Published:Updated:

பா.ஜ.க-வைத் திருப்பியடிக்கும் அ.தி.மு.க; உறவுகளுக்காக சட்டத்தை வளைத்த நம்பர் டூ! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

‘‘வாட்ஸ் அப்பில் அனுப்பியிருக்கிறேன்’’ - இரண்டே வார்த்தைகளுடன் போனைத் துண்டித்தார் கழுகார். மொபைலை ஆன் செய்ததும் வந்துகொட்டியவை இதோ...

 புகைச்சலைக் கிளப்பிய ப்ரீத்தி!

வேல் போராட்டம்
வேல் போராட்டம்

தமிழக பி.ஜே.பி-யின் புதிய புயலாய் புழுதிகிளப்புகிறார் மருத்துவர் ப்ரீத்தி லட்சுமி. சமீபத்தில்தான் பி.ஜே.பி மாநில இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கோவையில் ப்ரீத்தி லட்சுமி தலைமையில் கந்தசஷ்டி கவசத்துக்கு ஆதரவாக நடந்த வேல் போராட்டம், சமூக வலைதளங்களில் பயங்கர ஹிட். கைகளில் வேல் வரைந்து, வெற்றிவேல், வீரவேல், பூக்கோலம் என்றெல்லாம் வரைந்துகொண்டு ப்ரீத்தி நடத்திய போராட்ட புகைப்படங்கள் முரட்டு வைரலானது. பி.ஜே.பி-யைத் தாண்டி பல்வேறு கட்சியினரும்கூட இந்தப் படங்களைப் பகிர்ந்து பரவசப்பட்டனர். அதேசமயம், உள்கட்சிக்குள் இது பிரச்னையைக் கிளப்பிவிட்டிருக்கிறது. ஏற்கெனவே, மாவட்ட நிர்வாகிகளுக்கு தெரியாமல், ப்ரீத்திக்கு மாநில பதவி கொடுத்ததே கட்சிக்குள் பயங்கர புகைச்சலைக் கிளப்பியிருந்தது. இந்த வேல் வேல் போராட்டம் அதை மேலும் புகைய வைத்திருக்கிறது!

அரோகரா!

சரோஜாவின் மனிதநேயம்!

சத்துணவுத்துறை அமைச்சரான சரோஜா, ஜூலை 30-ம் தேதி சென்னையிலிருந்து ராசிபுரம் கிளம்பினார். கூடுவாஞ்சேரியை அவருடைய கார் தாண்டிக்கொண்டிருக்கும்போது, எதிரே செங்கல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று நிலைதடுமாறி தலைக்குப்புற விழுந்து விபத்துக்குள்ளானது. பதறிப்போன சரோஜா, உடனடியாகக் காரை நிறுத்தி கீழே இறங்கினார். ஆம்புலன்ஸை வரவழைத்து உடனடியாக காயம்பட்டவர்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

சரோஜா
சரோஜா

கிட்டத்தட்ட ஒருமணி நேரம் மருத்துவமனையிலேயே இருந்தவர், காயம்பட்டவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னரே ராசிபுரத்துக்கு கிளம்பிச் சென்றார். அமைச்சர் சரோஜா மருத்துவம் படித்தவர். `ஓர் உயிரின் மதிப்பு அறிந்ததால்தான் காயம்பட்டவர்கள் இயல்பு நிலைக்கு வரும் வரையில் உடனிருந்து கவனித்துள்ளார்’ என்று அவர் ஆதரவாளர்கள் மெய்சிலிர்க்கிறார்கள்.

தொடரட்டும் இந்தத் தொண்டு!

நயினார் நாகேந்திரனுக்கு அ.தி.மு.க வலை!

முருகன் - நயினார் நாகேந்திரன்
முருகன் - நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க. மீது அதிருப்தியில் இருக்கும் அந்தக் கட்சியின் துணைத் தலைவர்களுள் ஒருவரான நயினார் நாகேந்திரனை சமாதானப்படுத்த, பா.ஜ.க தலைவர் எல்.முருகன் முயன்றும் பலனில்லை என்று கூறப்படுகிறது. நயினாரை தி.மு.க-வுக்குள் இழுக்க ஏற்கெனவே தூதுபடலம் தொடங்கிவிட்ட சூழலில், அ.தி.மு.க-வில் மீண்டும் இணைப்பதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறதாம். ஆகஸ்ட் 5-ம் தேதி திருநெல்வேலி செல்வதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டம் வகுத்திருக்கிறார். அதற்குள் நயினார் நாகேந்திரனை எப்படியாவது சமாதானப்படுத்தி, அன்றைய தினமே அ.தி.மு.க முகாமுக்குள் கொண்டுவர சீனியர்கள் இரண்டு பேர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். அமைப்புச் செயலாளர் பதவி தருவதாகப் பேசப்பட்டும் இன்னமும் நயினார் பிடிகொடுக்கவில்லையாம்!

அல்வா... தி.மு.க-வுக்கா, அ.தி.மு.க-வுக்கா மிஸ்டர் நயினார்?

வருத்தத்தில் அலெக்ஸாண்டர்!

ஜெயலலிதா ஆட்சியில் உளவுத்துறை தலைவராக இருந்தவர் அலெக்ஸாண்டர். இரண்டு கழக ஆட்சியாளர்களிடமும் நெருக்கமாக இருந்தவர். இந்தக் காரணங்களாலேயே தண்ணியில்லா காட்டுக்கும் பல தடவை துரத்தப்பட்டவர். நெருக்கடியான காலகட்டங்கள் பலவற்றின்போது ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்தவர். பணி ஓய்வுக்குப்பின் சென்னை, கீழ்ப்பாக்கத்திலுள்ள வீட்டிலேயே இருக்கிறார். ‘‘கொரோனா, கந்தசஷ்டி விவகாரங்களில் அ.தி.மு.க அரசு கடும்நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கிறது. இப்போதுள்ள ஆட்சியாளர்கள் என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தால் பலவழிகளிலும் உதவியிருப்பேன்?’’ என மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரிடம் அலெக்ஸாண்டர் வருத்தப்பட்டாராம். விஷயத்தை முதல்வரின் காதுக்கும் கொண்டு சென்றிருக்கிறாராம் அந்த அதிகாரி.

இங்கே நல்ல அட்வைஸ்கள் கிடைக்கும்!

இனி, திருப்பி அடிக்க வேண்டியதுதான்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பா.ஜ.க-வின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக இருந்த வி.கே.ஆர்.சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே கறுப்பர் கூட்டம், தேவேந்திர குல வேளாளர் விவகாரங்களில் பா.ஜ.க தலைவர் எல்.முருகன், அ.தி.மு.க-வை தாக்கியதை எடப்பாடியால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இதுவரை கூட்டணிக் கட்சியாகப் பாவித்து வந்த பா.ஜ.க-வைத் திருப்பி அடிப்பது என்கிற மனநிலைக்கு அ.தி.மு.க தலைமை வந்துவிட்டதாம். அடுத்தடுத்து அந்தக் கட்சியில் இருந்து ஆட்களை அ.தி.மு.க.வுக்கு இழுத்துவர உத்தரவிடப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் தொடக்கம்தான் சீனிவாசனை கட்சியில் இழுத்த பின்னணி என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.

‘பாக்கத்தானே போறீங்க இந்தக் காளியோட ஆட்டத்தை?’

‘‘புரசைவாக்கம் பிரமுகரை ஏன் விசாரிக்கவில்லை?’’

சில நாள்களுக்கு முன்னர், சென்னையில் உள்ள வருமானவரித் துறை டைரக்டர் ஜெனரல் (விசாரணை) அலுவலக முக்கிய அதிகாரிகளிடம், துறையின் டெல்லி மேலிட அதிகாரிகள் ஒரு விவகாரத்தைப் பற்றி விசாரித்தது, சென்னை வருமானவரித்துறை அதிகாரிகளிடையே பதற்றத்தைக் கிளப்பியுள்ளது. சென்னையில் உள்ள பெரும் பணக்காரர்கள் 50 பேரின் 1,200 கோடி ரூபாய் பணம் 2016-ம் வருடம் டிசம்பரில் பணமதிப்பிழப்பு நடந்தபோது கைமாறியதாம். இதற்கும் சசிகலா தரப்புக்கும் தொடர்பு உண்டு எனக் கருதிய வருமானவரித்துறை, அந்த 50 பேரும் சசிகலாவின் பினாமிகளாகச் செயல்பட்டதாகக் கூறி ஒரு வழக்கை நடத்தி வருகிறது. ஆனால், இதில் பெரிதாக முன்னேற்றம் இல்லாத சூழலில்தான் டெல்லியிலிருந்து விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டு டெல்லி அதிகாரிகள் கேட்கவும், சென்னை அதிகாரிகள் கை பிசைந்து நின்றார்களாம்.

புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகர் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பதில், சென்னை வருமானவரித்துறை சுணக்கம் காட்டுகிறது என்பதுதான் டெல்லியின் சந்தேகம். தங்க பிசினஸில் கொடிகட்டிப் பறக்கும் அந்தப் பிரமுகர் மீது ஏற்கெனவே வருமானவரி புலனாய்வுப் பிரிவு, வருமான வரித்துறை, லோக்கல் போலீஸ் என்று பலவித ஏஜன்ஸிகளும் ரெய்டு நடத்திவிட்டன. ஆனால், விஷயம் கோர்ட் வரையில் போகாமல் நொண்டியடிக்கிறதாம். இதை, பிரதமர் அலுவலகம் வரையில் மத்திய உளவுத்துறையினர் கொண்டுபோயிருக்கிறார்கள். அதன்பிறகே இந்த டெல்லி குடைச்சல். ‘சசிகலாவின் பினாமி பேனரில் ஊழலில் திளைத்த பெரும்புள்ளிகள் யாராக இருந்தாலும் விடாமல் பிடியுங்கள்’ என்று உத்தரவிட்டுள்ளனர் டெல்லி அதிகாரிகள்.

அப்போதைக்கு தலையாட்டிக் கொண்ட சென்னை அதிகாரிகளோ... ‘புரசைவாக்கம் பிரமுகரை விசாரிக்கச் சென்றாலே டெல்லியிலிருந்துதான் முட்டுக்கட்டை வருகிறது. அங்குள்ளவர்களை அடக்க இவர்களால் முடியவில்லை. அது யாரென்று சொன்னால் நம் தலையும் உருளும்’ என்று இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறார்களாம்.

பரமசிவன் கழுத்து பாம்பு!

‘‘போலி பகுத்தறிவாளர்களைக் களையெடுக்கணும்!’’

துரைமுருகன்
துரைமுருகன்

கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட ‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான சுரேந்தர் நடராஜன் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்திருக்கிறது. இந்த நிலையில், ‘கறுப்பர் கூட்டம் போன்ற போலி பகுத்தறிவாளர்களைக் களையெடுத்தால் மட்டுமே இந்துக்களின் வாக்குவங்கியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்’ என்று நேரடியாகவே தி.மு.க தலைமையிடம் பேசியிருக்கிறாராம் துரைமுருகன். “கந்தசஷ்டி கவசமோ, வேறு ஒரு பக்திப் பாடலோ, எதுவாக இருந்தாலும் அதைக் கொச்சைப்படுத்தி விமர்சித்தால் மட்டுமே பகுத்தறிவுப் பிரசாரம் வளர்ந்துவிடாது. பிறருடைய கருத்துகளுக்கும் மதிப்பளிப்பதே பகுத்தறிவு’’ என்று ஸ்டாலினிடமே வெம்பியிருக்கிறாராம் துரைமுருகன்.

மெய்ப்பொருள் காண்பதறிவு!

மிஸ்டர் கழுகு: பதவிப் பஞ்சாயத்தில் திணறும் அ.தி.மு.க...

உறவுகளுக்காக சட்டத்தையே வளைத்த நம்பர் டூ?

நிலச்சரிவு அபாயம் உள்ள நீலகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டுமானம் செய்வதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. 7 மீட்டர் உயரம், 1,500 சதுர அடி பரப்பளவுக்கு மிகாமல் கட்டங்களை கட்ட வேண்டும் என்பது விதி. கட்டுமான அனுமதிக்கான முழு அதிகாரமும் மாவட்ட ஆட்சியர் கையில் இருந்தது. இதனால், சட்டவிரோத கட்டுமானங்கள் சற்று குறைந்து வந்தன. இந்த நிலையில், தமிழக ஆளுங்கட்சியின் நம்பர் டூ பிரமுகருடைய உறவினர்கள் சிலர் ஊட்டி, குன்னூர் இடங்களில் நிலத்தை வாங்கி சொகுசு பங்களாக்களை கட்டிவருவதாக கூறப்படுகிறது. சில கட்டுமான தளர்வுகளுக்காக கலெக்டரிடம் முட்டி மோதியபோது, அது செல்லுபடியாகவில்லையாம். கடுப்பான உறவுகள், பல இடங்களிலும் பேசி கட்டுமான விதிமுறைகளையே மாற்றிவிட்டனர். நம்பர் டூ பெயரைச் சொல்லி இந்த மாற்றம் நடைபெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய விதிமுறையில் கலெக்டரின் அதிகாரம் குறைக்கப்பட்டு, அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய தளர்வுகள் மூலம் தங்கள் இஷ்டப்படி தற்போது கட்டங்களை கட்டலாம். கொரோனா தடுப்பில் அனைவரும் ஈடுபட்டு வந்த வேளையில், சத்தமின்றி நடைபெற்றுள்ள இந்த விதிமுறை மாற்றம்தான் நீலகிரியின் ‘ஹாட் டாபிக்’!

ஆடாதடா ஆடாதடா மனிதா!

அடுத்த கட்டுரைக்கு