Published:Updated:

துரைமுருகனும் `பதவி' லாஜிக்கும்; `டெல்லி அரசியல்' கனிமொழி; `அப்செட்' பன்னீர்... கழுகார் அப்டேட்ஸ்!

டிஜிட்டல் கழுகார்
டிஜிட்டல் கழுகார்

துரைமுருகனுக்கு ஏன் பதவி கிடைக்கவில்லை? சென்னையின் ‘வெள்ளை வேன்’... பதறும் ரெளடிகள்! - டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்.

‘காவல்துறையில் விரைவில் அதிரடி இடமாற்றங்கள் வரும் என்று டிஜிட்டல் கழுகார் கடந்த ஜூன் 30-ம் தேதி சொல்லிய சில மணி நேரங்களிலேயே அரசிடம் இருந்து அந்த உத்தரவு வெளியானது. அதேபோல சென்னை மாநகராட்சியில் பி.ஆர்.ஓ பதவியில் இருக்கும் உமாபதி பதவி நீட்டிப்பு கேட்கிறார் என்ற தகவலையும் சொல்லியிருந்தீர்கள். சொன்னதுபோலவே அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுத்துவிட்டார்கள். தகவல்களை முந்தித்தரும் கழுகாருக்கு வாழ்த்துகள்!’ என்ற தகவலை கழுகாரின் வாட்ஸப்புக்கு அனுப்பினோம். உடனடியாக ‘நன்றி’ என்ற ரிப்ளையுடன் வந்துவிழுந்தன தகவல்கள்.

சென்னை போலீஸ் கமிஷனர் பதவி... ரகசியமாகக் காய்நகர்த்திய தலைமை!

முதலில் ஃபாலோ அப் தகவல்களைச் சொல்லிவிடுகிறேன். சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் பதவியிலிருந்து விஸ்வநாதன் விடுவிக்கப்பட்டு, அந்தப் பதவிக்கு ஜெயந்த் முரளி அல்லது தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லியிருந்தேன். சொன்னதுபோல விஸ்வநாதன் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், புதிய போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். எனது சோர்ஸ்களையும் தாண்டி வெகு ரகசியமாகக் காய்நகர்த்தியிருக்கிறது காவல்துறை தலைமை. அதனால்தான், கொஞ்சம் மிஸ் ஆகிவிட்டது... வெரி சாரி!

சாத்தான்குள சம்பவத்தில் காய் நகர்த்தும் பா.ஜ.க, எல்.முருகனை ஏன் சந்திக்கவில்லை எடப்பாடி? - கழுகார் அப்டேட்ஸ்

பி.ஆர்.ஓ-விடம் ஆசி வாங்கும் ஒப்பந்ததாரர்கள்!

இன்னொரு விஷயம்... உமாபதிக்கு பதவி நீட்டிப்பு கொடுத்ததில் மாநகராட்சியின் முக்கிய அதிகாரிகள் பலரும் அப்செட் என்கிறார்கள். ‘இதெல்லாம் கொஞ்சம்கூட நியாயம் இல்லை’ என்று அமைச்சர் தரப்பில் அவர்கள் முறையிட... ‘இந்த விஷயம் எங்க மூலமா நடக்கலை... துறை இயக்குநர் கிட்ட போய் கேளுங்க’ என்று தகவல் சொல்லப்பட்டதாம். இதற்கிடையே ‘பாட்ஷா’ படத்தில் நடிகர் ரஜினியிடம் ஆசிர்வாதம் வாங்குவதுபோல ஒப்பந்ததாரர்கள் பலரும் கூட்டமாக உமாபதியை நேரடியாக சந்தித்து ஆசி பெற்று வருகிறார்களாம். ‘கொரோனா’ ஜாக்கிரதை!

துரைமுருகனுக்கு ஏன் கிடைக்கவில்லை பதவி? ரகசியம் உடைக்கும் உடன்பிறப்புகள்!

ஸ்டாலின், துரைமுருகன்
ஸ்டாலின், துரைமுருகன்

கொரோனா ஊரடங்கால் ஏலகிரி மலையில் உள்ள சொகுசு பங்களாவில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார் தி.மு.க-வின் மூத்த தலைவர் துரைமுருகன். ஜூலை 1-ம் தேதி அவருக்கு 82-வது பிறந்தநாள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகத் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய துரைமுருகனை போனில் அழைத்து வாழ்த்தினாராம் கட்சித் தலைவர் ஸ்டாலின். அப்போது, ‘பொதுச் செயலாளர்’ பதவி குறித்து ஏதேனும் சொல்வார் என்று துரைமுருகனின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், ஸ்டாலின் அப்படி எதுவும் சொல்லவில்லையாம்.

இதற்கிடையே உடன்பிறப்புகள் சிலர் துரைமுருகனுக்கு இதுநாள் வரை பொதுச் செயலாளர் பதவி கிடைக்காததன் ரகசியத்தை உடைத்துள்ளார்கள். அவர்கள் கூறுகையில், “தி.மு.க-வில் பொதுச் செயலாளர் பதவிக்கு இதுவரை ‘முதலியார்’ சமூகத்தினர்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் எனக் கடந்த கால பொதுச் செயலாளர்கள் அனைவருமே முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரைதான் நியமிப்பார்கள். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வி.பி.துரைசாமியை நீக்கிவிட்டு அதே சமூகத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜை துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு நியமித்ததும் அப்படிதான். அப்படி இருக்கும்போது வன்னியரான துரைமுருகனுக்கு பொதுச் செயலாளர் பொறுப்பை எப்படிக் கொடுப்பார்கள்?” என்று கொளுத்திப்போட்டிருக்கிறார்கள்.

இதுநாள் வரை இப்படி ஒரு கணக்கை கனவிலும் எதிர்பார்க்காத துரைமுருகன் தரப்பு கடும் அப்செட் என்கிறார்கள். இந்தக் கணக்கைத் தொடர்ந்து முதலியார் சமூகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி மற்றும் சிலர் உற்சாகமாம். ஆனால், “சீனியாரிட்டியை மீற விட மாட்டேன். அதற்காக எந்தளவுக்கும் செல்வேன்” என்று வேலூரிலிருந்து போர் குரல் ஒலிக்கிறதாம்.

டெல்லி அரசியலுக்கு கனிமொழி... கட்சித் தலைமை அதிரடி!

கனிமொழி
கனிமொழி

கட்சியில் சில காலங்களாக வருத்தத்தில் இருந்த கனிமொழியை கூல் செய்ய நினைக்கிறதாம் ஸ்டாலின் தரப்பு. சாத்தான்குளம் விவகாரத்தில் வட இந்திய ஊடகங்களைப் பேச வைத்ததில் கனிமொழியின் பங்கு அதிகம் என்று ஸ்டாலினிடம் சிலர் தகவல் சொல்லியிருக்கிறார்கள். அதனால், இனிமேல் டெல்லி உள்ளிட்ட வடமாநில அரசியல் தலைவர்களிடம் பேச கனிமொழியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கட்சித் தலைமை முடிவு எடுத்திருக்கிறது என்கிறார்கள். இதனால், இதுநாள் வரை டெல்லியில் லாபி செய்துவந்த டி.ஆர்.பாலு உள்ளிட்ட தரப்பினர் அப்செட் என்கிறார்கள்.

சென்னையின் வெள்ளை வேன்! பதறும் ரெளடிகள்

இலங்கையின் வெள்ளை வேன் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஈழப்போருக்கு முந்தைய காலங்களிலும், போர் சமயங்களிலும் தற்போதும்கூட அங்கே வெள்ளை நிற வேனைக் கண்டாலே அலற ஆரம்பித்துவிடுவார்கள். அரசாங்கத்துக்குப் பிடிக்காத நபர்களை அதில் அள்ளிச் சென்றுவிடுவார்கள். பிறகு அவர்களின் நிலை அதோகதிதான். சென்னையின் வெள்ளை வேன் கதை வேறுமாதிரியானது.

