Published:Updated:

பிரஷரில் பீலா ராஜேஷ்; ஸ்டாலினுக்கு ஸ்பெஷல் பூஜை; `கட்டிங்' அதிகாரிகள்... கழுகார் அப்டேட்ஸ்!

வாட்ஸ்அப் வீடியோ காலில் வந்த கழுகார், “ஏராளமான செய்திகளை அனுப்பியிருக்கிறேன்” பார்க்கவும் என்றார். செய்திகள் குவிந்திருந்தன.

விளாசிய ராஜ்நாத்... வாயடைத்துப்போன அமித்!

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில், அமைச்சர்களுக்காகப் போடப்பட்டிருந்த இருக்கைகள் நெருக்கமாகப் போடப்பட்டிருந்தன. இதைப் பார்த்த ராஜ்நாத் சிங், “இப்படி நெருக்கமா இருக்கைகளைப் போட்டீங்கன்னா, சமூக விலகலை நாமே மீறிட்டதா ஆகாதா... நாற்காலிகளுக்கு இடையே டேபிள் போடுங்கள்” என்று விளாசிவிட்டாராம். ராஜ்நாத் சிங்கின் கொந்தளிப்பைப் பார்த்து அமித் ஷாவே வாயடைத்துப்போனார் என்கிறார்கள். அதன் பிறகே தகுந்த இடைவெளிகளுடன் கூட்டம் நடந்திருக்கிறது.

“கை நடுங்குது... கட்டிங் கொடுங்கப்பா” நச்சரிக்கும் அதிகாரிகள்!

ஊரடங்கை மீறி டாஸ்மாக் கடைகள் உடைப்பு, கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை எனச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தநிலையில்தான் ஸ்டார் ஹோட்டல்களில் புதுப்பிரச்னை கிளம்பியிருக்கிறது. அரசு உயர் அதிகாரிகள் சிலர் ஸ்டார் ஹோட்டல்களில் உள்ள ‘பார்’ இருப்புகளிலிருந்து ‘சரக்கு’ கேட்டு தொல்லை செய்கின்றனராம். இன்னும் சிலரோ “காசுகூட கொடுத்துடறோம்பா... கை ரொம்ப நடுங்குது... கட்டிங்காச்சும் கொடுங்கப்பா” என்று அன்பான வார்த்தைகளில் அதட்டுகிறார்களாம். அதிகாரிகளின் டார்ச்சரால் விழிபிதுங்கித் தவிக்கிறார்கள் ஸ்டார் ஹோட்டல் நிர்வாகிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமைச்சர் செல்வாக்கு... தஞ்சாவூர் புறக்கணிப்பு!

தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய மருத்துவக் கல்லூரியான தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை ஆய்வு மையம் இல்லை. இங்கு 120 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்குக் கொரோனா இருக்கிறதா என்பதை அறிய அவர்களின் ரத்தம் மற்றும் உமிழ் நீர் மாதிரிகள் 108 ஆம்புலன்ஸில் திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. தஞ்சாவூருக்கு வர இருந்த கொரோனா பரிசோதனை ஆய்வுக் கூடத்தை, தன் செல்வாக்கைப் பயன்படுத்தி திருவாரூர் மாவட்டத்துக்குக் கொண்டு சென்றுவிட்டார் அமைச்சர் ஆர்.காமராஜ்’’ என்று மருத்துவ வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

உதவியாளரைக் காப்பாற்றிய ஆ.ராசா; வாரிசைக் களமிறக்கிய நயினார் நாகேந்திரன்... கழுகார் அரசியல் அப்டேட்ஸ்!

பீலா ராஜேஷுக்கு அழுத்தம் தரப்பட்டதா?

பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்
பா.காளிமுத்து

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் குறித்து தினமும் மீடியாக்களிடம் அப்டேட் செய்துவருகிறார் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ். டெல்லி தப்லீக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் எத்தனை பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது, அவர்களில் எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்ற விவரங்களைத் தனியாக அவர் குறிப்பிட்டு வந்தார். அது விவாதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சுதாரித்துக்கொண்டவர், ‘சிங்கிள் விண்டோவில் வந்தவர்கள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். தற்போது மீண்டும் ‘டெல்லி’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். அப்படி பேசச் சொல்லி அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற பேச்சு கிளம்பியிருக்கிறது.

ஸ்டாலின் பெயரில் ஸ்பெஷல் பூஜை!

ஸ்டாலின்
ஸ்டாலின்

நாமக்கல் நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் கற்கண்டு, மண்டை வெல்லத்துடன் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பெயரில் தினமும் சிறப்புப் பூஜை செய்யப்படுகிறது. ஸ்டாலினுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி வேண்டியும், தடைகள் அகலவும் இந்தப் பூஜை நடத்தப்படுகிறதாம். ஸ்டாலினின் குடும்பப் பெண்மணி உத்தரவில், இதற்கான ஏற்பாட்டை நாமக்கல் கிழக்கு மாவட்ட பிரமுகர் ஒருவர் செய்துவருகிறார். ஸ்டாலின் பெயருடன் தன் பெயரையும் அர்ச்சனை லிஸ்ட்டில் சேர்த்து அந்த பிரமுகர் பூஜை செய்வதுதான் இதில் ஹைலைட்.

சப்-கலெக்டர் சொல்வதைக் கேட்கக் கூடாது!

