Published:Updated:

`ஐடியா' பிரஷாந்த் கிஷோர், `ஐ யம் வெயிட்டிங்' தங்க தமிழ்ச்செல்வன் - கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்!

வாட்ஸ்அப் மெசேஜில் வந்து ஹாய் சொன்ன கழுகார், பிட்டு பிட்டாகச் செய்திகளைத் தட்டிவிட ஆரம்பித்தார்.

ஐ.ஏ.எஸ்-களுக்குக் கட்டையைப் போடும் அதிகாரிகள்!

தி.மு.க மற்றும் சசிகலா குடும்பத்தின் ஆதரவு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலரும் ஒரு காலத்தில் 'ஓஹோ' பதவிகளில் இருந்தார்கள். கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக டம்மிப் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். முக்கியமான அமைச்சர்களுக்கு வேண்டிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், எந்தத் திறமையும் நேர்மையும் இல்லாவிட்டாலும், நல்ல பதவிகளில் தொடர்ந்து இருக்கின்றனர். இதனால் ஏராளமான நல்ல அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிறப்பாகச் செயல்படும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலரை முக்கியமான துறைக்கு மாற்ற ஆளுங்கட்சி மேலிடம் விரும்பினாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளே வேண்டாம் என்கிறார்களாம்.

அடுத்த ஆண்டு தேர்தல் வரும் சூழலில், இப்போது மாற்றப்பட்டால் ஆட்சி மாறியதும் பிரச்னை ஏற்படலாம் என்று கருதி, அடுத்த ஆண்டில் மாறுதல் வாங்கி, ஐந்தாண்டுகள் வண்டி ஓட்டலாம் என்று கணக்குப் போடுகிறார்களாம்.

கணக்கு தப்பாப்போச்சு!

`யெஸ் வங்கி’ திவாலானதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாத வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய நகராட்சி நிர்வாகத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதன்படி, நகராட்சி மற்றும் மாநகராட்சியின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாத வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு கூறப்பட்டுள்ளது.

யெஸ் பேங்க்
யெஸ் பேங்க்

இந்தத் தொகையைத் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுமாறும் கூறப்பட்டுள்ளது. கமிஷனுக்காக ஆசைப்பட்டு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் பணத்தை அனுமதி பெறாத வங்கிகளில் முதலீடு செய்த அதிகாரிகள் தற்போது திருடனுக்குத் தேள் கொட்டியதைப்போலத் தடுமாறுகிறார்கள்.

இப்படி அனுமதி பெறாத வங்கிகளில் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் அரசின் பணம் முடங்கியிருப்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரப்போகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனியே... தன்னந்தனியே!

பிரஷாந்த் கிஷோர், ஸ்டாலின்
பிரஷாந்த் கிஷோர், ஸ்டாலின்

தி.மு.க-வின் தேர்தல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரஷாந்த் கிஷோர் புதுப்புது ஐடியாக்களால் சீனியர் நிர்வாகிகளைத் திணறடிக்கிறார்.

‘நமக்கு கூட்டணி தேவையில்லை. தனித்துப் போட்டியிட்டாலே 200 தொகுதிகளைப் பெற்றுவிட முடியும். தி.மு.க-வுடன் யாரும் கூட்டணி அமைக்க விரும்பினால்கூட, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச் சொல்லுவோம்!’
என மு.க.ஸ்டாலினுக்கு ஐடியா கொடுத்தாராம் பிரஷாந்த் கிஷோர்.
`தம்பி... இவரு பேச்சைக் கேட்டு கூட்டணிக் கட்சியை விரட்டிவிட்டா, நாம கடைசி வரைக்கும் எதிர்க்கட்சிதான்’ என துரைமுருகன் உதடுகள் பிதுக்க, தளபதி குழப்பத்தில் இருப்பதாக அறிவாலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜ்யசபா... நெல்லை... தொல்லை!

