கட்டுரைகள்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: அன்பாக மிரட்டிய ‘துணிவு’ டீம்... முடிவை மாற்றிய நறுமண தலைவர்!

கமல் - ராகுல் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
கமல் - ராகுல் காந்தி

கொங்கு மண்டலத்தின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருக்கும் அந்த பவர்ஃபுல் அமைச்சர், இப்போது கட்சிக்குள்ளும் தன்னை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

‘அடேங்கப்பா... நம்ம தலைவர்கிட்ட இவ்வளவு சுறுசுறுப்பா?’ என்று சொந்தக்கட்சியினரே ஆச்சர்யப்படும் அளவுக்கு இடைத்தேர்தலில் மீண்டும் சீட் வாங்குவதற்காக பிரயாசைப்பட்டார் நறுமணத்தலைவர். ‘ஆளுங்கட்சியே கூட்டணிக்குத் தள்ளிவிட்டது... எதிர்க்கட்சி தராதா?’ என்று ரொம்பவே நம்பினார் நறுமணம். பழம் நழுவி, பாலில் விழும் நேரத்தில், ஒரே ஒரு போன் கால் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது! ‘‘கடந்த முறை அந்த இடத்தைக் கொடுத்ததுக்கே எங்க ஆளுங்க பிரச்னை பண்ணிட்டாங்க. இப்பவும் உங்களுக்கே கொடுத்தா, எங்க கட்சிக்காரங்களே உள்ளடி வேலை செய்வாங்க. அதுகூடப் பரவாயில்ல... நீங்க நின்னு, காங்கிரஸுக்கும் உங்களுக்கும் ஓட்டு மார்ஜின் அதிகமாகிட்டா, நாடாளுமன்றத் தேர்தல்ல உங்க கட்சிக்கான மதிப்பு இன்னும் குறைஞ்சுடும். தேர்தல்ல, உங்களால ஆளுங்கட்சிக்கு இணையா செலவு செய்ய முடியுமா... அதனால, நாங்களே நின்னுக்குறோம்” என்று ஸ்ட்ரிக்ட்டாகச் சொல்லிவிட்டாராம் துணிவு. அன்பா, மிரட்டலா என்று கணிக்க முடியாத தொனியில் சொல்லப்பட்ட செய்தியால், துவண்டுபோன நறுமணத் தலைவர் ராவோடு ராவாக அறிக்கை வெளியிட்டுவிட்டு, சோர்ந்து படுத்துவிட்டாராம்!

மிஸ்டர் கழுகு: அன்பாக மிரட்டிய ‘துணிவு’ டீம்... முடிவை மாற்றிய நறுமண தலைவர்!

‘இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும்...’ - பவருக்கு எதிராகத் தீர்மானம் போட்ட சீனியர்கள்!

கொங்கு மண்டலத்தின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருக்கும் அந்த பவர்ஃபுல் அமைச்சர், இப்போது கட்சிக்குள்ளும் தன்னை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறார். தற்போது நடைபெற்றுவரும், தி.மு.க துணை அமைப்புகளின் நிர்வாகிகள் தேர்வுக்கான நேர்காணலில் விளையாட்டு மற்றும் மாணவரணி நேர்காணலை நடத்தும் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார் பவர் அமைச்சர். வழக்கமாக, கட்சியின் சீனியர்கள் மற்றும் தலைமைக் கழகப் பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களிடம்தான் இப்படியான பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். எங்கிருந்தோ வந்து ஆட்சி, கட்சி, நிர்வாகிகள், தலைமை என்று எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்து முன்னேறும் அவரின் வேகத்தைப் பார்த்து கடுப்பில் இருக்கிறார்களாம் சீனியர்கள் சிலர். ‘‘இப்படியே போனால், நாமெல்லாம் அவர் பின்னாடி கைகட்டி நிற்க வேண்டியிருக்கும். ஏற்கெனவே, `தி.மு.க-வின் ஏக்நாத் ஷிண்டே’ என்று அவரை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தலைமையிடம் பேசி, இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும்” என்று கோட்டையில் நடந்த சீனியர்களின் ரகசியச் சந்திப்பில் தீர்மானமே போட்டிருக்கிறார்களாம்!

“ஒண்ணா வேலை செய்வோம் வாங்க...” - தூதுவிட்ட அமைச்சர்; மறுத்த மா.செ!

மாநில அரசியலில் மட்டுமின்றி தேசிய அளவிலும் அவ்வப்போது பட்டாசு கொளுத்தும் அந்த முக்கிய அமைச்சரால், உள்ளூர் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. தன்னுடைய ஒரே வலுவான ஆதரவாளரான மேயர் தரப்பையும் தலைமை எச்சரித்து, மட்டுப்படுத்திவிட்டதால் உள்ளூரில் ஆதரவின்றித் தவிக்கிறாராம் அமைச்சர். இதனால், மாநகருக்குள் மாவட்டச் செயலாளராக வலம்வரும் அந்த மூத்த எம்.எல்.ஏ-வுக்கு, ‘‘ஒண்ணா வேலை செய்வோம் வாங்க...” எனத் தூதுவிட்டாராம். ‘‘ஏன் நான் நல்லாயிருக்குறது பிடிக்கலையா... இப்பதான் ‘கீர்த்தி’யா இருக்கேன். உங்க ஆளு எப்ப, எப்பிடி மாறுவார்னே தெரியாது. அவரோட பொங்கச்சோறும் வேணாம்... பூசாரித்தனமும் வேணாம்” என்று தூது வந்தவருக்குப் பெரிய கும்பிடு போட்டு அனுப்பிவிட்டாராம். ஆனாலும் லோக்கல் அரசியலை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் அமைச்சர், “இப்பல்லாம் நான் பண்ணையார்த்தனமா நடந்துக்கிடுறது கிடையாது... யோசிங்க” என்று மீண்டும் மீண்டும் அந்த மா.செ-வுக்குத் தூது விட்டுக்கொண்டிருக்கிறாராம்.

மிஸ்டர் கழுகு: அன்பாக மிரட்டிய ‘துணிவு’ டீம்... முடிவை மாற்றிய நறுமண தலைவர்!

‘ம.நீ.ம ஆதரவு யாருக்கு?’ - கருத்து கேட்கும் கமல்ஹாசன்!

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறும் ஆசையோடு காய்நகர்த்திக்கொண்டிருந்தார் கமல்ஹாசன். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றதுடன், வீடியோவுக்காக அவருடன் உரையாடியதும் இதன் ஒரு பகுதிதானாம். இந்த நேரத்தில் திடுதிப்பென ஈரோடு இடைத்தேர்தல் வந்து, அங்கே காங்கிரஸ் கட்சியே நேரடியாகக் களமும் இறங்குவது அவருக்கு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. ‘அங்கே நமக்கு நல்ல வாக்குவங்கி இருக்கிறது. என்றாலும், இப்போது நாம் தனித்துப்போட்டியிடுவது சரியாக இருக்குமா?’ என்று குழப்பத்தில் இருக்கிறாராம் கமல். இது தொடர்பாக ஒரு முடிவெடுத்தே ஆக வேண்டும் என்பதால், ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் அவர். அந்தக் கூட்டத்திலேயே தேர்தல் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்பதால், அதற்கு முன்பாக கே.எஸ்.அழகிரி கமலைச் சந்தித்து, ஆதரவு கேட்கக்கூடும் என்கிறார்கள்.