Published:Updated:

அதிகாரிகளை மிரட்டும் விஐபி கூட்டணி... ஆர்டர்களை வாங்கும் பினாமி கம்பெனி! கழுகார் அப்டேட்ஸ்

கழுகார்
கழுகார்

மொட்டைமாடியில் இருந்தவாறு ஹேங்அவுட்ஸ் காலில் வந்த கழுகார், பேசத்தொடங்கியதும் பெரும் காற்றுச் சத்தம்... “சரி, செய்திகளை மெயிலில் அனுப்புகிறேன்” என்று கூறிவிட்டு ஹேங் அவுட்டிலிருந்து வெளியேறினார். மெயிலில் வந்துவிழுந்தன சுடச்சுட தகவல்கள்.

கொரோனா பரிசோதனைக்கான ரேபிட் கிட் வாங்கியதில் விலைப் பிரச்னை, கொள்முதல் செய்த நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு எனப் பல்வேறு புகார்களால் தடுமாறுகிறது தமிழக சுகாதாரத்துறை. தகுதியற்ற நிறுவனங்களிடமிருந்து தரமற்ற கருவிகளை இரட்டிப்பு விலையில் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் கொடுத்தார்.

இதற்குப் பிறகு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமாநாத்தும் அமைச்சரின் பேட்டிக்கு வக்காலத்து வாங்கும் வகையில் பேட்டியளித்து, தனியாருக்குக் கொள்ளை லாபம் செல்வதை நியாயப்படுத்தியது கண்டிக்கத்தக்கது’ என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால், டி.என்.எம்.எஸ்.சி அதிகாரிகள் வருத்தத்தில் உள்ளனர்.

கோவையில் செம்மொழி மாநாடு நடந்தபோது அங்கு கலெக்டராக இருந்த உமாநாத், தி.மு.க. தலைவர்களுக்கும் நெருக்கமாகவே இருந்தார். நேர்மையான அதிகாரி என்று பெயர்பெற்ற உமாநாத் மீதும் இப்படியொரு அவப்பெயர் ஏற்படுவதற்கு துறையின் விஐபி மற்றும் அவருடைய உதவியாளர் கூட்டணியின் பிடிவாதம்தான் காரணம் என்கின்றனர் டி.என்.எம்.எஸ்.சி அதிகாரிகள்.

உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருள்களைத் தரமான நிறுவனத்தில் வாங்குவதற்கு டி.என்.எம்.எஸ்.சி அதிகாரிகள் பெருமுயற்சி எடுத்தாலும், தங்களுடைய பினாமி நிறுவனத்துக்கே எல்லா ஆர்டர்களையும் தர வேண்டும் என்பதில் இந்தக் கூட்டணி பிடிவாதமாக இருக்கிறதாம். ‘இதனால் தாமதம் ஏற்படுவது மட்டுமல்லாமல், தரமற்ற மருந்துகள், உபகரணங்கள் வந்து கொரோனா பாதிப்பை விகாரமாக்கிவிடுமோ...’ என்றும் அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இந்தக் கூட்டணியை மீறி எதுவும் செய்ய முடியாததால், முக்கிய அதிகாரிகள் சிலர் பொறுப்புகளைவிட்டு வெளியேறவும் ஆலோசித்துவருவதாகத் தகவல்!

ஈகோ மோதலைத் தவிர்க்கும் பன்னீர்!

எடப்பாடி பழனிசாமி- பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி- பன்னீர்செல்வம்

கொரோனா தடுப்புப் பணிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் விறுவிறுவென பணியாற்றிக்கொண்டிருக்க, துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், தேனியில் விறுவிறுவென பணிகளைச் செய்துவருகிறார். ஏற்கெனவே இருவருக்கும் இடையே புகைச்சல் இருப்பதால், தானும் கொரோனா தடுப்புப் பணியில் இறங்கினால் ஈகோ பிரச்னைகள் ஏற்படலாம் என்பதால் இந்த ஏற்பாடாம்.

