Published:Updated:

தோழர்களுக்கு வலை வீசும் அ.தி.மு.க... செல்லூர் ராஜு பாச்சா பலிக்குமா? - கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்

கழுகு @ மொபைல்
கழுகு @ மொபைல்

தமிழக பா.ஜ.க தலைவர் அறிவிப்பு, தி.மு.க-வின் ராஜ்யசபா பிளான், கம்யூனிஸ்ட்டுகளை இழுக்கும் அ.தி.மு.க... கழுகார் தந்த பரபர அரசியல் அப்டேட்ஸ்!

ஆறுக்குப் பிறகு அறிவிப்பு!

மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா
மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா

தமிழக பாரதிய ஜனதா தலைவருக்கான அறிவிப்பு வராத நிலையில் அதற்கான காரணத்தை அரசியல் வட்டாரத்தில் கேட்டோம். தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, முரளிதர ராவிடையே இன்னும் சந்திப்பு நடைபெறவில்லையாம். தாமதத்துக்குக் காரணம் ஜே.பி.நட்டாவின் மகனுக்கு ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்றுள்ளது. மார்ச் 6-ம் தேதி டெல்லியில் மோடி, அமித் ஷா உட்பட பலர் கலந்துகொள்ள திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது. அது முடிந்த பிறகுதான் தமிழகத் தலைவர் குறித்து நட்டா, முரளிதரராவுடன் ஆலோசனை நிகழ்த்த உள்ளார் என்று கூறப்படுகிறது.

`கப்சிப்' சிதம்பரம், `புலியா பூனையா' ரஜினி, சிக்கலில் தேனி எம்.பி... கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்!

தி.மு.க பிளான்

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு தி.மு.க, என்.ஆர்.இளங்கோவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படலாம் என்று தெரியவருகிறது.

மூன்று சீட்களில் ஒன்று அவருக்கும் ஒன்று சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவருக்கும். ஒன்று தலித் சமூகத்தைச் சேர்ந்தவருக்கும் ஒதுக்க இருப்பதாக அறிவாலயம் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.

1-ம் தேதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு இறுதிப்பட்டியலை முடிவு செய்ய இருக்கிறார்கள்.

கதிர் அரிவாள் சுத்தியலுக்கு வலை!

மதுரை சி.பி.எம் எம்.பி சு.வெங்கடேசன் - அமைச்சர் செல்லூர் ராஜு சந்திப்பை அரசியலோடு முடிச்சு போடுகிறார்கள் சிலர்.

''பி.ஜே.பி-யைவிட கம்யூனிஸ்ட்டுகளுக்கு தமிழ்நாட்டில் வாக்கு வங்கி சற்று அதிகம். சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்குள் கம்யூனிஸ்ட்டுகளைக் கொண்டு வர அ.தி.மு.க ஆர்வம் காட்டுகிறது'' என அ.தி.மு.க நிர்வாகிகளிடையே பேச்சுகள் உலவுகின்றன.

சு.வெங்கடேசன் - செல்லூர் ராஜு சந்திப்பு
சு.வெங்கடேசன் - செல்லூர் ராஜு சந்திப்பு

இன்னொரு கம்யூனிஸ்ட் எம்.பி-யை டெல்டாவைச் சேர்ந்த அமைச்சர் விரைவில் சந்திக்க இருக்கிறாராம். டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அ.தி.மு.க அரசு அறிவித்திருக்கும் சூழலில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுமாம். ஆனால், கம்யூனிஸ்ட்கள் முகாம் மாறுவார்களா என்பது கேள்விக்குறிதான்!

உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கு உரிய இடங்களைத் தி.மு.க தரவில்லை என்கிற வருத்தம் கம்யூனிஸ்ட்களுக்கு உண்டு. அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் தலையீட்டால் குறைவான சீட்களைத்தான் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கொடுக்கும் எனக் கணக்குப் போடுகிறதாம் கம்யூனிஸ்ட் கட்சிகள்.

அ.தி.மு.க கூட்டணிக்குள் சேராவிட்டாலும்கூட பரவாயில்லை. அ.தி.மு.க அமைச்சர்களுடனான தங்களது சந்திப்பு, தி.மு.க-வை தங்களிடம் இறங்கி வர வைக்க உதவியாக இருக்கும் என நினைக்கிறார்கள் காம்ரேடுகள்.

வசந்தகுமாருக்கு வரவேற்பு... சசிகலா புஷ்பாவுக்கு புஸ்வானம்!

வசந்தகுமார்
வசந்தகுமார்

திருச்செந்தூரில் நடந்த சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில், கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரும் கடையநல்லூர் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ முகம்மது அபுபக்கரும் கலந்துகொண்டனர். விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு வசந்தகுமார் மலர் தூவி மரியாதை செய்ததை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள் அ.தி.மு.க-வினர். விழா அழைப்பிதழில் வசந்தகுமார், முகம்மது அபுபக்கர் பெயர் இல்லை என்றபோதும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது அவர்களின் பெயர்களை மறக்காமல் குறிப்பிட்டார். காங்கிரஸ் கூட்டணியில் உள்ள இவர்களின் பெயர்களை விழாவில் குறிப்பிட்டவர்கள், பா.ஜ.க-வில் இணைந்த அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பாவின் பெயரை ஏனோ சொல்லவில்லை.

வெட்டப்பட்ட தேக்கு மரங்களும் மாற்றப்பட்ட வன அலுவலரும்!

கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் ஆனந்த், மதுரை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டதில் சிலரின் கைங்கரியம் இருக்கிறதாம். வனத் துறையினர் சிலரின் ஆசியுடன் கன்னியாகுமரி மாவட்ட வனப் பகுதியிலிருந்து சுமார் 70 தேக்கு மரங்கள் கடத்தப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து, ஆனந்த் விசாரணையை முடுக்கியிருந்தார். கடத்தப்பட்ட தேக்கு மரத்தைப் பெரு முதலைகள் வாங்கியது விசாரணையில் தெரிய வந்தது.

சுவிட்ச் பெட்டிகள் தயாரிக்கும் உண்ணாமலைக் கடையைச் சேர்ந்த ஒருவரைப் பிடித்து விசாரணை நடந்து வந்த நிலையில், கடத்தல் புள்ளிகளுக்கு உதறல் ஏற்பட்டிருக்கிறது.

இதன் பிறகுதான் தேக்குமர கடத்தல் புள்ளிகள் சிண்டிகேட் போட்டுக் கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்து ஆனந்த்தை இடமாற்றம் செய்துவிட்டார்களாம்.

`ரஜினி டிவி' சலசலப்பு, வாணிஶ்ரீ சொத்து விவகாரம், `விரக்தி' பொன்னார்... கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்!
அடுத்த கட்டுரைக்கு