Published:Updated:

சசிகலா `விடுதலை' ரகசியம்; முதல்வருக்கு ஆபத்தா? உளவுத்துறை பதில் என்ன? - டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்

டிஜிட்டல் கழுகார்
டிஜிட்டல் கழுகார்

ஃபேஸ்புக் மெசஞ்சரில் ‘ஸ்மைலி’ அனுப்பினார் கழுகார். பதிலுக்கு ‘தம்ஸப்’ அனுப்பினோம். அடுத்தடுத்து தகவல்களைத் தட்டிவிட்டார் கழுகார்.

சசிகலா விடுதலை ட்வீட்... பின்னிருக்கும் ரகசியம்!

ஆகஸ்ட் 14-ம் தேதி சசிகலா சிறையிலிருந்து வெளியே வருகிறார் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவிவருகிறது. ஆனால், இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்கிறார்கள். சசிகலா விடுதலை என்றால் கர்நாடகச் சிறைத்துறைதான் இதுகுறித்து அதிகாரபூர்வமாக தெரிவிக்க வேண்டும்; ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

அடுத்து, சசிகலாவுக்கு நீதிமன்றம் விதித்த பத்துக் கோடி ரூபாய் அபராதத் தொகையைச் செலுத்திவிட்டார்களா என்பது உறுதிசெய்யப்பட வேண்டும். பரப்பன அக்ரஹார சிறையில் விதிமுறைகளை மீறியதாக கர்நாடகாவின் அன்றைய சிறைத்துறை அதிகாரி ரூபா ஓர் அறிக்கையை கர்நாடக அரசிடம் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கை என்னவானது, அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆகிய கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும். அதன் பிறகே சசிகலாவின் விடுதலையைப் பற்றி யோசிக்க முடியும்.

சசிகலா
சசிகலா

வரும் நாள்களில் மேற்கண்ட பிராசஸ் எல்லாம் நடந்தாலும் இரு மாதங்களுக்கு முன்பே இதுகுறித்து பா.ஜ.க தரப்பிலிருந்து தகவல் வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் இப்போது தமிழக அரசியல் களத்தின் ஹாட் டாபிக்காக உள்ளது. அந்தவகையில், பா.ஜ.க-வின் ஆசீர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டரில் இதுகுறித்து வெளியிட்ட தகவல் அரசியல் காய்நகர்த்தலாகவே பார்க்கப்படுகிறது. மேலும் அந்த ட்விட்டரில், ‘வெயிட் ஃபார் ஃபர்தர் அப்டேட்’ என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இப்படி ஒரு பதிவை வெளியிட்டதன்மூலம் அ.தி.மு.க-வை பா.ஜ.க ‘பல்ஸ்’ பார்க்கிறது. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் என்ன ரியாக்ட் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து பா.ஜ.க-வின் அடுத்த ‘மூவ்’கள் அமையும். தவிர இப்படி ட்வீட் செய்ததின் மூலம் தமிழகத்தில் சுவாமி, ஆடிட்டர் வரிசையில் செல்வாக்கு பொருந்திய நபராக நானும் இருக்கிறேன் என்பதையும் தமிழக அரசியல் களத்துக்குத் தெரிவித்துள்ளார் ஆசீர்வாதம்!

முதல்வருக்கு ஆபத்தா? மறுக்கும் உளவுத்துறை!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சேலம், கோவை, திருச்சி மாவட்டங்களுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ‘முதல்வருக்கு மத அடிப்படைவாதிகள், தமிழ் தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதாகவும், முதல்வரின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று 11 மாவட்ட எஸ்.பி-க்களுக்கு உளவுத்துறை தகவல் அனுப்பியிருப்பதாகவும்’ செய்திகள் வெளியாகி பரபரப்பானது. ஆனால், இந்தத் தகவல் உண்மை இல்லையாம். இதனை உளவுத்துறை வட்டாரங்கள் மறுத்துள்ளன.

எல்லை தாண்டும் அதிகாரி... தவியாய் தவிக்கும் அமைச்சர்!

முதல்வர் அலுவலகத்தின் உயரதிகாரி ஒருவருக்கும் மற்ற துறை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்குமான மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. ஏற்கெனவே மின்வாரியத்தில் இந்த உயரதிகாரியின் கரங்கள் இறுகுவதாக உயரதிகாரிகள் இடையே அதிருப்தி ஏற்பட்ட நிலையில், அமைச்சர் ஒருவரும் ஏகத்துக்கும் அப்செட்டில் இருக்கிறாராம். ‘மண்ணின் மைந்தர்கள்’ நலனை நிர்வகிக்கும் அமைச்சரின் துறையில் அந்த உயரதிகாரி ஏகத்துக்கும் எல்லை தாண்டுவதாகக் கூறப்படுகிறது. முதல்வர் அலுவலக அதிகாரி என்பதால் யாரிடம் புகார் சொல்வது என்று தெரியாமல் அமைச்சர் தவிக்கிறாராம்!

