கட்டுரைகள்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘இனி ஊருக்கே போகக் கூடாது...’ அமைச்சர்களுக்கு மேலிடம் போட்ட உத்தரவு!

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

“பா.ஜ.க-வைப் பாருங்கள்... இளம் தலைவர்களாக இருக்கிறார்கள்” என்று சொல்லியே ராகுல்வரையில் பேசுகிறார்களாம்

கனமழை காலத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் பார்வையும் தலைநகர் சென்னை மீதே இருந்ததால், பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் நேரடியாகச் சென்று பார்க்க வேண்டும் என ஆட்சி மேலிடத்திலிருந்து உத்தரவு பறந்திருக்கிறது. கே.என்.நேரு, எ.வ.வேலு இருவர் மட்டுமே பல பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்தார்களாம். பேரிடர் மேலாண்மைத்துறை, உணவுத்துறை உள்ளிட்ட முக்கியத் துறை அமைச்சர்கள் சென்னையில் இல்லாததால், பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லவில்லை. மேலிடம், “அமைச்சர்கள் இனிமேல் வாரத்தில் நான்கு நாள்கள் சென்னையில்தான் இருக்க வேண்டும். ஏதாவது முக்கிய நிகழ்ச்சிகள் என்றால் மட்டும்தான் ஊருக்குப் போக வேண்டும். அப்படி ஊருக்குப் போவதாக இருந்தாலும் தகவல் சொல்லிவிட்டுத்தான் செல்ல வேண்டும்” என்று ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்டிருக்கிறது. “ம்க்கும்... ஊர்ல இருந்தாவாச்சும் கட்சிக்காரன், தொகுதிக்காரனாவது மதிப்பான். சென்னையில எந்த அதிகாரியும் மதிக்கிறதில்லை... பிழைப்பும் கெட்டுப்போகுது” என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்கள்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

காங்கிரஸில் தலைமை மாற்றம் நிச்சயம்... தடுக்க முடியாமல் தவிக்கும் கே.எஸ்.அழகிரி!

தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. ஆனாலும், அகில இந்திய காங்கிரஸுக்கே தலைவர் இல்லாததால், இப்போது இதைப் பேசி பிரயோஜனம் இல்லை என்று அடக்கிவாசித்தார்கள் அழகிரிக்கு எதிரானவர்கள். அகில இந்திய தலைவராக கார்கே நியமிக்கப்பட்டவுடன் வீறுகொண்டு எழுந்துவிட்டார்கள். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, செல்லகுமார் உள்ளிட்ட சீனியர்கள் கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்று களமாட, கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி உள்ளிட்ட ஜூனியர்களோ தலைவர் பதவிக்காக நேரடியாகவே மல்லுக்கட்டுகிறார்களாம். “பா.ஜ.க-வைப் பாருங்கள்... இளம் தலைவர்களாக இருக்கிறார்கள்” என்று சொல்லியே ராகுல்வரையில் பேசுகிறார்களாம். இதுநாள் வரையில் இந்தப் பேச்சைக் கட்டுக்குள் வைத்திருந்த கே.எஸ்.அழகிரியால், சத்தியமூர்த்தி பவன் கலவரத்துக்குப் பிறகு ஒன்றும் செய்ய முடியவில்லையாம். குஜராத் சட்டசபைத் தேர்தல் முடிந்த பிறகு தமிழக காங்கிரஸுக்கு புதிய தலைவர் அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறது டெல்லி வட்டாரம்.

தி.மு.க-வுக்குத் தாவுகிறாரா மாஜி அமைச்சர்? குட்கா பிரச்னையால் பலே முடிவு!

சென்னையை ஒட்டியிருக்கும் மாவட்டத்தின், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர் தி.மு.க-வுக்குத் தாவ முடிவெடுத்துவிட்டதாகக் கிசுகிசுக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். குட்கா வழக்கால் வந்த நெருக்கடிதான் எல்லாவற்றுக்கும் காரணமாம். தன்னைப் போல இன்னொரு மாஜி அமைச்சரும் அந்தப் பிரச்னையில் மாட்டியிருக்கிறார் என்றாலும், அவரிடம் காட்டும் கரிசனத்தைக் கட்சித் தலைமை தன்மீது காட்டவில்லை என்று வருத்தத்தில் இருந்தார் இவர். இதைத் தெரிந்துகொண்ட தி.மு.க அமைச்சர் ஒருவர், ஆறுதல் சொல்லித் தேற்றினாராம். நீண்ட நேரம் மனம்விட்டுப் பேசிய மாஜி, “பேசாம தி.மு.க-வுக்கே வந்துடவாண்ணே” என்று வாய்விட்டே கேட்டுவிட்டாராம். இவர்மீது ஏற்கெனவே வேறு வில்லங்க வழக்கும் இருப்பதால், “தலைமையிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார் அமைச்சர். துறைரீதியிலான சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் அமைச்சர், இவரைக் கட்சியில் சேர்ப்பதன் மூலம் முதல்வரிடம் நல்ல பெயர் எடுக்க நினைக்கிறார் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

மிஸ்டர் கழுகு: ‘இனி ஊருக்கே போகக் கூடாது...’ அமைச்சர்களுக்கு மேலிடம் போட்ட உத்தரவு!

அடுத்து கைதாகவிருக்கும் பா.ஜ.க புள்ளி... சிக்கலில் அண்ணாமலையின் இன்னொரு விழுது!

முதல்வரை ஆபாசமாக விமர்சித்து கைதான கிஷோர் கே.சுவாமி பாணியில், கோவையில் இன்னொரு பா.ஜ.க புள்ளியும் கைதாவார் என்கிறது தி.மு.க வட்டாரம். கோவை வெடிகுண்டு பிரச்னை தொடங்கி அரசுக்கு எதிரான பல்வேறு விவகாரங்களை, சமூக வலைதளங்களில் பூதாகரமாக்குவதால் இவரைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறது காவல்துறை. அப்படியாவது அவரது கொட்டம் அடங்கட்டும் என்று பா.ஜ.க-விலும் ஒரு குரூப் காத்திருக்கிறதாம். ஏனென்றால், கட்சியில் சமீபத்தில் நடந்த குழப்பங்களுக்கு அண்ணாமலையின் ‘செல்ல’ப்பிள்ளையான இவர் காயத்ரி ரகுராமை வெளிப்படையாக விமர்சித்ததும் ஒரு காரணம் என்கிறார்கள். ட்விட்டரில் தன் புகழ் பாடிய இவருக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம்தான், ‘தொழில்துறை பிரிவில்’ முக்கியப் பதவி கொடுத்தார் அண்ணாமலை. தொழிலுக்காக, கோவையில் செட்டிலான கரூர்க்காரரான இவருக்கு, உள்ளூரிலும் சில பொறுப்புகள் கொடுத்திருக்கிறார்கள். சும்மாவே ஆடும் இவர், பதவி கிடைத்த பவுசில் சகட்டுமேனிக்கு ட்விட்டரில் களமாடுவதே காவல்துறையின் கண்காணிப்புக்குக் காரணம் என்கிறார்கள்.