Published:Updated:

கரன்சி கன்டெய்னர்; கிளாஸ் எடுத்த பிரஷாந்த் கிஷோர்; `விசாரிக்கிறேன்' உதயநிதி... கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார்
கழுகார்

மப்பான மாவட்டம்... எகிறிக்குதித்த எம்.பி, கரன்சி... கன்டெய்னர்... கமிஷன், டிபேட்... டெம்ப்ளேட் உபயம் பிரஷாந்த் கிஷோர், `சிபாரிசு' முரளிதர ராவ், தேயும் தேனி தே.மு.தி.க, `அப்செட்' கரூர் உடன்பிறப்புகள் - கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்!

கழுகு @ மொபைல்

வெகுநேரமாக அணைத்து வைத்திருந்த ஆண்டிராய்டு போனை ஆன் செய்ததும், வாட்ஸ்அப் தகவல்கள் வந்து விழுந்துகொண்டேயிருந்தன. அதில் கழுகாரின் தகவல்களே அதிகம்... வாசித்தோம்.

மப்பான மாவட்டம்... எகிறிக்குதித்த எம்.பி!

லாரிகள் நிறைய வலம்வரும் மாவட்டத்தின் தி.மு.க எம்.பி ஒருவர் நட்சத்திர ஹோட்டலை நடத்திவருகிறார். சமீபத்தில் அந்த ஹோட்டலில் மாவட்ட முக்கிய பிரமுகர் ஒருவர், குடித்து கும்மாளமிட்டுவிட்டு, பில் கட்டாமல் கிளம்பிவிட்டாராம். ஹோட்டல் நிர்வாகிகள் விஷயத்தை ஓனரிடம் கொண்டுபோயிருக்கிறார்கள். உடனே மாவட்டத்தைக் கூப்பிட்ட எம்.பி, "ஏன்யா... நீ ஓசியில குடிச்சுக் கும்மாளம் போடுறதுக்கு என் ஹோட்டல்தான் கிடைச்சதா... ஒழுங்கு மருவாதியா 22,000 ரூபாய் பில்லை செட்டில் பண்ணு" என்று கெட்ட வார்த்தையில் அர்ச்சிக்க... பதிலுக்கு பிரமுகரும் தொண்டை கிழியக் கத்தியிருக்கிறார். இந்த ஆடியோ எப்போது வெளியாகும் என்று காத்திருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

கரன்சி... கன்டெய்னர்... கமிஷன்!

அ.தி.மு.க அலுவலகம்
அ.தி.மு.க அலுவலகம்

தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க-வை, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மூவர்தான் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆண்டு அனுபவிக்கிறார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். லேட்டஸ்ட் சேதி... இவர்கள் மூவருக்கும் சொந்தமான பெரும் தொகை, கன்டெய்னர் ஒன்றில் மகாராஷ்டிராவுக்குப் போயிருக்கிறதாம். அதைப் பாதுகாக்கும் பொறுப்பை மத்தியில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ஏற்றுக்கொண்டிருக்கிறாராம். காவலுக்கு 40 சதவிகிதம் கமிஷன் டீலிங் பேசியிருப்பதாகத் தகவல். இப்போது அதிலும் சிக்கல்... மகாராஷ்டிராவைச் சேர்ந்த அந்த பவர்ஃபுல் பிரமுகருக்கும் மத்தியில் உச்சத்திலிருப்பவருக்கும் இப்போது ஏழாம் பொருத்தம். அவரை பொறுப்பிலிருந்து கழற்றிவிட முடியாமல் இரட்டையர்களே தவிப்பதாகப் பேச்சு.

பணம் பத்திரமாகத் திரும்பி வருமா என்று தவிக்கிறதாம் மூவர் குழு!

டிபேட்... டெம்ப்ளேட்!

பிரஷாந்த் கிஷோர்
பிரஷாந்த் கிஷோர்

தி.மு.க-வின் ஆலோசகராக பிரஷாந்த் கிஷோர் பொறுப்பேற்ற பிறகு, கடந்த வாரம் தனது அலுவலகத்தில் தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். "எந்தெந்த தொலைக்காட்சிகள் நமக்குச் சாதகமாகச் செயல்படுகின்றன, ஆளுங்கட்சிக்குச் சாதகமான சேனல்கள் எவை?’’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டிருக்கிறார். "சேனல் விவாதங்களில் இனி இப்படித்தான் பேச வேண்டும்’’ என்று சில டெம்ப்ளேட்களையும் டிப்ஸ்களையும் கொடுத்துள்ளார்.

இந்த ஆலோசனையில், ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் முக்கியமாக இடம்பெற்றிருந்தாராம்.

சிபாரிசுக்குப் போனாரா முரளிதர ராவ்?

முரளிதர ராவ்
முரளிதர ராவ்
`நோ டைம்' எடப்பாடி, அறிவாலய ராஜ்ய `சபா' கச்சேரி, `ஸ்டன்ட்' செந்தில் பாலாஜி - கழுகார் அப்டேட்ஸ்!

`அ.தி.மு.க-வின் ராஜ்ய சபா எம்.பி ஆகிவிடலாம்’ என ஏ.சி.சண்முகம் காய் நகர்த்துவதை ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அதன் ஃபாலோ அப் இது.

தமிழக பா.ஜ.க-வின் மேலிடப்பார்வையாளர் முரளிதர ராவ் தரப்பினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மீட் செய்து ஏ.சி.சண்முகத்துக்காகப் பரிந்துரைத்தாராம். ஆனால், எடப்பாடி தரப்பில் எந்த உறுதியும் கொடுக்கப்படவில்லையாம். அதேசமயம், பா.ஜ.க-வுக்கு சீட் கேட்டுதான் முரளிதர ராவ் தரப்பினர் முதல்வரைச் சந்தித்ததாகவும் சொல்கிறார்கள்.

தேய்கிறதா தேனி தே.மு.தி.க?

விஜயகாந்த், பிரேமலதா
விஜயகாந்த், பிரேமலதா

தேனி மாவட்டத்தில் ஒரு காலத்தில் ஓஹோ என்று வளர்ந்து வந்த தே.மு.தி.க, இப்போது தேய்ந்துகொண்டே போகிறது. போதாக்குறைக்கு, தே.மு.தி.க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்திக்கு எதிராகச் சொந்தக் கட்சியினர் புகார்களைக் குவிக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் குளறுபடி தொடங்கி சொந்த சமுதாய மக்களுக்கு மட்டும் அனுசரணை காட்டுவது வரையில் கிருஷ்ணமூர்த்தி மீது வாசிக்கப்படும் குற்றச்சாட்டுகளின் பட்டியல் வெகு நீளம். பிரச்னை பெரிதாவது தெரிந்து, கிருஷ்ணமூர்த்தியைச் சென்னை அழைத்து விசாரித்திருக்கிறார்கள். ஆனால், ஒரு நடவடிக்கையும் இல்லையாம்.

வரும் 9-ம் தேதி மதுரை வரும் பிரேமலதாவைச் சந்தித்து கிருஷ்ணமூர்த்திக்கு எதிரான ஆதாரங்களைப் பந்தி வைக்கப்போகிறார்களாம். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தேனி மாவட்டத்தில் கட்சி தேய்ந்துவிடும் என்கிறது கேப்டன் கேங்.

விளாத்திகுளத்தில் விறுவிறு அரசியல்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் ஒன்பது முறை அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும், இந்தத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான என்.கே.பெருமாள் அதிருப்தி காரணமாகத் தி.மு.க-வுக்கு தாவினார். பத்தாண்டுகளாக மாவட்ட அவைத்தலைவராக இருந்த என்.கே.பெருமாளுக்கு, சில நாள்களுக்கு முன்புதான் விளாத்திகுளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. மாவட்டப் பதவியிலிருந்து ஒன்றியப் பதவி கொடுத்ததால் அதிருப்தியில் இருந்தார் பெருமாள். இந்தத் தகவலை தற்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏ சின்னப்பன், அமைச்சர் கடம்பூர் ராஜுவின் காதில் போட, என்.கே.பெருமாளின் வீட்டுக்கே சென்று சால்வை அணிவித்து மீண்டும் அ.தி.மு.க-வில் இணையச் சொல்லி அழைத்தார். மறுபேச்சே பேசாமல், "எப்போ முதல்வரை பார்க்கப் போகணும்?” என்று கேட்ட பெருமாளை, மறுநாளே சென்னைக்கு அழைத்துச் சென்று இ.பி.எஸ், ஓ.பி.எஸ் முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைத்துவிட்டார் அமைச்சர்.

அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு

"இந்தத் தொகுதியில உள்ள தி.மு.க விசுவாசிகளை அ.தி.மு.க-வில் இணைச்சு விளாத்திகுளத்தை முழுமையா அ.தி.மு.க கோட்டையா மாத்திடுங்க. உங்க மருமகளுக்கு விளாத்திகுளம் பேரூராட்சி சேர்மன் பதவி கொடுத்துடுவோம். கட்சியில உங்க சீனியாரிட்டிக்கான பதவி சீக்கிரமே தேடி வரும்” என அ.தி.மு.க தரப்பில் உறுதி தரப்பட்டிருப்பதால் குஷியாகி இருக்கிறார் என்.கே.பெருமாள்.

கலக்கத்தில் கரூர் தி.மு.க-வினர்... கண்டுகொள்ளாத உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
நா.ராஜமுருகன்

ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ-வுமான செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார். பங்கேற்க வந்திருந்த உதயநிதி, ஏற்பாடுகளைப் பார்த்து அசந்து போயிருக்கிறார். அவர் தனியாக இருந்த சமயத்தில், அவரைச் சந்தித்த தி.மு.க முக்கியப் புள்ளிகள் சிலர், செந்தில் பாலாஜி மீது அடுக்கடுக்கான புகார்களை வாசித்திருக்கிறார்கள். வந்த புதிதில் கட்சி வளர்ச்சியில் சிறப்பாகச் செயல்பட்டுவந்த செந்தில் பாலாஜி, எல்லா விஷயங்களிலும் அ.ம.மு.க-விலிருந்து தன்னுடன் வந்த ஆதரவாளர்களையே முன்னிலைப்படுத்துவதாகப் புலம்பியிருக்கிறார்கள்.

உதயநிதி "விசாரிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு மேடை ஏறியதும், "செந்தில் பாலாஜி போல்தான் ஒவ்வொரு தி.மு.க மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினரும் செயல்பட வேண்டும்" என்று வானளாவப் புகழ்ந்து பேச முகம் கருகிப்போனார்களாம் புகார் கொடுத்த கரூர் உடன்பிறப்புகள்.

மணல் கொள்ளை... மந்திரியே துணை!

கரூர் மாவட்டத்தில் ஒரு சதவிகிதம்கூட மணல் கொள்ளை நடைபெறவில்லை என்று காவல்துறையும் வருவாய்த்துறையினரும் சொல்லிவருகிறார்கள். ஆனால், கரூர் மாவட்டக் காவிரியிலும் அமராவதி ஆற்றிலும் இரவு, பகலாகத் தடையில்லாமல் மணல் கொள்ளை நடக்கிறது. நேர்மையான சில அதிகாரிகள் மணல் கொள்ளையர்களைப் பிடித்தால் அமைச்சர் ஒருவரின் பெயரைச் சொல்லி `போக்கு’ காட்டுகிறார்களாம். அமைச்சருக்கு போனை போட்டால் `அவங்க மேல நடவடிக்கை எடுக்குறது என் மேலே நடவடிக்கை எடுக்குறது மாதிரி’ என்று கோபப்படுகிறாராம். சமீபத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் அள்ளியவர்களை மாட்டு வண்டிகளோடு பிடித்து வந்தனர், தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார். ஆனால், சிறிது நேரத்தில் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து போன் வந்ததாம். அவர்களை மாட்டுவண்டிகள் சகிதம் கமுக்கமாக வழக்கு எதுவும் பதியாமல் அனுப்பிவிட்டார்கள்.

மிஸ்டர் கழுகு: முஸ்லிம்களுக்கு ராஜ்யசபா வாய்ப்பு ஏன் இல்லை?
அடுத்த கட்டுரைக்கு