Published:Updated:

எடப்பாடி `ரகசிய' சந்திப்பு; தங்கமணிக்கு கொரோனா வந்தது எப்படி? - டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்

அலைபேசியில் அழைத்தார் கழுகார். ``வணக்கம். வாட்ஸ்அப்பை செக் செய்யவும்” என்றார். திறந்து பார்த்தோம். கழுகாரின் கட்டுரை வந்திருந்தது.

இன்ஸ்பெக்டரின் ஈர நெஞ்சம், குவியும் வாழ்த்துகள்!

மாநிலம் முழுவதும் போலீஸார் மீது மக்கள் கொந்தளிப்பாக இருக்கிறார்கள். ஆனாலும், ஆங்காங்கே ஈர நெஞ்சம் கொண்ட சில காவலர்களின் நடவடிக்கைகள் நம்பிக்கை துளிர்க்கச் செய்கின்றன. நேற்று மாலை செய்திகளுக்காக சென்னை புறநகர் பகுதியில் வலம்வந்தபோது கிடைத்த நெகிழ வைக்கும் தகவல் இது...

இன்ஸ்பெக்டர் அசோகன்
இன்ஸ்பெக்டர் அசோகன்

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் ஆய்வாளராக இருப்பவர் அசோகன். அவர் கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகில் மயங்கிய நிலையில் ஆட்டோ ஓட்டுநர் சாய்ந்துக்கிடந்ததைப் பார்த்ததும் ஜீப்பிலிருந்து இறங்கி விசாரித்திருக்கிறார். அந்த டிரைவரை பரிசோதித்தபோது அவர் மது எதுவும் அருந்தவில்லை; உடல் பலவீனம், பசி மயக்கம் காரணமாக மயக்கம் அடைந்து கிடந்தது தெரியவந்திருக்கிறது. உடனே இன்ஸ்பெக்டர் அசோகன், அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, எழுப்பி தண்ணீர் குடிக்க வைத்திருக்கிறார். அத்துடன் ஆட்டோ டிரைவரின் இதயத்தை தடவிக் கொடுத்தும், கால்களை அழுத்தியும் இயல்பு நிலைக்குத் திரும்ப செய்தார். மேலும், தான் வைத்திருந்த ஆக்ஸிஜன் பரிசோதனை கருவிமூலம் அவரை பரிசோதித்து, டிரைவர் நார்மல் நிலையில் இருப்பதை உறுதி செய்தார். பிறகு பிஸ்கெட் பாக்கெட், கையுறை, முகக்கவசம் கொடுத்து, காவலர்களின் உதவியுடன் ஆட்டோ டிரைவரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பினார். இன்ஸ்பெக்டருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. வாழ்த்துகள் அசோகன்!

கட்டுப்படுத்த முடியாத கொரோனா... தவிப்பில் தேனி கலெக்டர்!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநிலத்தில் முன்மாதிரியாகத் தேனி மாவட்டம் செயல்படுகிறது எனப் பெயர் வாங்கிய நிலையில், தற்போது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் தேனி கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ். துணைமுதல்வர் ஓ.பி.எஸ்ஸின் மாவட்டம் என்பதால், அவரிடம் அடிக்கடி ஆலோசனை பெற்று பல நடவடிக்கைகளில் ஈடுபட்ட கலெக்டர், ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவுக்கு கொரோனா உறுதியான பின்னர், ஓ.பி.எஸ் பக்கம் செல்ல முடியாமல் தவிக்கிறாராம்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

கொரோனாவை மறந்த தேனி மக்கள் கடைகளில் கூடியதும் கலெக்டருக்கு தலைவலியை ஏற்படுத்திவிட்டதாம். இதனால், கொரோனா தகவல்களை வெளியிட தாமதம் என்ற நிலையை தாண்டி, கொரோனா தகவல்களை மறைக்கும் நிலைக்கு வந்துவிட்டாராம் கலெக்டர். குறிப்பாக, தேனியில் கொரோனா உயிரிழப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட மறுத்துவிட்டார். இதனால், பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி உருவாக, பத்திரிகையாளர்களை அழைத்து, சமாதானம் பேசியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உயிர் பறிக்கும் ஹேர்டை டீ தூள்... ஊழல் அதிகாரியால் விற்பனை ஜரூர்!

அதிக அளவிலான தேயிலை உற்பத்தி செய்யும் நீலகிரியில்தான் சட்டவிரோத கலப்பட தேயிலைத்தூள் உற்பத்தியும் அதிகம் நடக்கிறது. சிறுநீரகத்தைப் பாதிக்கும் ஹேர்டை ரசாயனத்தை சாயத்துக்காகக் கலப்பட தேயிலைத்தூளில் கலக்கிறார்களாம். டீ தூள் பாக்கெட்டில் பெயர், முகவரி, தயாரிப்பு தேதி, விலை என எந்தத் தகவலும் இருக்காது. குன்னூரைச் சேர்ந்த முக்கியமான ஒருவர்தான் இதன் மொத்த சப்ளையும் செய்கிறார் என்கிறார்கள்.

அதிகாரிகள் அவ்வப்போது கண் துடைப்பக்கு நடவடிக்கை எடுப்பதும், பின்னர் கண்டுகொள்ளாமல் இருக்க சன்மானம் பெறுவதும் தொடர்கதையாகிவிட்டது. தற்போது கொரோனா பொது முடக்கத்தில் இந்தக் கலப்படத்தூள் விற்பனை இன்னும் ஜோராக நடக்கிறது. தற்போது பொறுப்பேற்றுள்ள உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரியிடம் மக்கள் இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் பலனில்லை!

தங்கமணிக்கு கொரோனா தொற்று... யாரிடம் இருந்து வந்தது?

அமைச்சர் தங்கமணி
அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் எங்கு மின் தடை என்றாலும், மின்வாரியத்துறை அமைச்சர் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேகமான கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்யலாம். அதற்கென்று மின்வாரிய பணியாளர் 24 மணி நேரமும் பணியில் இருப்பார். அப்படி பணிக்கு வந்த ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாம். இதை அறிந்த மின்துறை அமைச்சர் தங்கமணி, கன்ட்ரோல் ரூமை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மின் அலுவலகத்துக்கு மாற்றச் சொல்லிவிட்டாராம். கடைசியில் அவருக்கே தொற்று ஒற்றிக் கொண்டுவிட்டது. அமைச்சரின் மகன் உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் யார் மூலம் கொரோனா தொற்று தொடங்கியது என்று தீவிரமாக விசாரணை செய்துவருகிறார்கள்.

``காசிமேட்டை கோயம்பேடு ஆக்கிடாதீங்கப்பா!” பதறிப்போன அமைச்சர்!

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

புரதச் சத்து மிக்க மீன் மக்களுக்கு தங்குதடை இல்லாமல் கிடைக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியறுத்தி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு மக்கள் நேரடியாக குவிவதால்தான், கொரோனா தொற்று அதிகமாகிறது என்று அதிகாரிகள் தரப்பில் புகார் சொன்னார்கள். உடனே பதறிப்போன அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில், ``யோவ் கோயம்பேடு கணக்கா காசிமேட்டை ஆக்கி இழுத்து பூட்டிடாதீங்கப்பா. எங்க மீனவர்கள் பாவம்... அவங்க பொழப்புல மண் அள்ளிப் போட்டுறாதீங்க. உடனே, அங்க மக்கள் நுழைய தடை விதிக்கிறேன்...” என்று புலம்பித்தீர்த்துவிட்டாராம். உடனே அங்கிருந்தே போன் போட்டு உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார். இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுக ஏரியாவுக்கு மக்கள் நேரடியாக வந்து மீன்களை வாங்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மொத்த வியாபாரிகள் மட்டும் அங்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

மாதம்தோறும் ரகசிய சந்திப்பு... பெருமூச்சு விடும் எடப்பாடி!

முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி.
முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி.

சென்னையில் மத்திய உளவுத்துறையைக் கவனிக்கும் உயர் அதிகாரியாக இருப்பவர்கள் மத்திய அரசு தொடர்பான அதிமுக்கிய நிகழ்ச்சிகளின்போது மட்டுமே தமிழக முதல்வரை சந்திப்பார்கள். இது, எப்போதாவதுதான் நடக்கும். இப்போது, மாதம்தோறும் என்று கட்டாயம் ஆக்கிவிட்டார்களாம். மத்திய உளவுத்துறையின் உயர் பதவியில் இருப்பவர் மாதம் ஒரு முறை தவறாமல் முதல்வரை சந்திக்கிறாராம். அந்தச் சந்திப்புக்கு பிறகே எடப்பாடி தரப்பில் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள் என்று கிசுகிசுக்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். அப்படி என்னதான் ரகசியம் பேசுவார்களோ?

ஒரே ஆடிட்டர்! கசியும் ரகசியங்கள்... புலம்பும் தி.மு.க முன்னாள் அமைச்சர்!

ஹெல்த்தான பிரமுகருக்கும் ஜொலிஜொலிக்கும் தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் ஒரே ஆடிட்டராம். ஹெல்த்தின் உறவினரின் நண்பராம் அவர். இந்த நிலையில் இருவருக்கும் பாலமாகவும் அந்த ஆடிட்டர் திகழ்கிறாராம். இந்த விஷயம் அரசியல் வட்டாரத்தில் லீக் ஆனதும், `ஹெல்த்தின் வருமான வரித்துறை வில்லங்கங்கள் உட்பட எல்லாமே அந்த ஆடிட்டருக்குத் தெரியும்; அவர்மூலம் அந்த ரகசியங்கள் தி.மு.க முன்னாள் அமைச்சருக்கும் தெரியும்’ என்று உடன்பிறப்புகள் கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ``என்னய்யா உண்மையா?” என்று மேலிடம் கேட்க... ``சத்தியமா அதை எல்லாம் என்கிட்ட சொல்லமாட்டாருங்க” என்று புலம்பியிருக்கிறது முன்னாள் அமைச்சர் தரப்பு!

கோடிகளில் மாமூல்... கிராஸ்செக் செய்யும் மேலிடம்!

`நெகட்டிவ்’ செய்திகளை தவிர்ப்பதற்காக முக்கியமான துறையின் `அழகானவர்’ ஒன்றரை ‘சி’யை ஆட்சி மேலிடத்திலிருந்து மாதந்தோறும் வாங்குகிறாராம். லேட்டஸ்ட்டாக வந்த மூன்றெழுத்து பிரமுகரும் தன் பங்குக்கு இதே ரேஞ்சில் வாங்குகிறாராம். இருவரிடம் இருந்தும் `பயனாளி’களின் பட்டியலைக் கேட்டு வாங்கியிருக்கும் ஆட்சி மேலிடம், `கவனிப்புகள்’ சரியாகச் சென்று சேர்கின்றனவா அல்லது இடையில் இவர்கள் சுருட்டிவிடுகிறார்களா?’ என்று கிராஸ் செக் செய்துவருகிறதாம். இருவருமே கலக்கத்தில் இருக்கிறார்கள்.

சில நூறு கோடிகளில் டீல்... அமைச்சரிடம் பேரம் பேசும் கரூர் உடன்பிறப்பு! அதிர்ச்சியில் அ.தி.மு.க, சசி முகாம்

சசிகலா
சசிகலா

தொடர் சர்ச்சைகளில் சிக்கிவரும் அமைச்சர் ஒருவரும் தி.மு.க-வின் கரூர் மாவட்ட பிரமுகரும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்களாம். முன்னவருக்கு பிரச்னை என்றால் கை கொடுப்பாராம் கரூர்காரர். ஆட்சி முடிந்ததும் அமைச்சரை தன் கட்சியில் சேர்த்து, கடந்த முறை அவர் நின்று ஜெயித்த அதே தொகுதியை வாங்கித்தருவது போன்ற பலே ஒப்பந்தங்களும்’ இப்போதே பேசப்பட்டுள்ளதாம். டீல் சில நூறு கோடிகள் என்கிறார்கள்! `அதெப்படி சாத்தியம் என்று, அ.தி.மு.க முகாம் மட்டுமன்றி, சசிகலா முகாமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாம்.

விகாஸ் துபே என்கவுன்டர்... தமிழக எஸ்.பி-க்கும் பங்கு!

விகாஸ் துபே
விகாஸ் துபே

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் விகாஸ் துபே என்கிற ரவுடியின் கும்பல் நடத்திய தாக்குதலில் எட்டு போலீஸார் கொல்லப்பட்டனர். போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் விகாஸ் துபேயின் ஐந்து கூட்டாளிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், தற்போது விகாஸ் துபேயும் கொல்லப்பட்டுள்ளார். விகாஸ் துபேயின் கைது ஆபரேஷனில் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி தினேஷ் குமாருக்கும் முக்கிய பங்கு இருக்கிறதாம். கான்பூர் மாவட்ட எஸ்.பி-யான இந்தத் தினேஷ் குமார் சேலத்தைச் சேர்ந்தவர். கடந்த ஜூன் மாதம் கான்பூரில் அவர் எஸ்.பி-யாகப் பதவியேற்றதில் இருந்தே, விகாஸ் துபேயின் கும்பலைக் குறிவைத்து செயல்பட ஆரம்பித்தாராம். இப்போது சாதித்தும்விட்டார் என்கிறது உ.பி போலீஸ் வட்டாரம்.

அ.தி.மு.க ஐ.டி விங்... தலைவர்களே அறியாத ரகசியங்கள்!

அ.தி.மு.க ஐ.டி விங்கை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து சமீபத்தில் அறிக்கை வெளியானது. இத்துடன், எந்தெந்த மண்டலங்களில் எந்தெந்த மாவட்டங்கள் புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்கிற லிஸ்ட்டும் வெளியானது. இப்படி ஒரு லிஸ்ட் இருப்பதே அ.தி.மு.க தலைமைக்குத் தெரியாதாம். அறிக்கையில் கையெழுத்திட்டதுடன் தலைவர்கள் ஒதுங்கிவிட, இந்த லிஸ்ட்டில் தங்களுக்கு ஏற்றவாறு சில நிர்வாகிகள் மாவட்டங்களைப் பிரித்தெடுத்துக் கொண்டதாக ஐ.டி விங்குக்குள் குமுறல் எழுந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு