Published:Updated:

ஜீவஜோதிக்குப் பதவி; சென்னையில் அமோனியம் நைட்ரேட் எங்கே இருக்கிறது? - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார்
News
கழுகார்

```அறிவாலயம் சென்றுகொண்டிருக்கிறேன். வாட்ஸ் அப்பை திறந்து பாரும்!’’ - ஒரு வரியில் கட்டளையிட்டுவிட்டு போனை கட் செய்தார் கழுகார். டேட்டாவை ஆன் செய்ததும், தகவல்கள் கொட்டின. மனிதன் பொய் பேசலாம்... ஆவணங்கள் பொய் பேசாது!

=ரெய்டுக்கு போன மகேஷ்குமார் அகர்வால்! பஞ்சாப்பிலிருந்து கசிந்த ரகசியம்... உண்மை என்ன?

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலைப் பற்றிய செய்தி ஒன்று போலீஸ் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. 2013-ம் ஆண்டு அவர் பஞ்சாப்பில் சி.பி.ஐ அமைப்பின் டி.ஜ.ஜி-யாக இருந்தார். அப்போது டெல்லியிலிருந்த வந்த ஸ்பெஷல் அசைன்மென்டின்படி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டுக்கு சென்றார். அந்த ரெய்டுக்கு முன்பே, சம்பந்தப்பட்டவரிடம் ரெய்டு தகவலை மகேஷ்குமார் கசியவிட்டார் என்பதுதான் மகேஷ்குமாரை சுற்றிவரும் கிசுகிசு. இது உண்மையா என்று விசாரித்தோம்.

இதுகுறித்து டெல்லியில் சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “2013-ம் ஆண்டு சி.பி.ஐ டீம் பஞ்சாப்பில் முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு நடத்தியது உண்மைதான். இந்த சம்பவத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே, தனது மத்திய அரசு பணிக்காலம் முடிவதையடுத்து, தமிழகம் செல்ல விரும்புவதாக மகேஷ்குமார் சி.பி.ஐ இயக்குநரிடம் கடிதம் கொடுத்திருந்தார். ரெய்டு நடந்த பிறகு, அந்தப் பணிமாறுதல் ஓகே செய்யப்பட்டது. மகேஷ்குமாரும் தமிழகம் வந்தார். இதுதான் நடந்தது.

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்
சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்தக் காலகட்டத்தில் பஞ்சாப்பில் சி.பி.ஐ-யில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்த ஒருவர்மீது ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து, அவர்மீது சி.பி.ஐ இயக்குநர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதற்கு மகேஷ்குமார்தான் காரணம் என்று அந்த இன்ஸ்பெக்டர் நினைத்திருக்கிறார். அந்த இன்ஸ்பெக்டர் பணி ஓய்வு பெறப்போகும் நாள்கள் நெருங்கியதையடுத்து, தன்மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி மத்திய நிர்வாக தீர்ப்பாணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிலும் தன்மீதான நடவடிக்கைக்கு மகேஷ்குமார்தான் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால், தீர்ப்பாணையம் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. அதன் பிறகும் அந்த இன்ஸ்பெக்டர் விடவில்லை. அப்போதுதான் மகேஷ்குமார்மீது ‘ரெய்டு விஷயத்தை கசியவிட்டுவிட்டார்’ என்று அவதூறைப் பரப்பினாராம்.

இன்ஸ்பெக்டர் இவ்வாறு அவதூறு கிளப்பிய விஷயத்தை சி.பி.ஐ உயர் அதிகாரிகளே, தீர்ப்பாணையத்தில் குறிப்பிட்டு, ‘மகேஷ்குமாருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை’ என்று மனுவாகவே தாக்கல் செய்துவிட்டார்களாம். பஞ்சாப் விவகாரத்தை அரைகுறையாகக் கேள்விப்பட்ட தமிழக போலீஸ்துறையைச் சேர்ந்த சிலர்தான் இப்போது மகேஷ்குமார் பற்றி கிசுகிசுக்களை பரப்பி வருகிறார்களாம்.

பாக்கி வைத்துவிட்டு வந்த காக்கி!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தொடை தட்டும் ரவுடிகள்... வடிகட்டும் பா.ஜ.க!

தமிழக பா.ஜ.க-வில் புதியதாக சேருகிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பூர்வீகத்தை முன்கூட்டியே விசாரித்து பிறகுதான் சேர்க்க வேண்டும் என்று மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டிருக்கிறதாம். தமிழகத்தில் குற்றப்பின்னணி கொண்டவர்கள் சிலர் தங்களது பாதுகாப்புக்காக பா.ஜ.க-வில் சேர்ந்துள்ளனராம். அவர்களைப் பற்றிய விவரங்களைத் தமிழக போலீஸுடம் கேட்டு வாங்கி மத்திய உளவுத்துறை அதிகாரிகள் டெல்லி மேலிடத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

ம்... ரெளடிகள் அணி தொடங்காமலிருந்தால் சரி!

