Published:Updated:

டயரைக் கும்பிட்ட அமைச்சர்; விஜயபாஸ்கர் vs பா.ஜ.க; `ஹாட்’டான உதயநிதி... கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

``சத்தியமூர்த்திபவன் கிளம்புகிறேன். வாட்ஸ்அப்பைப் பாரும்...’’ ஒரு வரியில் தகவல் தெரிவித்தார் கழுகார். வாட்ஸ்அப்பில் தகவல்கள் கொட்டின!

டயரைக் கும்பிட்ட சம்பத்... ஃபயரைக் கிளப்பும் வன்னியர்கள்!

ஆகஸ்ட் 27-ம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அலுவல் ரீதியாக கடலூர் வந்திருந்தார். கடலூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்பெல்லாம் ஜெயலலிதாவின் காரின் முன் டயர் அருகே தொட்டுக் கும்பிடுவதுபோல, எடப்பாடியின் காரையும் தொட்டுக் கும்பிட்டு ஏகத்துக்கும் வளைந்து, நெளிந்து ‘எக்சர்சைஸ்’ செய்தார் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்.

டயரைக் கும்பிட்ட அமைச்சர்; விஜயபாஸ்கர் vs பா.ஜ.க; `ஹாட்’டான உதயநிதி... கழுகார் அப்டேட்ஸ்!

`இதற்கு முன்னரும் பல எம்.எல்.ஏ-க்களும், கட்சி நிர்வாகிகளும் எடப்பாடியின் காலில் விழுந்திருக்கிறார்கள். ஆனால், அமைச்சர் ஒருவரே எடப்பாடியின் கார் டயரிடம் குனிந்து கும்பிட்டது இதுவே முதன்முறை’ என்கிறார்கள். சம்பத்தின் இந்தச் செயல், அவர் சார்ந்த வன்னியர் சமூகத்தினரிடம் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறதாம்.

கார் டயரை பஞ்சர் பண்ணாம இருந்தா சரி!

``ஊரடங்கு எங்களுக்கு இல்லை" - போட்டி போட்ட மதுரை ஆளுங்கட்சி

மதுரை மாவட்ட அ.தி.மு.க-வில் மூன்று கோஷ்டிகள். அவற்றில் இரண்டு தரப்புகள் கொரோனாவுக்கான முழு ஊரடங்கு நாளில் விழா நடத்தி, கூட்டம் திரட்டியிருப்பது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதை ஆரம்பித்து வைத்தவர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். முழு ஊரடங்கு நாளான ஆகஸ்ட் 23-ம் தேதி, கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கும் அம்மா கிச்சனின் 50-வது நாள் விழாவை மதுரையில் தடபுடலாகக் கொண்டாடினார் உதயகுமார். கூட்டம் ஏகத்துக்கும் கரைபுரண்டது.

டயரைக் கும்பிட்ட அமைச்சர்; விஜயபாஸ்கர் vs பா.ஜ.க; `ஹாட்’டான உதயநிதி... கழுகார் அப்டேட்ஸ்!

இதைப் பார்த்த செல்லூர் ராஜூ சும்மா இருப்பாரா? அவரின் ‘விஞ்ஞான’ மூளையில் விறுவிறுவென யோசனைகள் உதிக்க... அதே நாள் மாலையில் தெப்பக்குளம் அருகே இளைஞர் பாசறைக் கூட்டத்தை நடத்தி ஊரடங்கையே மிரளவைத்தார்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா என்ன லேசுப்பட்ட ஆளா?! கையெல்லாம் பரபரக்கக் கிளம்பினால்... அதற்குள் பொழுது சாய்ந்து, இருட்டிவிட்டது. `ஆத்தா வைய்யும்... வீட்டுக்கு போகணும்’ என்று யூ டேர்ன் போட்டவர், ஒருநாள் கழித்து ஆகஸ்ட் 25-ம் தேதி மேலூரில் இளைஞர் பாசறைக் கூட்டத்தை நடத்தி அந்த ஏரியாவையே திணறடித்தார்.

கொரோனாவுக்கே பீதியைக் காட்டுறாய்ங்கப்பா மதுரக்காரய்ங்க!

ரெளடியை விடுவித்த எம்.எல்.ஏ! ஆதரவு கொடுத்த ‘பெருநகர’ காக்கி

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் கடந்த வாரம் தையூர் ஊராட்சியைச் சேர்ந்த ஹரீஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். `ஹரீஷுக்கும், வடசென்னையைச் சேர்ந்த பிரபல ரெளடிக்கும் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட மோதலே கொலைக்குக் காரணம்’ என்கிறது போலீஸ். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பிரபல ரெளடி ஒருவரை கேளம்பாக்கம் போலீஸார் பிடித்து, கடைசி நேரத்தில் விடுவித்தனர்.

கொலை
கொலை
Representational Image

இதற்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த ‘விருகை’ பக்கமுள்ள எம்.எல்.ஏ ஒருவர்தான் காரணமாம். எம்.எல்.ஏ-வுக்கு விசுவாசமான அந்த ரெளடியை வழக்கிலிருந்து விடுவிக்க, கடைசி நேரத்தில் அவருக்கு உதவியது சென்னை பெருநகர போலீஸ் உயரதிகாரி ஒருவர்தானாம்!

கடைசியில அகர்வால் கடை ஸ்வீட் சாப்பிட்டுக் கொண்டாடி இருப்பாங்களோ!

`அரசியல்’ அண்ணாமலை! பாய்ந்தது முதல் வழக்கு

`ரஜினி ஆரம்பிக்கப்போகும் கட்சியின் முதல்வர் வேட்பாளர்’ என்று பேசப்பட்டவர் அண்ணாமலை. `கர்நாடகாவில் அண்ணாமலை பணிபுரிந்தபோதே பா.ஜ.க-வின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தாராம். அப்போதே அண்ணாமலையைக் கட்சிக்குள் இழுக்கும் திட்டமும் முடிவாகியிருக்கிறது’ என்கிறார்கள். பா.ஜ.க கட்சி விதிப்படி எம்.பி., எம்.எல்.ஏ என எந்தப் பொறுப்பிலும் இல்லாதவர்கள் கட்சியில் இணைய வேண்டுமென்றால் பொதுச் செயலாளர் முன்னிலையில்தான் இணைய முடியும்.

பா.ஜ.க அண்ணாமலை
பா.ஜ.க அண்ணாமலை

அதனால்தான் முரளிதர ராவ் முன்னிலையில் அண்ணாமலை பா.ஜ.க-வில் இணைந்தாராம். அதன் பிறகு தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் வாழ்த்து பெற்றுள்ளார். இந்த நிலையில், டெல்லியிலிருந்து கோவை வந்த அண்ணாமலைக்கு ஊரடங்கு கட்டுப்பாட்டையும் மீறி, தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைக் கண்டு `எங்களுக்கே டஃப் ஃபைட்டா...’ என்று கோவை ஆளுங்கட்சி கடுகடுக்க... ‘கொந்தளித்து’ப்போன காவல்துறை, அண்ணாமலை உட்பட ஐந்து பேர்மீது காட்டூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு... கோழிக்குஞ்சு வந்ததுன்னு..!

`ஹாட்’டான உதயநிதி.. கூல் செய்த செந்தாமரை!

விநாயகர் சதுர்த்தி அன்று உதயநிதி ஸ்டாலின், தன் மகள் கையில் விநாயகர் சிலை இருப்பது போன்ற படத்தைப் போட்டு ட்வீட் செய்திருந்தார். இது தொடர்பாக ஏகத்துக்கும் சர்ச்சை எழுந்ததும், அவர் அதற்கு விளக்கம் அளித்ததும் அனைவருக்கும் தெரிந்த செய்தி. புதுச் செய்தி ஒன்று... ஏற்கெனவே இளைஞர் அணி தொடர்பான சில விவகாரங்களில் ஸ்டாலினும் உதயநிதியும் கடுமையான கருத்து மோதலில் இருந்தார்கள்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

`இதனால் காரசாரமாக எதுவும் ஆகிவிடக் கூடாதே...’ என்று பிடிவாதமாக உதயநிதியைத் தன் வீட்டுக்குக் கிட்டத்தட்ட தரதரவென்று இழுத்துக்கொண்டே போய்விட்டாராம் தங்கை செந்தாமரை. அங்கு அவரை ஒரு நாள் தங்கவைத்து `கூல்’ செய்த பிறகே வீட்டுக்கு அனுப்பிவைத்திருக்கிறார் அன்புத் தங்கை.

‘பாசமிகு’ தங்கைக்கு ஒரு ‘மாண்புமிகு’ பார்சேல்ல்ல்ல்!

எகிறிய ஐ.பி.எஸ்... `கப்சிப்’ எக்ஸ் எம்.பி

சென்னையின் காவல்துறை உயரதிகாரி ஒருவருக்கு ஆளுங்கட்சி முன்னாள் எம்.பி ஒருவரிடமிருந்து சமீபத்தில் போன் வந்திருக்கிறது. வட சென்னையைக் கலக்கும் ஒரு ரெளடியின் பெயரைக் குறிப்பிட்டு, ``அவர் ஆளுங்களையெல்லாம் பொய் வழக்கு போட்டு கைது பண்ணியிருக்காங்க. விட்டுடச் சொல்லுங்க” என்று பரிந்துரைத்திருக்கிறார். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விசாரித்துவிட்டு முன்னாள் எம்.பி-யை மீண்டும் லைனில் பிடித்த காவல் உயரதிகாரி, “எல்லார் மேலயும் ஏழெட்டு கொலை கேஸ் இருக்கு. லைவ்வா கஞ்சாவோட அவங்களைப் பிடிச்சிருக்காங்க. அவங்களுக்காக வக்காலத்துக்கு வர்றீங்க... இனி யார் சிபாரிசுக்கு வந்தாலும் அவங்க பேரையும் சேர்த்து சார்ஜ் ஷீட்ல எழுத வேண்டியிருக்கும்” என்று எகிற... முன்னாள் எம்.பி ‘கப்சிப்’ ஆகிவிட்டாராம்.

ரெளடியை ‘காக்கா’ பிடிக்க நினைச்சிருக்காருபோல!

மோடி பலூனை பறக்கவிட்ட ரெளடி!

ரெளடிகள் பட்டியலிலிருந்த `கல்வெட்டு’ ரவி என்பவர் சமீபத்தில் பா.ஜ.க-வில் ஐக்கியமானார். இது கட்சிக்குள்ளேயும் வெளியேயும் ஏகத்துக்கும் சர்ச்சைகளைக் கிளப்பியது. ஆனால், ரவி அதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை. கட்சியில் சேர்ந்த சூட்டோடு மனிதர், ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் பா.ஜ.க அலுவலகத்தை அமைத்துவிட்டார்.

‘அண்ணனின் விழுது’களால் `ஜேஜே’வென்று அலுவலகத்தில் முரட்டுக்கூட்டம் அள்ளுகிறதாம். போதாக்குறைக்கு அலுவலகத்தின் மேலே மோடி படத்துடன் ‘பா.ஜ.க தமிழ்நாடு’ என்று அச்சிடப்பட்ட ராட்சத பலூனையும் பறக்கவிட்டுள்ளார்.

அரசியலே ஒரு பொய்யடா... வெறும் காற்றடைத்த பலூனடா!

காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி... போட்டி போடும் கரைவேட்டிகள்!

வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியனின் வீட்டுக்குச் சென்ற தூத்துக்குடி எம்.பி கனிமொழி, சுப்பிரமணியன் குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி கொடுத்திருக்கிறார். கனிமொழி ஸ்கோர் செய்வதை உணர்ந்த மாவட்ட அமைச்சரான கடம்பூர் ராஜூ, அவசரமாக சுப்பிரமணியன் வீட்டுக்குச் சென்று சொந்த நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்.

டயரைக் கும்பிட்ட அமைச்சர்; விஜயபாஸ்கர் vs பா.ஜ.க; `ஹாட்’டான உதயநிதி... கழுகார் அப்டேட்ஸ்!

“கைக்காசு விஷயத்தில் கமுக்கமாக இருக்கும் அமைச்சரே நிதி கொடுத்துள்ளார்... நாம் சும்மா இருந்தால் எப்படி, தேர்தல் வேற வரப்போகுது...” என்று ஆளுங்கட்சியில் அமைச்சருக்கு எதிரான கோஷ்டியினரும் நிதி திரட்ட ஆரம்பித்திருக்கிறார்களாம்.

நல்ல விஷயத்துக்கு ‘போட்டி’ நல்லது!

விஜயபாஸ்கருக்கு எதிராக அன்புச்செல்வன்

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் தி.மு.க-வின் முன்னாள் ஒன்றியச் செயலாளர் அன்புச்செல்வனுக்கு பா.ஜ.க வலைவிரித்திருக்கிறது. இவரின் தம்பி செல்லபாண்டியன் தி.மு.க மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் அன்புச்செல்வனும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இருவருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். வரும் சட்டமன்றத் தேர்தலில் விராலிமலைத் தொகுதியில் விஜயபாஸ்கருக்கு எதிராக அன்புச்செல்வனைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாம்.

பா.ஜ.க. ஓர் உறையில் இரு கத்திகள்!

அடுத்த கட்டுரைக்கு