மாநகராட்சி ஆணையர் பதவி... தயார் நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி!

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

‘சென்னையில் கொரோனா தொற்று வேகத்தை மாநகராட்சி விரைவாகக் கட்டுப்படுத்தவில்லை’ என்று மத்திய சுகாதாரத்துறையினர் வருத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் தரப்பிலிருந்துதான், ‘மாநகராட்சி ஆணையர் பிரகாஷை மாற்ற வேண்டும்’ என்றும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாம். ஆனால், அவருக்கு மேலிட செல்வாக்கு இருப்பதால் அவரை மாற்ற முடியாமல் முதல்வர் கையைப் பிசைகிறார் என்கிறார்கள். ஒருவேளை பிரகாஷை மாற்றினால், அந்த இடத்தில் ஏற்கெனவே திறம்படப் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானியைக் கொண்டுவரும் திட்டமும் பரிசீலனையில் உள்ளதாம். சமீபத்தில் கொரோனாவுக்காக பொறுப்பேற்ற அனுபவமிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் இந்த ஐடியாவை முன்மொழிந்திருக்கிறாராம்.

கோஷ்டி பூசலில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்... தவியாய்த் தவிக்கும் தலைமைச்செயலாளர்!

தலைமைச் செயலாளர் கே.சண்முகம்
தலைமைச் செயலாளர் கே.சண்முகம்

தமிழக தலைமைச்செயலாளர் சண்முகத்துக்கும் சில துறைகளின் முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டிருக்கிறது. தலைமைச்செயலாளர் கட்டுப்பாட்டில்தான் அனைத்துத்துறையின் செயலாளர்களும் வருவார்கள். ஆனால், தலைமைச்செயலாளருக்குக் கட்டுப்படாமல் ஐ.ஏ.எஸ்-கள் கோஷ்டி கோஷ்டியாகப் பிரிந்து ‘காரியங்களை’ சாதித்துக்கொள்வதுதான் பனிப்போருக்குக் காரணமாம். கொரோனா ஒழிப்பு பணியில் தொய்வு ஏற்பட இதுவே முக்கிய காரணம் என்று வருத்தத்தில் இருக்கிறாராம் தலைமைச்செயலாளர்.

டெல்லிக்கும் பறக்கும் பெட்டிஷன்கள்... கடலூரைக் கைக்காட்டும் கதர் தலைவர்!

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக டெல்லிக்கு பெட்டிஷன்கள் பறக்கின்றனவாம். குறிப்பாக, அழகிரியின் சொந்த மாவட்டமான கடலூரிலிருந்தே அதிகமான புகார்கள் சென்றுள்ளன. ‘இதற்குப் பின்னால் முன்னாள் மாநிலத் தலைவர் ஒருவர் இருக்கிறார். மீண்டும் பதவியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இப்படி செய்கிறார்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியிருக்கிறது அழகிரி தரப்பு. இன்னொரு பக்கம், ‘மாவட்ட தலைவர்களை மாற்ற வேண்டும்’ என்று ஒரு பட்டியலையும் டெல்லிக்கு அனுப்பியிருக்கிறதாம் அழகிரி தரப்பு.

இஸ்லாமியரைக் குறிவைக்கும் பா.ஜ.க... சத்தமில்லாமல் சாதிக்கும் முருகன்!

எல்.முருகன்
எல்.முருகன்

பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் சத்தமில்லாமல் சில வேலைகளைப் பார்த்துவருகிறாராம். “அண்ணனோட அரசியல் மூப்பனார் பாலிஸி மாதிரி... சத்தமில்லாமல் சாதிப்பார்” என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். தி.மு.க-விலிருந்து வி.பி.துரைசாமியைத் தூக்கியதைப்போல மேலும் இரண்டு ‘திராவிட’ தலைகளுக்கு ஸ்கெட்ச் போட்டு, கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் நெருங்கிவிட்டதாம். நடிகர் ஒருவரையும் சத்தமில்லாமல் பேசி அவரது கட்சியை பா.ஜ.க-வில் சங்கமிக்கவைக்க உத்தரவாதம் வாங்கிவிட்டார் என்கிறார்கள். இஸ்லாமியர்கள் தரப்பிலிருந்தும் முக்கியஸ்தர் ஒருவர் இழுக்க காய்நகர்த்தல்கள் நடக்கின்றன. அந்தவகையில் சென்னையில் பாரம்பர்யம் மிக்க செல்வாக்கான ஒரு குடும்பத்தினருடன் முருகன் பேச்சுவார்த்தை நடத்தினாராம். விரைவில் அவரும் கமலாலயம் பக்கம் வந்துவிடுவார் என்கிறார்கள்.

‘தமிழ் உச்சரிப்பு’ கசிந்தது எப்படி? கடும் நடவடிக்கை எடுக்க தீவிரம்!

தமிழ் உச்சரிப்பின்படி ஊர் பெயரை மாற்றிய அரசாணை, எதிர்ப்புகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில், ‘கொரோனா நேரத்தில் இப்படியான சர்ச்சை தேவையா?’ என முதல்வர் கடுமைக் காட்டினாராம். இதனால், ‘அரசாணை வெளியாகும் முன்பே அந்தத் தகவல் வெளியே கசிந்தது எப்படி?’ என்று மேல்மட்ட அளவில் விசாரணை நடக்கிறது. ‘தகவலைக் கசியவிட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது.

தமிழ் ஊர்ப் பெயர்
தமிழ் ஊர்ப் பெயர்

இதுதொடர்பான விசாரணையில், ‘தமிழ் வளர்ச்சித்துறையிலிருந்து இதற்கான சர்க்குலர் கடந்த ஏப்ரல் மாதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வருவாய்த்துறைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. எனவே, அங்கிருந்துதான் தகவல் கசிந்திருக்கும்; எங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஒதுங்கிவிட்டனராம். ‘பந்து நம்ம பக்கம் திரும்பிவிட்டதே, முதல்வருக்கு என்ன பதில் சொல்வது?’ என வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்களாம்.

தேக்கு, ஈட்டி மரத்தில் கட்டில், பீரோ... கன்னியாகுமரி ‘பக்திமான்’ கடத்தல் கைங்கர்யம்!

கன்னியாகுமரி மாவட்டம் களியல் வன அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து சமீபத்தில் ஈட்டி, தேக்கு எனப் பெரிய மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் மாவட்ட வனத்துறையின் தலைமைக்கு அலைபேசியில் தகவல் சொல்லியிருக்கிறார்கள். “அது மேலிடத்து விவகாரம்ங்க” என்று பதில் வந்ததாம். விசாரித்ததில், மாவட்டத்தின் பக்திமயமான உயரதிகாரி ஒருவர், தக்கலைப் பகுதியில் பங்களா ஒன்றைக் கட்டுகிறார். பங்களாவின் கதவுகள், கட்டில், பீரோக்கள் எல்லாம் சுத்தமான தேக்கு, ஈட்டி மரத்தில்தான் செய்ய வேண்டும் என்பது அவரது ‘அவா’வாம். அதற்காகத்தான் அந்த மரங்கள் வெட்டிக்கொண்டு செல்லப்பட்டதாக சொல்கிறார்கள் அக்கம்பக்கத்தினர். ஏற்கெனவே அந்த பக்திமான்மீது மோசடி குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் இந்த மரக்கடத்தல் விவகாரம் சூட்டைக் கிளப்பியிருக்கிறது.

சசிகலாவுக்கு சிக்கல்; பா.ஜ.க டிக் அடித்த `40'. எடப்பாடி vs ஐபேக்! டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்

செந்தில்பாலாஜி ஆதரவாளர்களுக்குப் பதவி... கடுகடு கடுப்பில் கரூர் உடன்பிறப்புகள்!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

சமீபத்தில் தி.மு.க-வில் அமைப்புரீதியாக கரூர் மாவட்டதை நான்கு நகரமாகவும், 13 ஒன்றியங்களாகவும் பிரித்து பதவிகளை நிரப்பியுள்ளது கட்சித் தலைமை. இதில் மொத்தப் பதவிகளும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறதாம். மாவட்ட அமைச்சரான எம்.எஸ்.விஜயபாஸ்கர் தரப்பில் செந்தில் பாலாஜியின் ஆட்களை அ.தி.மு.க-வுக்கு இழுக்க ‘மூவ்’ நடப்பதால் இந்த அதிரடி நடவடிக்கை என்கிறார்கள். இந்த நிலையில், “காலம் காலமாக கட்சிப் பணிகள் செய்த சீனியர்களான எங்களுக்குக் கிடைக்கவிருந்த பதவிகள் கிடைக்கவில்லை; நாங்கள் அ.தி.மு.க பக்கம் செல்லப்போகிறோம்!” என்று எச்சரிக்கை விடுத்துள்ளனராம் கரூரின் பாரம்பர்ய தி.மு.க புள்ளிகள்!