நீலகிரி மாவட்டம், குன்னூர் சப் கலெக்டராக ஓராண்டுக்குமுன் பொறுப்பேற்றுக் கொண்டவர் ரஞ்சித் சிங். இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், நேர்மையுடன் பல அதிரடி முடிவுகளை எடுத்துவந்தார். ‘குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முறையாகப் போக்குவரத்தைச் சீர் செய்வதில்லை’ எனப் பலமுறை எச்சரித்தும் வந்தார் ரஞ்சித் சிங். ஆனால், போலீஸார் அதைத் துளியும் பொருட்படுத்தவில்லை. பொறுமை இழந்தவர் ரஞ்சித் சிங் காவல்துறைக்கு எதிராகத் தனியாளாக மறியலில் இறங்கினார். இது பெரும் சர்ச்சையாகி, குன்னூர் போலீஸுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்திவிட்டது. அந்தப் பகையை இந்த இக்கட்டான காலத்தில் தீர்த்துக்கொள்ள துடிக்கிறது குன்னூர் காவல்துறை. குன்னூரின் பல பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் மருந்தகம் திறப்பு, சந்தைகள் இட மாற்றம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுவருகிறார் ரஞ்சித் சிங். ஆனால், குன்னூர் காவல்துறையோ சப்–கலெக்டர் சொல்வதைக் கேட்கக் கூடாது என்ற ஏட்டிக்குப் போட்டியாய் செய்துவருகின்றனராம்.

மிஸ்டர் கழுகு: மாஸ்க்குகளுக்குகூட தட்டுப்பாடு... விஜயபாஸ்கரிடம் எகிறிய எடப்பாடி?

கலெக்டருக்கு ஒத்துழைக்காத காவல்துறை!

வேலூர் மாவட்ட ஓவியர் சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்.
வேலூர் மாவட்ட ஓவியர் சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்.

வேலூர் மாவட்டத்தில், இதுவரை 11 பேருக்கு ‘கொரோனா’ பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 46 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆனால், ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வெளியில் சென்றுவருகிறார்கள். சமூக விலகலைப் பின்பற்றவில்லை. இதையடுத்து, ‘‘தினசரி இயங்கும் காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் வாரந்தோறும் திங்கள், வியாழன், ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாள்கள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும்’’ என்று கலெக்டர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆனால், கலெக்டரின் இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்த காவல்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை. வேறு வழியில்லாமல், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி அமைப்பினரை வைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டிவருகிறார் கலெக்டர் சண்முக சுந்தரம். வேலூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாகி வருவது பற்றியும் முதல்வருக்கு மாவட்ட நிர்வாகத்திலிருந்து புகார் போயிருக்கிறதாம்.

ஒருவர் மட்டும் எப்படி வருவது?

ஆ.ராசா
ஆ.ராசா

ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகளைவிட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும்தான் அதிகளவில் களப்பணி செய்து வருகின்றனர் என்று பேச்சு மக்கள் மத்தியில் அதிகமாகக் கேட்கிறது. தொகுதி நிதியைத் தருவதிலும் அவர்களே முன்னணியில் உள்ளனர். இந்தநிலையில் நீலகிரி எம்.பி-யான ஆ.ராசாவும், வட சென்னை எம்.பி-யான கலாநிதி வீராச்சாமியும் டெல்லியிலேயே மாட்டிக்கொண்டுள்ளனர். ‘ஆ.ராசாவுக்காவது அவரின் குடும்பம் டெல்லியில் இருக்கிறது. கலாநிதி எதற்காக டெல்லியில் இருக்கிறார்?’ என்று தொகுதி உடன்பிறப்புகள் கேட்கிறார்கள். இதற்கு எம்.பி தரப்பிலோ, “225 எம்.பி-க்கள் டெல்லியில் மாட்டிக்கொண்டிருக்கின்றனர். ஒருவர் மட்டும் எப்படி வருவது?” என்று பதில் வருகிறதாம். இன்னொரு பக்கம் பொள்ளாச்சி எம்.பி-யான சண்முகசுந்தரம் உள்ளிட்ட சில தி.மு.க எம்.பி-க்கள் கொரோனா பாதிப்புக்காக அவர்கள் ஒதுக்கிய தொகுதி நிதியைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை என்றும் புலம்ப ஆரம்பித்திருக்கின்றனர் உடன்பிறப்புகள்.

வசந்தகுமாரைக் கடுப்பேற்றும் ராபர்ட் புரூஸ் ஆதரவாளர்கள்!

வசந்தகுமார்
வசந்தகுமார்

‘கொரோனா தொற்று ஊரடங்கில் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி-யான வசந்தகுமார் ஒதுங்கிவிட்டார்’ என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவருகின்றன. முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராபர்ட் புரூஸ் ஆதரவாளர்கள்தான் இப்படிச் செய்தி பரப்பி வசந்தகுமாரை வெறுப்பேற்றுகின்றனராம். வசந்தகுமாரை வறுத்தெடுக்கும் செய்திகளும், ராபர்ட் புரூஸ் புகழ்பாடும் செய்திகளும் ஒருசேர பரவ... வசந்தகுமார் செம அப்செட்டில் இருக்கிறாராம். காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் களேபரத்தால் மாவட்ட பா.ஜ.க-வினர் ஏகத்துக்கு குஷியாக இருக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு