
இலைக் கட்சியிலிருந்து விலகி தி.மு.க-வில் மாவட்டச் செயலாளராக இருக்கும் தங்கமானவருக்கு, பணிவானவர் மீதான கோபம் இன்னும் தீர்ந்தபாடில்லையாம்.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணிக்கும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையிலான முட்டல் மோதல் ஊரறிந்த விஷயம். ஆனால், சமீபத்தில் கரூரில் முதல்வர் கலந்துகொண்ட விழாவில், செந்தில் பாலாஜியை, ஜோதிமணி புகழ்ந்து தள்ளியது அனைவரையும் புருவம் உயர்த்தவைத்திருக்கிறது. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு ஜோதிமணி, ‘மாவட்ட நிர்வாகம் சிறப்பாகச் செயல்படுகிறது’ என்றும் பாராட்டிப் பேசியிருக்கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் கரூர் தொகுதியையே கேட்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் ஜோதிமணி. அப்படிக் கிடைக்கும் பட்சத்தில் செந்தில் பாலாஜி ஆதரவு இல்லாமல் வெற்றிபெற முடியாது என்பதுடன், அதிகாரிகளின் ஒத்துழைப்பும் தேவை என்பதே அவரின் மனமாற்றத்துக்குக் காரணமாம். ராகுல் காந்தியோடு நடைப்பயணத்தில் பிஸியாக இருந்தவரை, ‘கண்டா வரச்சொல்லுங்க தொகுதிக்கு’ என்று பா.ஜ.க-வினர் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்த பிறகுதான், நம் எதிரிகள் யார், நட்பு முரண் யார் என்பதே அக்காளுக்குப் புரிந்திருக்கிறது எனக் கதர்க் கட்சிக்காரர்களே கேலி செய்கிறார்களாம்!
“வேலை பார்ப்பது நான்... பெயர் மட்டும் அவருக்கா?”
தென்காசிக்குச் சென்ற முதல்வரை வரவேற்பதில் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கும், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சிவ பத்மநாதனுக்கும் லடாய் ஆகிவிட்டது. “இது ஒன்றும் கட்சி நிகழ்ச்சியில்ல... அரசு நிகழ்ச்சி... மாவட்டச் செயலாளரையெல்லாம் முன்னிலைப்படுத்த முடியாது” என்று அமைச்சர் தரப்பு கூற, “அப்படியென்றால், தலைவர் சி.எம்-மாக தென்காசி வரும்போதெல்லாம் நாங்க பக்கத்துலயே வரக் கூடாதா?” என மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் கொதித்திருக்கிறார். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல, அந்த மேடையில் அமைச்சரைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் முதல்வர். “ராப்பகலா நிகழ்ச்சி ஏற்பாட்டை நாம செய்தோம்... இவர் நோகாமல் பெயர் வாங்கிட்டுப் போயிட்டாரு” என மா.செ ரொம்பவே அப்செட்டாம். ‘சம்பந்தப்பட்ட மா.செ., கனிமொழி ஆதரவாளர் என்பதாலேயே இந்த ஓரங்கட்டல்’ என்று ஒரு குரூப் கொளுத்திப்போட்டிருப்பதால், விவகாரம் இப்போதைக்கு ஓயாது என்கிறார்கள்.

அறிக்கைவிடக்கூட நேரமில்லை... கமல்ஹாசன் ரொம்ப பிஸி!
திண்டுக்கல் மாவட்டம், பொன்னகரம் பகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் சிவ.இளங்கோ கட்சிக்கொடி ஏற்ற முயன்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார். இந்த விஷயத்தை கமல்ஹாசனின் காதுக்குக் கொண்டுசென்று கடுமையாக எதிர்வினையாற்றச் சொல்லியிருக்கிறார்கள் நிர்வாகிகள். ஆனால், அவரோ செய்தித் தொடர்பு மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸை அறிக்கைவிடச் சொல்லிவிட்டு ஒதுங்கிவிட்டாராம். ‘அரசியலுக்கு வரும் முன்பு, தினம் தினம் ட்விட்டரில் போட்டுத்தாக்கியவர், இப்போது பொதுப் பிரச்னைக்கும் வாய் திறப்பதில்லை, கட்சிக்காரர்களுக்காகவும் அறிக்கை விடுவதில்லை. அரசியலில் அவ்வளவு பிஸியாகவா இருக்கிறார்?’ என்று முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறார்கள் நிர்வாகிகள். “கருணாநிதி, ஜெயலலிதாகூட தேவைப்படும்போதுதான் 2-ம் கட்ட நிர்வாகிகளைவிட்டு அறிக்கை வெளியிடுவார்கள். இவர் முழுக் கட்சியையும் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டார்” என்று புலம்புகிறார்கள் அவர்கள்.

கலெக்டரை எச்சரித்த தங்கம்... ‘பேக்’ அடித்த எம்.எல்.ஏ!
இலைக் கட்சியிலிருந்து விலகி தி.மு.க-வில் மாவட்டச் செயலாளராக இருக்கும் தங்கமானவருக்கு, பணிவானவர் மீதான கோபம் இன்னும் தீர்ந்தபாடில்லையாம். சமீபத்தில் ஹனி மாவட்ட சிவன் கோயில் ஒன்றில், பணிவானவரின் இளைய மகன் ஏற்பாட்டில் கார்த்திகை தீபம் ஏற்றும் வைபவம் நடந்திருக்கிறது. “அறநிலையத்துறை கோயிலில் இந்தாளுக்கு என்ன வேலை... கோயில் செயல் அலுவலர்தான் தீபம் ஏற்ற வேண்டும்” என்று கோபமாக அதைத் தடுக்கக் சென்றிருக்கிறார் தங்கமானவர். அவரோடு சேர்ந்து அவரது மாவட்ட தி.மு.க எம்.எல்.ஏ-வும் எகிறியிருக்கிறார். அர்ச்சகரின் வேட்டியைப் பிடித்து இழுக்கும் அளவுக்குத் தங்கமானவர் இறங்கியிருக்கிறார். ஆனாலும், கடைசியில் பணிவானவரின் மகன் ஏற்பாடு செய்த அந்த அர்ச்சகர்தான் தீபம் ஏற்றினாராம். கடுப்பான தங்கமானவர், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, “என்னய்யா... இந்த ஊர்ல மட்டும் இன்னமும் அந்தக் கட்சி ஆட்சியா நடக்குது... ஒழுங்கா இல்லைன்னா பூராப் பேரையும் டிரான்ஸ்ஃபர் பண்ணவெச்சுடுவேன்” என்று எகிறியிருக்கிறார். இதற்கிடையே, “பணிவானவரும் முதன்மையானவரும் நல்ல அண்டர்ஸ்டாண்டில் இருக்காங்க. தங்கமானவர்தான் எகிறுகிறார் என்றால், உங்களுக்கு அறிவு எங்க போச்சு?” என்று உடன்பிறப்புகள் சிலர் எம்.எல்.ஏ-விடம் சொன்னார்களாம். உடனே அந்த எம்.எல்.ஏ பணிவானவர் வீட்டுக்கு போன் போட்டு வருத்தம் தெரிவித்தாராம்!