Published:Updated:

`துறவறம்' கே.சி.பழனிசாமி; அக்காவுக்குப் பதவி; `கொரோனா அலர்ட்' செங்கோட்டையன் - கழுகார் அப்டேட்ஸ்!

Kazhugu @ Mobile
Kazhugu @ Mobile

அலைபேசியைக் கையில் எடுக்கும்போதே படுசூடாயிருந்தது. கழுகார் வாட்ஸ் அப்பில் அனுப்பிய தகவல்கள் அத்தனையும் அவ்வளவு சூடு...

எம்.எல்.ஏ-வுக்கு வீடு... ஆணையருக்கு ஆடி காரு!

சேலம் யாருடைய கோட்டை என்பது எல்லோருக்கும் தெரியும். அங்குள்ள முக்கியப் பேருந்து நிலையத்தில் கோட்டை வி.ஐ.பி-க்கு மிகவும் வேண்டிய ஒருவர்தான் கழிப்பிடத்திலிருந்து சைக்கிள் ஸ்டாண்ட், ஓட்டல், கடைகள் எனப் பெரும்பாலானவற்றை குத்தகைக்கு எடுத்திருக்கிறார். அத்தனை இடங்களிலும் குத்தகை ஒப்பந்தத்தைமீறி மக்களிடம் பல மடங்குக் கட்டணம் வசூலித்து வருகிறார். மக்கள் கடும் அதிருப்தியுடன் அரசாங்கத்தைத் திட்டித் தீர்க்கிறார்கள்.

ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் பெயருக்குக்கூட ஒரு நோட்டீஸ் கொடுப்பதில்லையாம். யாராவது புகார் தெரிவித்தால்,

“நான் எம்.எல்.ஏ-வுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறேன். சேலம் கார்ப்பரேஷன் கமிஷனருக்கு ஆடி கார் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். என்னை யாரும் ஒண்ணும் பண்ண முடியாது!’’
என்று மிரட்டி வருகிறாராம் அந்த வி.ஐ.பி.

அரசியல் துறவறம் பூண்டுவிட்டாரா கே.சி.பழனிசாமி?

கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி

‘கரூர் மாவட்ட தி.மு.க என்றால், அது கே.சி.பழனிசாமிதான்’ என்று ஒரு காலத்தில் சொன்னார்கள். ஒருகாலத்தில் மணல் வியாபாரத்தில் கோலோச்சிய அவர் தி.மு.க-வுக்கு கஜானாவாகவும் இருந்தார். ஆனால், 2016 சட்டமன்றத் தேர்தலுடன் இருக்கும் இடம் தெரியாமல் போகும் அளவுக்கு அரசியல் நிலைமை பின்னடைவாகிவிட்டது. சொந்தத் தொழிலிலும் முன்னேற்றம் இல்லை. வங்கியில் வாங்கிய கடனுக்காக அவரது சொத்துகளை ஏலம் விடும் அளவுக்குப் போனது. இதனால், அவரது மகன் தொழிலை ஏற்று நடத்தி வருகிறார். கட்சி நிகழ்ச்சிகளில் அவரை பார்ப்பதே அரிதாகிவிட்டது. தி.மு.க-வின் சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினராக இருக்கும் கே.சி.பழனிசாமி, தொழிலில் மட்டுமல்ல அரசியலிலும் கிட்டத்தட்ட துறவறம் பூண்ட நிலைக்கு வந்துவிட்டதாகக் கரூர் மாவட்ட உடன்பிறப்புகள் காதைக்கடிக்கிறார்கள்.

``அக்காவுக்குப் பதவி... அது கட்சிக்கே கெளரவம்!"

கனிமொழி
கனிமொழி

கொரோனா அச்சத்தால் மார்ச் 29-ம் தேதி நடக்கவிருந்த தி.மு.க பொதுக்குழு தள்ளிப்போய்விட்டது. அநேகமாக அது ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகுதான் இருக்கும் என்கிறார்கள். பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பெயர் உறுதியாகிவிட்டது. பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு பெயரை ஸ்டாலின் முடிவுசெய்துள்ளார் என்கிறார்கள். முதன்மைச் செயலாளர் பதவியை எடுக்கும்போது பாலு மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு அன்பில் மகேஷ் வகித்துவரும் இளைஞர் அணி துணைச்செயலாளர் பதவி வழங்கப்படும் என்று உறுதி கொடுத்தனர். ஆனால், அந்தப் பதவியை வழங்குவதில் சில சிக்கல் இப்போது எழுந்துள்ளதால் பாலுவை சமாதானம் செய்ய பொருளாளர் பதவியைக் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

அதேசமயம் மகளிர் அணியினர் தரப்பில், ‘முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பதவியை கனிமொழிக்குக் கொடுத்தால் அது கட்சிக்கே பெருமை சேர்க்கும்; பெண்களிடம் ஆதரவும் பெருகும்’ என்று தொடர் அழுத்தம் தரப்படுகிறதாம்!’

கொரோனா சிகிச்சை மையம் ஆன காய்கறி மார்க்கெட்!

கொரோனா சிகிச்சைக்காகச் சிறப்பு வார்டு திருச்சி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேறு மையம் ஒன்றை உருவாக்க முடிவு செய்தார்கள். எங்கெல்லாம் இடம் இருக்கிறது எனத் தேடிப் பார்த்தவர்கள் கண்களுக்குத் தென்பட்டது திருச்சி மணிகண்டம் அடுத்த கள்ளிக்குடியில் கட்டப்பட்டு, வணிகர்களின் எதிர்ப்பால் மூடிக்கிடந்த புதிய மார்க்கெட். இப்போது கொரோனா சிறப்புச் சிகிச்சை மையமாக அது மாற்றப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாக மூடிக் கிடந்த கட்டடத்தைக் கொரோனா வந்து திறந்து வைத்திருக்கிறது. திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பயணிகளில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் கள்ளிக்குடி மார்க்கெட்டில் உள்ள மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

போலீஸ் வேலை... இரண்டு பெண்களுக்கு வலை!

தமிழ்நாடு போலீஸ்
தமிழ்நாடு போலீஸ்

காவல் துறையில் இரண்டாம் நிலைக் காவலர் உள்ளிட்ட 8,888 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில், தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வெளியானது. ‘இதில் வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் தேர்வானார்கள். இவர்கள் வேலூரிலுள்ள ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள்’ எனச் சர்ச்சைகள் வெடித்தன. இந்தச் சர்ச்சைகளின் பின்னணியில் இரண்டு பெண்கள் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெண் தட்டச்சாளர், பெண் உதவி ஆய்வாளர் ஆகிய இருவரும்தான் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் தொடர்ந்து கோலோச்சி வந்துள்ளனர். இவர்கள் கட்டுப்பாட்டில்தான் தேர்வுகளுக்கான கேள்வித்தாள் கையாளப்பட்டதாம். குறிப்பாக ‘ஸ்டோன் ரூம்’ எனப்படும் கேள்வித்தாள்கள் வைக்கும் அறையின் சாவி தட்டச்சு பெண்மணியிடம்தான் இருந்திருக்கிறது. அவரது பயன்பாட்டுக்கு அரசு வாகனமும் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க வாகனம் வைத்திருக்கும் அளவிற்கு இந்தப் பெண் தட்டச்சாளரின் செல்வாக்கு பார்த்து விசாரணை அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். பெண் தட்டச்சாளரைக் காவலர் பயிற்சிப் பள்ளிக்கும் பெண் உதவி ஆய்வாளரை ஆவடி பட்டாலியனுக்கும் தூக்கி அடித்திருக்கிறார்கள். கடுப்பான இருவரும், தங்களுக்குள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகள் அரங்கேறுவதாக தவறான தகவல்களைப் பரப்பினார்களாம். இவர்கள் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்பதுதான் காக்கிகள் வாட்டாரத்தில் உலவும் தகவல்.

கேஸ்.. காஸ்.. பாஸ்புக்!

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வங்கிகளில் வைத்திருந்த சேமிப்பு மற்றும் வைப்புக் கணக்கை மூடும் போராட்டத்தைச் சில இஸ்லாமிய அமைப்புகள் கையில் எடுத்தன. இதனால், பல இடங்களில் வங்கிக் கணக்கை முஸ்லிம்கள் பலரும் மூடி வருகின்றனர். இப்படி மூடப்படும் பாஸ்புக் கணக்குகளில்தான் காஸ் மானியமும் இணைக்கப்பட்டிருந்தது. கணக்கு மூடப்பட்டால் இனி இவர்களுக்கு காஸ் மானியம் கிடைப்பது தடைபடும். இதனால், அப்பாவி இஸ்லாமியக் குடும்பங்கள்தான் பாதிப்பைச் சந்திக்கும். இதற்கு மாற்று ஏற்பாடு என்ன என்று போராட்டக் குழு தலைவர்களைப் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

கடுகடு ரஜினி; கொதித்த தளவாய்; உற்சாக தம்பிதுரை; உறுமிய சூரப்புலி! - கழுகார் அப்டேட்ஸ்!

அமைச்சருக்கு வந்தால் ரத்தம்... ஆசிரியர்களுக்கு வந்தால் தக்காளிச்சட்டினியா?

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் பூர்வீக வீடு இருக்கிறது. அந்தத் தோட்டத்து வீட்டின் வாசலில், ‘முக்கிய அறிவிப்பு... தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு மார்ச் 31-ம் தேதி வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களை கோபிசெட்டிபாளைத்திலும் சென்னையிலும் சந்திக்க வருவதை தவிர்த்து பொதுமக்கள் மற்றும் கழக உடன் பிறப்புகள் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுகிறோம்’ என்ற வாசகங்கள் அடங்கிய அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

இந்தத் தகவல், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தன்னுடைய வீட்டுக்கே யாரையும் வரவேண்டாமென்று சொல்லும் அமைச்சர், தன் துறையிலுள்ள ஆசிரியர்களை மட்டும் மாணவர்களே இல்லாத சூழ்நிலையில் பள்ளிக்குக் கட்டாயமாகப் போக வேண்டுமென்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதில் இன்னொரு பிரச்னை, தமிழகத்தில் கிராமப்புறங்களில் பள்ளிக் கல்வித்துறைக்குச் சொந்தமாக ஈராசிரியர் பள்ளிகள் நிறைய உள்ளன. பெரும்பாலான பள்ளிகளில் ஓர் ஆண் ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியர்தான் இருக்கும் நிலையில், மாணவர்களே இல்லாத பள்ளியில் காலை முதல் மாலை வரை இருவர் மட்டும் இருப்பதில் உள்ள பல்வேறு சிக்கல்களும் இருக்கின்றன. இவற்றைப்பற்றியும் பல தகவல்கள் பகிரப்படுகின்றன. மார்ச் 31 வரையிலும் இவர்களுக்கும் விடுமுறை விட வேண்டுமென்று கேட்டும் அமைச்சர் ஓகே சொல்லவில்லையாம். ஆசிரியர்களை மறுபடியும் அ.தி.மு.க அரசு பழி வாங்குவதாக ஓங்கிக் குரல் ஒலிக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு