Published:Updated:

`மாஸ்’க் காட்டும் எடப்பாடி; கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கிய ரஜினி - டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்

டிஜிட்டல் கழுகார்
டிஜிட்டல் கழுகார்

“மின்னஞ்சலின் இன்பாக்ஸை திறந்து பாரும்” என்று குறுந்தகவல் அனுப்பியிருந்தார் கழுகார். பிறகென்ன... திறந்துப்பார்த்தோம். வழக்கம்போல பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தகவல்களை கொட்டியிருந்தார் கழுகார்!

கமிஷனில் கட்டிங்! அலப்பறை அதிகாரிகள்... அலறும் ஒப்பந்ததாரர்கள்!

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் சாலைப் பணிகளை ஒப்பந்தம் எடுப்பதற்கு கமிஷனாக 13.5 சதவிகிதத்தை மேலிடத்திற்கு கொடுத்துவிட வேண்டும் என்பது எழுதப்படாத உத்தரவாம். இதை வசூலிப்பதற்கு என்றே லாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை மேலிடம் நியமித்துள்ளது. மேலிடத்தின் உதவியாளராக இருக்கும் ‘செல்வா’க்கானவரும் வசூலை கவனிக்கிறார். இந்த நிலையில் 13.5 சதவீதம் கமிஷன் தொகை போக அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டவர்களுக்கு தனியாக பங்கு தர வேண்டும் என்று 6.5 சதவிகிதம் ஒப்பந்ததாரர்களிடம் கறந்துவிடுகிறாரகளாம். இதனை மேலிடத்துக்குத் தெரியாமல் இருவரும் பங்கு பிரித்துக்கொள்கிறார்களாம். இதற்கு ‘வைத்தியம்’ பார்க்கச் சொல்லி முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் ஒப்பந்ததாரர்கள் சிலர் புலம்பியுள்ளனர். அவரும் மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றாராம். இதேபோல சபையின் நாயகர் பகுதியிலும் புகார் எழுந்தது. நாயகரின் தரப்பு ஆள்களும் விஷயத்தை மேலிடத்துக்கு பாஸ் செய்தனராம். ஆனால், நடவடிக்கைதான் இல்லை என்று புலம்புகிறார்கள் ஒப்பந்ததாரர்கள்!

ஆறரை... ஏழரை ஆகுமா என்று தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

“சின்னம்மாவுக்கு எதிராக அறிக்கை!” குழப்பத்தில் தவிக்கும் அமைச்சர்...

சில நாள்களுக்கு முன்பு முதல்வர் தரப்பு மற்றும் இரண்டு முக்கிய அமைச்சர்கள் தரப்பிலிருந்து தென்மாவட்டத்தில் தொடர் சர்ச்சையில் சிக்கும் அமைச்சர் ஒருவருக்கு ‘கான்காலில்’ அலைபேசி அழைப்பு சென்றிருக்கிறது. “சின்னம்மாவுக்கு எதிராக அறிக்கை விடுங்க... இல்லன்னா பதவிக்கு ஆபத்து” என்று அன்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாம். குழப்பத்தில் தவிக்கிறாராம் சர்ச்சை அமைச்சர்!

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

சசிகலா, பன்னீர், எடப்பாடி பழனிசாமி
சசிகலா, பன்னீர், எடப்பாடி பழனிசாமி

கமிஷனுக்கு நெருக்கிய புள்ளி! கலவரமூட்டிய ஸ்டார்...

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அரசு மருத்துவர்கள் சுமார் 1,500 பேர் தனிமைப்படுத்திக்கொள்வதற்காக சென்னையிலுள்ள 16 ஸ்டார் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மூன்று வேளை உணவு உள்பட அனைத்து செலவுகளுக்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்குகிறதாம் அரசு. இந்த நிலையில் மேலிட புள்ளி ஒருவர் தரப்பிலிருந்து, இந்த பில்லை பாஸ் செய்ய ஹோட்டல் தரப்பிலிருந்து 20 சதவிகிதம் கமிஷன் தர வேண்டும் என்று தகவல் பாஸ் செய்யப்பட்டதாம்.

“2,500 ரூபாயே எங்களுக்கு கட்டுப்படியாகலை... கமிஷன் கேட்டு வந்துட்டாங்க. ஸ்டார் ஹோட்டல்ல நீங்க அடிச்ச கூத்து எல்லாம் எங்ககிட்ட ரெகார்டா இருக்கு... எடுத்துவிட்டோம்னா முடிஞ்சது ஜோலி...” என்று ஹோட்டல்கள் தரப்பிலிருந்து எச்சரிக்கை வர கப்சிப் ஆகிவிட்டதாம் மேலிட தரப்பு!

வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிகிறது இதுதானா!

கூட்டணி பேசும் ரஜினி!

ரஜினி
ரஜினி

‘இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை’ என்று சமூகவலைதளங்களில் தன்னைக் கிண்டலடிக்கும் பதிவுகளை எல்லாம் ரஜினி ரசித்து ரசித்து சிரிக்கிறாராம். ‘இப்ப இருக்குற பசங்க செம டேலன்ட்டா இருங்காங்கல்ல...’ என்பதுதான் அவரது கமென்ட்டாக உள்ளதாம். இன்னொரு பக்கம் தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தனக்கு நெருக்கமான இருவரை வைத்து ஆரம்பித்திருக்கிறாராம் ரஜினி. அவர்களில் ஒருவர் பிரபல கல்விக்குழுமங்களின் தலைவர்.

“பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அ.தி.மு.க.வில் கோலோச்சும் ஒரு அமைச்சரின் உறவினர், கொங்கு மண்டல சமுதாய அமைப்பின் தலைவர் என பலருடனும் ரஜினி பேசிவருகிறாராம். கடந்த 2014, 2016 தேர்தல்களின்போது, சமூக வலைதளங்களில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை காமெடியனாக சிலர் திட்டமிட்டு உருவகப்படுத்தியதுபோல, ரஜினியையும் உருவகப்படுத்தக்கூடும். இதை முதலில் உடைக்கும் வேலையை ரஜினி ஆரம்பித்துவிட்டார்” என்கிறது ரஜினிக்கு நெருக்கமான வட்டாரம்.

அண்ணாத்த கிளம்பிட்டார்... பாத்துக்கோ, பாத்துக்கோ!

3-எம் டு என்-95... மாஸ்க்கை மாற்றிய முதல்வர்!

கொரோனா ஆரம்ப காலகட்டத்தில் முதல்வர் என்-95 மாஸ்க்குகளை அணிந்துவந்தார். பிறகு, பச்சை நிறத்தில் இருக்கும் 3-எம் மாஸ்க்குகளை அணிந்துவந்தார். இடையில் பல நேரங்களில் மாஸ்க் அணியாமலும் வலம் வந்தார். பலமுறை அவரது மாஸ்க் உதடுகளுக்கும் கீழே இறங்கியிருந்ததை அதிகாரிகள் பவ்யமாக எடுத்துச் சொல்ல அவ்வப்போதைக்கு சரி செய்துகொண்டாராம். ‘முதல்வரே இப்படி அலட்சியமாக இருக்கலாமா?’ என்று அவரை கவனிக்கும் மருத்துவக் குழுவினர் ஆதங்கத்தில் இருந்தார்கள். இந்த நிலையில்தான் அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதியானது. இதில் சுதாரித்துக்கொண்ட எடப்பாடி, மீண்டும் என்-95 மாஸ்க்குகளை அணிய ஆரம்பித்துவிட்டார்.

‘மாஸ்’க் காட்டும் எடப்பாடி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

புறக்கணிக்கப்படும் சித்த மருத்துவர்கள்! ஏன் இந்த ஓரவஞ்சனை?

வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் கொரோனாவுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையம் ஜூன் 24-ம் தேதி தொடங்கப்பட்டது. அங்கு மூன்று ஷிப்ட்டுகளில் ஆறு சித்த மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களுடன் நர்ஸ்கள், மருத்துவப்பணியாளர்களும் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து எந்த வசதிகளும் செய்து தரப்படுவதில்லையாம். ஆங்கில மருத்துவர்கள் பணி செய்யும் கொரோனா சிகிச்சை மையங்களில் டாக்டர்களுக்கு வாகன வசதி செய்து தரப்படுகிறது. மேலும், கொரோனா பணி முடிந்ததும் தரமான ஒட்டல்களில் தங்க வைத்தல் போன்றவற்றை வசதிகளையும் அரசு செய்து கொடுத்திருக்கிறது. ஆனால், சித்த மருத்துவர்களுக்கு இந்த வசதிகள் ஏதும் இல்லை. “ஏன் இந்த ஓரவஞ்சனை?” என்று புலம்புகிறார்கள் சித்த மருத்துவர்கள்.

சித்தாவுக்கும் வேண்டும் சம உரிமை!

ஸ்டிக்கர் ஒட்டுங்க! வலியுறுத்தும் பா.ஜ.க பிரமுகர்

தேர்தல் நேரத்தில், மத்திய அரசின் திட்டங்களை அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் இருட்டடிப்பு செய்கிறது என்கிற குற்றச்சாட்டை தமிழக பா.ஜ.க-வின் ஊடகப்பிரிவு செயலாளர் பிரசாத் கிளப்பியுள்ளார். ‘இனி மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும்போது, அதை விளக்குவதுபோல் ஸ்டிக்கர் ஒட்டவேண்டும்’ என்கிற கோரிக்கையையும் பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதுவரை முறையாக குடிநீர் இணைப்பு பெறாதவர்களுக்கு உதவும் வகையில் குடிநீர் கட்டமைப்பு வசதிக்காக ரூ.2,267 கோடி ரூபாயை பிரதமர் மோடி ஒதுக்கியிருக்கிறார். அடுத்து வரும் நான்கு வருடங்களில் இந்த சிறப்புத் திட்டம்மூலம் குடிநீர் இணைப்பு தரவேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம். ஆனால், தமிழக அரசே இந்த திட்டத்திற்கு பணம் ஒதுக்கியதாக பிரச்சாரம் செய்யப்படுகிறதாம். இதையடுத்துதான் “இது மத்திய அரசு திட்டம்தானே. அதை அப்படியே மக்களிடம் சொல்வோம்’ என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறாராம் பிரசாத்.

அடேங்கப்பா அ.தி.மு.க-வுக்கே ஸ்டிக்கரா!

எடப்பாடி `ரகசிய' சந்திப்பு; தங்கமணிக்கு கொரோனா வந்தது எப்படி? - டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்

தென்மாவட்ட மணல் புள்ளிக்கு ரெளடி கும்பல் மிரட்டல்!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் மானாமதுரை போலீஸார் கஞ்சா தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் கஞ்சா கும்பல் ஒன்று சிக்கியிருக்கிறது. அவர்களிடம் இருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்கள், பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பல் பிரபல ரெளடி ‘லோடு’ முருகனின் ஆட்கள் என்கிறார்கள். ஒருவரை பழி தீர்ப்பதற்காக இந்தக் கும்பல் காத்திருந்தபோதுதான் போலீசார் இவர்களை சுற்றிவளைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் ‘லோடு’ முருகனின் ஆட்கள், தென்மண்டலத்தில் உள்ள பிரபல மணல் புள்ளி ஒருவரை போனில் தொடர்புகொண்டு, “போலீஸிடம் உங்க ஆட்கள்தான் எங்க கும்பலை காட்டிக்கொடுத்திருக்காங்க. நீயும் இனி எங்களின் எதிரிதான்” என்று மிரட்டியுள்ளனராம்.

கண்ணைத் திறக்கணும் காக்கி!

காவல்துறை
காவல்துறை
மாதிரி புகைப்படம்

ப்ளிஸ் லிஃப்ட் கொடுங்க! பரிதவிக்கும் ஊட்டி டீன்!

ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கான அறிவிப்பு வந்த சில தினங்களில் அங்கு டீன் பதவியில் பணியமர்த்தப்பட்டவர் ரவீந்திரன். தற்போதுவரை மருத்துவமனைக்கான முன்னெடுப்பு பணிகளை இவர் ஒருவரே மேற்கொண்டு வருகிறாராம். ஆனால், இவருக்கு அலுவலகம், வாகன வசதி என எதையும் அரசு செய்து கொடுக்கவில்லை. அவசர வேலைக்குக்கூட சுகாதார பணியாளர்களின் பைக்கில் கெஞ்சி லிஃப்ட் கேட்டு சென்றுவருகிறார். கடந்த வாரம் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அப்போது செய்தியாளர்கள், “எப்போது கல்லூரி கட்டி முடிக்கப்படும்?” என்றனர். அதற்கு டீன், “நேற்று முடிந்தது; இன்று உள்ளது; நாளை எப்படி என்று யாருக்கும் தெரியாது. கட்டும்போது பார்த்துக்கொள்ளலாம்” என கண்ணீர் விடாத குறையாக பதில் அளித்துள்ளார்.

டானுக்கு இருக்கும் செல்வாக்குகூட உயிர்க்காக்கும் டீனுக்கு இல்லையே!

கோவை கொரோனா... தகவல் குளறுபடி... தவிக்கும் செய்தியாளர்கள்!

கோவை
கோவை

கோவை மாவட்ட கொரோனா தொற்று நிலவரங்களை பகிர்ந்துகொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், செய்தியாளர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழு ஒன்று சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தினசரி கோவையில் கொடுக்கும் தகவல்களுக்கும், சென்னையில் கொடுக்கும் தகவல்களுக்கும் எண்ணிக்கையில் பெரிய அளவுக்கு வித்தியாசம் இருந்தது. செல்வபுரம் பகுதியில் அதிகாரிகளிடம் இருந்து சரியான தகவல்கள் வரவில்லை. அங்கு காவல்துறை, சுகாதாரத்துறை, மாநகராட்சி என்று அனைத்துத் துறைகளும் ஒவ்வொரு எண்ணிக்கையை சொல்லின.

இதனால் கடுப்பான தி.மு.க எம்.எல்.ஏ-வான நா.கார்த்திக் “கொரோனா பாதிப்பு தகவலில் வெளிப்படைத்தன்மை இல்லை” என்று குற்றம்சாட்டினார். அதிகாரிகள் என்ன நினைத்தார்களோ... அந்த வாட்ஸ்அப் குழுவை இயங்காமல் செய்துவிட்டனர். தொடர்ந்து ஹாட் ஸ்பாட் தகவல்களை மட்டும் தருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், எதுவும் வழங்கப்படவில்லை!

வாட்ஸ்அப் குழுவை ஒளித்துவைத்தால் கொரோனா ஒழிந்துவிடுமா ஆபீஸர்?

உள்ளே பாராட்டு... வெளியே திட்டு! தி.மு.க-வை விளாசும் வீரமணி, சேவூர் ராமச்சந்திரன்...

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்களை தி.மு.க எம்.பி-க்களும் எம்.எல்.ஏ-க்களும் அடிக்கடி சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிகின்றனர். சிறப்பாக செயல்படுவதாக அறைக்குள் வைத்து கலெக்டர்களை பாராட்டுகிறார்களாம். ஆனால், வெளியே வந்து ‘அந்த சிறப்பை’ சொல்ல முடியவில்லையாம். சொன்னால் கட்சித்தலைமையிலிருந்து ஓலை வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்களாம். அதனால், உள்ளே பாராட்டிவிட்டு வெளியில் வந்தவுடன், பத்திரிகையாளர்களிடம், ‘மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் படுமோசம்’ என்று பேட்டி தட்டுகிறார்கள்.

அமைச்சர் வீரமணி
அமைச்சர் வீரமணி

இதுபற்றி அமைச்சர் வீரமணியிடம் கலெக்டர்கள் புகார் கூற... “துண்டு சீட்டு தி.மு.க தலைவர்கள் இருட்டு அறையிலிருந்து அறிக்கை விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கொதித்துவிட்டார். திருவண்ணாமலையிலும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், “கொரோனா பீதியில் மூணு மாசமா வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த எ.வ.வேலு இரண்டு முறை மட்டுமே கலெக்டரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறார். கலெக்டர் உரிய விளக்கம் கொடுத்த பிறகும் வடிகட்டிய பொய்யை கூச்சமின்றி பேட்டியாக கொடுக்கிறார். இனியாவது வாயை வச்சிகிட்டு சும்மா இருங்க” என்று கொதித்திருக்கிறார்.