காவல்துறை
காவல்துறை
மாதிரி புகைப்படம்

சமீப மாதங்களாக சென்னை பெரும்பாக்கம் சுற்றுவட்டாரங்களில் காவல்துறையின் வெள்ளை வேன்கள் சுற்றிவருகின்றன. சங்கிலிப் பறிப்பு கொள்ளையர்கள், குடித்துவிட்டு சாலைகளில் தகராறு செய்பவர்கள், ரெளடிகள் என சமூகவிரோதிகளைக் கட்டுப்படுத்தவே வெள்ளை வேன் திட்டம் என்கிறார்கள். பொது இடங்களில் சலம்பும் ஆட்கள் சிக்கினால், வெள்ளை வேனுக்குள் இழுத்துப்போட்டு, சிறிது தூரம் ஊரை வலம்வருகிறார்கள். அதற்குள் அந்த நபரை முறைப்படி ‘கவனித்து’விடுகிறார்களாம். வழக்குப்பதிவு எல்லாம் எதுவும் கிடையாது. அரை மணி நேரம் கழித்து மறுபடியும் வேனிலிருந்து இறக்கிவிடும்போது நடக்க முடியாமல் தவழ்ந்துச் செல்லும் அந்த நபர், மீண்டும் சில காலம் குற்றச்செயல்களில் ஈடுபடுவதே இல்லையாம். அதேசமயம் இப்படிச் செய்வது மனித உரிமை மீறல் மட்டுமல்ல... சட்டவிரோத செயலும்கூட. இதைச் செய்யும் காவலர்கள் மற்றும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்!

சாத்தான்குளம் விவகாரம்... விசாரணை செய்ய மறுத்த அதிகாரி!

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

சாத்தான்குளம் லாக்அப் கொலைகள் விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தும்படி மனித உரிமை ஆணையத்தின் சேர்மன் (பொறுப்பு), அதே ஆணையத்தில் தலைமை விசாரணை அதிகாரியாக இருக்கும் உயர் போலீஸ் அதிகாரியிடம் சொன்னாராம். ஆனால், அந்த அதிகாரி தரப்பிலோ, ‘வாகன வசதியில்லை... ஆட்களும் இல்லை. எப்படி செய்வதாம் விசாரணையை?’ என்று சிலபல காரணங்களைக் கூறி நழுவிவிட்டார் என்கிறார்கள். இதனால், கடுப்பான சேர்மன் தரப்பு, விஷயத்தை மேலிடத்துக்கு கொண்டுச் சென்றது. அதன் பின்னரே அந்த உயரதிகாரியை பொறுப்பிலிருந்து விடுவித்துவிட்டு, தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் சேர்மனாக இருந்த சுனில்குமாரை மனித உரிமைகள் ஆணையத்தின் டி.ஜி.பி-யாக நியமித்தார்களாம்.

எட்டாயிரம் காவலர்களுக்கு பயிற்சி... `ஏழரை’யைக் கூட்டும் தமிழக அரசு!

கொரோனா பரவல் காலகட்டத்தில் எந்தப் பயிற்சிகளும் நடத்த வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சொல்லியிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் 8,000 காவலர்களுக்கான பயிற்சியை இரண்டு மாதம் முன்பிருந்து தமிழக போலீஸ் தரப்பில் ஆரம்பித்து நடத்திவருகிறார்களாம். எட்டு மாதங்கள் பயிற்சிகள் நடக்குமாம். தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் 25 சென்டர்களில் இந்த பயிற்சிகள் நடந்து வருகிறதாம். ‘இந்த நேரத்தில் இது தேவையா?’ என்று காவல்துறையில் பலரும் நொந்துகொள்கிறார்கள்.

அமைச்சர் ஆர்.காமராஜ்
அமைச்சர் ஆர்.காமராஜ்

டாக்டர் பணியை ராஜினாமா செய்தார்களா உணவுத்துறை அமைச்சரின் மகன், மருமகள்?

உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், சென்னையின் சில பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியை மேற்பார்வை செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அவரின் மகன், மருமகள் இருவரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரிந்துவந்தனர். கொரோனா ஆரம்பித்த உடனேயே, இருவரும் விடுப்பில் சென்றுவிட்டனர். இந்த விஷயத்தை அ.ம.மு.க-வினர் பிரச்னையாக கிளப்ப, மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. தொடர்ந்து இருவரும் அவர்களது அரசுப் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அமைச்சர் தரப்பில் இதைக் கேட்டால் மெளனம் சாதிக்கிறார்களாம். இதுதான் மருத்துவ தர்மமா என்று கேட்கிறார்கள் அவர்களுடன் பணிபுரிந்த சக மருத்துவர்கள்!

அ.தி.மு.க ஆலோசனைக்கூட்டம் கேன்சல்!

அ.தி.மு.க-வில் மூன்று முறை ஆலோசனைக் கூட்டம் என்று அறிவித்து, தள்ளிப் போயுள்ளது. எம்.எல்.ஏ-க்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் தற்போது கூட்டம் போடாமலேயே நியமனங்களைத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதிகபட்சம் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்கப்போகிறார்கள். புதியவர்களுக்கு வாய்ப்புகள் வரலாம். செயல்படாத பழையவர்களுக்கு பதவி பறிபோகலாம் என்கிறார்கள்.

மதுரை கமிஷனர் நியமனம்... அதிருப்தியில் வக்கீல்கள்!

2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரேம் ஆன்ந்த் சின்ஹா, சென்னை பூக்கடை ஏரியா துணை ஆணையராக இருந்தார். அப்போதுதான், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே பெரும் கலவரம் ஏற்பட்டது. அந்த விவகாரத்தில் வழக்கறிஞர்களால் சுட்டிக்காட்டப்பட்ட நான்கு அதிகாரிகள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி உயர் நீதிமன்றம் கூறியது. அதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த நான்கு அதிகாரிகளில் ஒருவர்தான் பிரேம் ஆனந்த் சின்ஹா. இவரைதான் தற்போது மதுரை கமிஷனராக நியமித்துள்ளனர் என்று வக்கீல்கள் தரப்பில் அதிருப்தியாக முணுமுணுக்க ஆரம்பித்துள்ளார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் - ஓ.ராஜா
ஓ.பன்னீர்செல்வம் - ஓ.ராஜா

ராஜாவுக்கு கொரோனா... பன்னீர் அப்செட்!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியும் தேனி ஆவின் தலைவருமான ஓ.ராஜாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மதுரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடனடியாக அவர் குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு, ஓ.ராஜா மனைவி, அவரது உறவினர் இருவர் என மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களும் மதுரை அப்போலோவுக்கு அனுப்பப்பட்டனர். ஓ.ராஜா உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் இதுவரை நான்கு முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். ஓ.ராஜா ஐந்தாவது முறை பரிசோதித்தபோதுதான் பாசிட்டிவ் வந்துள்ளது. இதனால், ஓ.பி.எஸ் மிகவும் அப்செட் என்கிறார்கள். ‘சொந்த குடும்பத்தைக்கூட அவரால பாதுகாக்க முடியாதா?’ என்று மக்கள் கேள்வி எழுப்புவார்களே என்பதுதான் அவரது கவலையாம்.

நீலகிரியில் டிரான்ஸ்பருக்கு கலெக்‌ஷன்... கல்தா கொடுத்த அ.தி.மு.க புள்ளி!

நீலகிரி மாவட்டத்தில் சமீபத்தில் வனக்காவலர், வனவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு பணி நியமனங்கள் நடைபெற்றன. இதில் பெரும்பாலானோர் சமவெளி பகுதிகளைச் சேர்ந்தவர்கள். வழக்கமாக குளிர்பிரதேசமான ஊட்டிக்கு அரசுப்பணிக்காக வரும் ஊழியர்கள், சில மாதங்களில் பணிமாறுதல் பெற்று சொந்த ஊருக்கு திரும்பிவிடுவார்கள். அதேபோல சமீபத்தில் பணியில் சேர்ந்தவர்களும் சொந்த ஊர்களுக்கு பணியிட மாறுதல் பெற‌ முயற்சி செய்து வந்தனர். இதற்காக மாவட்டத்தில் உள்ள ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவரிடம் 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை வழங்கியுள்ளனர். அந்த பிரமுகரோ பலரிடமும் பணத்தை வசூலித்து, ‘அமைச்சருக்கு எல்லாம் கொடுத்தாச்சு’ என மீண்டும் பணம் கேட்டுள்ளார். பணி மாறுதல் கிடைத்தால் போதும் என‌ மீண்டும் பணத்தைக் கொடுத்துள்ளனர். ஆனால், நான்கு மாதங்களாக எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது பணம் கொடுத்தவர்கள் அமைச்சரிடமே புகார் கொடுக்க கிளம்பியிருக்கிறார்கள்.

நீலகிரி
நீலகிரி

அஞ்சு பர்சன்ட் கமிஷன்... கோவை அதிகாரி ஓப்பன் டாக்!

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் உயர் அதிகாரி ஒருவர், ஒப்பந்ததாரர்களுடன் சமீபத்தில் ஒரு மீட்டிங் நடத்தியுள்ளார். அதில், “எங்களுக்கும் நிறைய செலவு இருக்கு. முதல்வர், கலெக்டர் வர்றப்ப எல்லாம் நாங்கதான் எல்லாம் பண்ணணும். அதனால, எல்லாரும் அஞ்சு பர்சன்ட் கமிஷன் கொடுக்கணும். அப்பதான் உங்க பேமென்ட் எல்லாம் சரியா கிடைக்கும்” என்று ஓப்பனாகப் பேசியுள்ளார். “இருக்கிற செலவு பத்தாதுனு இது வேறயா’ என புலம்பிக்கொண்டே கலைந்திருக்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள்!

அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு... ரகசியம் காக்கும் பா.ஜ.க!

அ.தி.மு.க - அ.ம.மு.க இரண்டு கட்சிகளையும் ஒன்றிணைத்தால் மட்டுமே தி.மு.க-வுக்கு செக் வைக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறதாம் பா.ஜ.க. அதனால் சசிகலா விடுதலையாகும்போது சில திரைமறைவு காய்நகர்த்தல்களை செய்ய தயாராக சில திட்டங்கள் பரம ரகசியமாக வைத்திருக்கிறதாம் டெல்லி மேலிடம். “அ.தி.மு.க - அ.ம.மு.க ஒன்றிணைந்தால் நாங்கள் தலையிட மாட்டோம்" என முரளிதர ராவ் சொன்னது இந்த அர்த்தத்தில்தான் என்கிறது பா.ஜ.க வட்டாரம்!

பன்னீர், தினகரன், எடப்பாடி
பன்னீர், தினகரன், எடப்பாடி

நாங்குநேரியில் தொழிற்சாலை, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்... சரிவை சரிக்கட்ட ஆளுங்கட்சி திட்டம்!

சாத்தான்குளம் விவகாரத்தால் தென்மாவட்டங்களில் அ.தி.மு.க-வுக்கு சரிவு ஏற்பட்டிருப்பதை கட்சித் தலைமை கவலையுடன் பார்க்கிறதாம். இதைச் சரிகட்டும் விதமாக சில ஐடியாக்களை சீனியர்கள் சிலர் முதல்வரிடம் கூறியுள்ளனர். ‘நாங்குநேரி சிப்காட்டில் ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்காக இஸ்ரோ 1,500 ஏக்கர் நிலம் கேட்டுள்ளது. இதை உடனடியாக ஓகே செய்தால், தென்மாவட்டங்களில் தொழில்வளர்ச்சியை கொண்டுவந்ததாக கூறிக் கொள்ளலாம். அதேபோல, ஸ்டெர்லைட் நிறுவனத்தையும் மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் தொழில்வளர்ச்சிக்கு ஆதரவானவர்கள், எதிரானவர்கள் என மக்களிடையே பிரிவினை உண்டாகும். இதை நமக்கு லாபமாக திருப்பிக் கொள்ளலாம்’ என முதல்வருக்கு ஆலோசனை அளித்துள்ளனர் சீனியர்கள். ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறாராம் முதல்வர்.

வேலுமணி 2.O திட்டம்!

வேலுமணி
வேலுமணி

டிக்டாக், ஹலோ ஆப் உட்பட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்ததை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வரவேற்றுள்ளார். இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி புதிய செயலிகளை உருவாக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி, கோவையிலுள்ள சில சாஃப்ட்வேர் நிறுவனங்களிடம் பேசியுள்ள அமைச்சர் வேலுமணி, தமிழகத்தில் புதிய செயலிகளை உருவாக்குவதற்கு கட்டமைப்பு இருப்பதாகவும் தேவைப்படும் எந்த உதவியையும் அரசு செய்துதரத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளாராம். இதன்மூலம் சில ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியே.

அடுத்த கட்டுரைக்கு