Published:Updated:

`கப்சிப்' சிதம்பரம், `புலியா பூனையா' ரஜினி, சிக்கலில் தேனி எம்.பி... கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்!

கழுகு @ மொபைல்
கழுகு @ மொபைல்

‘ப்ளீஸ், செக் யுவர் மெயில்!’ என்ற கழுகாரின் மெசேஜ் வந்து விழுந்தது. மின்னஞ்சலைத் திறந்ததும் கழுகாரின் மெயில் நமக்காகக் காத்திருந்தது. உள்ளே கொட்டிக்கிடந்தன தகவல்கள்...

கழுகு @ மொபைல்

பேச்சு... மூச்... ப.சிதம்பரம்!

'வருமான வரித்துறையில் சோதனை, கறுப்புப்பணம், வரி ஏய்ப்பு என எந்தப் பஞ்சாயத்து இருந்தாலும், வருமான வரித்துறை நோட்டீஸில் குறிப்பிட்ட தொகையை மட்டும் மார்ச் 31-க்குள் கட்டிவிட்டால் வட்டி, அபராதத்தொகை கட்டத் தேவையில்லை. நிலுவையிலுள்ள அனைத்து பஞ்சாயத்துகளும் திரும்பப் பெறப்படும்' என புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

வருமான வரித்துறையிடம் பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி இருவருக்கும் இந்தத் திட்டம் பொருந்துமா என்ற விவாதம் கிளம்பியுள்ளது. இவர்கள் இருவரின் மீதும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என இரண்டு துறைகளின் வழக்குகளும் இருப்பதால், இதனைப் பயன்படுத்தமுடியாது என்று சிலர் சொல்கிறார்கள்.

ஒருவேளை இத்திட்டத்தை ஏற்று, அவர் தொகையைச் செலுத்தினால் மோடி அரசின் திட்டத்தை சிதம்பரம் ஏற்றுக்கொண்டதாகத் தகவல் பரவும். இதனால்தான், இத்திட்டம் பற்றி சிதம்பரம் வாயே திறக்காமல் கப்சிப் ஆகிவிட்டாராம்.

ரஜினி...  வராத புலியா... வந்த பூனையா?

'ஆன்மிக அரசியல்' என்று ரஜினி சொன்னாலும் சொன்னார், இந்து அமைப்புகள் எல்லாவற்றிலும் அவரின் புகைப்படம் இடம்பெற்றுவிடுகிறது. தஞ்சையில் இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 16-ம் தேதி நடந்த ஆன்மிக அரசியல் மாநாடு மற்றும் காவிக்கொடி பேரணியில், ரஜினி மன்றத்தின் பெயரும் அடிபட்டது. மாநாட்டு விளம்பரங்களில் தஞ்சை மாவட்ட ரஜினி மன்றச் செயலாளர் கணேசன் பெயரும் இடம்பெற்றிருந்தது.

ரஜினி
ரஜினி
பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!
இதைப் பார்த்துவிட்டு, ``பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது'' என்று ரஜினிக்கு எதிராக மீம்ஸ்கள் களைகட்ட ஆரம்பித்தன.

அதன்பின்பே, இந்தத் தகவல் ரஜினி மக்கள் மன்றப் பொறுப்பாளர் சுதாகருக்கு எட்டியிருக்கிறது. உடனே, அவர் கணேசனை அழைத்து கண்டித்திருக்கிறார். அதையடுத்து, மாநாட்டுப் பக்கமே கணேசன் தலைகாட்டவில்லையாம். அந்த மாநாட்டில், ‘ரஜினிதான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்’ என்கிற ரேஞ்சில் அர்ஜூன் சம்பத் உட்பட பலரும் பேசியிருக்கிறார்கள்.

முன்பெல்லாம் ரஜினி அரசியலுக்கு வருவதை வைத்து ‘புலி வருது’ கதை என்பார்கள். இப்போதோ, ‘பூனை வெளியே வந்துவிட்டது’ என்கிறார்கள். அரசியலில் ரஜினி புலியா... பூனையா?

பழனி... கோர்ட் படியேறுகிறது!

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தொடர்ந்து பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலும் குடமுழுக்கு தமிழ் மொழியில் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள், தமிழ் ஆர்வலர்கள்.

இதுதொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ் சித்தர்கள் ஆன்மிக இயக்க நிறுவனத் தலைவர் 'தமிழ்' ராஜேந்திரன், சத்தியபாமா அறக்கட்டளை தலைவர் சத்தியபாமா, திரைப்பட இயக்குநர் வ.கௌதமன், தெய்வத் தமிழ் திருமுறை வழிபாட்டு இயக்கம், சிவ.வெ.மோகனசுந்தரம் சுவாமிகள், கல்வெட்டு ஆய்வாளர் நந்திவர்மன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

பழனி முருகன் கோயில்
பழனி முருகன் கோயில்

'தமிழ் இறைவழிபாட்டு உரிமை மீட்பு இயக்கம்' என்ற அமைப்பை அவர்கள் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு, இயக்குநர் கௌதமனை ஒருங்கிணைப்பாளராகவும், 'தமிழ்' ராஜேந்திரனை துணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்திருக்கிறார்கள். ஆறு மாதத்தில் பழனி கோயில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. அதற்குள் முதல்வர் சந்திப்பு, கருத்தரங்கம், மாநாடு ஆகியவற்றை நடத்த முடிவுசெய்திருக்கிறார்கள். இதில் பயன் இல்லாமல் போனால், நீதிமன்றப் படியேறுவார்களாம்.

திருப்பதிக்கே மொட்டை போட்ட தி.மு.க புள்ளி!

சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான ஆலயத்தின் கமிட்டி தலைவராக சேகர்ரெட்டி இருக்கிறார். அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளில் உள்ள முக்கியப் புள்ளிகளின் உறவினர்களும் கமிட்டி உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த ஆலயத்திற்கு வரும் வி.ஐ.பி-க்களை வைத்து பெரிய லாபியே நடந்துவருகிறதாம்.

துர்கா ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்ட நிர்வாகி; `கப் சிப்' அறிவாலயம்... கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் உறவுப்பெண் ஒருவரை தி.மு.க நிர்வாகி ஒருவர் ஏமாற்றி சொத்துகளை அபகரித்துக் கொண்டதாகப் புகார் ஒன்று அறிவாலயத்துக்குப் போயிருக்கிறது. அறிவாலயத்தில் தனக்கு வேண்டிய நபர் மூலம் அந்தப் புகாரை அமுக்கிவிட்டாராம் சிக்கலுக்குரிய நிர்வாகி.

இதனால், பாதிக்கப்பட்ட பெண், தலைவரின் மனைவியைச் சந்தித்து நடந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். விரைவில் அந்த தி.மு.க நிர்வாகிக்கு கல்தா உறுதியாம்!

அதே இடம்தான் வேண்டுமாம்!

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுவதற்கான ஆணையை சட்டப் போராட்டம் நடத்தி பெற்றவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இதற்காக 2013-ம் ஆண்டு, முன்னாள் அமைச்சரும் தற்போதைய அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும் எம்.பியுமான வைத்திலிங்கம், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரமாண்டமான பாராட்டு விழாவை தஞ்சையில் நடத்தியதுடன், ஜெயலலிதாவிற்கு 'பொன்னியின் செல்வி' என்ற பட்டத்தையும் விவசாயிகள் சார்பில் வழங்கினார்.

ஜெயலலிதா சமாதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதா சமாதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக மிகப்பெரிய அளவில் தஞ்சையில் பாராட்டுவிழா நடத்துவதற்கு வைத்திலிங்கம் ஏற்பாடு செய்கிறார் என அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் தெரிவித்துவந்தனர். வருகிற 26-ம் தேதி, வைத்திலிங்கம் மகனுக்கு தஞ்சையில் திருமணம் நடைபெறுகிறது. இதில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர். அப்போது, இதற்கான விழா இருக்கும் என பேச்சு எழுந்தது.

முதல்வர் தரப்பில், ஜெயலலிதாவிற்கு பாராட்டு விழா நடந்த அதே இடத்தில் தனக்கும் நடந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தாராம். ஆனால், வைத்திலிங்கம் ஏனோ அதில் ஆர்வம் காட்டவில்லையாம். திருமணப் பணிகளைக் காரணம் காட்டி இதைத் தவிர்த்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அதே 26-ம் தேதி மாலை, நாகையில் முதல்வருக்கு பாராட்டுவிழா நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாட்டை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்துவருகிறார்.

கண்காணிப்பு வளையத்தில் எம்.பி. ஆபீஸ்!

தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார், மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால், அவருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்திவந்தன. அதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி, பெரியகுளத்தில் உள்ள எம்.பி அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர், இஸ்லாமிய அமைப்பினர். இதை அறிந்த அ.தி.மு.க-வினர், எம்.பி அலுவலகத்திற்கு விரைந்தனர். இதனால், இரு தரப்பிற்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

தேனி எம்.பி., ரவீந்திரநாத்குமார்
தேனி எம்.பி., ரவீந்திரநாத்குமார்

இது ஒருபுறம் என்றால், கடந்த ஜனவரி 23-ம் தேதி மாலை, எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு ரவீந்திரநாத்குமார், கம்பம் சென்றபோது, இஸ்லாமிய அமைப்பினர்களால் வழிமறிக்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, தேனி முழுவதும் அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.பி காரை வழிமறித்த 43 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கூறி, பெரியகுளத்தில் இஸ்லாமியர்களும் போராட்டத்தில் இறங்க, அ.தி.மு.க - இஸ்லாமிய அமைப்பினர்கள் இடையே பெரியகுளத்தில் மோதல் உருவாகும் சூழல் உருவானது. நிலைமையை உணர்ந்த காவல்துறை, கைதுசெய்தவர்களை விடுவித்தது.

இந்நிலையில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்கள்மீது போலீஸார் தடியடி நடத்தியதைக் கண்டிக்கும் விதமாக, இஸ்லாமிய அமைப்பினர்கள், பெரியகுளம் ரஹமத் மஸ்ஜித் பள்ளிவாசல் அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றோடு ஏழாவது நாளாகப் போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில், பெரியகுளத்தில் உள்ள எம்.பி அலுவலகத்திற்கு இரண்டு காவலர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். மேலும், எம்.பி அலுவலகத்தை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்கும்படி மாநில உளவுத்துறை அறிவுறுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருபுறம் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், தேவையற்ற பிரச்னைகள், மோதல்களைத் தவிர்க்க, எம்.பி அலுவலகம் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளது.

வண்ணாரப்பேட்டை போராட்டம்
வண்ணாரப்பேட்டை போராட்டம்

அப்பா மகனுக்கு மிரட்டல்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோருக்கு மிரட்டல் விடும்படியாக ட்விட்டரில் ராமநாதன் ஐயர் என்பவர் தன்னுடைய அக்கவுன்டில் இருந்து கருத்து தெரிவித்தார். அதில், ‘நெல்லைக் கண்ணன் ஸ்டைலில்' சர்ச்சைக்குரிய கருத்தை அவர் வெளியிட்டிருந்தார். இருவரையும் டேக் செய்து வெளியிட்டுள்ள இந்தக் கருத்து, காங்கிரஸ் தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட நபர்மீது காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளனர். மேலும், காங்கிரஸ் ஆதரவாளர் பழனியப்பன் என்பவர், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் சம்மந்தப்பட்ட நபர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் எம்.பி -க்கள் இருவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் புகார் மனு அளித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு