Published:Updated:

வி.ஐ.பி-க்களுக்கு விருந்து... முதல்வர் மாவட்ட கள்ளச்சாராய கலாட்டா! கழுகார் அப்டேட்ஸ்

கழுகார்
கழுகார்

வெள்ளை வெளேர் உடையில் கண்கள் கூச ஹேங் அவுட் காலில் வந்த கழுகார், வணக்கம் சொல்லிவிட்டு பதில் வணக்கத்துக்குக் காத்திருக்காமல் செய்திகளை வாசிக்க ஆரம்பித்தார்...

வேலையைத் தொடங்கிய அமைச்சர்களின் பினாமிகள்?

நெடுஞ்சாலைத் துறை
நெடுஞ்சாலைத் துறை

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடந்து வரும் ஒப்பந்தப்பணிகள் ஊரடங்கால் கிடப்பில் போடப்பட்டிருந்தன. கோவை, சேலம் போன்ற மாநகரங்களில் மட்டும் சத்தமின்றி இந்த வேலைகள் தொடங்கிவிட்டனவாம். விசாரித்தால், இவற்றில் பெரும்பாலான பணிகள், முக்கிய அமைச்சர்களின் பினாமி நிறுவனங்கள் செய்கின்ற பணிகள் என்று விவரிக்கிறார்கள் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள். இப்போது அந்தப் பணிகளின் தரம் எப்படியிருந்தாலும் யாரும் பார்க்கப்போவதில்லை என்பது ஒரு புறம். இவற்றில் சில பணிகள் ஏற்கெனவே முடிக்கப்படுகின்றன பில் பாஸ் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி ஆர்.டி.ஐ-ல் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டு மனுப்போட்டும் பதில் வரவில்லையாம். அதனால் அந்தச் சந்தேகம் மேலும் வலுவடைந்திருக்கிறது என்கின்றனர்.

வி.ஐ.பி-க்களுக்கு விஷேச விருந்து!

சென்னையில் குறிப்பிட்ட சில நட்சத்திர ஹோட்டல்களில் சில அறைகளை வி.ஐ.பி-க்கள் பலர் தாங்கள் இளைப்பாறுவதற்கென ரெகுலராகப் புக் செய்து வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு உயர் ரக சரக்கு, அறுசுவையான விருந்து சமைத்து அசத்துவதை இந்த ஹோட்டல் நிறுவனங்கள் பெரும் பாக்கியமாகவே கருதுகின்றன. இந்த ஹோட்டல்களில் குறிப்பிட்ட நாள்களில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அறையில் அந்த வி.ஐ.பி-க்கள் தங்களுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அல்லது தனியாக உற்சாகத்தில் மிதப்பார்களாம். உதாரணமாக கடற்கரையோரத்திலுள்ள ஒரு பிரபல ஹோட்டலின் நான்காவது தளம் முழுவதுமே ஆளும்கட்சி வி.ஐ.பி ஒருவருக்காக வெள்ளிக்கிழமை மாலையில் ஒதுக்கப்பட்டுவிடும். அந்த வி.ஐ.பி-க்கு ஓர் இளம் ஆடு வெட்டி விருந்து வைக்கப்படுமாம். மறுநாள் காலை வரை அவர் அங்கே ஓய்வெடுப்பாராம்.

இப்போது ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் எல்லா ஹோட்டல்களும் மூடப்பட்டுள்ளதால் இந்த வி.ஐ.பி-க்கள் எங்கே போவதென்று திணறிக்கொண்டிருக்கிறார்களாம். ஆனால், குறிப்பிட்ட சில வி.ஐ.பி-களுக்கு எந்தவிதமான தடையுமின்றி ஸ்பெஷல் விருந்து கொடுத்து கவனிக்கின்றன இந்த ஹோட்டல் நிர்வாகங்கள். ஊரடங்கில் ஹோட்டல் காலியாக இருப்பதால் வி.ஐ.பி-க்கள் பலரும் ஹோட்டல்களுக்குள் உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கிறார்களாம்.

''நான் எடப்பாடிக்குச் சொந்தக்காரி!''

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

''எடப்பாடிக்குச் சொந்தக்காரி நான். இந்த ஏரியாவுக்கு நான்தான் ராணி... என்னை எதுவும் செய்ய முடியாது'' என்று கெத்தாகச் சொல்லிக்கொண்டு வேலூர் மாவட்டத்தில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆட்டம் போடுகிறார். காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து, பணம் வசூல், கல்குவாரி அதிபர்களுடன் டீல், மணல் மாஃபியாக்களுடன் தொடர்பு என அவர்மீது வகைதொகை இல்லாமல் புகார்கள் வாசிக்கப்படுகின்றன. அவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் உயரதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுகிறார்கள். அவர் உண்மையிலேயே சொந்தக்காரர்தானா? என்பதை யாரிடம் கிராஸ் செக் செய்வது என்றுதெரியாமல் திணறுகின்றனராம் வேலூர் காவல்துறை உயரதிகாரிகள்.

தன்னார்வலர்களா... தரகுக்காரர்களா?

காவலர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் செங்கல்பட்டு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைப் பணிக்கு அமர்த்தியிருக்கின்றனர். ஒரிஜினல் போலீஸையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு தன்னார்வலர்கள் சிலர் வசூலில் தட்டி எடுக்கிறார்களாம். போலீஸைப்போல லத்தியைச் சுழற்றிச் சுழற்றி வாகனங்களை மடக்கிப் பிடிக்கிறார்கள். அவர்களைக் `கவனித்தால்’ மட்டுமே வாகனம் முன்னோக்கிச் செல்லும். 10,000-க்கும் மேற்பட்ட வழக்குகள், 9,000-க்கும் மேற்பட்ட வாகன பறிமுதல் செங்கல்பட்டில் நடந்திருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் தன்னார்வலர்கள் மூலமாகத்தான் வாகன உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. ஆவணங்கள் சரிபார்ப்பு, பறிமுதல் செய்த வண்டியை எடுத்து வருவது, சாவியைத் திரும்ப ஒப்படைப்பது என எல்லாவற்றிலும் கல்லா கட்டத் தொடங்கிவிட்டார்களாம். கமிஷன் போக மீதித் தொகையைக் கொடுக்க வேண்டியவர்களிடம் கொண்டு சேர்க்கிறார்களாம்.

கைக்காசில் கையுறையும் மாஸ்க்கும்!

மாஸ்க்
மாஸ்க்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 400-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் பணி புரிகின்றனர். இவர்கள் தினமும் கிராம செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுடன் இணைந்து ஃபீல்டு வொர்க்கில் ஈடுபட்டு வருகின்றனர். ''போதுமான அளவுக்கு முகக் கவசமும் கையுறை இருக்கிறது'' என்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால், பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு எந்த வசதியும் முழுமையாகச் செய்து தரப்படவில்லை எனப் புலம்புகின்றனர். ''மாஸ்க், கையுறைக்கு மட்டுமே ஒரு நாளைக்கு 350 ரூபாய் செலவாகிறது எங்கள் சொந்தப் பணத்தில் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். கிராம செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது'' என்கிறார்கள் மருத்துவர்கள்.

முதல்வர் மாவட்டத்தில் தயாராகும் கள்ளச்சாராயம்!

கொரோனா ஊரடங்கில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கள்ளச்சாராய விற்பனை களைகட்டத் தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் கைதுகள் தொடர்ந்தாலும், பச்சமலை உச்சியிலுள்ள சேலம் மாவட்ட கிராமங்களிலும் அடிவாரப் பகுதிகளான கோவிந்தம் பாளையம், வீரகனூர், கொல்லிமலைப் பகுதிகளில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் பாக்கெட்டுகள் ஏஜென்டுகள் மூலம், பெரம்பலூர் மாவட்ட எல்லையிலுள்ள காரியானூர், வெள்ளுவாடி, லத்துவாடி உள்ளிட்ட பகுதிகளிலும், கடலூர் மாவட்ட எல்லையிலுள்ள கொரக்கவாடி, பனையாந்தூர், தொழுதூர், பட்டாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் லிட்டர் 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதாம். வாகனங்கள் கண்காணிப்பில் மற்ற மாவட்டங்களைவிட அதிக விசாரணை நடத்தும் சேலம் மாவட்ட போலீஸார் கள்ளச்சாராயத்தை மட்டும் ஏன் கண்டுகொள்ளவில்லை? எனக் கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள். முதல்வரின் சொந்த மாவட்டத்தில் தயாரிக்கப்படுவதால் அதன் பின்னணியில் ஆளும்கட்சி தரப்பு யாராவது இருந்தால் சிக்கலாகும் என்று போலீஸ் அதிகாரிகள் பயப்படுகிறார்கள் என்றும் ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.

ராஜ கண்ணப்பனா... பெரிய கருப்பனா?

ராஜ கண்ணப்பன்
ராஜ கண்ணப்பன்

முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஏராளமான தொண்டர்களுடன் மதுரையில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார். அதன்பிறகு சிவகங்கை மாவட்டத்தில் ராஜ கண்ணப்பன் ஆதிக்கம் செலுத்துவார் என அவரது ஆதரவாளர்கள் சொல்லி வந்தனர். ''சிவகங்கை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்க வேண்டும்'' என வலியுறுத்த கட்சிக்குள் பூசல் உருவானது. தான் மட்டும்தான் சிவகங்கையில் மாவட்டச் செயலாளராக இருக்க வேண்டும் எனப் பெரிய கருப்பன் விரும்புகிறார். இதனால் மாவட்டத்தில் நடந்த பல கூட்டங்கள் மோதலில் முடிந்தன. கட்சியில் சேர்ந்தாலும் ராஜ கண்ணப்பன் சிவகங்கை மாவட்டத்தில் கால்பதிக்க முடியவில்லை என்று வருந்துவதாக அவரது ஆதரவாளர்கள் புலம்புகின்றனர்.

கொரோனாவால் முடங்கிய சுகாதாரத்துறை செயலர்... ஒரு மாதம் கழித்து கிடைத்த அமைச்சர்... கதி கலங்கிய ம.பி!
அடுத்த கட்டுரைக்கு