Published:Updated:

`நோ டைம்' எடப்பாடி, அறிவாலய ராஜ்ய `சபா' கச்சேரி, `ஸ்டன்ட்' செந்தில் பாலாஜி - கழுகார் அப்டேட்ஸ்!

கழுகு @ மொபைல்
கழுகு @ மொபைல்

`நோ டைம்' எடப்பாடி, அறிவாலய ராஜ்ய 'சபா' கச்சேரி, தமிழகத்துக்கு ஐஎஸ்ஐஎஸ் அலர்ட், ராஜவர்மன் vs ராஜேந்திர பாலாஜி, 'ஸ்டன்ட்' செந்தில் பாலாஜி... வாட்ஸப்பில் வரிசையாக வந்துவிழுந்தன தகவல்கள். அத்தனையும் கழுகார் அனுப்பியவை...

போதகருக்கு நேரம் இல்லை!

கிறிஸ்தவ மதத்தின் பிரபலமான போதகர் ஒருவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அந்த போதகர் மீது பி.ஜே.பி தரப்பு கடும் அதிருப்தியில் இருக்கிறது. இந்தச் சூழலில், அவரைச் சந்தித்தால் தேவையில்லாத பிரச்னைகள் வரலாம் என்கிற தயக்கத்தில் முதல்வர் நேரம் கொடுக்கவில்லையாம்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
‘ராஜ்யசபாவில் கிறிஸ்தவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்’ என்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கவே அந்த போதகர் முயற்சிசெய்துள்ளார் என்ற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.

எம்.பி ஆவாரா இளங்கோ?

ஆட்சிக் காலத்துக்குப் பிறகு, தேவையான விஷயங்களைப் பெறுவதற்கு வசதியாக தனக்கு வேண்டப்பட்ட ஒருவர் ராஜ்யசபாவில் இருக்க வேண்டும் என கணக்குப் போடுகிறாராம் முதல்வர் எடப்பாடி.

தனக்கு நெருக்கமான சேலம் மத்திய கூட்டுறவு சங்கத் தலைவரும், மாநில கூட்டுறவு சங்கங்களின் தலைவராகவும் இருக்கும் இளங்கோவனை ராஜ்யசபா வேட்பாளர் ஆக்க மும்முரமாகக் காய்நகர்த்தி வருகிறாராம் எடப்பாடி. ஆனால், கூட்டுறவு வங்கிகள் விவகாரத்தில் ஏகத்துக்கும் சிக்கியவர் என்று கட்சியின் எதிர் முகாம் அவரைப் பற்றி புகார் வாசிக்கிறதாம்.

மிஸ்டர் கழுகு: ராஜ்ய சபா சீட் யார் யாருக்கு?

அறிவாலயத்தில் ராஜ்ய ‘சபா’ கச்சேரி!

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

ராஜ்யசபா தேர்தலில் நான்காவது முறையாக திருச்சி சிவாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதால், தி.மு.க-வுக்குள் அதிருப்தியாம். ஏற்கெனவே, முதலியார் சமூகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி ராஜ்யசபா எம்.பி-யாக இருக்கும்போது, அதே சமூகத்தைச் சேர்ந்த என்.ஆர்.இளங்கோவுக்கு வாய்ப்பு தந்தது ஏன் எனவும் இன்னொரு பக்கம் விவாதம் நடக்கிறது. பட்டியலினத்தைச் சேர்ந்த ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்ட பலர் எதிர்பார்த்திருக்க... அந்தியூர் செல்வராஜுக்கு ஜாக்பாட் அடித்தது. ‘நாடார் சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கவில்லை’ என சென்னை மாநகரில் சுவரொட்டிகள் ஒட்டி அதிருப்தியை வெளிக்காட்டினர். ஆனால், அறிவாலயம் எதற்கும் கவலைப்படவில்லை.

ஐஎஸ்ஐஎஸ்... அலர்ட்!

இந்தியாவில் காலூன்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் முயல்வதாக மத்திய உளவுத்துறை மாநில அரசுகளை எச்சரித்திருக்கிறது.

‘வாய்ஸ் ஆப் ஹிந்த்’ என்று பெயரிடப்பட்ட பிரத்யேகப் புத்தகம் உலா வருகிறது. இதை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் வெளியிட்டிருப்பதாகவும், ‘கலிஃபாக்களின் ஆட்சியை இந்தியாவில் நிறுவ அனைவரும் ஒன்றுகூட வேண்டும்’ எனவும் அதில் அறைகூவல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய உளவுத்துறை சார்பில் தகவல் பரப்பப்படுகிறது.

ஏற்கெனவே, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள், நிதி திரட்டுவது தமிழகத்தில் நடைபெற்றுவரும் நிலையில், தமிழக அரசை மத்திய அரசு அலர்ட் செய்திருக்கிறது. கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மீது க்யூ பிரிவு, கண்காணிப்பைக் குவித்திருக்கிறதாம்.

ராஜவர்மனுக்கு ராஜமரியாதை!

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
ஆர்.எம்.முத்துராஜ்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சொந்த மாவட்டமான விருதுநகரில் மருத்துவக் கல்லூரி அமைக்க நடந்த அடிக்கல் நாட்டு விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். விழாவில் ராஜேந்திர பாலாஜியைவிட, ராஜவர்மன் பெயரைச் சொன்னபோது கைதட்டல் அதிகமாகக் கேட்டது. ராஜேந்திர பாலாஜியின் நிழல்போல வலம்வரும் ராஜவர்மன், சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் வென்றவர். விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க-வில் சாதி ரீதியிலான கோஷ்டி அரசியல் அதிகரித்துவருகிறது. அதன் வெளிப்பாடாக, “ராஜேந்திர பாலாஜியை மாற்றுங்கள்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மனுக்களைத் தட்டிவிட்டபடியே இருக்கின்றனர் முக்குலத்தோர் அமைப்பினர். இப்படியான நிலையில்தான், முக்குலத்தோரான ராஜவர்மனுக்கு கிடைக்கும் வரவேற்பு புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது.

மாவட்டச் செயலாளர் பதவி!?
இதனால் ராஜேந்திர பாலாஜியிடம் இருக்கும் மாவட்டச் செயலாளர் பதவி எந்த நேரமும் கைமாறலாம் எனப் பேச்சு அடிபடுகிறது.

செந்தில் பாலாஜியின் ஸ்டன்டு!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அ.ம.மு.க-வில் இருந்து தி.மு.க -வுக்கு வந்த செந்தில் பாலாஜி, களமிறங்கி வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.ம.மு.க வேட்பாளர் பி.ஹெச்.ஷாகுல் ஹமீது, ஏழாயிரத்துச் சொச்சம் ஓட்டுகளே வாங்கினார். இப்போது அவரை தி.மு.க-வுக்கு வளைத்து டி.டி.வி.தினகரனுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி.

“தன் மீதான வழக்கு வேகமெடுத்திருக்கும் சூழலில், தன்னை நிலைநிறுத்திக்கொள்ள செந்தில் பாலாஜி எடுக்கும் ஸ்டன்ட் இது!”
என்கின்றனர் கரூர் அ.தி.மு.க-வினர்.
எடப்பாடி `சீட்' கணக்கு, வண்ணாரப்பேட்டை `அலர்ட்', அஜித் தோவல் & அமித் ஷா கேம்... கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்!
அடுத்த கட்டுரைக்கு