ஜெயலலிதா இருந்தபோது திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து மனோஜ் பாண்டியன், முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், தூத்துக்குடியிலிருந்து சசிகலா புஷ்பா ஆகியோர் ராஜ்யசபா எம்.பி-கள் ஆனார்கள். ஆனால், இந்த முறை தென் மாவட்டங்களிலிருந்து ஒருவருக்கும் ராஜ்யசபா வாய்ப்பு தரப்படவில்லை. சொந்த மாவட்டத்தில் தனி அணிகளை உருவாக்கி கட்சியைப் பலவீனப்படுத்திவிட்டதாக உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் காரணமாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சீட் தரப்படவில்லையாம். அதோடு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கட்சி முடிவு செய்திருக்கிறதாம்.

சுரேஷ்ராஜனை அடக்குமா அறிவாலயம்?

முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளருமான சுரேஷ்ராஜன் பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்வதாகப் புகார்கள் வாசிக்கப்பட்டு வருகின்றன.

நாகர்கோவிலில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகர துணைச் செயலாளர் சீதா முருகனிடம் ‘‘சி.ஏ.ஏ-வுக்கு எதிராகக் கையெழுத்து வாங்க தலைமை சொல்லியிருந்தது. உங்கள் பகுதிகளில் கையெழுத்து வாங்கி அனுப்பவில்லை. நாங்கள்தான் எல்லா வேலையும் பார்க்க வேண்டியிருக்கு’’ எனச் சத்தம் போட்டிருக்கிறார்.

‘‘கையெழுத்து வாங்கி தலைமைக்கு அனுப்பிவிட்டேன்’’ எனச் சொல்லி சில பேப்பர்களைக் காட்டியிருக்கிறார் சீதா முருகன். அந்த பேப்பர்களை சுரேஷ் ராஜன் கிழித்தெறிந்துவிட்டராம். ‘‘உங்க செயல்பாடு சரியில்லை. மாநகராட்சி கவுன்சிலர் சீட் உங்களுக்குக் கிடையாது’’ எனச் சொல்லி கடுமையான வார்த்தைகளைப் பிரயோகம் செய்தாராம் சுரேஷ்ராஜன். பதிலுக்குச் சீதா முருகனும் வார்த்தைகளை விட்டிருக்கிறார். பக்கத்தில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

தி.மு.க. சுரேஷ்ராஜன்
தி.மு.க. சுரேஷ்ராஜன்

இதற்கு முன்பு ஒரு போராட்டத்தின்போது எஸ்.ஐ-யான முத்துமாரியும், சுரேஷ் ராஜனும் நடுரோட்டில் மாறி மாறி திட்டிக்கொண்டனர். கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் கூட்டுறவுச் சங்க பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று அதிகாரியைத் திட்டிய சம்பவமும் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இப்படி, சுரேஷ் ராஜனின் செயல்கள் முகம் சுளிக்க வைக்கின்றன என அறிவாலயத்துக்குப் புகார்கள் போயிருக்கின்றன.

காத்திருக்கும் தங்க தமிழ்ச்செல்வன்!

தங்க தமிழ்ச்செல்வன்
தங்க தமிழ்ச்செல்வன்

அ.ம.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்குத் தாவிய தங்க தமிழ்ச்செல்வனுக்குக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் அரசியல் செய்ய மாவட்டச் செயலாளர் பதவியைத் தங்க தமிழ்ச்செல்வன் விரும்பினார். ஆனாலும் அவரின் எண்ணம் ஈடேறவில்லை. இப்போது தேனி மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக இருக்கும் கம்பம் ராமகிருஷ்ணனுக்கு, பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

‘‘ஐந்து மாதங்களுக்கு முன்பு, தங்க தமிழ்ச்செல்வனை, மாவட்டச் செயலாளராக்குவது தொடர்பாகத் தீவிரமாகக் காய்கள் நகர்த்தப்பட்டன. ஆனால், சில கோஷ்டிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் கட்டுப்பாட்டில்தான் தேனி மாவட்ட தி.மு.க இருக்கிறது. அவர், தங்க தமிழ்ச்செல்வனை மாவட்டச் செயலாளராக்க விரும்புவாரா என்பது தெரியவில்லை’’ என்கிறார்கள் தி.மு.க பிரமுகர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு