Published:Updated:

களத்துக்கு வராத கருணாஸ்; `பலே திட்டம்' ராஜேந்திர பாலாஜி... கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் வீடியோ கால் செய்வார் என்று காத்திருந்தோம். ‘ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான செய்திகளை சேகரிப்பதில் நான் பிஸி. செக் யுவர் மெயில்’ என்று மெசேஜ் அனுப்பியிருந்தார். மெயிலை திறந்தோம்.

சொகுசாக 100 ஐ.ஏ.எஸ்-கள்... கடுப்பாக 50 ஐ.ஏ.எஸ்-கள்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்துச் செயல்படுத்துவதற்காக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்புக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தரப்பிலிருந்து பெரும் குமுறல்.

’’ஜெயலலிதா மறைந்ததிலிருந்து இதுபோன்ற பணிகளில் குறிப்பிட்ட 50 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைத்தான் மீண்டும் மீண்டும் நியமிக்கின்றனர். வாக்காளர் பட்டியல் மேற்பார்வை, உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர், இப்போது கோவிட் - 19 தடுப்பு நடவடிக்கை என தொடர்ச்சியாக எங்களையே வதைக்கின்றனர்."

"இதுபோன்ற பணிகளில் சுமார் 100 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஈடுபடுத்துவதே இல்லை. இவர்கள் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளுங்கட்சியின் வி.ஐ.பி-க்களின் ஆதரவு பெற்றவர்களாக இருக்கின்றனர் அல்லது நன்கு சம்பாதித்து அதிகாரத்தில் இருப்பவர்களை நன்கு கவனித்துவருபவர்களாக இருக்கின்றனர். கடந்த மூன்றாண்டுகளாக மாறிமாறி பசையுள்ள பதவிகளையே வகிக்கும் இவர்கள், களத்துக்குச் சென்று சேவையாற்றுவதே இல்லை” என்றெல்லாம் குமுறுகின்றனர் அந்த அதிகாரிகள். இந்நிலையில், ”அந்த அதிகாரிகள் யார் யார்?” என்கிற பட்டியல் ஒன்றும் ஐ.ஏ.எஸ் வாட்ஸ்அப் குழுக்களில் வலம் வருகிறது.

மது விற்பனை ஜோர்!

மது விற்பனை
மது விற்பனை
மிஸ்டர் கழுகு: "ஆறு மாதம் அமைதியாக இரு!" - அமைச்சருக்கு ஆறுதல் சொன்ன தி.மு.க நிர்வாகி

கொரோனா ஊரடங்கில் உணவுக்கே வழியின்றித் தவித்து வரும் நிலையில், சிலர் டாஸ்மாக் சரக்கு விற்பனையில் தீவிரமாக இருக்கின்றனர். குறிப்பாக, ஆளுங்கட்சியின் தொழிற்சங்க நிர்வாகிகள் பலரும் அந்தந்தப் பகுதி ஆளுங்கட்சி நிர்வாகி மற்றும் உள்ளூர் போலீஸார் உதவியுடன் சரக்குகளை பத்து மடங்கு அதிக விலைக்கு விற்றுவருவதாகப் புகார்கள் கிளம்பியுள்ளன. ஒரு சில மாவட்டங்களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கும் விஷயம் தெரிந்துவிட்டதால் அவர்களுக்கும் சரக்கு சம்பாத்தியத்தில் பங்கு போகிறதாம்.

மாஸ்க்.... ரிஸ்க்!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
நா.ராஜமுருகன்

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் கரூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த கொரோனா பாதித்த நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கரூர் சணப்பிரட்டியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையைச் சுற்றி குடியிருப்புகள் நெருக்கமாக உள்ளன. கொரோனா வார்டில் சிகிச்சையளித்த டாக்டர்கள் அணிந்த பாதுகாப்பு உடைகள், மாஸ்க்குகள், கையுறைகள் மருத்துவமனையை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதியில் கொட்டப்பட்டதாகச் செய்தி வெளியானது. உடனே மாவட்ட நிர்வாகம் அந்த கழிவுகளை எரித்தது.

“இது தொடர்ந்தால் கலெக்டர் வீட்டு முன்பு பயன்படுத்திய மாஸ்க்குகளை போடுவோம்’’ என எச்சரிக்கிறார்கள் எதிர்க் கட்சியினர். இதனால் கரூரில் லேசான பதற்றம் மையம் கொண்டிருக்கிறது.

எங்கே இருக்கிறார் எம்.எல்.ஏ?

பேராவூரணி
பேராவூரணி

கஜா புயலில் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானபோது ‘எந்த உதவியும் செய்யவில்லை. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான கோவிந்தராஜ் காணவில்லை’ என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. கோவிந்தராஜ் மீது இப்போதும் அதே புகார். “கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டிய எம்.எல்.ஏ எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் செல்போன் சுவிட்ச் ஆப் என வருகிறது. இதே போலத்தான் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ-வான சி.வி.சேகரும் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை’’ எனக் குமுறுகிறார்கள் மக்கள்.

மூடிமறைக்கப்பட்டதா கொரோனா மரணம்?

கொரோனா
கொரோனா

காரைக்கால் மாவட்டம் கருக்களாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 51 வயதான ஒருவருக்குக் கடந்த ஒரு வாரக் காலமாக இருமல், சளி, காய்ச்சல் இருந்திருக்கிறது. மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே வைத்தியம் செய்தவர் திடீரென இறந்து போனார். மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்து மருத்துவ குழுவினரும் காவல்துறையும் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி இறந்தவரை அடக்கம் செய்தனர். அவர் கொரோனாவில்தான் இறந்திருக்கிறார் என்ற தகவல் பரவி காரைக்கால் மக்களை கலங்கடித்துள்ளது.

அவர் இறப்பதற்கு முன்பு தினமும் மாலை வேளையில் காரைக்கால் பாரதியார் வீதியிலுள்ள கிளினிக்குக்கு சென்று வந்திருக்கிறார். 'அங்கிருந்து அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியதா?' என விசாரித்து வருகிறார்கள். ‘காரைக்காலில் யாருக்கும் கொரோனா இல்லை’ என்கிறது சுகாதாரத் துறை. 'அரசு உண்மையை ஒப்புக்கொள்ளாததால் கொரோனா சத்தமின்றிப் பரவுகிறதா?' என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

விஸ்வகர்மா... ஐ.டி டீம்... ராஜேந்திர பாலாஜி!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, அமைச்சராக மட்டும் தொடரும் ராஜேந்திர பாலாஜி, திருத்தங்கலில் தன் வீட்டில் குடும்பத்தினருடன் அரட்டை அடித்துக்கொண்டும், கட்சியினரை வீட்டுக்கு வரவழைத்துப் பேசிக் கொண்டும் இருக்கிறார். ‘அண்ணன் நல்லவரு... வல்லவரு’ என்று ஆதரவான செய்திகளை பத்திரிகைகளில் வரவழைத்து அமைச்சரை புரோமோட் செய்வதற்காக ஐ.டி டீம் ஒன்றுக்குப் பல லட்சங்கள் செலவு செய்திருக்கிறார்களாம் அமைச்சரின் ஆதரவாளர்கள். இன்னொரு பக்கம் விஸ்வகர்மா சங்கத்தை அரசியல் கட்சியாக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறாராம் ராஜேந்திர பாலாஜி.

களத்துக்கு வராத கருணாஸ்... கண்டுகொள்ளாத மலேசியா!

எம்.எல்.ஏ கருணாஸ்
எம்.எல்.ஏ கருணாஸ்
பிரஷரில் பீலா ராஜேஷ்; ஸ்டாலினுக்கு ஸ்பெஷல் பூஜை; `கட்டிங்' அதிகாரிகள்... கழுகார் அப்டேட்ஸ்!

பரமக்குடி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன், மாவட்டச் செயலாளர் முனியசாமியுடன் இணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு உதவிகளை செய்துவருகிறார். ராமநாதபுரம் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டனும் தனது தொகுதியில் ஆங்காங்கே உதவிகளை வழங்கிவந்தார். கொரானோவால் இறந்தவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றதால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில் மணிகண்டனால் இப்போது வெளியில் வர முடியவில்லை. ஆனால், எந்தச் சிக்கலிலும் சிக்கிக்கொள்ளாத திருவாடானை முக்குலத்தோர் புலிப்படை முன்னணியின் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸும், முதுகுளத்தூர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-வான ‘மலேசியா’ பாண்டியும் தொகுதிவாசிகளுக்கு சிறுதுரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என்கிற குமுறல் தொகுதியில் ஒலிக்கிறதாம்.

அடுத்த கட்டுரைக்கு