Published:Updated:

அழகிரி vs கார்த்தி சிதம்பரம்; உடன் பிறப்புகளுக்கு ஸ்டாலின் வாய்ப்பூட்டு... கழுகார் அப்டேட்ஸ்!

நாகர்கோவில் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட காசி மீடியாக்களைப் பார்த்து கைகளை சேர்த்து ஹார்ட்டின்விட்டார். அந்தப் புகைப்படம் மீடியாக்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலானது. அதைப்பார்த்த போலீஸ் உயர் அதிகாரிகள் கோபத்தின் உச்சத்துக்குச் சென்றுவிட்டார்களாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு, டிரான்ஸ்ஃபர் விவகாரங்களை முடிவு செய்யும் குழு கூட்டம் நடைபெறுகிறது. லிஸ்ட் ரெடியாகிறதாம். ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வருகிறேன். மெயில் அனுப்புகிறேன். என்று வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியிருந்தார் கழுகார். சில மணி நேரத்துக்குள் கழுகாரிடமிருந்து மெயில் வந்தது.

பணியிடம் காலி; இருவருக்கு ஜாலி!

சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் உணவுப் பாதுகாப்புப் பிரிவுக்கான முக்கியப் பதவி நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருக்கிறது. சுகாதாரத்துறையை கட்டுப்படுத்தும் இருவர்தான், அந்த முக்கியப் பதவிக்கு புதிய அதிகாரியை நியமிக்கவிடாமல் தடுக்கின்றனராம். ஹோட்டல்களில் ஆரம்பித்து, உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் கம்பெனிகள் வரை, உணவுப் பொருள்களின் தரத்தை உறுதி செய்து சான்றளிக்க வேண்டியது உணவுப் பாதுகாப்புப் பிரிவின் பணி. இதில் மாதம்தோறும் லட்சக்கணக்கில் மாமூல் கொட்டுவதால், புதிய அதிகாரியை நியமித்தால் வருமானம் அடிபட்டுவிடும் என அவர்கள் இருவரும் தடுக்கின்றனராம்.

சுகாதாரத்துறை
சுகாதாரத்துறை

சில மாதங்களுக்கு முன்னர் ஆட்சி மேலிடம் தலையிட்டு அந்தப் பதவிக்கு நேர்மையான அதிகாரி ஒருவரை பரிசீலித்தது. அறிவிப்பு வெளியிடப்படவிருந்த நிலையில், மேலிடத்திடம் அந்த இருவரும் கெஞ்சிக் கூத்தாடி, எப்படியோ அந்த அறிவிப்பைத் தடுத்துவிட்டார்கள். இந்த இருவரில் ஒருவரின் கணவர் அதிகாரமிக்க காக்கி என்பதால், அவரின் ஒத்துழைப்புடன் தமிழகம் முழுவதும் வசூல் வேட்டை சிறப்பாக நடைபெறுகிறதாம்.

எம்.எல்.ஏ. மீது சிவாச்சாரியார்கள் கோபம்!

நாகை மாவட்டம் பூம்புகார் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. பவுன்ராஜ், திருக்கடையூர் மற்றும் செம்பொன்னார்கோயில் சிவாச்சாரியார்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தினார். திருக்கடையூரைச் சேர்ந்த கோடீஸ்வர சிவாச்சாரியார்கள் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள மறுத்திருக்கிறார்கள். நீங்கள் நிவாரணம் பெற வேண்டாம். நிகழ்ச்சிக்கு வந்தால் மட்டும் போதும் என்று எம்.எல்.ஏ தரப்பு கட்டாயப்படுத்தவே வேறு வழியில்லாமல் வருகை தந்திருக்கிறார்கள். மறுநாள் பத்திரிகைகளில் நிவாரணம் பெறுபவர்களோடு தாங்களும் நிற்கும் புகைப்படங்கள் வெளிவந்ததால் கோடீஸ்வர சிவாச்சாரியார்கள் தரப்பு பவுன்ராஜ் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறதாம். கோபம் சாபமாகிவிடுமோ என்று அஞ்சிக்கிடக்கின்றனர் ஆன்மிக நம்பிக்கையுள்ள ஆளுங்கட்சி நிர்வாகிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காய்ச்சி எடுக்கப்பட்ட காசி!