வம்பில் சிக்கிய மூர்த்தி! காட்டிக்கொடுத்த வீடியோ

மதுரை தி.மு.க-வில் அதிரடி நபர் பி.மூர்த்தி. ஆரம்பத்தில் மு.க.அழகிரியின் தீவிர விசுவாசியாக இருந்தவர். பின்னர் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பக்கம் அணி மாறிவிட்டார். மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராகவும் இருக்கும் இவர், கட்சி நிர்வாகிகளை மரியாதை இல்லாமல் பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு எப்போதுமே உண்டு. இந்த நிலையில் அட்வைஸ் செய்கிறேன் பேர்வழி என்று பா.ஜ.க பிரமுகர் ஒருவரின் வீட்டுக்கே சென்று மூர்த்தி ‘அதிரடி’ காட்டிய சம்பவம் சி.சி.டி.வி வீடியோ வடிவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘வலியப்போய் வீடியோவில் சிக்கிக் கொள்வதே வேலையாகப் போய்விட்டது’ என்று மூர்த்திமீது கட்சித் தலைமை கடுப்பாகிவிட்டதாம்.

கல்லா கட்டும் உள்ளாட்சி அதிகாரிகள்

ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடந்த 27 மாவட்டங்களிலும் கவுன்சிலர், துணைத் தலைவர், தலைவர் இருப்பதால் அனைத்துப் பணிகளுக்கான செலவிலும் ஓரளவுக்கேனும் வெளிப்படைத்தன்மை இருக்கிறது. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட ஒன்பது மாவட்டங்களில் கையாளப்படும் நிதியில் அதிகளவு குளறுபடிகள் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மாவட்டங்களில் அதிகாரிகளின் மேற்பார்வையில்தான் அனைத்துப் பணிகளும் நடக்கின்றன. குடிநீர், சாலை மற்றும் கால்வாய் சீரமைப்பு, புதிய திட்டப் பணிகள் போன்றவற்றுக்கான நிதிப் பங்கீட்டில் வெளிப்படைத்தன்மை மறைக்கப்படுகிறது. கலெக்டர்கள் உட்பட பிற உயர்மட்ட அதிகாரிகள் கொரோனா நேரத்தில் பிஸியாக இருப்பதால் உள்ளாட்சியில் நடக்கும் ஊழலைக் கண்டிக்க ஆளில்லை என்று புலம்புகிறார்கள் உள்ளாட்சி தொடர்பான சமூக ஆர்வலர்கள்.

மிஸ்டர் கழுகு: மோடியிடம் அமைதி காத்த ஸ்டாலின்...

சிபாரிசுக்குச் சிக்கல்... நீலகிரி ஆட்சியர் அதிரடி!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

ஊரடங்கால் நீலகிரிக்குத் தேவையற்ற பயணம் மேற்கொள்வோரை அனுமதிக்க முடியாது என மாவட்ட ஆட்சியர் கடுமையாக உத்தரவிட்டிருந்தார். ஆனால், பர்லியார் மற்றும் குஞ்சப்பனை சோதனைச்சாவடிகளில் தங்களுக்கு வேண்டப்பட்ட வெளியூர் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும் சில அதிகாரிகளும் போன் மூலம் தினமும் சோதனைச்சாவடி ஊழியர்களைப் பாடாய்ப்படுத்தியுள்ளார்கள். இவர்களுக்குப் பயந்து சில வாகனங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் பூதாகரமாகி மாவட்ட நிர்வாகத்தின் மேலிடத்துக்குச் சென்றது. இதையடுத்து, யார் சிபாரிசு செய்கிறார்களோ அவர்களின் பெயர், பொறுப்பு உள்ளிட்ட விவரங்கள் மற்றும் உள்ளே வருபவர்களின் விவரங்கள் ஆகியவற்றை வாங்கி வையுங்கள் என உத்தரவிட்டப்பட்டதாம். சிபாரிசு பார்ட்டிகள் கப்சிப் ஆகிவிட்டார்கள்.

தவிக்கும் நாகை மீனவ கிராமம்!

மயிலாடுதுறையிலிருந்து மாவட்டத் தலைநகரான நாகைக்குச் செல்ல திருவாரூர் அல்லது காரைக்கால் மாவட்டத்தைக் கடந்து செல்ல வேண்டும். மாவட்டத்துக்கு இடையிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள இந்த நேரத்தில், மாவட்டத் தலைநகருக்குச் செல்ல இ-பாஸ் எடுக்க வேண்டியுள்ளது. மேலும், நாகை மாவட்டத்திலுள்ள சந்திரபாடி என்ற மீனவக் கிராமத்திற்கு காரைக்கால் எல்லையைக் கடந்துதான் செல்லமுடியும். மாவட்ட எல்லையை சீல் வைத்திருப்பதால் இந்த கிராம மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அடுத்த கட்டுரைக்கு