Published:Updated:

கார்த்திகையில் கட்சித் தொடங்கும் ரஜினி!? வெளிவருமா ஸ்டாலின் வீட்டு மின்கட்டணம்? - கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார்
கழுகார்

``உம்முடைய வாட்ஸ்அப் டேட்டாவை ஆன் செய்து பாரும்” - கழுகாரிடமிருந்து குறுந்தகவல் வந்தது. டேட்டாவை ஆன் செய்ததும் தகவல்கள் வந்து விழுந்தன.

அலுவலகத்தை மாற்றுங்கள்... கதறும் முதல்வர் அலுவலகப் பணியாளர்கள்!

தமிழக முதல்வர் அலுவலகத்தை மையம் கொண்டு சுழற்றி அடிக்கிறது கொரோனா புயல். ஜூலை 17-ம் தேதியன்று முதல்வர் அலுவலக இணைச் செயலாளர் விஸ்வநாதன், அவருடன் பணியிலிருந்த பிரிவு அலுவலர், உதவியாளர், டிரைவர் ஆகியோருக்கு கொரோனா பாசிட்டிவ் தெரியவரவே, சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். மறுநாளே முதல்வர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இப்படி ஏற்கெனவே ஆறு முறை கிருமி நாசினி தெளித்தும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏற்கெனவே உயர் அதிகாரி ஒருவர் இறந்துவிட்டார். இதனால், பீதி அடைந்துள்ள பணியாளர்கள், ``அலுவலகத்தையே வேறு இடத்துக்கு மாற்றுங்கள். அதுவரை பணிக்கு வர முடியாது” என்று கதறுகிறார்கள். ஆனால், தமிழக அரசின் நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டி அதற்கு முட்டுக்கட்டை போடுகிறாராம் நிதி தரப்பு உயரதிகாரி ஒருவர்.

கிருமி விஷயத்தில் கருமித்தனம் வேண்டாமே!

ராதாகிருஷ்ணனுக்கு என்ன ஆச்சு?

ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாகச் செயல்பட்டுவந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் பிறகு சுகாதாரத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார் ராதாகிருஷ்ணன். மனிதர் படு உஷாராக இருந்தும் தற்போது உடல்நிலையில் லேசாக பின்னடைவு ஏற்பட்டுள்ளதாம். தொடர்ந்து அவரின் மனைவி, மகன், மாமனார், மாமியார் ஆகிய நான்கு பேருக்கும் கொரோனா தொற்று சோதனை நடந்தது. இதில் நான்கு பேருக்குமே பாஸிட்டிவ் உறுதியானது. அவர்கள் கிண்டியில் உள்ள அரசு மையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கிடையே ராதாகிருஷ்ணனும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

அனைவரும் நலமுடன் திரும்பி வர பிரார்த்திப்போம்!

150 இன்ஸ்பெக்டர்களுக்கு பிரமோஷன் நிறுத்தம்... சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் காரணமா?

சாத்தான்குளம் காவல்நிலையம்
சாத்தான்குளம் காவல்நிலையம்

தமிழ்நாடு காவல்துறையில் மாநிலம் முழுவதுமே 150 இன்ஸ்பெக்டர்கள் டி.எஸ்.பி-யாகப் பதவி உயர்வு செய்யப்பட்டு, அதற்கான பட்டியல் ஒன்று கடந்த சில மாதங்கள் முன்பே தயார் செய்யப்பட்டிருந்தது. அந்தப் பட்டியலில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இரட்டைக் கொலையில் குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஶ்ரீதரின் பெயரும் இருந்தது என்கிறார்கள். மேலும், இன்ஸ்பெக்டர் ஶ்ரீதரும்கூட முன்பு சக பணியாளர்களிடம் “சீக்கிரம் நான் டி.எஸ்.பி ஆகிடுவேன்” என்றே சொல்லி வந்தாராம். சிறையிலும் இதையே சொல்லி சலம்பினாராம். இந்த நிலையில், மேற்கண்ட பிரமோஷன் பட்டியலை சிலநாள்களுக்கு முன்பு பார்த்த துறையின் உச்ச பிரமுகர் ஒருவர், “இப்ப இது ஒண்ணுதான் குறைச்சல்... அப்புறமா பார்த்துக்கலாம்” என்று பட்டியலை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளாராம். பட்டியலில் இருந்த மொத்த இன்ஸ்பெக்டர்களும் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் மீது செம கடுப்பில் இருக்கிறார்களாம்.

வடை போச்சே!

கட்டுப்பாட்டு அறைக்குள் அதிகாரிகள்... கலங்கும் ஜூனியர் மருத்துவர்கள்!

சென்னை மாநகரில் கொரோனாவைக் கட்டுப்படுத்த 15 மண்டலங்களுக்கு தலா ஒருவர் என 15 நோடல் ஆபிஸர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சென்னை அரசு மருத்துவமனைகளின் முக்கிய பதவிகளில் இருந்த மூத்த மருத்துவர்கள். இவர்களுக்கு ஒவ்வொரு மண்டலத்திலும் தனிக் கட்டுப்பாட்டு அறை கொடுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அதிகம் கூடும் பணியிடங்களை ஆய்வு செய்வது இவர்களின் பணி. அந்த வகையில் பெரிய துணிக்கடைகள், நகைக்கடைகள், தனியார் ஐ.டி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், இவர்கள் எவரும் அறையை விட்டு வெளியே வருவதில்லை; பயிற்சி மருத்துவர்களையும் ஜூனியர் மருத்துவர்களையும் மட்டுமே ஆய்வுக்கு அனுப்புவதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ஏற்கெனவே மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாமல் கடும் பணிச்சுமையில் இருக்கும் அவர்கள் இந்தப் பணியால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்களாம்.

கொரோனா கால கொடுமைகள்!

கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்
கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

ஸ்கெட்ச் போடும் வருமானவரித்துறை... போட்டுக் கொடுத்தாரா உச்சப்பிரமுகர்?

கனிம வளத்துறையில் பெரிய டெண்டர்களைக் கையாளும் அதி முக்கியஸ்தர் ஒருவரின் உறவினரை வருமானவரித்துறை குறி வைத்திருக்கிறதாம். அந்த உறவினர் கண் அசைவில்தான் மணல் அள்ளும் பெரிய ஒப்பந்தங்கள் அளிக்கப்படுகின்றனவாம். இதில் புரளும் கோடிக்கணக்கான கரன்ஸியை சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் முதலீடு செய்கிறார்களாம். ஆனால், அந்த முக்கியஸ்தர் அவ்வப்போது தமிழகத்தின் உச்ச பதவி ஒன்றில் இருப்பவருடன் உரசல் போக்கைக் கடைப்பிடிப்பதால் விவகாரம் தற்போது நெருப்பை பற்ற வைத்திருக்கிறது. இதனால், உச்சத்தின் தரப்பிலிருந்தே உறவினர் பற்றிய தகவல் லீக் ஆகியிருக்கலாம் என்கிறார்கள் இதுபற்றி உள்விவரம் அறிந்தவர்கள். ஆதி முதல் அந்தம் வரை எல்லாவற்றையும் நோட் எடுத்துள்ள வருமானவரித்துறை விரைவிலேயே ரெய்டை பாய்ச்சும் என்று தகவல்கள் வருகின்றன.

பாம்பின் கால் பாம்பு அறியும்!

மாலையில் புரட்டப்படும் ஃபைல்கள்... கவலையில் மின்வாரிய அதிகாரிகள்!

தமிழக மின்வாரிய சேர்மனாக இருப்பவர் பங்கஜ்குமார் பன்சால் ஐ.ஏ.எஸ். இவர் கூடுதலாக சென்னை மாநகராட்சியின் கொரோனா பணிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு மற்றும் நில நிர்வாகத்துறை கமிஷனர் பதவி ஆகிய இரண்டையும் கவனித்து வருகிறார். மனிதர் படுபிஸி. ஆனால், இன்னொரு பக்கம் மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாம். ஜூலை 20-ம் தேதி முதல் யாரும் தனது அறைக்கு ஃபைல் எதுவும் அனுப்பக் கூடாது; கணினி வழியாகத்தான் அனுப்ப வேண்டும் என்று கறாராக உத்தரவு போட்டுவிட்டாராம். கொரோனா களப் பணிகளை முடித்துவிட்டு, மதிய நேரத்தில் மின்வாரிய அலுவலகத்துக்கு வரும் சேர்மன், திடீரென மீண்டும் வெளியே கிளம்பிப் போய்விடுகிறாராம். மாலை 6 மணிக்கு மீண்டும் அலுவலகத்துக்கு வருகிறாராம். இரவு 9 மணி வரையில் தனது இருக்கையில் அமர்ந்து பணிகளைக் கவனிக்கிறாராம். ஏதாவது, ஆலோசனை என்றால், உயர் அதிகாரிகளை அழைக்கிறாராம். அதனால், சேர்மன் வீட்டுக்கு கிளம்பும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது என்று புலம்புகிறார்கள் உயர் அதிகாரிகள்.

6 மணியாச்சு... வீட்டுக்குப் போகணும்... ஆத்தா வையும்.

எல்.முருகன்
எல்.முருகன்

செய்தி சேனலில் மாற்றங்கள்... பின்னணியில் முருகனின் டெல்லி விஜயம்!

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கடந்த மூன்று நாள்களாக டெல்லியில் முகாமிட்டிருந்தார். அவர் ஏற்கெனவே வகித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் கமிஷன் துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுதான் தமிழக பா.ஜ.க தலைவர் ஆனார். அந்தப் பதவி தொடர்பான ஆவணங்களை ஒப்படைப்பதற்காகவே அவர் டெல்லி சென்றிருக்கிறாராம். வேலையோடு வேலையாக மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை சந்தித்துப் பேசியதாம் முருகன் தரப்பு. தமிழகத்தில் ஊடகத்துறையில் நடைபெற்றுவரும் சில விவகாரங்கள் குறித்தும் சந்திப்பில் பேசப்பட்டதாம். தமிழக ஊடகத் துறையில் பணிபுரிபவர்கள் பற்றிய நீண்ட பட்டியல் ஒன்றும் அமைச்சர்களிடம் அவர் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னணியில்தான் தமிழக செய்தித் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் சில மாற்றங்கள் நடந்துள்ளனவாம். மாற்றங்கள் தொடரும் என்கிறார்கள் பா.ஜ.க தரப்பில்!

பேசாம சொந்தமாவே சேனல் ஆரம்பிச்சிடலாமே பிரதர்ஸ்!

வெளுத்துவாங்கிய கிச்சன் கேபினட்... வீடு அடங்கிய அமைச்சர்!

தங்கமணி
தங்கமணி

தனியார் மருத்துவமனையில் 12 நாள்கள் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு ஜூலை 20-ம் தேதி காலை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிவிட்டார் மின்துறை அமைச்சர் தங்கமணி. வீட்டில் மேலும் சுமார் 10 நாள்கள் தனிமையில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்களாம். ஆனாலும், மனிதருக்கு இருப்புக் கொள்ளவில்லையாம். கட்சி வேலை இருக்கிறது... டிரைவர் வேண்டாம் என்றுதானே காரை எடுத்துக்கொண்டு கிளம்ப எத்தனித்தாராம். கோபமடைந்த கிச்சன் கேபினட் அமைச்சரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கவே ``ஆளை விடு தாயே” என்று மனிதர் அறைக்குள் சென்று முடங்கிவிட்டாராம். தங்கமணியின் மகன், மருமகள் மற்றும் பணியாளர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால், அவர்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

தங்கமணி இப்போது தனிமை மணி!

மிஸ்டர் கழுகு: “தி.மு.க-வை முடக்குவோம்!” - எடப்பாடி புது வியூகம்

டெல்லியாரிடம் கர்ஜித்த பெண் சிங்கம்!

டெல்லியார் என்றழைக்கப்படும் டெல்லி முரளிதரனுக்கும் வேலூர் சரக டி.ஐ.ஜி-யான காமினிக்கும் புது பஞ்சாயத்து ஓடுகிறதாம். டெல்லி முரளிதரனுடன் தமிழக காவல்துறையில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலர் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ளனர். அந்த வகையில், காட்பாடியில் உள்ள தன் வீட்டுக்கு டெல்லி முரளி வந்துசெல்லும் போதெல்லாம் வேலூர் சரக டி.ஐ.ஜி காமினி, திருவண்ணாமலை எஸ்.பி-யாக இருந்து தற்போது இடமாற்றம் செய்யப்பட்ட சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் நேரில் சென்று சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்படி ஆரம்பத்தில் நட்பில் இருந்தாலும் தொடர்ந்து டெல்லியாரிடம் இருந்து வரும் பணியிட மாற்றம் ரெக்கமென்டேஷன்களால் கடுப்பாகிவிட்டாராம் காமினி.

டெல்லியார்
டெல்லியார்

ஒரு கட்டத்தில் காமினி தரப்பு டெல்லியாரின் கோரிக்கைகளை கண்டுக்கொள்ளவில்லை. உடனே, `நான் யார் தெரியுமா?’ என்கிற ரேஞ்சுக்கு டெல்லியார் சீற, பதிலுக்கு `காக்கி உடையின் பவர் தெரியுமா?’ என்று காமினி தரப்பும் கர்ஜித்திருக்கிறார். இப்போதைக்கு கப்சிப் ஆகிவிட்டாராம் டெல்லியார். இன்னொரு பக்கம் சில போலீஸ் உயரதிகாரிகள் தரப்பு, “டெல்லியாருக்கு பின்னால், எந்த விதமான பவர் சென்டரும் இல்லை. அப்படி ஒரு மாயையை ஏற்படுத்தி காவல்துறையில் மவுஸ் காட்டுகிறார். உயரதிகாரிகள் பலரும் அதை நம்பி ஏமாந்துவருகிறார்கள்” என்கிறார்கள்!

மடியில் கனமிருந்தால் டெல்லியார் என்றில்லை... பல்லியாருக்குக்கூட பயப்படத்தான் வேணும்!

கார்த்திகையில் கட்சிக்கு விளக்கு ஏற்றுவாரா ரஜினி?

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் லம்போகினி கார் ஓட்டும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி அதகளத்தை ஏற்படுத்தியது. இந்த கார் ரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் வணங்காமுடிக்குச் சொந்தமானதாம். கேளம்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டுக்குச் சென்றிருந்தபோது மருமகனின் காரை ஓட்டிப் பரவசப்பட்டாராம் ரஜினி. அதேபோல் மூத்த மருமகன் தனுஷிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார் இருக்கிறது. அதையும் டெஸ்ட் டிரைவ் செய்ய இருக்கிறாராம் ரஜினி.

ரஜினி
ரஜினி

`கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால்தான் ரஜினி வெளியே வருவார். அவருக்கு உடல்நிலை சரியில்லை’ எனப் பலரும் சமூகவலைதளங்களில் வதந்தியை பரவவிட்டனர். இதை உடைப்பதற்காகதான் இந்தப் போட்டோவை ரஜினி குடும்பம் லீக் செய்ததாம். இதுபோக, கேளம்பாக்கத்தில் சில ஜோதிடர்களையும் சந்தித்துள்ளாராம் ரஜினி. `நவம்பர் 20-ம் தேதி கந்த சஷ்டி வருகிறது. அன்றைய தினம்தான் சூரசம்ஹாரம் நடைபெறும். இதை வைத்து, `இது மிக உகந்த நாள். அதுவும் கார்த்திகை மாதத்தில் வேறு வருகிறது. இந்த மாதத்தில் அரசியல்ரீதியாக நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் உங்களுக்கு வெற்றிதான்’ என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனராம். மகிழ்ச்சியுடன் அவர்களை வழியனுப்பியுள்ளார் ரஜினி.

வெற்றிக் கொடிகட்டுவாரா படையப்பா?

ஸ்டாலின் வீட்டு மின்கட்டணம்... வெளியிட தயாராகும் அ.தி.மு.க!

மின்கட்டண உயர்வுகுறித்து தி.மு.க போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இதுகுறித்து வடமாவட்ட அமைச்சர் ஒருவரிடம் மின்துறை அமைச்சர் தங்கமணி போனில் பேசிக் கொண்டிருந்தபோது, “ஊரடங்கு நேரத்துல மின் நுகர்வு அதிகரிச்சு இருக்கு. இது தெரிஞ்சும் மக்களை தி.மு.க குழப்பிவிடுறாங்க” என்று புலம்பினாராம். அதற்கு அந்த வட மாவட்ட அமைச்சர், “இதுக்குப் போய் எதுக்குண்ணே மல்லுக்கட்டுறீங்க. ஸ்டாலின், உதயநிதி வீட்டுல எவ்வளவு மின்சாரம் உபயோகிக்குறாங்க, எவ்வளவு மின்கட்டணம் செலுத்துறாங்கனு ஒரு லிஸ்டை வெளியிட்டால் அவங்க போராட்டம் தானா அமுங்கிடும்” என்று ஒரே போடாகப் போட்டாராம். பொதுவாக வம்புதும்புக்கு போக விரும்பாத மனிதர் தங்கமணி. எனவே, “அந்த அரசியல் எல்லாம் நமக்கு எதுக்குப்பா” என போனை வைத்துவிட்டாராம். இருந்தாலும் இந்த விஷயத்தை மோப்பம் பிடித்த அ.தி.மு.க ஐ.டி விங், ஸ்டாலின், உதயநிதி வீடுகளின் மின்நுகர்வு கட்டணங்களை தோண்ட ஆரம்பித்துள்ளது.