இதனால், தேனி மாவட்டத்தில் நிவாரணப் பணிகளைச் செய்வது, கிருமி நாசினி வாகனம் ஏற்பாடு போன்ற உதவிகளைத் தன் மகனும் எம்.பி-யுமான ரவீந்திரநாத் குமாருடன் சேர்ந்து செய்துவருகிறார் பன்னீர்செல்வம். அதேசமயம், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களோ, “டெல்லியிலிருந்து அண்ணனுக்கு தரப்பட்டுள்ள உத்தரவாதத்தின் அடிப்படையில்தான் இப்போதைக்கு அவர் அமைதிகாக்கிறார்; சசிகலா தரப்புடன் எடப்பாடி தரப்பு தொடர்பில் இருப்பது உறுதியாகிவிட்டாலோ, அதற்கிடையிலேயே டெல்லியிருந்து சிக்னல் வந்துவிட்டாலோ, அண்ணனின் இரண்டாவது தர்ம யுத்தம் ஆரம்பிக்கும்” என்று எச்சரிக்கிறார்கள்.

தொகுப்பாளினியுடன் தனிமையில் ஜெபசிங்?

சில ஆண்டுகளுக்கு முன்பு, செல்லப்பாண்டியனின் இரண்டாவது மகனான ஜெபசிங், பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகளை அவரின் நண்பரே வெளியிட்டு சர்ச்சையானது. இதுவே செல்லப்பாண்டியனின் அமைச்சர் பதவி பறிபோவதற்கு காரணமாக இருந்தது. தற்போது, அ.தி.மு.க-வில் தூத்துக்குடி மாவட்ட அம்மா பேரவை அமைப்புச் செயலாளராக இருக்கும் ஜெபசிங், உள்ளூர் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவருடன் தனிமையில் நெருக்கமாக இருப்பதாக வாட்ஸப்களில் வைரலாகி வரும் புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த தொகுப்பாளினி, சமீபத்தில் காவித்துண்டை போர்த்திக்கொண்ட முன்னாள் பெண் எம்.பி-க்கு தூரத்துச் சொந்தம் என்றும், முன்னாள் அமைச்சரின் முதல் மகனிடமிருந்து ஏற்கெனவே 27 லட்ச ரூபாய் கறந்துள்ளார் என்றும் தகவல்கள் பரவியுள்ளன. இதுதொடர்பாக ஜெபசிங்கின் குடும்பத்திலும் களேபரம். இதனால், கடும் அப்செட்டில் இருக்கிறார் செல்லப்பாண்டியன். தி.மு.க-வினர் இந்த விஷயத்தைக் கையில் எடுத்து, சமூக ஊடகங்களில் சடுகுடு ஆடுகின்றனர்.

‘கொரோனா சமயத்தில் இது தேவைதானா?’

எ.வ.வேலு
எ.வ.வேலு

திருவண்ணாமலை தொகுதிக்கு தி.மு.க-வில் பொதுச் செயலாளர் நியமிக்கப்பட்டதும், துணை பொதுச்செயலாளர் பதவிக்கு மேலும் சிலரை நியமிக்கப்போகிறார்களாம். அந்தப் பட்டியலில் எ.வ.வேலுவின் பெயரும் இருக்கிறதாம். துணை பொதுச்செயலாளர் பதவி தனக்குத்தான் என்று உறுதியாக நம்பும் எ.வ.வேலு, தற்போது வகிக்கும் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் பதவியை தன் மகன் டாக்டர் வே.கம்பனுக்கு வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று முழு வீச்சில் செயல்பட்டு வருகிறாராம். ஊரடங்கு நிலையிலும் ஒன்றியச் செயலாளர்களை ரகசியமாக அழைத்து ஆதரவு திரட்டுகிறாராம். தகவலை கேள்விப்பட்ட மாவட்ட மூத்த நிர்வாகிகளான கு.பிச்சாண்டி, வேணுகோபால், ஶ்ரீதரன், சுந்தரேசன் ஆகியோர் ‘கொரோனா சமயத்தில் இது தேவைதானா?’ என்று கேட்டு மல்லுக்கட்டுகிறார்கள்.

கோபம் தணியாத அன்பில் மகேஷ்!

தி.மு.க முதன்மைச் செயலாளரும் திருச்சி மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான கே.என்.நேரு, ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ள தனது தொகுதி மக்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்கினார். அடுத்து, திருச்சி கிழக்குத் தொகுதிக்குள் வரும் வட்டச் செயலாளர்களை அழைத்து அரிசி மூட்டைகள் வழங்கி, அவற்றை மக்களுக்கு கொடுக்கச் சொல்லியிருக்கிறார். திருச்சி மேல சிந்தாமணி 9-வது வார்டில் நிவாரண உதவியையும் தொடங்கி வைத்துள்ளார்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

இந்த வார்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க பகுதிக்குள் வருகிறது. அதன் மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் இல்லாமல் நிகழ்ச்சியில் நேரு கலந்துகொண்டது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதுபற்றி உடன்பிறப்புகள் கேட்டதற்கு, “அன்பில் மகேஷ் சென்னையில் இருந்ததால் அவர் கலந்து கொள்ள முடியவில்லை’’ என்று நேரு தரப்பு விளக்கம் அளித்தது. ஆனால், அன்பில் மகேஷின் கோபம் தணியவில்லையாம்.

