Published:Updated:

அட்டாக்குக்குத் தயாராகும் அறிவாலயம், `படை' திரட்டும் பா.ம.க... டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்

மு.க.ஸ்டாலின் மற்றும் அன்புமணி ராமதாஸ்
மு.க.ஸ்டாலின் மற்றும் அன்புமணி ராமதாஸ்

``முக்கியமான சோர்ஸ் ஒருவரைச் சந்திக்கச் செல்கிறேன். உமக்கு மெயிலில் தகவல்களை அனுப்புகிறேன்’’ - கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் மெசேஜ். அடுத்த நிமிடத்தில், மெயிலில் தகவல்கள் வந்து விழுந்தன.

அழிக்கப்படும் ஃபைல்கள்... அட்டாக்குக்குத் தயாராகும் அறிவாலயம்!

தி.மு.க அனுதாபியும், தலைமைச் செயலகச் சங்கம் ஒன்றின் முன்னாள் நிர்வாகியுமான ஒருவர் கடந்த சில நாள்களாக ரகசிய விசாரணையில் இறங்கியிருக்கிறார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட `வளமான’ துறைகளின் அரசாணைகளைப் பட்டியலெடுக்க ஆரம்பித்துள்ளார் அந்தப் பிரமுகர். ஏனாம்?

ஓர் அரசாணை வெளியாகும்போது, அது தொடர்பாக அதிகாரிகள், அமைச்சர்கள் கைப்பட எழுதும் குறிப்புகள் நோட் ஃபைலில் இருக்கும். இந்த நோட் ஃபைல்கள் அனைத்தும் எழும்பூரிலுள்ள ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பப்பட வேண்டும். தற்போது அந்த ஃபைல்களை கோட்டையில் இருப்பவர்கள் அவசர அவசரமாகக் கேட்டு வாங்குகிறார்களாம். `அப்படி அனுப்பப்படும் ஃபைல்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றனவா என்று சந்தேகம் எழுந்திருப்பதால் இந்த நடவடிக்கை’ என்று தகவல். இந்த விஷயம் அறிவாலயத்துக்குப் போனவுடன்தான் ஆதாரங்களைச் சேகரிக்க, சங்கப் பிரமுகரைக் களமிறக்கியிருக்கிறார்களாம்.

ஆதாரத்துக்குச் சேதாரமில்லாமப் பார்த்துக்கோங்க!

``சாதிக்கு ஒரு நீதி!’’ கொந்தளித்த துரைசாமி

வி.பி.துரைசாமி
வி.பி.துரைசாமி

பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் சில நாள்களுக்கு முன்னர், தலைவர்கள் சிலர் ஒன்றுகூடிப் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, கு.க.செல்வம் பற்றிப் பேச்சு திரும்பியிருக்கிறது. அங்கிருந்த துணைத் தலைவர் வி.பி.துரைசாமி திடீரென ஆவேசமானாராம். ``தி.மு.க-வுல சாதிக்கு ஒரு நீதி என்று நான் சொன்னது சரியாகிவிட்டது பாருங்கள்... அப்போது கே.பி.ராமலிங்கத்தை நீக்கியபோதும், இப்போது கு.க.செல்வத்தை நீக்கியபோதும் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். என்னை மட்டும்தான் நோட்டீஸ் கொடுக்காமலேயே நீக்கினார்கள். இப்போது சொல்லுங்கள், தி.மு.க சாதி பார்க்கிறதுதானே...’’ என்று கொட்டித் தீர்த்துவிட்டாராம்.

சமூகத்துக்கு ஒரு நீதியைத்தான் `சமூகநீதி’ என்று புரிந்துகொண்டார்களோ!

60,00,000 ரூபாய்... `ஆட்டை’யைப் போட்ட குமரிப் பிரமுகர்!

பணம்
பணம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் சில ஏஜென்சிகள் சிலிண்டருக்கு 60 ரூபாய் அதிகமாக வாங்குகிறார்கள். இது, பல ஊர்களிலும் நடக்கும் விஷயம்தான் என்றாலும், அதற்குக் கூறப்படும் காரணம்தான் விநோதமானது. கூடுதல் கட்டணம் குறித்துக் கேள்வி கேட்பவர்களிடம், ``ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவருக்கு கொரோனா நிதியாக 60,00,000 ரூபாய் கொடுத்தோம். அதைத்தான் உங்ககிட்ட வசூலிக்கிறோம்’’ என்று பகிரங்கமாகவே சொல்கிறார்களாம். இதில் வேடிக்கை என்னவென்றால், அவர்கள் குறிப்பிடும் ஆளுங்கட்சிப் பிரமுகர் இப்போது கட்சியிலிருந்து ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளார். அவர் கொரோனாவுக்கும் எந்தச் செலவும் செய்யவில்லை. அவர் சமையல் எரிவாயு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு குழுவில் உறுப்பினராக இருப்பதால், கொரோனா பெயரில் நிதி வசூல் செய்து ஏப்பம் விட்டுவிட்டார்.

பெரிய சதியால்ல இருக்குது?

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா உதவி
ஆர்.டி.ஐ கேட்கத் தயாராகும் தி.மு.க
ஜோதிகா
ஜோதிகா

சில மாதங்களுக்கு முன்னர் தஞ்சை பெரிய கோயிலையும், அங்குள்ள ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையையும் நடிகை ஜோதிகா ஒப்பிட்டுப் பேசிய விவகாரம் சர்ச்சையாக வெடித்தது. இந்த நிலையில், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான சில உபகரணங்களை, தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா வழங்கியிருக்கிறார். `என்னென்ன உபகரணங்களை ஜோதிகா வாங்கிக் கொடுத்தார்; மருத்துவமனையில் இதற்கு முன்னர் அந்தப் பொருள்கள் ஏன் இல்லை; எவ்வளவு நாள்களாக இல்லை; அந்த உபகரணங்கள் இல்லாமல் நோயாளிகளுக்கு எப்படிச் சிகிச்சை அளிக்கப்பட்டது’ என்று தமிழக சுகாதாரத்துறையிடம் விளக்கம் கேட்க தி.மு.க தரப்பு தயாராகிவருகிறதாம். ``ஆர்.டி.ஐ மூலமாகப் பெறப்படும் தகவலை வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டிருக்கிறது" என்கிறார்கள்.

ஜோதிகா பற்றவைத்த ஜோ`தீ’!

`ஆட்சி மாறினாலும் பா.ஜ.க-வுக்கு ஆதரவு!’
நம்பிக்கையளித்த கிச்சன் கேபினட்

தி.மு.க-வின் அனைத்துச் செயல்பாடுகளும் மத்திய அரசுக்கு எதிராகவே இருக்கின்றன. அதே சமயம், தி.மு.க குடும்பப் பிரமுகர் ஒருவரோ, டெல்லி மேலிட பிரமுகர்கள் இருவரிடம் நெருக்கமான தொடர்பில் இருக்கிறாராம். ``ஆட்சி மாறினாலும் எங்கள் ஆதரவு உங்களுக்கு மறைமுகமாக இருக்கும். உங்கள் ஆசி மட்டும் இப்போது வேண்டும்’’ என்று கூறியே உறவை பலப்படுத்திவருகிறாராம்.

அப்போ ஆட்சி மாறினாலும் `அடிமை’க் காட்சி மாறாதோ!

`முருகன்’ அரசியல் பூரிப்பில் நெல்லை பா.ஜ.க!

முருக வழிபாட்டில் நெல்லை மக்கள்
முருக வழிபாட்டில் நெல்லை மக்கள்
எல்.ராஜேந்திரன்

`வீடுதோறும் கோலமிட்டு, முருகன் படம் அல்லது வேல்வைத்து கந்த சஷ்டி கவசம் பாடி வழிபட வேண்டும்’ என்று பா.ஜ.க அறைகூவல் விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் ஏராளமான வீடுகளில் கந்த சஷ்டிக் கவசம் பாடப்பட்டது. பலரும் தங்கள் குழந்தைகளுக்கு முருகன் வேடம் போட்டு அசத்திவிட்டார்கள். இதையெல்லாம் பார்த்த நெல்லை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள், ``பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கும் இந்த எழுச்சியை அப்படியே தக்கவைத்துக்கொண்டால் வரும் சட்டமன்றத் தேர்தல் நமக்கு நல்ல வாய்ப்பாக அமையும்’’ என்று வெளிப்படையாகவே பேசிவருகிறார்களாம்.

சஷ்டி பாடல்கள் வாக்குகளாக மாறுமா?

அமைச்சரைச் சந்தித்த டிம்பர் ஊட்டியில் துளிர்த்த உறவு!

சசிகலாவின் ஆதரவில் வளர்ந்த கூடலூர் டிம்பர் மாஃபியா பிரமுகர் ஒருவர் நீலகிரி அ.தி.மு.க-வில் ஓரங்கட்டப்பட்டிருந்தார். கொடநாடு விவகாரத்தில்கூட இவரின் பெயர் அடிபட்டது. சமீபத்தில் கொரோனா நிவாரணம் வழங்க கூடலூர் வந்திருந்த கொங்கு அமைச்சரைத் தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளார். சசிகலா விடுதலை குறித்த பேச்சுகள் உச்சத்திலிருக்கும் இந்த நேரத்தில் டிம்பருடனான அமைச்சரின் சந்திப்பு, கட்சியினரிடம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிம்பருக்கு அடிக்குமா `பம்பர்!’

ரேஷனில் மாஸ்க்... கொடுக்காதது ஏன்?

மாஸ்க்
மாஸ்க்

`ரேஷன் கடைகளில் இலவசமாகப் பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கப்படும்’ என்று அறிவித்தது தமிழக அரசு. ஆனால், இதுவரை எந்த ரேஷன் கடையிலும் மாஸ்க் வழங்கப்படவில்லை. காரணம் கேட்டால், `முதல்வர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கியதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ என்கிறார்கள். மேலும், இந்த மாஸ்க்கைத் தயாரித்து வழங்கும் பணியை திருப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கையிலெடுத்திருக்கிறது. இந்த நிறுவனம், மூத்த அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானதாம். அவர்கள் தயாரித்து வழங்கிய மாஸ்க் தரமற்றதாகவும், அளவு குறைவானதாகவும் இருப்பதாகப் புகார் வரவே... பங்காளியை பகைத்துக்கொள்ள முடியாமலும், கொள்முதல் செய்த மாஸ்க்கை வழங்க முடியாமலும் தவித்துவருகிறதாம் அரசுத் தரப்பு.

மெல்லவும் முடியலை... விழுங்கவும் முடியலை!

பா.ஜ.க-வில் ரெளடிகள் ராஜ்ஜியம்
முணுமுணுக்கும் மூத்த தலைவர்கள்!

வட சென்னையைச் சேர்ந்த பிரபல ரெளடியான `கல்வெட்டு’ ரவி சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்தார். இவர் `ஏ ப்ளஸ்’ ரௌடியாக காவல்துறைப் பட்டியலில் இருப்பவர். ரவியுடன் அவரின் கூட்டாளியான சத்தியராஜ் என்பவரும் கட்சியில் இணைந்தார். அதற்கு சில நாள்கள் முன்னர்தான் படப்பை பகுதியில் `நேர்த்தி’ ஜோஷ்வா என்கிற ரெளடியும் கட்சியில் இணைந்தார். இப்படித் தொடர்ந்து வில்லங்கமானவர்களே கட்சியில் சேருவதை மூத்த தலைவர்களே விரும்பவில்லையாம்.

பா.ஜ.க
பா.ஜ.க

சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்த மூத்த வழக்கறிஞர் ஒருவரின் ஆசியோடுதான் இந்தச் சர்ச்சை நபர்கள் அடுத்தடுத்து கட்சியில் ஐக்கியமாகிறார்களாம். இந்த ரெளடிகளுக்குப் பிரச்னையென்றால் சமரசம் செய்துவைப்பவர் அந்த வழக்கறிஞர்தான். `நீதிமன்றத்தில் செல்வாக்காக வலம்வந்ததுபோல, கட்சிக்கு உள்ளேயும் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்’ என்ற குற்றச்சாட்டுக் குரல்கள் கமலாலய வட்டாரத்தில் கேட்கின்றன.

கத்திமுனையில் தாமரையை மலரவைப்பார்களோ!

ஆட்சியில் பங்கு
படை திரட்டும் பா.ம.க!
அன்புமணி ராமதாஸ் 
அன்புமணி ராமதாஸ் 

`முப்படை’ என்கிற பெயரில் தம்பிகள் படை, தங்கைகள் படை, பொதுமக்கள் படை என பா.ம.க வலுவாக உள்ள பகுதிகளில் அணிகளை உருவாக்கத் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ். இப்படிக் கட்சியை வலுப்படுத்திய பின்னர், அ.தி.மு.க-விடம் வழக்கமான டீலை ஆரம்பிக்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறாராம் அப்பா ராமதாஸ். ஆட்சியில் பங்கு கேட்கும் எண்ணமும் இருக்கிறதாம். `அதுவரை கூட்டணிக் கட்சியாகக்கூட அ.தி.மு.க-வைக் கருத வேண்டாம் என்பதுதான் தைலாபுரத்தின் முடிவு’ என்கிறார்கள்.

கூட்டணியா... `வேட்’டணியா!

அடுத்த கட்டுரைக்கு