அப்படியே ஷாக் ஆகிடுவாங்களோ!

ஸ்டாலின்
ஸ்டாலின்

மறைந்த அலுவலர்... கலங்கும் சுகாதாரத்துறை அலுவலகம்!

பொது சுகாதாரத்துறையின் இயக்குநர் (டி.பி.ஹெச்) அலுவலக பர்சனல் அதிகாரியாக இருந்தவர் இஜாஸ் அகமது. தனது உதவும் குணத்தாலும் அனைவரிடமும் இன்முகத்துடன் பழகியதாலும் அனைவருக்கும் பரிச்சயமானவர். இந்த ஆண்டு ஓய்வுபெற வேண்டியவர், தமிழக அரசு கொரோனா கால நிதி சிக்கன நடவடிக்கையாக வெளியிட்ட ஒரு வருட பணி நீட்டிப்பால் தொடர்ந்து பணியாற்றிவந்தார். தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற செவிலியர் தொடர்பான ஃபைல்களை கவனிக்கும் பணி அவருடையது. இந்த நிலையில்தான் கடந்த வாரம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, டிஸ்சார்ஜ் ஆகும் நேரத்தில் அவருக்கு திடீரென ஹார்ட் அட்டாக் வந்ததில் இறந்துபோனார். விஷயம் அறிந்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகம் மிகவும் கலங்கிக்கிடக்கிறது.

இறந்தும் வாழ்கிறார் இதயங்களில்!

காமராஜரா... கருணாநிதியா? புதுச்சேரியில் மல்லுக்கட்டும் கதர் பார்ட்டிகள்!

புதுச்சேரி யூனியன் பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்கு தி.மு.க-வின் மறைந்த தலைவர் கருணாநிதியின் பெயர் வைக்கப்படும் என அந்த மாநிலத்தின் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். பொதுவாகவே, பள்ளி உணவுத் திட்டம் என்றாலே காமராஜர்தான் என்று காங்கிரஸ்காரர்கள் உரிமை கொண்டாடுவார்கள். இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாராயணசாமி, கருணாநிதியின் பெயரைச் சூட்டியிருப்பது அந்தக் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

தவிர, புதுச்சேரி மாநிலத்தில் இந்தத் திட்டம் ஒன்றும் புதிதல்ல. கடந்த ஜூன் 2002-லேயே பள்ளி மாணவர்களுக்கு காலை உணவாக இலவச பால், ப்ரட் வழங்கும் திட்டத்தை அப்போதைய முதல்வர் ரங்கசாமி தொடங்கினார். ராஜீவ் காந்தி பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் தொடங்கிவைத்தார். பிற்பாடு நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட இந்தத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டு, நாராயணசாமியால் புத்துயிரும் பெற்றது. ராஜீவ் காந்தி பெயரில் நடைமுறையில் இருக்கும் இந்தத் திட்டத்தைத்தான், கருணாநிதி பெயரில் மாற்றியுள்ளார் நாராயணசாமி. இந்த வரலாறுகளை எல்லாம் குறிப்பிட்டு, கட்சித் தலைமைக்கு புகார் ஏவுகணைகளை பறக்கவிட தயாராகிறது நாராயணசாமிக்கு எதிர்தரப்பு.

வரலாறு முக்கியம் அமைச்சரே!

சாதிப்பாசம் காட்டுகிறாரா நீலகிரி தி.மு.க எம்.எல்.ஏ?

நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருப்பவர் திராவிட மணி. இவர் சமீபத்தில் கூடலூர் அருகிலுள்ள உப்பட்டி பகுதியில் உள்ள ஒரு மலைக்கிராமத்துக்கு பெயர்‌ சூட்டும் விழாவில் பங்கேற்றது சர்ச்சையாகியுள்ளது. அந்தக் கிராமத்துக்கு ‘மேனன் நகர்’ என்று பெயர் வைத்துள்ளனர். சாதியை ஒழிக்கப் போராடிய‌ பெரியார் மண்ணில், அதுவும் தங்களை பெரியாரின் வழித்தோன்றல்கள் எனச் சொல்லிக் கொள்ளும் தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரே ஒரு கிராமத்துக்கு சாதிப்பெயரை‌ சூட்டும் விழாவை ஆதரித்து பங்கேற்ற‌து அங்குள்ள தமிழ் மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.

பேரு பெத்த பேரு... தாக நீலு லேது!

அடுத்த கட்டுரைக்கு