Published:Updated:

`சசிகலா ரீ-என்ட்ரி’, தினகரனுக்கு பா.ஜ.க-வின் `ஸ்கெட்ச்..!’ - டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்

தினகரன் மற்றும் சசிகலா
News
தினகரன் மற்றும் சசிகலா

``அட்வான்ஸ் சுதந்திர தின வாழ்த்துகள். நாளை கோட்டைக்குச் செல்கிறேன். மெசெஞ்சரைப் பாரும்...’’ - கழுகாரின் தகவல் ஒளிர்ந்தது. மெசெஞ்சரைத் திறந்தோம்.

நோட்டம் விடும் அமலாக்கத்துறை... நோட் போட்ட உளவுத்துறை

சென்னை எத்திராஜ் சாலையிலுள்ள சர்வீஸ் அப்பார்ட்மென்ட் வீடு ஒன்றை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரகசியமாக நோட்டமிடுகிறார்கள். அந்த வீட்டின் மூன்றெழுத்து பிரமுகர் அரசுத்துறைகளில் பணியிட மாற்றம், பதவி உயர்வு விவகாரங்களைக் கச்சிதமாக முடித்துத் தருகிறாராம். சமீபத்தில்கூட மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரி ஒருவர், சென்னையில் பசையான பிரிவுக்கு மாற்றல் வாங்கினாராம். இதையெல்லாம் மோப்பம் பிடித்த மத்திய உளவுப்பிரிவு, டெல்லிக்கு `நோட்’ போட்டுள்ளது.

பைனாகுலர் வெச்சு பார்ப்பாங்களோ!

பந்து வீசிய மன்னார்குடி டீம்
`நோ பால்’ காட்டும் டெல்லி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சசிகலாவின் அரசியல் `ரீ என்ட்ரி’யை முன்வைத்து மன்னார்குடி தரப்பில் டெல்லியில் காய் நகர்த்துகிறார்கள். மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அமித் ஷா ஆகியோரின் பெயர்களை இவர்கள் பயன்படுத்துகிறார்களாம். வரிசையாகச் சொல்கிறேன்.

* சசிகலாவின் கணவர் நடராஜனின் சொந்த கிராமமான விளாரைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் குஜராத் உயரதிகாரி மூலம் காய் நகர்த்தியுள்ளார். அசைந்து கொடுக்கவில்லை டெல்லி.

சசிகலா
சசிகலா

* சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையைச் சேர்ந்த கேப்டன் ஒருவரைவைத்து டெல்லியை அணுகியிருக்கிறார்கள். அப்போதும் வேகவில்லை `பப்பு’!

* ஆர்.கே.நகர்காரர் தரப்பில், டெல்லியின் முக்கிய ஆலோசகர் ஒருவரை நாடியிருக்கிறார்கள். பா.ஜ.க மேலிடம், `அவரையெல்லாம் சட்டை செய்ய வேண்டாம்’ என்று அந்த ஆலோசகரிடம் முகத்தில் அடித்தாற்போலச் சொல்லிவிட்டதாம்.

`எப்படிப் பந்தை வீசினாலும், அம்பயர் `நோ பால்’ சிக்னல் காட்டுகிறாரே...’ என்று நொந்துபோயிருக்கிறது மன்னார்குடி தரப்பு! ஆனாலும், மனம் தளராத முயற்சியாக இப்போது சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள முன்னாள் உயரதிகாரிகளை வைத்து அடுத்தடுத்த பந்துகளை வீசத் தயாராகிவருகிறார்கள்.

ஃபுட் பால் கிரவுண்டுல கிரிக்கெட் பால் வீசினா எப்படி?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சுங்கத்துறையுடன் மோதும் காக்கி!

அம்மோனியம் நைட்ரேட்
அம்மோனியம் நைட்ரேட்

``மணலியில் பல ஆண்டுகளாக அம்மோனியம் நைட்ரேட் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்ததுபோல, வேறு எங்கேனும் ஆபத்தான கெமிக்கல்கள் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளனவா?” என்று சென்னை போலீஸ் உயரதிகாரி ஒருவர் சுங்கத்துறை `இணை’ அதிகாரியிடம் கேட்டிருக்கிறார். ``இதிலெல்லாம் ஏன் தலையிடுகிறீர்கள்?” என்கிற ரீதியில் ரியாக்‌ஷன் வந்துள்ளது. கடுப்பான போலீஸ் அதிகாரி, மாநகர உளவுப்பிரிவை களமிறங்கச் சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து சுங்கத்துறையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் சரக்கு பெட்டக நிலையங்களை நோண்ட ஆரம்பித்துள்ளது உளவுப்பிரிவு. முழு ரிப்போர்ட் கிடைத்த பிறகு பஞ்சாயத்து ஆரம்பிக்கும் என்கிறார்கள்.

ஓரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரதமர் ஏரியாவில் வீடு
எடுபடுமா லாட்டரியின் லாபி!

டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் பிரதமர் மோடியின் இல்லம் அமைந்துள்ளது. இந்தச் சாலைக்கு இரண்டு தெரு தள்ளி, வி.வி.ஐ.பி ஏரியாவில் மாதம் 20 லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு வீடு பிடித்திருக்கிறாராம் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல லாட்டரி குடும்பப் பிரமுகர். முழுக்க முழுக்க அரசியல் லாபிக்காகவே இந்த ஏற்பாடாம். டெல்லியில் `ஒப்பீனியன் மேக்கர்ஸ்’ என்கிற பெயரில் மத்திய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, உயரதிகாரிகள் என பல்வேறு தரப்பினருடன் தொடர்பிலிருப்பதுதான் அந்த லாபியின் நோக்கம். `அந்த லாட்டரி பிரமுகர் தி.மு.க-வின் மேலிடக் குடும்ப உறுப்பினரின் வலதுகரமாகவும் செயல்படுகிறார்’ என்கிறார்கள். முதற்கட்டமாக தமிழகம், மேற்கு வங்காளம் ஆகிய இரு மாநில அரசியல் நிலவரங்களை கவனிக்க ஆரம்பித்திருக்கிறது இந்த லாபி.

பரிசு விழுமா?!

நீதி கேட்கும் மயிலாடுதுறை குடும்பம்... கட்டப்பஞ்சாயத்து செய்கிறதா போலீஸ்?

மயிலாடுதுறை
மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இடம் தொடர்பான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு தரப்பிடம் பணம் வாங்கிக்கொண்டு போலீஸார் நடத்திய கட்டப்பஞ்சாயத்தில் மன உளைச்சல் ஏற்பட்டு ஜெயக்குமார் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகு போலீஸ் துணையுடன் அந்த இடத்தை ஆக்கிரமித்து கல், மண் கொட்டப்பட்டது. `வழக்கு நிலுவையில் இருக்கும்போது இடத்தை எப்படி ஆக்கிரமிக்கலாம்?’ என்று நீதி கேட்டு ஜெயக்குமார் குடும்பத்தினர் காவல் நிலையம், டி.எஸ்.பி அலுவலகம், எஸ்.பி அலுவலகம் என்று வரிசையாக முறையிட்டும் பலனில்லை. இறுதியாக மத்திய மண்டல ஐ.ஜி-யான ஜெயராமிடம் முறையிட்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட போலீஸாரை அழைத்து காய்ச்சி எடுத்திருக்கிறார் ஐ.ஜி. ஆனாலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.

காசு... பணம்... மணி... துட்டு!

நிலச்சரிவில் உயிரிழந்த மக்கள்... ஏன் உதவவில்லை ஓ.பி.எஸ்?

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

மூணாறு நிலச்சரிவில் 71 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. உயிரிழந்த பலரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதையறிந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது சொந்தப் பணத்தில் 25,000 முதல் 50,000 ரூபாய் வரை கொடுத்துள்ளார். ஆனால், மூணாறு அருகேயுள்ள தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், தேனி எம்.பி-யான ரவீந்திரநாத் குமாரும் இதுகுறித்து வாயே திறக்காதது விமர்சனத்தை எழுப்பியிருக்கிறது. இதைவைத்து ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக அரசியல் செய்யத் திட்டமிட்டுள்ளன எதிர்க்கட்சிகள்!

அரசியல் சரிவு ஏற்படாம பார்த்துக்கிறதுல பிஸியா இருந்துட்டாரோ!

``என்கிட்டயே கமிஷனா?’’ ராமநாதபுரத்தில் எகிறும் காக்கி!

ராமநாதபுரத்தைச் சேர்ந்த காவல் `துணை’ அதிகாரி ஒருவர் மதுரையில் பணிபுரிகிறார். ராமநாதபுரத்திலிருக்கும் அவரது வீட்டின் மேல்தளத்தில் அதே ஊரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவர் குடியிருக்கிறார். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தன. இதற்கிடையே போலீஸ் அதிகாரி அந்த புரோக்கர் மூலமாக சுமார் அரைக்கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை வாங்கியிருக்கிறார். அதற்கு இரண்டு சதவிகிதம் கமிஷன் பேசப்பட்டதாம். நிலத்தை முடித்துக் கொடுத்தவுடன் புரோக்கர் கமிஷனைக் கேட்டிருக்கிறார்.