காசி என்ற சுஜி
காசி என்ற சுஜி

பல பெண்களைக் காதல் வலையில் வீழ்த்தி பணம் மற்றும் நகைகளைப் பறித்ததுடன் அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்த நாகர்கோவில் காசி என்ற சுஜியின் வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போலீஸ் காவலில் எடுப்பதற்காக நாகர்கோவில் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட காசி மீடியாக்களைப் பார்த்து கைகளைச் சேர்த்து ஹார்ட்டின்விட்டார். அந்த புகைப்படம் மீடியாக்களிலும், சமூக வலைதளஙங்களிலும் வைரலானது. அதைப்பார்த்த போலீஸ் உயர் அதிகாரிகள் கோபத்தின் உச்சத்துக்கு சென்றுவிட்டார்களாம். போலீஸ் காவலில் எடுத்து முதலில் அன்பாக விசாரித்துள்னர். ஆனால் ``எனக்கு ஒன்றும் தெரியாது" என தெனாவட்டாக சொல்லியிருக்கிறார் காசி. ஏற்கெனவே ஹார்ட்டின் விட்டதில் ஆத்திரத்தில் இருந்த போலீஸார் காசியை குமுறி எடுத்துவிட்டனராம்.

அழகிரிக்கு டார்ச்சர் கொடுக்கும் கார்த்தி சிதம்பரம்!

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி-யுமான கார்த்தி சிதம்பரம், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கியிருக்கிறார். மயிலம், செஞ்சி, மதுரை ஆகிய ஊர்களில் நடந்த கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர், நெல்லை, நாங்குநேரியிலும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறாராம். இந்த நிகழ்ச்சிகள் குறித்து தலைமைக்கு எந்தத் தகவலையும் தெரிவிப்பது இல்லையாம். அவர்களின் ஆதரவாளர் என்கிற ஒரே காரணத்துக்காக, தன்னை கார்த்தி சிதம்பரம் ரொம்பவே ஒதுக்குவதாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்புகிறாராம்.

ஊட்டி ஹோட்டல்களுக்கு டோட்டல் லாஸ்!

உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. ஊட்டியில் காவல்துறையினர் சிலரும் உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சிலரும் நகரில் செயல்பட்டு வரும் உணவகங்களில் நாள்தோறும் ஓசியில் உணவு பார்சல் கேட்டு நச்சரிக்கின்றனராம். அந்த அதிகாரி சிக்கன் கபாப் கேட்டார், இந்த அதிகாரி மட்டன் சூப் கேட்டார் என மேலதிகாரிகளின் பெயரைச் சொல்லி பணம் தராமல் பார்சல் கட்டுகிறார்களாம்.

வெறிச்சோடிய ஊட்டி
வெறிச்சோடிய ஊட்டி

ஓசியில் தராவிட்டால், விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்று சொல்லி அபராதம் விதிப்போம், கடைக்கு சீல் வைப்போம் என மிரட்டுவதால் ஹோட்டல் உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். ஏற்கெனவே கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டில் சீசன் பிஸினஸ் முற்றிலும் போய்விட்டது. இத்தகைய சூழலில், காவல்துறையினரும், உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளும் தரும் தொல்லையால் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் கடையை மூடிவிடலாம் என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டனர் ஹோட்டல் உரிமையாளர்கள் பலர்.

டெல்லியாருக்கு சேவகம் செய்யும் வேலூர் போலீஸ்!

அரசியல் ஆளுமைகளுடன் நெருக்கமாக உள்ள `டெல்லி’ முரளிதரன், போலீஸ் பந்தோபஸ்துடன் வேலூரில் வலம்வருகிறார். வலுவான மீடியேட்டராகப் பார்க்கப்படும் டெல்லி முரளிதரன் மூலமாக காவல்துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் காட்பாடிக்கு முரளிதரன் வரும்பொழுதெல்லாம், காவல்துறை உயரதிகாரிகள் சிலரும் டிரான்ஸ்ஃபர், பதவி உயர்வு விஷயமாக அவரைப் பார்க்க படையெடுக்கின்றனர்.

டெல்லியார்
டெல்லியார்

சமீபத்தில், காட்பாடியிலிருந்து மேற்கு வங்கத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலை, கெத்தாக வந்து டெல்லி முரளிதரன் பார்வையிட்டதும், அவருக்கு வேலூர் எஸ்.பி பிரவேஷ்குமார் பந்தோபஸ்து வழங்கியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் முரளிதரன் எந்த அரசாங்க பொறுப்பிலும் இல்லை. அதிகாரம் இருப்பதாக ஒரு மாயையை உருவாக்கி டெல்லி முரளிதரன் வித்தை காட்டுகிறார். இதற்கு அதிகாரிகளில் சிலர் பலிகடா ஆகின்றனர் என்று புலம்புகின்றனர் நேர்மையான போலீஸார்.