எடப்பாடி... இளங்கோ... பிரவீன்!

மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவராக இருக்கும் இளங்கோ, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர். இவரின் மகன் பிரவீன், முசிறியில் கல்லூரி ஒன்றை நிர்வகித்துவருகிறார். குறிப்பிடத்தக்க அதிகார மையமாக விளங்கும் இவர் சொல்வதை மேலிடம் உடனே ‘டிக்’ செய்கிறதாம். அப்படித்தான் திருச்சி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரி பதவிக்காக தஞ்சாவூர் வல்லம் பகுதியைச் சேர்ந்த காக்கி ஒருவர், இவர்மூலம் காய்களை நகர்த்திவருகிறாராம்.

‘அரசியல் பண்றதுல எங்க அமைச்சரை அடிச்சுக்க முடியாது!’

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கதர் மற்றும் கிராம வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரனுக்கும் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனுக்கும் உரசல் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் இருவருக்கும் போட்டா போட்டி. சட்டமன்றத் தேர்தலைக் குறி வைத்து செந்தில்நாதன் காய்களை நகர்த்திவருகிறார்.

சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க-வில் அதிக ஒன்றியங்களைப் பிரிக்க வேண்டும் என்ற திட்டத்தில் செந்தில்நாதனுக்கு உடன்பாடில்லை. ஆனால், அமைச்சர் பாஸ்கரன் அந்தத் திட்டத்தை ஆதரிக்கிறார். இந்த மோதலில், அமைச்சர் தரப்பின் தவறுகளை எல்லாம் ஆவணப்படுத்தி, முதல்வருக்கு அனுப்புவதில் தீவிரமாகியிருக்கிறது செந்தில்நாதன் தரப்பு. ஆனால், இதற்கெல்லாம் சளைக்காத பாஸ்கரன் தரப்பு, ‘அரசியல் பண்றதுல எங்க அமைச்சரை அடிச்சுக்க முடியாது’ என்று தெம்பாக வலம் வருகின்றனராம்.

அமைச்சர் ஆதரவாளர்கள் யார்? கணக்கெடுக்கும் தி.மு.க!

அமைச்சர் வேலுமணி
அமைச்சர் வேலுமணி

கோவையில் இணையதள ஊடக உரிமையாளர் கைது விவகாரத்தில் அமைச்சர் வேலுமணிக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கும் இடையே அறிக்கைப் போர் நடந்தது. இந்தக் கைது விவகாரத்தில் புகார் தெரிவித்த மாநகராட்சி உதவி கமிஷனருக்கும், புகாரில் கூறப்பட்டுள்ள இரண்டு பிரச்னைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதேபோலத்தான் இதற்கு முன்பும் சென்னை பத்திரிகையாளர் ஒருவரை கைது செய்தபோதும் கோவை மாநகராட்சி இன்ஜினியர் ஒருவர்தான் புகார் கொடுத்திருந்தார்.

இப்போது புகார் கொடுத்துள்ள உதவி கமிஷனர் மீது, பிறப்புச் சான்றிதழை தவறாகக் கொடுத்ததாக ஒரு புகார் கிளம்பி, விசாரணை நடந்தது. அந்த விவகாரத்தை தி.மு.க தரப்பு தோண்ட ஆரம்பித்துள்ளது. அதேபோன்று, கோவை மாநகராட்சியிலும் மாநகர காவல்துறையிலும் அமைச்சருக்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகள் யார் யார், அவர்கள் எந்தெந்த வகையில் தவறு செய்திருக்கிறார்கள், பலன் அடைந்துள்ளார்கள் என்று பட்டியலைத் தயார் செய்யுமாறு கோவை தி.மு.க-வினருக்கு தி.மு.க தலைமை உத்தரவு போட்டிருக்கிறதாம்.

உடல்களைப் புதைக்க உங்கள் கல்லூரியைத் தரமுடியாது... சட்டப்படி ஒரு விஷயம் செய்யலாமே கேப்டன்?
அடுத்த கட்டுரைக்கு