காவல்துறை
காவல்துறை
மாதிரி புகைப்படம்

``என்கிட்டயே கமிஷனா?’’ என்று கொந்தளித்த போலீஸ் அதிகாரி, ராமநாதபுரம் போலீஸாரை வைத்து வீட்டை காலிசெய்யச் சொல்லி புரோக்கருக்கு நெருக்கடி கொடுக்கிறாராம். இதையடுத்து, புரோக்கரின் உறவினர் ஒருவரின் காரை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள். விவகாரம் நீதிமன்றம் வரை சென்று, காரை ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், நீதிமன்ற உத்தரவை மதிக்காத போலீஸார், `வீட்டை காலி செய்தால்தான் காரைக் கொடுப்போம்’ எனக் கூறி பஞ்சாயத்து செய்கிறார்கள். சம்பந்தப்பட்ட அந்தக் காவல் `துணை’ அதிகாரியும், மாவட்ட உயரதிகாரி ஒருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நீதிமன்ற உத்தரவையே மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மாமூல் வாங்குறவங்ககிட்டயே கமிஷன் கேட்டா எப்படி?

``பிச்சிப்புடுவேன், பிச்சு..!’’ - சீறிய புதுக்கோட்டை எஸ்.பி!

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் டி.எஸ்.பி-யாகப் பணிபுரிந்த பிரான்சிஸ் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்துக்கு டிரான்ஃஸ்பர் செய்யப்பட்டுள்ளார். கீரனூர் பகுதியிலுள்ள டாஸ்மாக் பார்கள் `சிறப்பாக’ச் செயல்படுவதற்கு இவரது பரிபூரண ஆதரவு இருந்ததாம். இதற்கு நன்றிக்கடனாக இவருக்கு பெரிய அளவில் வழியனுப்பு விழா நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் பார் உரிமையாளர்கள். கீரனூர் அருகே களமாவூரிலுள்ள தனியார் மண்டபத்தில் கிடா விருந்துடன் விழா ஏற்பாடாகியிருக்கிறது. கடைசி நேரத்தில் தகவல் `குடிமகன்’களிடமும் காட்டுத்தீயாகப் பரவி, மாவட்ட எஸ்.பி-க்கும் சென்றிருக்கிறது. கடுப்பானவர், ``பிச்சுப்புடுவேன் பிச்சு..!’’ என்று விழாவுக்குத் தடைவிதித்துவிட்டாராம். அதிகாரிக்கு வாழ்த்து மட்டும் கூறி, அனுப்பிவைத்திருக்கிறார்கள்!

கறி விருந்து போச்சே!

``தி.மு.க-வை வீழ்த்தலாம்’’
ஐடியா கொடுத்த வி.ஐ.பி
டி.டி.வி தினகரன்
டி.டி.வி தினகரன்

சமீபத்தில், பா.ஜ.க மேலிட தரப்பிடம் வி.ஐ.பி ஒருவர் பேசியிருக்கிறார். அப்போது, `அ.தி.மு.க-வுடன் இணைவதற்கு தினகரன் தரப்பு தயாராக இருக்கிறது. ஆனால், பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி இருக்கக் கூடாது என்று கண்டிஷன் போடுகிறார்கள். அது ஒன்றும் பிரச்னை இல்லை; அ.தி.மு.க-வும், அ.ம.மு.க-வும் முதலில் ஒன்று சேரட்டும். பிறகு உருட்டி மிரட்டி கூட்டணிக்கு நாம் தலைமை வகிக்கலாம். இப்படிக் கூட்டணி வலு கூடுவதால், தி.மு.க-வை வீழ்த்துவதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார் வி.ஐ.பி. `அமித் ஷாவிடம் பேசிய பிறகு முடிவெடுக்கலாம்’ என்று மேலிடத்திலிருந்து தகவல் வந்ததாம்.

அரசியல்ல `போங்கு’ ஆட்டமெல்லாம் சகஜமப்பா!

அ.தி.மு.க தலைமை யார்?
தள்ளிப்போகும் உட்கட்சித் தேர்தல்!

அ.தி.மு.க வழக்கறிஞர் அணியுடன் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஆகஸ்ட் 13-ம் தேதி ஆலோசனை நடத்தினர். கொரோனா நேரத்தில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனைகளைக் கேட்டிருந்தது. அதற்காக கூட்டப்பட்ட கூட்டம் அது. இந்தக் கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாம். 2019-ம் ஆண்டு நடத்தியிருக்க வேண்டிய உட்கட்சி தேர்தலுக்கு அ.தி.மு.க தரப்பில் கால அவகாசம் பெற்றிருந்தனர்.

அந்த அவகாசம் முடியும் தறுவாயில் இருப்பதால், அது குறித்தும் பேசப்பட்டதாம். `உட்கட்சித் தேர்தலை நடத்தினால், `கட்சித் தலைவர் பொறுப்பையும் தேர்தல் மூலமாகவே நிரப்ப வேண்டும்’ என்று கே.சி.பழனிசாமி நீதிமன்றத்தில் அழுத்தம் கொடுப்பார். ஆக, உட்கட்சித் தேர்தலை மேலும் ஒரு வருடத்துக்குத் தள்ளி வைக்கக் கோரலாம்’ என்று பேசப்பட்டதாகத் தகவல்.

தலைவர் அவருதான்... ஆனா, அவர் வகிக்கிற பதவி டெல்லியோடது!