கள் கேட்கின்றனர்” என்று பா.ஜ.க-வை எகிறியடித்திருக்கிறார். ‘‘திடீர்னு அம்பிபோல பணிவு காட்டுகிறார், திடீரென அந்நியனாக மாறி பா.ஜ.க-விடம் வம்பிழுக்கிறார். முதல்வரைப் புரிஞ்சுக்கவே முடியலியே?!” என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்!

மிஸ்டர் கழுகு: எடப்பாடி - பன்னீரின் போட்டிக்குப் போட்டி கிறிஸ்துமஸ் விழா!

“சின்னம்மா வாழ்த்துச் சொல்லலியே...” சோகத்தில் டி.டி.வி.தினகரன்!

டி.டி.வி.தினகரன், கடந்த 13-ம் தேதி தனது 60-வது பிறந்தநாளை தஞ்சாவூரில் அ.ம.மு.க நிர்வாகிகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் வந்தாலும் சித்தி சசிகலா, தினகரனுக்கு போனில் அழைத்துக்கூட வாழ்த்துச் சொல்லவில்லை என்கிறார்கள். ‘‘ஊர்க்காரப் பயலுகதான் நம்ஆஈ மதிக்கிறதில்ல... சித்தியுமா?” என சோகத்தில் ஆழ்ந்துவிட்டாராம் தினகரன். ‘‘அவரது சோகமெல்லாம் வெறும் நடிப்பு. கட்சி விவகாரம், குடும்பச் சொத்து உள்ளிட்ட பல விஷயங்களில் தொடர்ந்து சசிகலாவின் கருத்துக்கு எதிராகவே செயல்படுகிறார் தினகரன். தினம் தினம் கோபத்தை ஏற்படுத்தும் நபருக்கு, எப்படி வாழ்த்துச் சொல்லுவார் சின்னம்மா?” என்கிறது சசிகலா தரப்பு.

மிஸ்டர் கழுகு: எடப்பாடி - பன்னீரின் போட்டிக்குப் போட்டி கிறிஸ்துமஸ் விழா!

“சின்ன முதல்வர் வாழ்க...” உதயநிதிக்கு வாழ்த்து கோஷம் போட ஏற்பாடு!

அமைச்சராக உதயநிதி பதவியேற்ற நாளில் தமிழ்நாட்டில் எங்குமே விளம்பரங்கள் பார்க்க முடியவில்லை. அவர்களின் அதிகாரபூர்வ கட்சி நாளேட்டிலும் விளம்பரம் இல்லை. ‘‘பதவியேற்பு நிகழ்ச்சியை சிம்பிளாக நடத்த வேண்டும். விளம்பரம் எதுவும் செய்யக் கூடாது. போஸ்டர், பேனர் என அடித்து யாருடைய கண்ணையும் உறுத்துவதுபோல நடந்துகொள்ளக் கூடாது” என மேலிடத்திலிருந்து வந்த உத்தரவுதான் ‘அடக்கி வாசிப்பு’க்குப் பின்னால் இருக்கும் காரணம் என்கிறார்கள். ஆனால், உதயநிதி சென்ற இடமெல்லாம், ‘‘சின்னவர் வாழ்க... சின்ன முதல்வர் வாழ்க... அமைச்சர் வாழ்க...” என ஒரு கூட்டத்தை அனுப்பி புகழ்பாட வைத்திருக்கிறார் அந்தக் கவி. ‘‘எங்களுக்கும்தான் கோஷம்போடத் தெரியும்... தலைமை சொன்னதை மதிக்காமல் என்ன இது தனி ஆட்டம்?” எனத் தன் ஆதரவாளர்களிடம் முணுமுணுத்திருக்கிறார் மூத்த அமைச்சர்.