“இருட்டு அறையில் முரட்டு அறிக்கை...”, “வாயை வெச்சிக்கிட்டு சும்மா இரு!” அட... தெலுங்கு படங்களுக்கு டைட்டில் ரெடி!

திவாகரன் இயற்றிய ராமாயணம்!

திவாகரன்
திவாகரன்

சமீபத்தில் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் திடீரென கலந்துகொண்ட சசிகலாவின் தம்பி திவாகரன், “நான் இந்த லாக்டெளனில் கம்ப ராமாயணம் படித்துவருகிறேன். தற்போது சுந்தரகாண்டம் படிக்க தொடங்கியுள்ளேன். அதில் வருவதுபோல்தான் இப்போது நடக்கிறது” என்று பேசவும் மன்னார்குடி அ.தி.மு.க-வில் சலசலப்பு ஏற்பட்டுவிட்டது. “சிறைபிடிக்கப்பட்ட சீதையை அனுமான் மீட்டுகொண்டு வருவார். அதன் பிறகு சுபம் ஏற்பட்டு மீண்டும் ஆட்சி பொறுப்பில் ராமன் அமர்வார். தற்போது சிறையில் இருக்கும் சசிகலாவை மீட்டு வருவதற்கான முயற்சிகளை அனுமன்போல திவாகரன் செய்கிறார். சசிகலா வெளியே வந்தவுடன் ஆட்சிப் பொறுப்பில் அமரப் போகிறார். இதைத்தான் அண்ணன் பூடகமாக சொல்லியுள்ளார்” என்று திவாகரன் புகழ் பாடுகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். விட்டால் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி அண்ணன்தான் என்பார்களோ?!

கொடுத்த காசுக்கு மேல ஓவரா கூவுறாங்கப்பு!

பெண் தாதாவுக்கு அடைக்கலம்! சர்ச்சையில் புதுச்சேரி தி.மு.க புள்ளி

தொடர்ச்சியாக மூன்று கொலைகளை அரங்கேற்றி புதுவையின் பெண் தாதாவாக உருவெடுத்தவர் எழிலரசி. பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் அவர்மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. சமீபத்தில் சிறையிலிருந்து வெளிவந்த எழிலரசி, மதுக்கடை உரிமையாளர் வெங்கடேஷ் என்பவரை மிரட்டி பணம் பறிக்க ஆட்களை ஏவியிருக்கிறார். வசூலுக்குச் சென்றவர்களை போலீசார் கைது செய்துவிட, எழிலரசி தலைமறைவாகிவிட்டார். அவரைக் கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எழிலரசிக்கு அடைக்கலம் தந்து ஆதரிப்பவர் தி.மு.க-வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் என்று பரபரக்கிறது புதுச்சேரி.

மிஸ்டர் கழுகு: அநாகரிகத்தின் உச்சத்தைத் தொட்ட அறிக்கைப் போர்!

அறம் தவறிய அறநிலையத்துறை! அதிகாரியை கைவிடும் மேலிடம்!

இந்து சமய அறநிலையத்துறையில் ஒரு பெண் அதிகாரி மீதான புகார் முதல்வர் அலுவலகம் வரை சென்றுள்ளது. அதில் கொரோனா காலத்தில் அறநிலையத்துறையில் நடந்து முறைகேடுகளை அந்தத் துறையின் அதிகாரிகளே பட்டியலிட்டு அனுப்பியிருக்கிறார்கள். ஏற்கனவே அந்த பெண் அதிகாரிமீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் மேலிட ஆசியால் தப்பிவந்தாராம். இப்போது விவகாரம் மேலிடத்துக்கும் மேலிடம்வரை கசிந்துவிட்டதால் அவரை கைவிடும் முயற்சியில் இருக்கிறதாம் இரண்டாம்கட்ட மேலிடம்!

இதையும், ‘எல்லாம் மேல இருப்பவன் பார்த்துப்பான்’ என்று சொல்லி கடவுள் மீது பாரத்தை போடாமல் இருந்தால் சரி!

அடுத்த கட்டுரைக்கு