Published:Updated:

பா.ஜ.க-வில் கே.பி.ராமலிங்கம்? டாஸ்மாக் கள்ளச்சந்தை, சிக்கிக்கொண்ட ஊழியர்கள்! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

``ஹேங்க் அவுட் வேண்டாம். நேரில் வந்துகொண்டிருக்கிறேன். ஜில்லென ஐஸ் மோர் எடுத்து வையும்” - கழுகாரிடம் இருந்து வந்த வாட்ஸ் அப் மெசேஜ் சிணுங்கியது. சற்று நேரத்தில் வந்த கழுகார், ``இன்னுமா ஐஸ் மோர் ரெடியாகவில்லை” என்று சிரித்தபடி செய்திகளைக் கொட்டினார்.

பா.ஜ.க-வில் கே.பி.ராமலிங்கம்? டாஸ்மாக் கள்ளச்சந்தை, சிக்கிக்கொண்ட ஊழியர்கள்! - கழுகார் அப்டேட்ஸ்

``ஹேங்க் அவுட் வேண்டாம். நேரில் வந்துகொண்டிருக்கிறேன். ஜில்லென ஐஸ் மோர் எடுத்து வையும்” - கழுகாரிடம் இருந்து வந்த வாட்ஸ் அப் மெசேஜ் சிணுங்கியது. சற்று நேரத்தில் வந்த கழுகார், ``இன்னுமா ஐஸ் மோர் ரெடியாகவில்லை” என்று சிரித்தபடி செய்திகளைக் கொட்டினார்.

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்

மீண்டும் நாங்குநேரியைக் குறிவைக்கும் ரூபி மனோகரன்!

நாங்குநேரி பெயர் பலகை
நாங்குநேரி பெயர் பலகை
எல்.ராஜேந்திரன்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாகக் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரான ரூபி மனோகரன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2021 தேர்தலுக்காக மீண்டும் நாங்குநேரியைக் குறிவைத்திருக்கும் ரூபி மனோகரன், நெல்லையில் தங்கியிருந்து நாங்குநேரி தொகுதிக்கான கொரோனா நிவாரணப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். "நாங்குநேரிக்காக அண்ணாச்சி நிறைய செலவு செய்துட்டாவ. இதெல்லாம் அரசியல் முதலீடுன்னு நினைக்குறாவ. எப்படியும் நாங்குநேரி சீட்டை வாங்கி ஜெயிச்சிருவாவ” என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

அசைக்க முடியாத உதவி ஆணையாளர்!

கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையாளரான ரவியின் பணிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டே முடிந்து, அதன்பிறகு இரண்டு முறை அவருக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கோவை மாநகராட்சி ஆணையாளர், துணை ஆணையாளர் ஆகியோர் மாற்றப்பட்டபோது, ரவியை மட்டும் அசைக்க முடியவில்லை. அப்போதே, "கோவை மாநகராட்சியில் திறமையும் தகுதியும், சீனியாரிட்டியும் கொண்ட அதிகாரிகள் பலர் இருந்தும் ஓய்வு பெற்ற ஒருவருக்கு தொடர்ந்து பணி நீட்டிப்பு செய்வது ஏன்? முறைகேடுகளுக்கு துணை போவதால்தான் பணி நீட்டிப்பா?” என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பினர். இந்தநிலையில், உதவி ஆணையாளர் ரவிக்கு அடுத்த மாதம் பணி நீட்டிப்புக் காலம் முடிவடையவுள்ளது. இப்போதும் அவருக்கு மீண்டும் பணி நீட்டிப்பு செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தை பெரிதாக்க தி.மு.க-வினர் ஆயத்தமாகி வருகின்றனர்.

ஆளுங்கட்சியின் மணல் திருட்டு!

நாகை மாவட்டம் குத்தாலம் தாலுக்காவில் உள்ள தொழுதாலங்குடி கிராமத்தில் ஆறு மற்றும் வாய்கால்களில் ஆளுங்கட்சியினர் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுகின்றனர். தடுப்பவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். கிராம மக்கள் இதுகுறித்து புகார் அளித்தால் காவல்துறையினர் புகாரைப் பெற மறுப்பதாக மாவீரன் குரு வன்னியர் சங்கம் அமைப்பின் நிறுவனர் வி.ஜி.கே.மணிகண்டன் புகார் தெரிவித்துள்ளார்.

மணிகண்டன் தலைமையில் தொழுதாலங்குடி, சேத்திரபாலபுரம் கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். பூம்புகார் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான பவுன்ராஜின் ஆதரவாளர்கள் ஆற்றில் பாலம் கட்டுவதாகக் கூறி லாரிகளில் ஆற்றுமணலை கடத்துவதாகவும் போலீஸார் கண்டுக்கொள்வதில்லை எனவும் கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.

பா.ஜ.க-வில் கே.பி.ராமலிங்கம்?

கே.பி.ராமலிங்கம்
கே.பி.ராமலிங்கம்

தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி பா.ஜ.க-வில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிய ஆதரவாளர் வட்டம் இல்லாதவர் எனத் தி.மு.க-வினரே இந்த மாற்றத்தைக் கண்டுகொள்ளாத நிலையில், டெல்லி பா.ஜ.க குஷியாக இருப்பதாகக் கூறுகின்றனர். "ஸ்டாலின் மீது அதிருப்தியிலுள்ள மேலும் சில தி.மு.க தலைவர்களைக் கட்சியில் இணையுங்கள்” எனத் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனுக்கு டெல்லி மேலிடம் கூறியுள்ளதாம். இதையடுத்து, சமீபத்தில் தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.பி.ராமலிங்கத்துடன் முருகன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளாராம். விரைவில் கே.பி.ராமலிங்கமும் கையில் தாமரையுடன் காட்சியளிப்பார் என்கிறது கமலாலயம் வட்டாரம்.

டாஸ்மாக் கள்ளச்சந்தை... சிக்கிக்கொண்ட ஊழியர்கள்... பதற்றத்தில் அதிகாரிகள்!

ஊரடங்கு நேரத்தில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளில் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்கப்பட்ட விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுக்கிறது. கடந்த மார்ச் 23-ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி அரசு உத்தரவிட்டது. அதன் பிறகு, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கடைகளில் இருந்த சரக்குகளை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த சமயத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் முறைகேடாக விற்கப்பட்டன. இதில் கிடைத்த வருவாய் டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்தது. இந்த சட்டவிரோத மது விற்பனையில் காவல்துறையினர், அரசு அதிகாரிகள் உட்பட பலரும் முக்கிய பங்கு வகித்ததாகத் தகவல்கள் வெளியாகின. மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட பிறகு, கணக்கில் வராத அந்தப் பணத்தை, ‘ஆப்டர் சேல்ஸ்’ என்ற பெயரில் டாஸ்மாக் ஊழியர்களில் பலர் அரசிடம் செலுத்தினர்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விற்பனையான சரக்குக்கு உரிய தொகை தவிர, அந்தத் தொகைக்கு 68 சதவிகித அபராதமும் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி-யும் செலுத்த வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதாவது, ஒரு லட்சம் ரூபாய் சரக்கு என்றால், அந்த ஒரு லட்சம் ரூபாய் போக, கூடுதலாக ரூ.68,000 அபராதமும் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி-யும் செலுத்த வேண்டும். இப்படி சிக்கிக்கொண்ட டாஸ்மாக் ஊழியர்கள், ‘முறைகேடான விற்பனைக்கு நிர்பந்தம் கொடுத்த காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்று அரசிடம் முறையிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ-க்களின் பெயர்களும் அடிபடுகிறது. விரைவில் டாஸ்மாக் கள்ளச்சந்தைக்கு துணைபோன காவல்துறை அதிகாரிகள், தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீதும் விசாரணை நடைபெறலாம் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

கொள்ளையடிக்க புது ரூட்!

அரசின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கு அரசு ஒருவருட காலத்துக்கு தடை விதித்துள்ளது. அதிகாரிகளின் பயணச் செலவு, விருந்து உபசாரங்களுக்கும் கிடுக்குப்பிடி விழுந்துள்ளது. உயரதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் பணியிட மாறுதல் செய்யக் கூடாது என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய பணி நியமனம், பணியிட மாற்றம் இவற்றில்தான் அமைச்சர்களும் அதிகாரிகளும் அவர்களின் சகாக்களும் வருடா வருடம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மஞ்சள்குளித்து வந்தனர். இதற்காகவே புரோக்கர்கள் டி.எம்.எஸ், டி.பி.ஐ, எழிலகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றிவருவார்கள். இப்போது எல்லாருக்குமே அடி.

இந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு வேளாண்மை பொறியியல் துறையில் இணை இயக்குநர் பொறுப்பை புதிதாக உருவாக்கி முன் தேதியிட்டு அரசாணை கையெழுத்தாகியுள்ளது. புதிய பணியிடங்களை உருவாக்கக் கூடாது எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்ட அடுத்த நாளே, இந்தப் பணியிடங்களை அவசரகதியில் உருவாக்கியுள்ளனர். இந்தப் பதவிகளுக்காக லட்சக்கணக்கில் கரைவேட்டிகளிடம் பணம் கட்டி முன்பதிவு செய்திருந்தவர்கள் நெருக்கியதால்தான் இந்தப் பணியிடம் முன் தேதியிட்டு உருவாக்கப்பட்டதாம். இதேபோல மற்ற துறைகளிலும் முன் தேதியிட்டு அரசாணை தயார் செய்ய துறை செயலாளர்களை அமைச்சர்கள் தரப்பு நெருக்கி வருகிறதாம்.