Published:Updated:

உதவியாளரைக் காப்பாற்றிய ஆ.ராசா; வாரிசைக் களமிறக்கிய நயினார் நாகேந்திரன்... கழுகார் அரசியல் அப்டேட்ஸ்!

கழுகு @ மொபைல்
கழுகு @ மொபைல்

மெயிலைப் பார்க்குமாறு கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் மெசேஜ் வந்திருந்தது. உடனே மெயிலைத் திறந்தோம் தகவல்களை அடுக்கியிருந்தார்...

எம்.எல்.ஏ-வை முடக்கிய கொரோனா!

ஸ்டான்லி அரசு மருத்துவமனை
ஸ்டான்லி அரசு மருத்துவமனை

மூச்சுத் திணறல் காரணமாகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கீழக்கரையைச் சேர்ந்த 71 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஆம்புலன்ஸில் அவரது உடல் கீழக்கரைக்கு எடுத்து வரப்பட்டது. இறுதிச்சடங்கில் முன்னாள் அமைச்சரும் ராமநாதபுரம் எம்.எல்.ஏ-யுமான மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உட்பட சுமார் 300 பேர் பங்கேற்றனர். இறந்த நபருக்குக் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த தகவல் பிறகுதான் வெளியானது. இந்த நிலையில், இறந்தவரின் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எம்.எல்.ஏ மணிகண்டன் உள்ளிட்ட இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட 300 பேரும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் எம்.எல்.ஏ மணிகண்டனும் அவரது ஆதரவாளர்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

கொரோனா நிதி... எம்.எல்.ஏ ஆபீஸில் தடியடி!

தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன்
தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன்

கும்பகோணம் தி.மு.க எம்.எல்.ஏ-வான சாக்கோட்டை அன்பழகன் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஆக்ட்டிவாகச் செயல்பட்டு வருகிறார். தனது சொந்த செலவில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் அளித்து உதவி வருகிறார் அவர். இந்த நிலையில், "தி.மு.க தொழிற்சங்கத்தினருக்கு 1,000 ரூபாய் நிதியுதவி அளிக்கிறார்'' என்ற தகவல் பரவ... 144 தடை உத்தரவையும் மீறி 300-க்கும் மேற்பட்டவர்கள் எம்.எல்.ஏ அலுவலகத்தில் திரண்டுவிட்டனர். இதனால், லேசான தடியடி நடத்தி, கூட்டத்தை அப்புறப்படுத்தியது போலீஸ். அன்பழகன் ஆதரவாளர்களோ, "அலுவலகத்துக்கு யாரையும் வரச் சொல்லவில்லை. கொரோனா பணியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் எங்கள் எம்.எல்.ஏ-வுடைய செல்வாக்கைக் குலைக்கவே ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்படி வதந்தி பரப்பியுள்ளனர்'' எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

பிரிவினை பார்க்கும் நேரமா இது?

நீலகிரி
நீலகிரி

டெல்லி சென்று நீலகிரிக்குத் திரும்பிய எட்டு பேரில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், ஊட்டி காந்தள், குன்னூர், கோத்தகிரியில் சுமார் 20 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் வெளியில் வரத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருள்களை வழங்கத் தன்னார்வலர்களை நியமித்தது அரசு. நல்ல நோக்கத்தில் செய்யப்பட்ட இந்த முயற்சியில் இப்போது திடீரென சிக்கல். தன்னார்வலர்களில் இஸ்லாமிய மற்றும் இந்து அமைப்புகளைச் சார்ந்தவர்களே அதிகம். இந்நிலையில், `ஊட்டி காந்தள் பகுதிக்குக் குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கொண்டு சென்ற அத்தியாவசிய பொருள்களைச் சிலர் வாங்குவதில்லை’ எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

"இந்த நோய் எனக்கோ உங்களுக்கோ வரலாம். அதனால், யாரையும் புண்படுத்தக் கூடாது. பிரிவினை பார்க்கும் நேரமா இது?'' என எச்சரித்திருக்கிறார் கலெக்டர்.

தக்காளி ஆறுமுகம் ஆட்களின் அடாவடி!

சேலம் மாநகராட்சி மூலமாக செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட்டை தக்காளி ஆறுமுகம் என்பவர் டெண்டர் எடுத்து பால் மார்க்கெட்டில் கடை போடும் வியாபாரிகளிடம் பணம் வசூலித்து வந்தார். கொரோனாவால் பால் மார்க்கெட் மூடப்பட்டு சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கே பால் மார்க்கெட்டில் கடை போட்ட பல வியாபாரிகள் கடை போட்டிருக்கிறார்கள். தக்காளி ஆறுமுகத்தின் ஆட்கள் எனச் சொல்லிக்கொண்டு சிலர் இங்கேயும் வந்து தினமும் ஒரு கடைக்கு 200 ரூபாய் வசூலித்து வருகிறார்கள். இவருக்கு மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்களும் உடந்தையாக இருக்கிறார்களாம். "அசாதாரண சூழ்நிலையில் மக்களின் அத்தியாவசியத் தேவை பூர்த்தி செய்ய மூன்று மணி நேரம் கடை போடுகிறோம். இதில் என்ன வருமானம் கிடைத்துவிடப் போகிறது. இந்த இக்கட்டான சூழலிலும் தக்காளி ஆறுமுகத்தின் ஆட்கள் அடாவடி செய்கின்றனர்” எனப் புலம்புகின்றனர் வியாபாரிகள்.

உதவியாளரின் உயிரைக் காப்பாற்றிய ஆ.ராசா!

ஆ.ராசா
ஆ.ராசா

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் நீலகிரி எம்.பி ஆ.ராசா உள்ளிட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் டெல்லியிலேயே சிக்கிக்கொண்டனர். அவர்கள் தமிழகத்துக்கு வர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆ.ராசாவின் டெல்லி உதவியாளர் தர்மலிங்கத்துக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக, ஆ.ராசாவே உதவியாளரைத் தனது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில், தர்மலிங்கத்தின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் வாதாடி ஆபரேஷன் செய்ய வைத்திருக்கிறார் ஆ.ராசா.

டாஸ்மாக் ஜோர்!

டாஸ்மாக்
டாஸ்மாக்
Representational Image

உணவுத்துறை அமைச்சர் காமராஜின் தொகுதி நன்னிலம். அருகே உள்ளது மாப்பிள்ளை குப்பம் கிராமம். இங்கே உள்ள டாஸ்மாக் கடையின் பார் அ.தி.மு.க முன்னாள் சேர்மனுக்குச் சொந்தமானது. ஊரடங்கு உத்தரவால் தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகளும் பார்களும் மூடப்பட்டுள்ள நிலையில், இங்கு மட்டும் தடையில்லாமல் மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது.

``நாங்க இல்லாம கொரோனா நலத்திட்ட விழாவா?''

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே விசலூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் பூம்புகார் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான பவுன்ராஜின் வலதுகரம். கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் முன்னிலையில் விசலூரில் கொரோனா நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழா மேடையில் திடீரென ஏறிய கண்ணன், “இங்கு நான்தான் எல்லாமே! நான் இல்லாமல் யாரும் விழா நடத்த முடியாது'' என ரகளை செய்திருக்கிறார். போலீஸ் தடுத்தும் கண்ணன் கேட்கவில்லை. கண்ணன் அழைத்ததன்பேரில் அங்கே வந்த எம்.எல்.ஏ பவுன்ராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் அனுசுயாவைப் பார்த்து “உனக்கு பம்பு, லைட்டு பார்ப்பது மட்டும்தான் வேலை. மற்றதை நாங்க பார்த்துப்போம்" எனச் சீறியிருக்கிறார். ஊராட்சி மன்றத் தேர்தலில் கண்ணனின் மனைவியை அனுசியா தோற்கடித்துவிட்டார். அந்த ஆத்திரத்தில் அவரை ஆட்டிப் படைக்கிறார் கண்ணன். அதற்கு எம்.எல்.ஏ-வும் துணைபோகிறார் என்கின்றனர் அந்த ஊர் மக்கள்.

வாரிசை களமிறக்கிய நயினார் நாகேந்திரன்!

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதரபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், `மாநிலத் தலைவர் பொறுப்பு தனக்குக் கிடைக்கும்’ என நம்பிக்கையுடன் காத்திருந்தார். கிடைக்கவில்லை. அதனால், அப்செட்டான அவர் இப்போது தனது ஹோட்டல் பிசினஸில் பிஸியாகிவிட்டார். கட்சிப் பணிகளை அவருக்குப் பதிலாக அவர் மகன் பாலாஜி நயினார் கவனித்துக்கொள்ள ஆம்பித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேடிச் சென்று உணவு வழங்கும் பணியை பாலாஜி நயினார் மேற்கொண்டு வருகிறார். ''விரைவிலேயே தீவிர அரசியலில் களமிறங்குவதற்கான அச்சாரம் இது'' என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.
அடுத்த கட்டுரைக்கு