ராக்கெட் வட்டி... பிராக்கெட் ராமமூர்த்தி!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைப் பற்றி அவதூறு பரப்பும் வகையில் முகநூலில் பதிவிட்டதாக கோவை தி.மு.க விவசாய அணி அமைப்பாளர் ராமமூர்த்தி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், ராமமூர்த்தி மீது ஈச்சனாரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒரு பகீர் புகார் கொடுத்துள்ளார். சங்கீதா பிரியா என்ற அந்தப் பெண், ராமமூர்த்தியிடம் கடன் வாங்கியுள்ளார். அவரிடம், ராமமூர்த்தி ராக்கெட் வட்டி கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ராமமூர்த்தி மீது, கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவணம்பட்டி போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர். இப்படிப்பட்டவரை கைது செய்ததற்காக ஸ்டாலின் அறிக்கைவிட்டது பற்றி எதிர்க்கட்சியினர் கிண்டல் அடித்து வருகின்றனர். இதனால் கோவை தி.மு.க உடன்பிறப்புகள் என்ன செய்வதெனத் தெரியாமல் முழிக்கின்றனர். சொந்தக் கட்சியைச் சேர்ந்த சிலரால்தான் தனக்கு இந்த நிலையே ஏற்பட்டது என ராமமூர்த்தி புலம்புகிறாராம்.

உடன் பிறப்புகளுக்கு ஸ்டாலின் வாய்ப்பூட்டு!

ஸ்டாலின்
ஸ்டாலின்

சமீபத்தில் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி-க்கள் மற்றும் வழக்கறிஞர் அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். அப்போது, சமீப காலமாக பட்டியலின சமுதாயத்தினரை காயப்படுத்தும் வகையில் தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் பேசிவருவது குறித்து கொதித்திருக்கிறார்.

"நீங்க லோக்கல் பாஷையில வாய்க்கு வந்ததைப் பேசிடுறீங்க. அது நம்ம கட்சியையே டேமேஜ் பண்ணுது. 'பட்டியலின விரோதி தி.மு.க'ன்னு பிம்பத்தை உண்டாக்கிடுது. நிதானமாக வார்த்தையை அளந்து பேசுங்க. நம்மளை ஏதாவது சிக்கல்ல விடவும், 'பட்டியலின மக்களின் விரோதி தி.மு.க'ன்னு பிம்பத்தையும் உருவாக்கவும் நினைக்குறாங்க. அதுக்கு நாம இடம் கொடுக்கக் கூடாது" என சீறியிருக்கிறார் ஸ்டாலின்.

நாசமாப்போகுது நாலரை கோடி!

வேளாண்மை
வேளாண்மை

கொரோனாவால் ஏற்பட்ட நிதிநெருக்கடியை சமாளிக்க, ஒவ்வொரு அரசுத் துறையிலும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், வேளாண்மைத்துறையில் ஆண்டுதோறும் 4.50 கோடி ரூபாய் வீண் செலவாவதாக அந்தத்துறையினர் கொதிக்கின்றனர். தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்க ஆலோசகர் என்ற பதவியில், ஆட்சிக்கு நெருக்கமான ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமித்து வந்தனர். 32 மாவட்டங்களில் 32 ஆலோசகர்கள், வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் 5 ஆலோசகர்கள் என 37 பேரை இவ்வாறு நியமித்து, மாதம்தோறும் ஒருலட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

இவர்கள் பணிக்கு வருகிறார்களா, இல்லையா என்பதை கண்காணிக்கவும் இவர்களுடைய பணியை மேற்பார்வையிடவும் யாரும் இல்லை. தவறிழைத்தால் நிர்வாக நடவடிக்கைகூட எடுக்க கூட முடியாது. ஆட்சிக்கு நெருக்கம் என்கிற அடையாளத்தை வைத்துக்கொண்டு பெயருக்கு அலுவலகம் வந்து செல்வதால், இவர்களின் பணியையும் சேர்த்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் தற்போது செய்கிறார்கள். ``இதற்கு எதற்காக ஆண்டுதோறும் 4.50 கோடி ரூபாய் வீணடிக்கப்படுகிறது? இப்படி தண்டத்துக்கு பணத்தை இரைத்துவிட்டு, சிக்கன நடவடிக்கை என்கிற பெயரில் ஊழியர்களின் அகவிலைப்படியை நிறுத்துவது நியாயமா?" என கொந்தளிக்கின்றனர் வேளாண்மைத்துறை அதிகாரிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு