Published:Updated:

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்?

டெல்லி கொடுத்த ‘ஐபேக்’ அஸ்திரம்

பிரீமியம் ஸ்டோரி

‘‘கார்ப்பரேட் கம்பெனிகள் கட்சிக்குள் வந்தால் என்ன நடக்கும் என்பதை இனி தமிழக அரசியல் களத்தில் காணப் போகிறீர்கள்!’’ என்றபடியே அலுவலகத்துக்குள் நுழைந்தார் கழுகார். அவருக்கு சூடாக இஞ்சி டீ கொடுத்துவிட்டு, ‘‘கொஞ்சம் விவரமாகச் சொல்லும்’’ என்றோம்.

‘‘கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பி.ஜே.பி-தான் இந்திய அரசியலில் கார்ப்பரேட் கலாசாரத்தை துவக்கிவைத்தது. அந்த ஃபார்முலா ஒர்க்-அவுட் ஆனதால், பல்வேறு மாநிலக் கட்சிகளும் கம்பெனி கலாசாரத்துக்குள் வந்துவிட்டன. அந்த வகையில் தமிழகத்தில் அ.தி.மு.க-வும் இப்போது அதே பாணியை கையில் எடுத்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்த படுதோல்வி, கட்சித் தலைமைக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. வலிமையான தலைவர் இல்லாத நிலையில், கட்சியை வலுப்படுத்த வேண்டிய நெருக்கடி எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் பிரஷாந்த் கிஷோரை அ.தி.மு.க தரப்பு நெருங்கியுள்ளது.’’

‘‘அடேங்கப்பா!’’

‘‘ஆமாம். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜூலை 14-ம் தேதி டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு பிரசாந்த் கிஷோர் டீமை சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. அ.தி.மு.க-வைப் பலப்படுத்த பிரஷாந்த் கிஷோரின் ஐபெக் நிறுவனத்தை அணுகுங்கள் என்று ஐடியாவைக் கொடுத்ததே டெல்லியின் சில பி.ஜே.பி புள்ளிகள்தானாம். அதன் அடிப்படையில், தகவல் தொழில்நுட்பப் பிரிவின் கொள்கைப்பரப்புச் செயலாளர் தம்பிதுரை, ரபி பெர்னார்ட் ஆகிய இருவரும் முதலில் இந்த டீமிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். அதற்குப் பின், அந்த டீமைச் சேர்ந்தவர்கள் முதல்வருடன் டெல்லியில் நட்சத்திர விடுதியில் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் தோல்வி குறித்து விரிவாகப் பேசப்பட்டது.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 44.9 சதவிகிதமாக இருந்த வாக்குவிகிதம், 2016 சட்டமன்றத் தேர்தலில் 41.3 சதவிகிதமாகக் குறைந்து, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 18.48 சதவிகிதமாக ஆகிவிட்டது குறித்து கவலை பொங்க விவாதித்திருக்கிறார்கள். இனி கட்சியை எப்படி வளர்ப்பது என்பது குறித்து கிஷோரிடம் கருத்து கேட்டுள்ளார்கள். கிஷோர் எந்தக் கருத்தும் சொல்லவில்லையாம். 2021 தேர்தலை மனதில் வைத்து இந்தப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. முதல்வர் சந்திப்புக்குப் பிறகு, தம்பித்துரையும் ரபி பெர்னாட்டும் தொடர் பேச்சுவார்த்தையில் இருந்துள்ளார்கள்.’’

‘‘ஓஹோ!’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘தம்பிதுரை, ரபி பெர்னாட்டுடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தின் போர்டு மீட்டிங் நடந்ததிருக்கிறது. ‘அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என இரட்டைத் தலைமை இருக்கிறது. இப்படியிருந்தால் கீழ்மட்டத்தில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதில் நமக்கு பெரும் சிக்கல் ஏற்படும். நமது திட்டங்களைத் தேர்தலில் புகுத்துவதில் ஒத்துழைப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான். அதனால், அ.தி.மு.க-வுக்குத் தேர்தல் பணி செய்யும் புராஜெக்டை கைவிட்டு விடலாம்’ எனப் பேசியிருக்கி றார்கள்.’’

‘‘அப்புறம் என்ன நடந்ததாம்?’’

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்?

‘‘அதேசமயத்தில், தமிழகத்தில் தன் கட்சிக்குப் பணியாற்ற வேண்டும் என கமல் தரப்பிலிருந்தும் பேசப்பட்டுள்ளது. இதனால் யாருக்குப் பணியாற்றுவது என்பதில் கிஷோர் தரப்பு முடிவு எடுக்க முடியாமல் இருந்தது. ஒருவழியாக கமலுக்கு ஓ.கே சொல்லிவிட்டார்கள். ஆனால், தொடர்ந்து அ.தி.மு.க தரப்பு அழுத்தம் கொடுத்த பிறகு, ‘சில ஐடியாக்களை மட்டும் இப்போது தருகிறோம். அதை முதலில் செய்யுங்கள். மற்றதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று கிஷோர் தரப்பு சொல்லியிருக்கிறது.’’

‘‘என்ன ஐடியாவாம்?’’

‘‘முதலில் கட்சியை ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வரவும், கட்சியின் வாக்கு வங்கி எங்கே சரிந்துள்ளது என்பதை கண்டறியும்படியும் சொல்லப்பட்டதாம். சில தினங்களுக்கு முன், தம்பிதுரைக்குச் சொந்தமான இடத்தில் இந்தப் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. அப்போதுதான் தலைமைமீது கட்சியினருக்கு நம்பிக்கை வரவேண்டும் என்றால், சாதாரண நபருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஒரு திட்டத்தைச் சொல்ல, அந்த அடிப்படையில்தான் யாருமே எதிர்பார்க்காத வகையிலான நபர்கள், ராஜ்ய சபாவுக்குத் தேர்வு செய்யப்பட்டனராம்.’’

‘‘அடேங்கப்பா!’’

‘‘மேலும் கிஷோர் தரப்பு, ‘சாதிரீதியாக அ.தி.மு.க-வுக்கு பலமாக இருந்த முக்குலத்தோர் வாக்குகள் குறைந்துவிட்டன. அதை ஈடுகட்ட வன்னியர், நாடார் மற்றும் பட்டியலின சமூக வாக்குகளைக் கவரும் திட்டங்களைச் செயல்படுத்துங்கள். பெண்கள் வாக்குகளைக் கவர சில அறிவிப்புகளை வெளியிடுங்கள்’ என்றெல்லாம் ஐடியா கொடுத்துள்ளது. இதை ஒவ்வொன்றாகச் செய்யும் மூடில் இருக்கிறது அ.தி.மு.க.’’

‘‘கிஷோர் முழுமையாக அ.தி.மு.க-வுக்குப் பணியாற்றுகிறாரா இல்லையா?’’

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்?

‘‘அந்தச் சந்தேகம் இன்னும் அ.தி.மு.க-வினரிடம் உள்ளது. காரணம், கமல் தரப்புடன் எட்டு சுற்று பேச்சுவார்த்தையை கிஷோர் டீம் முடித்துவிட்டது. ஒரு மாநிலத்தில் ஒரு கட்சிக்குத்தான் அந்த டீம் பணியாற்றும். அந்த அடிப்படையில் கமல் கட்சிக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டு அ.தி.மு.க-வுக்குப் பணியாற்ற முடியாது. ஆனால், அ.தி.மு.க-வுக்கு அவரின் சகாக்கள் மூலம் சில ஐடியாக்களை கிஷோர் வழங்கலாம். அந்த அடிப்படையில்தான் அ.தி.மு.க-வுக்கு உதவி செய்துவருகிறார் என்கிறார்கள்.’’

‘‘அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு இந்த விவரம் தெரியுமா?’’

‘‘சில முக்கிய நபர்களுக்குத் தெரிந்துள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் ஓ.பி.எஸ் தரப்புக்கு உடன்பாடு இல்லையாம். ‘நம்மிடமே தகவல் தொழில் நுட்பப் பிரிவு இருக்கும்போது, எதற்காகக் கோடிக்கணக்கில் செலவுசெய்து பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தை அழைக்க வேண்டும்?’ என்று அவருடைய ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். தமிழக அரசியல் கட்சிகளிலேயே முதன்முறையாகத் தகவல் தொழில்நுட்பப் பிரிவை ஏற்படுத்தியது அ.தி.மு.க-தான். அதன் செயலாளராக அஸ்பயர்் சுவாமிநாதனை ஜெயலலிதா நியமித்தார். தமிழக வாக்காளர்களை பூத் வாரியாக பிரித்து அலசியிருந்தார் சுவாமிநாதன். ஒவ்வொரு பூத்திலும் உள்ள சாதிவாரியான வாக்குகள், கடந்த காலங்களில் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள், அவர்களில் யாருக்கெல்லாம் அரசு நலத்திட்ட உதவிகள் போய் சேர்ந்தன, எந்த பூத் வீக்காக இருக்கிறது... என அனைத்து தகவல்களையும் உருவாக்கியிருந்தார் சுவாமிநாதன். அதன் அடிப்படையில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 35 தொகுதிகளில் அ.தி.மு.க ஜெயிக்கும் எனச் சொல்லியிருந்தார். இந்த ரிப்போர்ட்டை ஜெயலலிதா பார்த்த பிறகுதான், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, 2014 பிப்ரவரியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவை ஏற்படுத்தி, அதன் செயலாளராக சுவாமிநாதனை நியமித்தார். இதையெல்லாம் இப்போது எடப்பாடி காதில் போட்டுள்ளார்கள்.’’

‘‘அவர்கள் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறதே?’’

‘‘ஆனால், அதை எடப்பாடி பெரிதாகக் கண்டுகொள்ள வில்லை. பிரசாந்த் கிஷோர் போன்ற நபரால்தான் இதை மிகச் சரியாகச் செயல்படுத்த முடியும் என்று நினைக்கிறார். இதனால், பிரசாந்த் கிஷோர் டீமிடம் தொடர்ந்து தம்பிதுரை ஐடியா கேட்டுக்கொண்டு வருகிறார். இந்தப் பேச்சு வார்த்தை முடிந்தால், தி.மு.க-வுக்கு அரசியல் ஆலோசனைகளை வழங்கிவரும்

ஓ.எம்.ஜி டீமுக்கும் ஐபேக் டீமுக்கும் இடையே கார்ப்பரேட் யுத்தம் தமிழக அரசியல் களத்தில் ஆரம்பித்துவிடும்.’’

‘‘சரி, சரி... டிராக் மாறும்!’’

‘‘ஜூலை 15-ம் தேதி தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. வழக்கமாக அறிவாலயத்தில் நடக்கும் இந்தக் கூட்டம் இம்முறை அன்பகத்தில் நடந்தது. தி.மு.க தலைமை தரப்பில் மாவட்டச் செயலாளர்களுக்குச் சில ரகசிய உத்தரவுகள் கொடுக்கப் பட்டுள்ளதாம். அறிவாலயத்தில் கூட்டம் நடத்தினால், அனைத்துத் தகவல்களும் உடனடியாக வெளியே சென்றுவிடுகிறது என்றுதான் அன்பகத்தில் கூட்டத்தைக் கூட்டினார் ஸ்டாலின். ஆனால், அந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களும் வெளியே கசிந்துவிட்டதாம். வேலூர் தேர்தல் தொடர்பாக கரன்சி குறித்து சில கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ‘மத்திய அரசு கண்கொத்தி பாம்பாகக் கவனிக்கிறது. கரன்சிகளைக் கையாளுவதில் கவனம் தேவை’ என்று சொல்லப்பட்டதாம். துரைமுருகன், தன் மகனை ஜெயிக்க வைத்துவிடுங்கள் என்று ஸ்டாலினிடம் உருக்கமாகச் சொன்னாராம்.’’

‘‘ஓஹோ!’’

‘‘சென்னை கூட்டம் இப்படியென்றால், விழுப்புரம் கூட்டம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மத்திய மாவட்ட இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தை பொன்முடி மகன் கௌதம சிகாமணி கூட்டியுள்ளார். இளைஞர் அணியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் இவர் கூட்டிய கூட்டத்துக்கு அனைத்து நிர்வாகிகளும் வந்துவிட வேண்டும் என்று உத்தரவு போயுள்ளது. இதனால் கடுப்பான நிர்வாகிகள், வாரிசு அரசியல் என்றாலும் அதற்கு அளவில்லையா என்று தலைமைக்குப் புகார் அனுப்பியுள்ளனர். ஆனால், கௌதம சிகாமணி இதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லையாம். உதயநிதி பதவிக்கு வந்த பிறகு, மாநில இளைஞர் அணியில் விரைவில் தனக்குப் பெரிய பொறுப்பு உண்டு என்று சொல்லி வருகிறாராம்’’ என்றபடியே சிறகை விரித்தார் கழுகார்.

தி.மு.க-வை உறுத்தும் அ.தி.மு.க-வின் மௌனம்!

ந்த எதிர்ப்பும் இல்லாமல் எம்.பி ஆகியுள்ளார் வைகோ. மனுக்கள் பரிசீலனைக்கு அ.தி.மு.க சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை ஆகியோரும், தி.மு.க தரப்பில் எ.வ.வேலு உள்ளிட்ட வழக்கறிஞர் குழுவும், பா.ம.க அன்புமணிக்கு ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு ஆகியோரும் ஆஜராகியுள்ளனர்.

வைகோவின் மனுவுக்கு அ.தி.மு,க தரப்பு கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் என பதற்றத்தோடு வைகோவின் வழக்கறிஞர் காத்திருக்க... எந்த ரியாக் ஷனும் காட்டாமல் மௌனமாக இருந்து வைகோ மனுவுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது அ.தி.மு.க தரப்பு. அ.தி.மு.க-வின் மௌனம்தான் இப்போது தி.மு.க-வை உறுத்துகிறதாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு