Published:Updated:

எல்.முருகனை ஆட்டிவிக்கும் இருவர்; பன்னீருக்கு எதிராக எடப்பாடி வியூகம்..! கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

கழுகாரிடம் இருந்து வாட்ஸ் அப்பில் ஒரு போட்டோ வந்தது. தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனுடன் இரண்டு முக்கியப் பிரமுகர்கள் போஸ் கொடுத்தார்கள். “என்ன விவகாரம் கழுகாரே?” என்றோம். சாட் செய்ய ஆரம்பித்தார் கழுகார்.

“இந்த இருவரும்தான் எல்.முருகனை ஆட்டிவிக்கிறார்களாம். ‘கொரோனா தடுப்பு விஷயத்தில் பிரதமர் மோடி தீவிரமாக இருக்கிறார். இந்தச் சூழலில், ‘விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வேண்டாம்’ என கட்சி சீனியர்கள் முருகனுக்கு அட்வைஸ் செய்துள்ளனர்.

எல்.முருகன்
எல்.முருகன்

ஆனால், இந்த இருவரின் தூண்டுதலில்தான் முதல்வரை சந்தித்தாராம் முருகன். கடைசியில், நீதிமன்றம் விழாவுக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டது. ‘இதெல்லாம் தேவையா?’ என்று சீனியர்கள் சீறுகிறார்கள்.”

‘தம்ப்ஸ் அப்’ சிம்பலை தட்டிவிட்டு, “திருநெல்வேலி அ.தி.மு.க-வில் ஏதோ அதிருப்தியாமே?” என்று கேள்வியை ‘டைப்’பினோம்.

“துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். தர்மயுத்தம் தொடங்கியபோது பன்னீருக்கு பக்க பலமாக இருந்தவர் மனோஜ் பாண்டியன். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மனோஜ் பாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் பதவி எதிர்பார்த்தார். அது கிடைக்காததால் அப்போதிருந்தே வருத்தத்தில் இருக்கிறார். பன்னீரின் முரட்டு பக்தராக அறியப்படும் எஸ்.டி.காமராஜ் எதிர்பார்த்த மாவட்டச் செயலாளர் பதவி அவருக்குக் கிடைக்கவில்லை. போதாதற்கு, நாங்குநேரி இடைத்தேர்தலில் சீட் எதிர்பார்த்தார். அதுவும் கைகூடவில்லை. இப்போது தன்னைவிட ஜூனியர்கள் பலருக்கும் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் அதிருப்தியில் இருக்கிறார் காமராஜ்.”

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

“தென்காசி அ.தி.மு.க-விலும் பஞ்சாயத்தாமே?”

“தென்காசி மாவட்ட அ.தி.மு.க-வை அமைப்புரீதியாக இரண்டாகப் பிரித்தபோது, மாவட்டச் செயலாளர் பதவியை வாசுதேவநல்லூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான மனோகரன் எதிர்பார்த்திருந்தார். அது கிடைக்கவில்லை. அதனால், ‘தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் வந்து செல்லும்படி வசதியான இடத்தில் அமைக்க வேண்டும்’ என்று குரல் உயர்த்த ஆரம்பித்துள்ளார். சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏ-வும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சருமான ராஜலட்சுமியும் கட்சி பொறுப்பு எதிர்பார்த்து ஏமாற்றத்தில் இருக்கிறார். மேற்கண்ட மாவட்ட பஞ்சாயத்துகளை எல்லாம் குறிப்பிட்டு, ‘சட்டமன்றத் தேர்தலின்போது பிரளயம் வெடிக்கலாம்’ என உளவுத்துறை நோட் அனுப்பியுள்ளதாம்.”

“இன்னொரு தகவல்...” என்றபடி “அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான இன்பதுரை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘என்னை கவர்ந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ். என்னுடைய கணிப்பு சரியாக இருக்குமானால் எதிர்காலத்தில் தி.மு.க-வை வழிநடத்தும் வல்லமை அவருக்கு மட்டுமே இருக்கிறது’ என்று கூறி எதிர் முகாமை குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தார். ஏற்கனவே தி.மு.க-வுக்குள் அன்பில் மகேஷ் மீது பலரும் கடுப்பில் இருந்துவரும் நிலையில், அ.தி.மு.க நிர்வாகியின் இந்த பேச்சு அறிவாலயத்திற்குள் புகைச்சலை அதிகப்படுத்தியுள்ளது” என்றதும், கழுகாரிடம் இருந்து ‘ஸ்மைலி’ வந்து விழுந்தது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

“அ.தி.மு.க-வில் முதல்வர் வேட்பாளர் ரேஸில் ‘ஓ.பி.எஸ். தான் நிரந்தர முதல்வர்’ என்று போஸ்டர் யுத்தம் சில நாள்களுக்கு முன்பு வெடித்தது அல்லவா. ஆனால், சுமார் ஆறேழு மாதங்களுக்கு முன்பாகவே எடப்பாடியின் ஆதரவாளரான கம்பம் எம்.எல்.ஏ-வான ஜக்கையன் தன் மகன் பாலமணிமார்பனை வைத்து, ‘எடப்பாடியே நிரந்தர முதல்வர்’ என தேனி முழுவதும் போஸ்டர் ஒட்டியிருந்தார். அந்த ப்ளாஷ்பேக்கை மனதில்கொண்டு தேனி மாவட்டத்தில் பன்னீருக்கு எதிராக பகடை உருட்டத் திட்டமிட்டுள்ளாராம் எடப்பாடி.”

“ஓ....” என்று நாம் டைப் செய்து முடிப்பதற்குள், கழுகாரிடம் இருந்து அடுத்த தகவல்...

“சில நாள்களுக்கு முன்பு நாகர்கோவிலில் பேட்டி அளித்த தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான தளவாய் சுந்தரம், ‘முதலமைச்சராக எடப்பாடியை முன்னிறுத்திதான் நாம் தேர்தலை சந்திக்க முடியும். அடுத்த முதல்வர் எடப்பாடிதான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை’ என்று பேட்டி அளித்தார். அப்போது பன்னீரின் தீவிர ஆதரவாளரான குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோகன் அருகில் அமைதியாக இருந்தார். இதையடுத்து அசோகன், எடப்பாடி பக்கம் சாய்ந்துவிட்டதாக செய்திகள் சிறகடித்தன.

தளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்

பதறிப்போன அசோகன், ‘நான் உயிருள்ளவரை பன்னீரின் தீவிர ஆதரவாளர்தான். அதற்காக தளவாய் சுந்தரத்துக்கோ, முதல்வருக்கோ எதிரானவன் இல்லை’ என ஃபேஸ்புக்கில் பதிவு போட்டார். வரும் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் சீட்டுக்கு அடிபோடும் அசோகன், யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்கிறாராம்.”

‘தம்ப்ஸ் அப்’ அனுப்பிவிட்டு “தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?” என்றோம்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

“தி.மு.க கூட்டணிக்குள் தே.மு.தி.க-வை கொண்டுவரும் முயற்சி சில வாரங்களாக நடந்தன. இப்போது, ‘நமக்கு தே.மு.தி.க தேவையா?’ என்கிற பேச்சு கட்சித் தலைவர் ஸ்டாலின் வீட்டில் எழுந்துள்ளதாம். ‘வரும் தேர்தலில் 189 தொகுதிகளில் நாம் போட்டியிட வேண்டும். இப்போது கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவதிலேயே இழுபறி ஏற்படும். இதில் தேவையில்லாமல் தே.மு.தி.க-வை இழுக்க வேண்டுமா?’ என பேச ஆரம்பித்திருக்கிறார்கள். குழப்பத்தில் இருக்கிறாராம் ஸ்டாலின்.”

பதிலுக்கு நாமும் ‘குழப்ப ஸ்மைலி’ ஒன்றை அனுப்பினோம்.

“அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத வருத்தத்தில் இருந்த முன்னாள் எம்.பி-யான லட்சுமணனை தி.மு.க பக்கம் கொண்டுவந்தது செந்தில் பாலாஜியாம். ஸ்டாலினைச் சந்திப்பதற்கு இரண்டு தினங்கள் முன்பே பொன்முடி வீட்டில் செந்தில் பாலாஜி, லட்சுமணன், பொன்முடி மூவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அப்போது லட்சுமணனுக்கு சில வாக்குறுதிகளையும் கொடுத்துள்ளாராம் பொன்முடி. லட்சுமணன் கட்சியில் இணைந்ததற்குப் பிறகு செந்தில்பாலாஜியிடம் பேசிய ஸ்டாலின், ‘இப்படிதான் கட்சியை துடிப்பாகவே வெச்சிருக்கணும். இன்னும் ஆளுங்களை பிடிச்சுக்கிட்டு வாங்க’ என்றாராம்!”

“ஆள்பிடிப்பதற்கு ஒரு ஏஜென்ட் போட்டுவிட்டார் போல...” என்று பதிவிட்டோம்.

‘சிரிப்பு ஸ்மைலி’ அனுப்பிய கழுகார் தொடர்ந்து, “பா.ஜ.க-வில் இணைந்த ஒளிமயமான டெல்டா பெண்மணி, தனக்கு மாநில அளவில் பொறுப்பு வழங்குவார்கள் என எதிர்பார்த்தாராம். ஆனால், மாவட்ட அளவில் துணை பதவி மட்டும் வழங்கி ஓரங்கட்டிவிட்டது தேசிய கட்சி. தமிழகம் முழுவதும் ஒரு ரவுண்ட் வரலாம் எனக் காத்திருந்த பெண்மணிக்கு ஏக அப்செட். தனக்கு பதவி கிடைக்காததற்கு டெல்டாவைச் சேர்ந்த இரண்டு பா.ஜ.க பிரமுகர்கள்தான் காரணம் என்று புலம்பிவருகிறாராம்.”

“ஒளியை ஒளிர விடமாட்டார்களோ...” என்று அனுப்பினோம். பதிலுக்கு, ‘உர்ர்ர்ர் ஸ்மைலி’ அனுப்பிய கழுகார், “ஊட்டி பஞ்சாயத்து ஒன்றைச் சொல்கிறேன், கேளும்” என்றபடி தொடர்ந்தார்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

“சமீபத்தில் ஊட்டிக்கு வந்திருந்த தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவிடம் துணை மாவட்டச் செயலாளர் ரவிக்குமார் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்கள் உடன்பிறப்புகள். கடந்த உள்ளாட்சி தேர்தலில் பணம் பெற்றுக்கொண்டு வேட்பாளர்களுக்கு சீட் வழங்கியது, அ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு வைத்து ஊட்டி நகராட்சி மார்க்கெட் கடைகளைக் கைப்பற்றியது, கருணாநிதிக்கு சிலை வைக்க அளவுக்கு அதிகமாக பணம் வசூலித்தது என்று புகார்கள் நீள்கின்றன. இதனால், ரவிக்குமார் தரப்பினர் கலக்கத்தில் உள்ளனர்” என்ற கழுகார், “ஒரு போலீஸ் தகவல்...” என்றபடி போலீஸ் பொம்மை ஸ்கீரின் ஷாட்டை அனுப்பினார்.

“சென்னை காவல்துறையில் ‘இணை’யான பொறுப்பில் இருக்கிறார் அந்த உயரதிகாரி. கடந்த நான்கு ஆண்டுகளாக டம்மி போஸ்ட்டில் இருந்தவருக்கு இப்போதுதான் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டதால் அதிருப்தியடைந்த அவர், தன் உடல்நிலையை காரணம்காட்டி வேறு பிரிவுக்கு மாறுதல் கேட்கிறார். ‘எப்படியும் அடுத்த ஆட்சி வந்தா தூக்கி அடிச்சிருவாங்க. இப்ப என் ஆபிஸ் இரண்டாவது மாடியில் இருக்கிறது. இந்த பில்டிங்ல லிப்ட்டும் இல்லை; படி ஏறி இறங்க கஷ்டமா இருக்கு. என்னைய எங்காவது மாத்திடுங்க’ என்று டி.ஜி.பி-யிடம் கேட்டிருக்கிறாராம்” என்ற கழுகார், “கோட்டைக்குச் செல்ல நேரமாகிவிட்டது. இந்த தகவலையும் பிடியும்” என்றபடி கடைசி தகவலை தட்டிவிட்டார்.

காவல்துறை
காவல்துறை
மாதிரி புகைப்படம்
பா.ஜ.க: ராக்கெட் புராஜெக்டும் 40 சீட் பிளானும்; `தளபதி இல்லம்' திறந்த உதயநிதி! - கழுகார் அப்டேட்ஸ்

“சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தமிழ்நாட்டின் லோக் ஆயுக்தா அலுவலகம் இயங்குகிறது. ஒய்வுபெற்ற நீதிபதி தேவதாஸ் அதன் தலைவராக இருக்கிறார். ஜெயபால், கிருஷ்ணமூர்த்தி, ராஜாராம், வழக்கறிஞர் ஆறுமுகம் ஆகிய நால்வர் அதன் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். விரைவில் கிண்டி சிட்கோ அலுவலக வளாகத்துக்கு இந்த அலுவலகம் இடம் மாற இருக்கிறது. இந்த வருடம் சுமார் 1,500 புகார்கள் லோக் ஆயுக்தாவுக்கு வந்ததாக தகவல்... ஆனால், இன்னும் முழு செயல்பாட்டை ஆரம்பிக்கவில்லை லோக் ஆயுக்தா. இந்த அமைப்பின் உறுப்பினராக நியமிக்கப்படுபவர்கள், குறிப்பிட்ட ஆண்டுகள் நிர்வாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், தற்போதைய உறுப்பினர் ஒருவருக்கு சில மாதங்கள் உதைக்கிறதாம். இதை சுட்டிக்காட்டி வழக்கு ஒன்றும் நடக்கிறதாம். இவை எல்லாம் முடிந்த பிறகுதான், லோக் அயுக்தா அமைப்பு முழு வேகத்துடன் செயல்படும் என்கிறார்கள்” என்ற கழுகார் ஏகப்பட்ட நிறைய பூங்கொத்து சிம்பல்களுடன் விடைபெற்றார்!

அடுத்த கட்டுரைக்கு