எல்.முருகன்
எல்.முருகன்

சென்னையில் அமோனியம் நைட்ரேட் எங்கே இருக்கிறது?

சென்னை துறைமுகத்தில் 740 கிலோ அமோனியம் நைட்ரேட் கடந்த ஐந்து ஆண்டுகளாக வைக்கப்பட்டிருப்பதாக வெளியான அதிர்ச்சி தகவல் சென்னை மக்களைத் தூக்கிவாரிப்போட்டது. ஆனால், அந்த பார்சல் துறைமுகத்தில் இல்லை. 2015-ம் ஆண்டு அந்த பார்சல் வந்து இறங்கியது என்னவோ சென்னை துறைமுகத்தில்தான். ஆனால், இரண்டே நாள்களில் அந்த பார்சல், சென்னையிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலுள்ள சுங்கத்துறையினரின் கார்கோ நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் கன்டெய்னர் ஃப்ரைட் ஸ்டேஷனுக்கு (C.F.S - container freight station) கொண்டுசெல்லப்பட்டு, அங்குதான் வைக்கப்பட்டிருக்கிறதாம். இதுபோன்ற கன்டெய்னர் ஃப்ரைட் ஸ்டேஷன்கள் சென்னையை சுற்றிலும் சுமார் 35 இருக்கின்றனவாம். இவற்றில் பெரும்பாலான ஸ்டேஷன்கள் இருப்பது மணலியில்தான். லெபனான் துறைமுகம் விபத்தைத் தொடர்ந்து மேற்கண்ட ஸ்டேஷன்களில் தீயணைப்புத்துறை இயக்குநர் சைலேந்திரபாபு ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கிவிட்டு வந்துள்ளார்.

மக்கள் உயிர் முக்கியம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா பிடியில் டெல்டா பிரமுகர்கள்!

மயிலாடுதுறை எம்.பி-யான திருவிடைமருதூர் ராமலிங்கம், நாகப்பட்டினம் எம்.பி-யான செல்வராஜ், திருவோணம் தொகுதி எம்.எல்.ஏ-வான ராமச்சந்திரன், பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ-வான கோவிந்தராஜன், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ-வான பவுன்ராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உதவி என்ற பெயரில் ஆங்காங்கே விழாக்கள் நடத்தி விளம்பரம் தேடியதுதான் இந்த நிலைக்குக் காரணம் என்கிறார்கள். போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கு என்றே இவர்களோடு சுற்றித் திரிந்த கரைவேட்டிகள் எல்லாம் இப்போது உதறலில் இருக்கிறார்கள். மருத்துவமனையில் ஆள் பிடித்து, ‘‘எனக்கு ரகசியமா கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொடுங்கப்பா. நெஞ்சு பக் பக்னு அடிச்சுக்குது. தேர்தல்ல சீட்டு வேற கேட்டிருக்கேன்’’ எனப் பதறியடித்து கொரோனா சோதனைக்காகப் பறக்கிறார்களாம்.

கூடவே, ‘எங்கள் ஆருயிர் அண்ணன் கொரோனாஜி’ என்று போஸ்டர் அடித்தும் பார்க்கலாமே!

‘‘என்னை சப்ளையர் ஆக்கிட்டானுங்களே!’’

ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்
ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்

வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலின் தி.மு.க அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், புதுச்சேரி மீதும் பார்வையை பதித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் தி.மு.க-வின் மூன்று எம்.எல்.ஏ-க்கள் தயவில்தான் நாராயணசாமி ஆட்சி நடைபெறுகிறது. ‘கண்டிப்பாக அமைச்சரவையில் இடம் கிடைக்கும்’ என்று எதிர்பார்த்திருந்த புதுச்சேரி தி.மு.கழக எம்.எல்.ஏ-க்களுக்கு பெரிய அல்வாவை பார்சல் கட்டி கொடுத்துவிட்டார் நாராயணசாமி. என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமியின் கோட்டை என்று கூறப்பட்ட தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில், அவரின் வேட்பாளரை தோற்கடித்து தி.மு.க வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெற்றார். அவருக்கு வாரிய பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது தி.மு.க. ஆனால், நாராயணசாமி சட்டை செய்யவில்லை.

இதனால், 2021-ல் நடைபெறவிருக்கும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு பெரும்பான்மை இடங்களைப் பெறுவது என தி.மு.க முடிவெடுத்துவிட்டதாம். காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட ஏழு தொகுதிகளுக்கு ஒரு டீமையும், புதுச்சேரியின் 23 தொகுதிகளின் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்கு ஒரு டீமையும் பிரசாந்த் கிஷோர் அனுப்பியிருக்கிறாராம். ஊரடங்கு அமலில் இருக்கும்போதே புதுச்சேரிக்கு வந்த அந்த டீம் தனது பணியை ஆரம்பித்தது. அப்போது அந்த டீமை அணுகிய புதுச்சேரி நிர்வாகி ஒருவர், தனது கட்டுப்பாட்டிலுள்ள தொகுதிகளில் கட்சி வலுவாக இருப்பதாக மேலிடத்தில் சொல்லும்படி துண்டு போட்டிருக்கிறார். ‘அதற்கென்ன... பேஷா செஞ்சுடலாம்’ என்று வேகமாக தலையாட்டிய அந்த டீம், சரக்கு தொடங்கி மட்டன், சிக்கன், மீன் என மூன்று வேளையும் வெளுத்து வாங்கியிருக்கிறது. ஆனால் சென்னை திரும்பியவுடன் அந்த நிர்வாகி எதிர்பார்த்த பதிலை கூறவில்லையாம். கடுப்பான அந்த தி.மு.க பிரமுகர், “மேலிடத்தில் நல்லவிதமா சொல்லாததுகூட பரவாயில்லை. என்னை சப்ளையராக்கிட்டு போயிட்டானுங்களே’’ என்று புலம்பி வருகிறாராம்.

ஐபேக் கொடுத்த அல்வா... ஐ!

ஜீவஜோதிக்கு முக்கிய பதவி!

தன் முதல் கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் அண்ணாச்சி ராஜகோபாலுக்கு தண்டனை பெற்றுத்தந்தவர் ஜீவஜோதி. சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். கடந்த வாரம் வேதாரண்யத்தில் உள்ள தன் வீட்டின் முன்பு பா.ஜ.க துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பா.ஜ.க கொடியை ஏற்றி பரபரப்பூட்டினார் ஜீவஜோதி. இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட ஜீவஜோதியின் ஆதரவாளர்கள் திரண்டது பா.ஜ.க தலைவர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டது. வரும் வாரத்தில் ஜீவஜோதிக்கு மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் பேச்சு ஓடுகிறது. பொறுப்பு கிடைத்தவுடன் முழுநேர கட்சிப் பணிகளில் ஜீவஜோதி மிளிருவார் என்கிறார்கள்.

மேடத்துக்கு ஒரு பதவி பார்சேல்ல்ல்!

ஜீவஜோதி
ஜீவஜோதி

தஞ்சை அ.தி.மு.க-வில் யாதவர்கள் புறக்கணிப்பு?

தஞ்சை அ.தி.மு.க தெற்கு மாவட்டத்தில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. இதில் தொகுதிக்கு 20,000 பேர் வரை யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். அந்த வகையில் நான்கு தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக் கூடியவர்களாகவும் இவர்கள் திகழ்கின்றனர். அ.தி.மு.க தொடங்கப்பட்ட காலம்தொட்டே யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கட்சியில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்துள்ளனர். பேராவூரணி பகுதியில் ஊராட்சி ஒன்றியங்களில் சேர்மன் உள்ளிட்ட பெரிய பொறுப்புகளுக்குப் போட்டியிடும் வாய்ப்புகள் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே அளிக்கப்பட்டுள்ளன. கட்சியிலும் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், சமீபத்தில் ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட்டபோது யாதவர்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய பகுதிகளில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக தஞ்சை தெற்கு அ.தி.மு.க-வில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இதே அதிருப்தி, பட்டியல் சமூக மக்களிடமும் எழுந்துள்ளது. ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்த அதிருப்தி அலை கட்சிக்குப் பெரும் பின்னடைவைத் தரலாம்’ என உளவுத்துறையும் ஆட்சித் தலைமையை உஷார்படுத்தியிருக்கிறதாம்.

யுத்தம் செய்யும் யாதவர் கூட்டம்!

“அமைச்சர் யோசனையை கேட்க வேண்டாம்!” மேலிடத்து உத்தரவு...

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா, முடிகொண்டான் கிராமத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட சாலைத்திட்டம் இந்தக் கிராமத்தின் வழியாகவும் நடைபெறுவதால், இங்குள்ள 60-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், கோயில், பள்ளிக்கூடம் ஆகியவை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு மாற்றாக இப்பகுதி மக்கள் வேறொரு புறவழிச்சாலை திட்டத்தை முன் வைக்கிறார்கள். ‘அதுபோல் அமைக்கப்பட்டால், எவருக்கும் பாதிப்பு ஏற்படாது’ என்பதோடு, தூரமும் குறையும் என்கிறார்கள் இந்தப் பகுதி மக்கள்.

அமைச்சர் காமராஜ்
அமைச்சர் காமராஜ்

எனவே, தங்களது வீடுகளைத் தற்காத்துக்கொள்ள, மாற்றுப்பாதை வரைப்படத்துடன் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் உணவுத்துறை அமைச்சருமான காமராஜை இந்தப் பகுதி மக்கள் பலமுறை சந்திருக்கிறார்கள். அவரும், ‘‘இது நல்ல யோசனை. எதுக்கு தேவையில்லாமல் உங்க வீடுகளை இடிக்கணும்” என்றுள்ளார். தமிழக நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களிடமும் மாற்றுப்பாதை குறித்து பேசியிருக்கிறார். ஆனால், பொறியாளர்கள் அமைச்சரின் ஆலோசனையை கேட்கவில்லையாம். இதுகுறித்த உள்விவரம் அறிந்தவர்களோ, “முதல்வர் துறையில் எந்த அமைச்சர் என்ன சொன்னாலும் காதுல போட்டுக்க வேண்டாம் என்று மேலிடத்திலிருந்து வாய்மொழி உத்தரவு வந்துள்ளது. அதுதான் இதற்குக் காரணம்” என்கிறார்கள். இதைத் தொடர்ந்து சாலை விரிவாக்க பணிகளும் ஆரம்பித்துவிட்டன. இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ள தி.மு.க போன்ற எதிர்க்கட்சிகள், அமைச்சர் காமராஜ் மக்களை நம்ப வைத்து கழுத்தறுப்பதாக பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளன.

கலகம் செய்வாரா காமராஜ்?

முகம் சுளிக்கவைத்த வரவேற்பு விழா!

நீலகிரியில் இடைவிடாது கொட்டித்தீர்த்த பெரு மழையில் மாவட்டமே தண்ணீரில் தத்தளிக்கிறது. நூற்றுக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாலைகளிலிலும், குடியிருப்புகளிலும் மரங்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்து 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன. இந்த வேளையில் நீலகிரி அ.தி.மு.க-வின் புதிய மாவட்ட செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள வினோத், வரவேற்பு விழா என்ற பெயரில் குன்னூரில் ஒரு கொண்டாட்ட விழாவையே நடத்தியுள்ளார்.

மா.செ பதவி கிடைத்த பூரிப்பில், சென்னை சென்று ஓ.பி.எஸ்-ஐ சந்தித்துவிட்டுத் திரும்பிய‌ வினோத், அரசு அறிவுறுத்தல்படி தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை. நீலகிரி திரும்பிய வேகத்திலேயே நூற்றுக்கணக்கான தொண்டர்களை அழைத்து எந்த சமூக இடைவெளியும் இல்லாமல் இந்தக் கொண்டாட்டத்தை நடத்தியுள்ளார். இத்தகைய பேரிடர் காலத்தில் தனக்குத்தானே வரவேற்பு விழாவை அவர் நடத்திக்கொண்டது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

அரசியல்வாதிக்கு வாழ்வு வந்தால் அடைமழையில் ஐஸ்கிரீம் சாப்பிடுவாராம்!

தூங்கும் எம்.பி நிதி!

தூத்துக்குடி மாவட்டம் வெங்கடேசபுரம் ஆரம்ப சுகாதார மையத்துக்கு ஸ்கேன், ரத்த அணுக்கள் பரிசோதனை கருவிகளை வாங்குவதற்கு அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி-யான விஜயகுமார் 12 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். ஆனால், ஆறு மாதங்களாகியும் கருவிகளை வாங்குவதற்கான டெண்டர் எதுவும் விடப்படவில்லை. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கான கோப்பு நெடுங்காலமாக தூங்குகிறது. ‘அ.தி.மு.க எம்.பி அளித்த நிதியைப் பயன்படுத்துவதற்கே இந்த மெத்தனப் போக்கா?’ என கட்சித் தலைமைக்கு புகார் கடிதங்களும் பறக்க ஆரம்பித்துள்ளன. தாமதம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

ஆட்சியே இங்கு தூங்குது!

கூட்டம் முடிந்து வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி
கூட்டம் முடிந்து வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா பரிசோதனை: உளவுத்துறை உஷார்!

பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கொரோனா தடுப்புப் பணிகள், அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளைப் பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 30 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டதால் அதிகாரிகள் ஆடிப்போய்விட்டனர். உஷாரான உளவுத்துறை, இனி முதல்வர் கலந்துகொள்ளும் எந்த நிகழ்ச்சி என்றாலும், அதில் கலந்துகொள்பவர்கள் கட்டாயம் கொரோனா சோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் அலுவலகத்துக்கு ‘நோட்’ போட்டுள்ளதாம்.

பரிசோதனைக்கு கட்டணம் வசூலிப்பார்களோ!