Published:Updated:

தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி? `ஹாலிவுட் அட்ரஸ்' போலி நிறுவனங்களுடன் அரசு ஒப்பந்தம்?- கழுகார் அப்டேட்ஸ்!

கழுகாரிமிருந்து அழைப்பு. “மின்னஞ்சலில் தகவல்களை அனுப்பியிருக்கிறேன்... செக் செய்யவும்” என்றார். திறந்து பார்த்தோம். வழக்கம்போல பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் தகவல்களை அனுப்பியிருந்தார் கழுகார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அண்ணன், தம்பி, மாமா... உறவுகளைத் தூக்கி எறிந்த தி.மு.க தலைமை!

தி.மு.க-வில் மிக முக்கிய தலைவர் அவர். தற்போதைய கட்சித் தலைமையை முன்பெல்லாம் உரிமையாக `தம்பி... தம்பி’ என்று வாஞ்சையாக அழைப்பார். தலைமையும் அவரை `அண்ணா... அண்ணா’ என்றே பாசத்துடன் அழைக்கும். கட்சி கார்ப்பரேட் மயமானதைத் தொடர்ந்து புது டீம் ஒன்றின் முக்கியஸ்தர்கள், ``தம்பி... தம்பின்னு நாலு பேர் முன்னால சொன்னா உங்களை எப்படி மதிப்பாங்க?” என்று தூபம் போட்டுள்ளனர். இதைக் கட்சித் தலைமை கண்டுக்கொள்ளவில்லை என்றாலும் விஷயம் எப்படியோ அந்த முக்கிய தலைவரின் காதுகளுக்கும் சென்றுள்ளது. இதையடுத்தே சமீப காலமாக அவர் `தலைவரே... தலைவரே’ என்று உருகுகிறாராம். பதிலுக்கு தலைமையும் `அண்ணா’ என்று அழைப்பதை தவிர்த்து பெயரைச் சொல்லியே அழைக்கிறதாம்.

தி.மு.க அலுவலகம்-அண்ணா அறிவாலயம்
தி.மு.க அலுவலகம்-அண்ணா அறிவாலயம்

இவை எல்லாம் கூட பரவாயில்லை... சில நாள்களாக அந்த முக்கிய தலைவர் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறாராம். காரணம், அவரை அலைபேசியில் அழைத்த வாரிசு தலைவர் ஒருவர் நேரடியாக பெயரைச் சொல்லி அழைத்து அதிகாரமாக பேசியதுதானாம். ``நான் தூக்கி வெச்சு கொஞ்சுன பையன். மூச்சுக்கு முந்நூறு தடவை `மாமா... மாமா’ன்னு கூப்பிடுவான். இன்னைக்கு என்னை பேரைச் சொல்லிக் கூப்பிடுறான்” என்று சொல்லி அழாத குறையாக மருகுகிறாராம் அந்தத் தலைவர்!

அண்ணன் என்னடா... தம்பி என்னடா... அரசியலான உலகத்திலே!

வேளாண் அமைச்சரின் பி.ஏ நீக்கம்... முதல்வர் அதிரடி ஆக்‌ஷன்!

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் பர்சனல் பி.ஏ-வாக இருந்தவர் அண்ணாமலை. அமைச்சர் மகன் ஐயப்பனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. ஜூலை 24-ம் தேதி திடீரென இவரை பதவியில் இருந்து நீக்கியிருக்கிறது அரசு. சமீபத்தில் வேளாண்மைத்துறையில் வாரிசுக்காக சில வேலைகளை செய்ததாக முதல்வருக்கு தொடர் புகார்கள் சென்றதை அடுத்தே இந்த அதிரடி நடவடிக்கை என்கிறார்கள். கடந்த ஒரு மாதமாக அண்ணாமலையைக் கண்காணித்த உளவுத்துறையினர் சில ஆடியோ ஆதாரங்களையும் முதல்வரிடம் அளித்தார்களாம்.

வேளாண்மைத் துறை - பணி நீக்கம்
வேளாண்மைத் துறை - பணி நீக்கம்

இதைத் தொடர்ந்தே அண்ணாமலையை பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்குமாறு துரைக்கண்ணுவிடம் முதல்வர் உத்தரவிட்டாராம். அவரை பொறுப்பிலிருந்து நீக்கியது மட்டுமல்லாமல் அந்த நீக்கம் குறித்து துறையில் அனைவருக்கும் ஒரு சுற்றறிக்கையும் அனுப்ப உத்தரவிட்டதாம் முதல்வர் அலுவலகம். `கமுக்கம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்தச் சுற்றறிக்கையில், ‘அண்ணாமலையிடம் துறைசார்ந்த எந்தவொரு தகவலையும் துறைசார்ந்த தலைவர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சாம்பிள்தானாம். துறையில் இதுபோன்ற அதிரடிகள் தொடரும் என்கிறார்கள்.

களை எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்டாலின் சட்டைக் கிழிப்பு... ஐ.பி.எஸ் அதிகாரிகள் கிலி!

தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டால் நம்மை பந்தாடி விடுவார்களோ என்கிற பயம் இப்போதே சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் மத்தியில் முளைத்துவிட்டது. குறிப்பாக, 2017-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டமன்றத்துக்குள் நுழைந்து ஸ்டாலினை குண்டுக்கட்டாகத் தூக்கிய அதிகாரிகள் பலரும் பீதியில் உறைந்திருக்கிறார்களாம். இச்சம்பவத்தில்தான் ஸ்டாலினின் சட்டை கிழிந்து (!), அவர் ஆளுநர் வரை புகார் அளித்துவிட்டு வந்தார். அதனால், அந்த சம்பவத்தில் தொடர்புடைய சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் இப்போதே மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கும் முன்னெடுப்பு பணிகளில் இருக்கிறார்களாம்!

சண்டையில கிழியாத சட்டையான்னு போறதுக்கு அவர் என்ன வடிவேலுவா!

ஸ்டாலின் சட்டை கிழிப்பு (2017)
ஸ்டாலின் சட்டை கிழிப்பு (2017)

தமிழக காங்கிரஸ் கட்சியில் மாவட்டங்கள் அளவில் சர்வே செய்து புதிய மாவட்டத் தலைவர்களை நியமிக்க மாநில கட்சித் தலைமை ரகசியப் பட்டியல் ஒன்றை தயார் செய்ததாம். `ரொம்ப ரகசியம்’ என்று நினைத்துக்கொண்டிருந்த அந்தப் பட்டியல் எப்படியோ மீடியாவில் கசிந்துவிட்டதாம். அதிர்ந்துபோன மாநிலத் தலைமை ஆடித்தீர்த்துவிட்டது என்கிறார்கள். இதற்கிடையே டெல்லியிலிருந்து அந்தப் பட்டியலில் ஐந்து பேருக்கு மட்டுமே ஓகே சொல்லியிருக்கிறார்களாம். அழாத குறையாக இருக்கிறது மாநிலத் தலைமை!

கட்சிலீக்ஸ்... கதறும் கதர்!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

மாவட்டச் செயலாளர்கள் பதவி... அ.தி.மு.க-வில் வசூல் வேட்டை ஜோர்!

அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றத்துக்காக ஏற்பாடுகள் நடந்துவரும் நேரத்தில், கட்சிக்குள் சத்தமில்லாமல் வசூல் வேட்டை நடக்கிறதாம். மூத்த தலைவர்கள் மூவரை பெரும் பட்டாளமே சுற்றிவருகிறதாம். இது தெரிந்த இரட்டை தலைமை கடுப்பாகிவிட்டது என்கிறார்கள். “நாங்க இருக்க அவங்களை சுத்துறது என்னங்க நியாயம்?” என்று பொங்கிவிட்டார்களாம்.

அதானே!

காஞ்சி மடம் vs கெளரி காமாட்சி... ஓயாத மருத்துவக் கல்லூரி பஞ்சாயத்து!

காஞ்சி மடம் சார்பில் திருவனந்தபுரத்தில் இயங்கிவரும் மருத்துவக் கல்லூரியின் நிர்வாக உரிமை தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் போலிருக்கிறது. மடம் தரப்பிலும் மருத்துவமனையை நிர்வகிக்கும் கெளரி காமாட்சி தரப்பிலும் மாறி மாறி எச்சரிக்கை விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார்கள். திருவனந்தபுரம் எஸ்.யூ.டி மருத்துவக் கல்லூரி தலைமைச் செயல் அலுவலர் பொறுப்பிலிருந்து கெளரி காமாட்சியை நீக்குவதற்கு இடைக்கால தடை விதித்து கேரளாவின் நெடுமாங்காடு முனிசிபல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘இந்த உத்தரவை மீறுபவர்கள்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்’ என்று நாளிதழ்களில் விளம்பரம் அளித்துள்ளார் கெளரி காமாட்சி.

காஞ்சி மடம்
காஞ்சி மடம்

இந்த விளம்பரம் வெளிவந்ததற்கு முதல் நாள் ஜூலை 21-ம் தேதி, காஞ்சி மடம் அறக்கட்டளை சார்பில் ஒரு விளம்பரம் நாளிதழ்களில் வெளியாகியிருந்தது. அதில், ‘கெளரி காமாட்சிக்கும் எஸ்.யூ.டி கல்லூரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரை நீக்கிவிட்டோம். அவருடன் தொழில்ரீதியாக யார், என்ன தொடர்பு வைத்திருந்தாலும் அதற்கு மடம் பொறுப்பாகாது’ என்று கூறியிருந்தனர். அதற்கு பதிலடியாகத்தான் இந்த விளம்பரத்தை கெளரி காமாட்சி வெளியிட்டுள்ளார்.

மருத்துவக் கல்லூரியை மடத்தின் நிர்வாகம் கையகப்படுத்திவிடக் கூடாது என்பதில் கெளரி காமாட்சி தீவிரமாக இருக்கிறார். மடத்தின் அறக்கட்டளை உறுப்பினர்களிடம் இருந்து அவருக்கு கடும் அழுத்தம் தரப்படுகிறதாம். அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றவும் ஏற்பாடுகள் நடக்கின்றனவாம். அதைத் தடுக்கத்தான் இடைக்கால நீதிமன்ற தடை வாங்கியிருக்கிறாராம்.

கமிஷனர் வைத்த செக்... சென்னை இன்ஸ்பெக்டர்கள் அதிர்ச்சி!

சென்னை பெருநகர காவல் ஆணையராகப் பொறுப்பேற்றிருக்கும் மகேஷ் குமார் அகர்வால், அனைத்து காவல்நிலைய ஆய்வாளர்களுக்கும் செக் ஒன்றை வைத்துள்ளார். ஒவ்வொரு காவல்நிலைய எல்லைக்குள்ளும் சட்டவிரோதமாக செயல்படும் பப்புகள், கஞ்சா விற்பனை, கள்ளச்சாராய விற்பனை, சீட்டாட்ட விடுதிகளின் விவரங்களையும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்குறித்த விவரங்களையும் வாரம் ஒருமுறை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ரிப்போர்ட் அளிக்க உத்தரவிட்டுள்ளார். அதேவேளை, பெருநகர காவல்துறையின் உளவுப்பிரிவு அதிகாரிகள் மூலமாகவும் இதை கிராஸ் செக் செய்து ரிப்போர்ட் அளிக்க உத்தரவிட்டுள்ளார். இரண்டு ரிப்போர்ட்களையும் ஒப்பிட்டு, காவல் ஆய்வாளர்கள் அனுப்பிய ரிப்போர்ட் பொய் என்றால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யவும் திட்டமிட்டுள்ளாராம்.

மாமூல் போச்சே!

பிரேமலதா - விஜயகாந்த்
பிரேமலதா - விஜயகாந்த்

தி.மு.க-வின் ரகசியப் பேச்சுவார்த்தை... காத்திருக்க சொன்ன கேப்டன் தரப்பு!

சமீபத்தில் தி.மு.க இளைஞரணி தரப்பிலிருந்து முக்கிய பிரமுகர் ஒருவர் தே.மு.தி.க கிச்சன் கேபினட் தரப்பைச் சந்தித்து ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தினாராம். அமைந்தகரையிலுள்ள பங்களா ஒன்றில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், `சீட் பங்கீடு குறித்து கவலை வேண்டாம்; கெளரவமான எண்ணிக்கையில் தருவோம். முதலில் கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளுங்கள்’ என்று இளைஞர் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டதாம். கடந்த தேர்தலில் தி.மு.க தோல்விக்கு தே.மு.தி.க கூட்டணியில் இல்லாததும் ஒரு காரணம் என்பதால் முந்திக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்கிறார்கள். கூட்டத்தை ஏற்பாடு செய்தது தி.மு.க-வின் சென்னை மாவட்டச் செயலாளர் ஒருவர்தானாம்! நல்ல தகவலுக்காகக் காத்திருக்க சொல்லியிருக்கிறதாம் கேப்டனின் கிச்சன் கேபினட்.

ரகசியமாக ஒலிக்குது முரசு ‘ஒலி!’

சென்னை மாநகராட்சியில் ஜொள்ளு அதிகாரிக்கு மீண்டும் வேலை!

ராயபுரம் மண்டலத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றிவந்த கமலக்கண்ணன் என்பவர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் வழிந்து குழைந்து பேசும் ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் பெண் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டவுடன் கமலக்கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்னர் அதே ராயபுரம் மண்டலத்தில் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார் கமலக்கண்ணன். இதுகுறித்து பேசிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சிலர், ‘வெள்ளை மாளிகை’யில் கோலோச்சும் பணி நீட்டிப்பு அதிகாரி தரப்பை பிடித்துதான் அதே மண்டலத்தில் வேலை வாங்கிவிட்டாராம். இப்போது புகார் கொடுத்த அப்பெண்ணின் தரப்பும் இவ்விவகாரத்தில் அரசுக்கு ரிப்போர்ட் அளித்த நேர்மையான அதிகாரிகள் சிலரும் பதற்றத்தில் இருக்கிறார்களாம்.

வெள்ளை மாளிகையின் கொல்லைப்புற வழி!

பத்திரப்பதிவு அலுவலகங்கள்
பத்திரப்பதிவு அலுவலகங்கள்

பட்டா, பைலட், ஃபைட்... முட்டிக்கொள்ளும் பெரும் புள்ளிகள்!

பத்திரப் பதிவு செய்யும்போதே, பட்டாவும் மாறுதலாகிவிடும் திட்டத்தை தமிழக அரசு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப் போவதாக ஒரு தகவல் உலவுகிறது. தற்போது இப்படி ஒரு பைலட் திட்டத்தை வாலாஜாபாத் பத்திரப்பதிவு அலுவலகத்தில் செயல்படுத்திவருகிறார்கள். ஆனால், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்தத் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்பாட்டுக்கு கொண்டுவரும் முடிவு எதுவும் துறைரீதியாக எடுக்கப்படவில்லை என்கிறார்கள். தினமும் கோடிகளில் கொட்டும் சைடு வருமானம் தொடர்பாக துறையின் உச்சத்தில் இருக்கும் இருதரப்புக்கும் முட்டிக்கொண்டதே இப்படி முடிவு எடுக்காததற்கு காரணம் என்று கிசுகிசுக்கிறார்கள்.

ஊழலில் மோதல் எல்லாம் சகஜமப்பா!

போலி நிறுவனங்கள்... ஹாலிவுட் அட்ரஸ்!

சமீபத்தில் தமிழக அரசு பல்வேறு வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுடன் தொழில் முதலீட்டுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இதில் பல நிறுவனங்கள் முகவரி உட்பட பல விவரங்களை போலியாகக் கொடுத்திருக்கின்றனவாம். இதற்கான ஆதாரங்களை தி.மு.க-வின் ஐ.டி விங் தோண்டி எடுத்திருக்கிறது என்கிறார்கள். சில நிறுவனங்கள் கொடுத்திருக்கும் முகவரியில் வெளிநாட்டு அரசு அலுவலகங்கள் இருக்கின்றனவாம். இன்னும் சில முகவரிகள் ஹாலிவுட் துணை நடிகர்களின் பெயரில் இருக்கிறதாம்! இந்த விவகாரத்தை வைத்து ஆளுங்கட்சிக்கு குடைச்சல் கொடுக்கத் தயாராகிறார்கள் உடன்பிறப்புகள்.

விவகாரம் ஹாலிவுட் படத்தை விஞ்சும் போலிருக்கிறதே!

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

கொரோனாவை பரப்பும் அரசு அதிகாரிகள்... நீலகிரியில் அதிகரிக்கும் தொற்று!

கொரோனா ஓரளவு கட்டுக்குள் இருந்த நீலகிரியிலும் தற்போது தொற்று புயல் வேகத்தில் பரவிவருகிறது. குறிப்பாக, ஊட்டியில் தொற்று அதிகம் பேரை பாதித்துள்ளதாம். மாவட்டத்தின் முக்கிய நுழைவு வாயில்களான பர்லியார், குஞ்சப்பனை சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், வேலியே பயிரை மேய்ந்ததைப் போல் வருவாய்த்துறை, காவல்துறை என அரசு அலுவலர்கள் பலரும் அரசு வாகனத்தில் அடிக்கடி தங்கள் சொந்த வேலைக்காக வெளி மாவட்டங்களுக்குச் சென்றுவருகின்றனர். இந்த விவகாரம் கலெக்டருக்கு தெரியவர கடுமையாக எச்சரித்துள்ளார். இருப்பினும்‌ பயணங்கள் குறைந்தபாடில்லை. இவர்கள் குறித்து எந்த விவரமும் சேகரிக்கப்படாத நிலையில், இவர்களின் மூலம் நோய் பரவினால் தொற்று தொடங்கிய இடத்தைக் கண்டறிவது கடினம் என சுகாதாரத்துறையினர் புலம்புகின்றனர்.

ஊட்டியில் போட்டி போடுது கொரோனா!

அதிகாரிகள் அலட்சியத்தால் இளம்பெண் தற்கொலையா?

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் மின்வாரிய காலனியில் வசிக்கும் 20 வயதுப் பெண் ஒருவர், கடந்த மே மாதம் 3-ம் தேதி தீயில் கருகிய நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாள்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர் மே 5-ம் தேதி மரணமடைந்தார். வயிற்று வலி காரணமாக அவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், தற்கொலைக்கு வயிற்று வலி காரணம் இல்லையாம். சமீபத்தில் பெண்ணின் தந்தை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு, வசதி படைத்த வயதான நபருக்கு மகளை மண முடித்துவைக்கக் கட்டாயப்படுத்தியுள்ளார். அந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாத அந்த பெண், சம்பந்தப்பட்ட துறைக்கு போனில் புகார் தெரிவித்தாராம். அதிகாரிகள், நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அந்தப் பெண் விபரீத முடிவை எடுத்ததற்கு காரணமாம். தற்கொலைக்குத் தூண்டிய தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை கமுக்கமாக வழக்கை மூடி மறைத்திருக்கிறது என்கிறார்கள்.

விடாது பாவம்!

Woman in stress
Woman in stress

வேலூர் தீயணைப்பு நிலையம்... பற்றிக்கொண்ட பாலியல் தீ!

வேலூர் தீயணைப்பு நிலையத்தில், பாலியல் விவகார பஞ்சாயத்து ஒன்று பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கு பணிபுரியும் ஆண் அதிகாரி ஒருவர், சக பெண் அலுவலரிடம் வீட்டுக்கே செல்லும் அளவுக்கு நட்புடன் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த அதிகாரி எல்லை மீறி தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பஞ்சாயத்து மாவட்ட நிர்வாகத்தின் காதுகளுக்கும் புகாராகச் சென்றது. தொடர்ந்து விசாகா கமிட்டி இதை விசாரித்துள்ளார்கள். ஆனால், உண்மையை ஒப்புக்கொள்ளும் தீயணைப்பு அதிகாரி ‘அவர் இல்லை என்றால் உயிரையே மாய்த்துக்கொள்வேன்’ என்று கதறி அழ... கமிட்டி உறுப்பினர்கள் கையைப் பிசைகிறார்களாம்!

மிஸ்டர் கழுகு: ஈ.சி.ஆரில் 63 ஏக்கர் நிலம்...  ரகசிய விசாரணையில் ஐ.டி!

பெண்கள் மர்ம மரணம்... சிவகங்கையில் பீதி!

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் புதூரில் கடந்த மாதம் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்துபோனார். காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் சிலர் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுத்து பிணத்தை எரிக்க வைத்துவிட்டனராம். வட்டி தொழிலில் ஈடுபட்டிருந்த அந்தப் பெண் இறப்பதற்கு முன்பாக தன்னைச் சிலர் தாக்க வருவதாக கூறும் வீடியோ ஒன்றும் அந்த கிராமவாசிகள் மத்தியில் உலா வருகிறது என்கிறார்கள். இன்னொரு அதிர்ச்சியாக இந்தச் சம்பவம் நடந்து முடிந்த சில தினங்களில் சுற்றுவட்டார கிராமத்தில் வட்டித் தொழிலில் ஈடுபட்டிருந்த மேலும் இரு பெண்களும் இறந்துபோனார்கள் என்று வலம்வரும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

காக்கிகள் கவனத்துக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு