Election bannerElection banner
Published:Updated:

சசிகலாவுக்கு சிக்கல்; பா.ஜ.க டிக் அடித்த `40'. எடப்பாடி vs ஐபேக்! டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்

டிஜிட்டல் கழுகார்
டிஜிட்டல் கழுகார்

ஸூம் காலில் அழைத்த கழுகார், கன்னத்தில் போட்டுக்கொண்டபடியே வணக்கம் சொன்னார்.

“இதென்ன புது கலாட்டா?’’ என்று நாம் சிரிக்க, “டிஜிட்டல் கழுகார் பகுதியில், ‘தனியார் வங்கிக்கு மாற்றப்பட்ட பணம்’ என்கிற தலைப்பில் வேளாண்மைத் துறையில் உள்ள நுண்ணீர் பாசனத்திட்ட நிதி 100 கோடி ரூபாய், தனியார் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளது’ என்ற தகவலைச் சொல்லியிருந்தேன். அதில் தவறு நடந்துவிட்டது.’’

“அடடே..!’’

“வேளாண்மைத்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி இதுகுறித்து கடுமையாகத் தன்னுடைய மறுப்பை அனுப்பியிருக்கிறார். மேற்கொண்டு இந்த விவகாரத்தை விசாரித்தபோது, அந்தத் துறையில் நடக்கும் கோஷ்டி யுத்தம்தான் இதற்கான பின்னணி என்று புரிந்தது. இப்படி பணம் தனியார் வங்கிக்கு மாற்றப்பட்டது விழுப்புரம் மாவட்டத்தில்தான். அதுவும் 100 கோடி அல்ல. ஒரு சில கோடிகள்தான். ஆனால், மேலிடத்திலிருந்து உத்தரவு வராமல் அதை மாற்றியிருக்கிறார்கள். இதுதொடர்பாக விசாரணையும் நடக்கிறது. இந்தத் தகவல்தான் மடைமாறி, 100 கோடி என்று என்னிடம் வந்து சேர்ந்துவிட்டது. டபுள் செக் செய்யாமல் விட்டதற்காக நான் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுதொடர்பான வேளாண்மைத் துறை இயக்குநர் தட்சிணாமுர்த்தியின் விளக்கம் உள்பட, மற்ற அனைத்துச் செய்திகளையும் வாட்ஸ்அப்பில் அனுப்புகிறேன்’’ என்றபடி மீண்டும் கன்னத்தில் போட்டுக்கொண்டு விடைபெற்றார் கழுகார்.

தனியார் வங்கிக்கு பணத்தை மாற்றவில்லை! வேளாண்மைத்துறை இயக்குநர் திட்டவட்டம்

வேளாண்மை
வேளாண்மை

“நுண்ணீர் பாசனத் திட்டத்துக்கான 100 கோடி ரூபாய் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட இந்தியன் வங்கியில்தான் உள்ளது. அந்தத் தொகை எந்த தனியார் வங்கிக்கும் மாற்றப்படவில்லை. துறையில் நான் நேர்மையாகப் பணியாற்றிவருவதாலும், தவறு செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுப்பதாலும் காழ்ப்புணர்ச்சியுடன் சிலர் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பிவருகின்றனர். மேலும், இதுதொடர்பாக தகவல் வேண்டும் என்றாலும் விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறேன்” என்று தனது மறுப்பை திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் தட்சிணாமூர்த்தி.

தி.மு.க பிரமுகர் பிறந்தநாள் விழா - கும்மிடிப்பூண்டியில் குத்தாட்டம்! 20 பேருக்கு கொரோனா!

தி.மு.க பொதுக்குழு உறுப்பினரும் கும்மிடிப்பூண்டி தி.மு.க ஒன்றியக் குழு துணைத்தலைவராகவும் இருப்பவர், குணசேகரன். ‘அதிரடி’ பேர்வழியான இவர்மீது செம்மரக்கடத்தல் தொடர்பான சர்ச்சைகள் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தன. ஜூன் 19-ம் தேதி இரவு, தனது பிறந்தநாள் விழாவை கும்மிடிபூண்டியில் கோலாகலமாகக் கொண்டியிருக்கிறார் குணசேகரன். மாவட்டத்தின் பிரபல ‘அதிரடி பேர்வழிகள், கட்சியினர் என 500-க்கு மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில், சரக்கு தொடங்கி மட்டன், சிக்கன் என சகலமும் பரிமாறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மறுநாள் விழாவில் கலந்துக்கொண்ட பலருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போக... பலரும் பதறிப்போய் கொரோனா பரிசோதனை செய்திருக்கிறார்கள்.

இதில், முதல்கட்டமாக 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்திருக்கிறது. ஊரடங்கு காலத்தில், இவ்வளவு நெருக்கடிக்கு இடையில் கொரோனா ஹப்பாக செயல்பட்டது குறித்து காவல்துறைக்கு புகார் செல்லவே... ‘ஊரடங்கு காலத்தில் சட்டவிரோதமாகக் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது, மது உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தியது’ என 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்வதில் மும்முரமாகியிருக்கிறது காவல்துறை. ஆனால், தி.மு.க-வில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தொடங்கி கட்சி மேலிடம்வரை பலரும் போலீஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தி விஷயத்தை அமுக்குவதாகத் தகவல்!

பிரபலத்துக்குக் கிடைத்த துப்பு! சசிகலாவுக்கு மீண்டும் சிக்கல்?

சசிகலா
சசிகலா

சசிகலா சில மாதங்களில் வெளியே வருவார் என்பது பரவலாக பேசப்படும் விஷயம். ஆனால், மத்திய பா.ஜ.க-வுடன் நெருக்கமான தமிழக பிரபலம் ஒருவருக்கு இது பிடிக்கவில்லையாம். எப்படியாவது மீண்டும் ஏதேனும் வழக்குகளைச் செலுத்தி மீண்டும் சிறையில் தள்ள காரணங்களைத் தேடிவருகிறார் அந்தப் பிரபலம். இதற்கிடையே, ‘மாணிக்க’மான உறவினர் ஒருவர் மூலம் சென்னை பாரீஸ் கார்னரிலிருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மாற்றப்பட்ட பெரும் தொகை தொடர்பாக அந்த பிரபலத்துக்கு ‘துப்பு’ கிடைத்திருக்கிறதாம். அதை வைத்து வழக்கு போடலாமா என்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துவருகிறாராம் பிரபலம்!

தி.மு.க-வில் 170 வேட்பாளர்கள் யார்?

அறிவாலயம்
அறிவாலயம்

கொரோனா களேபரங்களுக்கு இடையிலும் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகள் சத்தமில்லாமல் நடக்கின்றன. தி.மு.க சார்பில் 170 தொகுதிகளில் இவர்கள் எல்லாம் வேட்பாளர்களாகக் களம் இறங்குவார்கள் என்கிற உத்தேசப் பட்டியலை அ.தி.மு.க கையில் எடுத்துவிட்டதாம். அந்த இடங்களில் எல்லாம் அ.தி.மு.க சார்பில் யாரை நிறுத்தலாம், செலவு தொகை எவ்வளவு ஆகும் என்று கணக்குப்போட்டு அதற்கான வேலைகளையும் ஆரம்பித்துவிட்டனர்.

காலியாக இருக்கும் நடுவர் ஆணையர் பதவி ‘சுமூக’ முடிவு ஏற்படுவது எப்போது?

சோ.அய்யர்
சோ.அய்யர்

தமிழக அரசால் 2014-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்றச் சட்டத்தின்படி, உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் முறைகேடுகளை விசாரிக்க நடுவர் ஒருவரை நியமிக்க வழி செய்யப்பட்டது. அதன்படி, இந்த அமைப்பின் முதல் நடுவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சோ.அய்யர் நியமிக்கப்பட்டார். இதுவரை சுமார் 800-க்கும் மேற்பட்ட ஊழல் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுத்துள்ளதாம் இந்த அமைப்பு. கடந்த பிப்ரவரி மாதத்துடன் சோ.அய்யரின் மூன்றாண்டு பதவிக்காலம் முடிந்துவிட்டது. அதனால், நடுவர் பதவி காலியாகவே உள்ளது. அதன்பிறகு, அந்த இடத்துக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. புதிய நியமனத்துக்கான பேச்சுவார்த்தையில் ‘சுமூக’ முடிவு ஏற்படவில்லை என்பதே பதவி நிரப்பப்படாததற்குக் காரணமாம்.

திசைமாறும் விஜிலென்ஸ் ஃபைல்... திகைக்கும் தலைமைச்செயலகம்!

தலைமைச்செயலகம்
தலைமைச்செயலகம்

தமிழக விஜிலென்ஸ் அமைப்பின் ஆணையர் பொறுப்பு தலைமைச்செயலாளர் வசமே இருக்கிறது. லஞ்ச ஒழிப்பு துறையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த ஃபைல்கள் ஆணையர் பொறுப்பிலுள்ள தலைமைச்செயலாளருக்கு அனுப்பப்படுவது வழக்கம். ஆனால், சமீப காலமாக ஆணையருக்கு அனுப்பப்படும் ஃபைல்களின் நகல்கள், முதல்வர் அலுவலகத்தில் உள்ள ஒரு முக்கிய அதிகாரிக்கும் அனுப்பப்படுகிறதாம். ‘எதன் அடிப்படையில் அந்த அதிகாரிக்கு ஃபைல்கள் அனுப்படுகின்றன' என்று கேட்டால், ‘எல்லாம் மேலே இருக்கிறவங்க உத்தரவு’ என உதட்டைப் பிதுக்குகிறார்களாம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்.

ஐஏஎஸ் இடமாறுதல்... ஆதிக்கம் செலுத்தும் முதல்வர் அலுவலக அதிகாரி!

இதேரீதியில் இன்னொரு சர்ச்சை... தமிழகத்தில் கொரோனா பிரச்னைக்கு பிறகு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் நடந்துவருகிறது. இதற்கான ஒப்புதலை தலைமைச்செயலாளரிடம் சம்பிரதாயத்துக்காகவாவது பெறுவது வழக்கம். ஆனால், சமீபகால ஐஏஎஸ் பணியிட மாற்றங்கள் தலைமைச்செயலாளர் தரப்பையும் மீறி நடந்துள்ளதாம். இதிலும், முதல்வர் அலுவலக முக்கிய அதிகாரியே தலையிட்டால், தலைமைச்செயலாளர் என்கிற பதவி எதற்கு என்று பலமான ஓசை கேட்கிறது ஐஏஎஸ் வட்டாரத்தில்!

பீலா ராஜேஷ் ஏன் கிருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டார்? - டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்

பா.ஜ.க குறிவைக்கும் 40 தொகுதிகள்... தலைவருக்கும் தொகுதிகள் தயார்!

எல்.முருகன்
எல்.முருகன்

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் ஜுரம் பா.ஜ.க -வுக்கு மட்டும் இல்லாமல் இருக்குமா? எந்தக் கூட்டணியாக இருந்தாலும் பரவாயில்லை; 40 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தரப்பில் தீர்மானமாக இருக்கிறார்களாம். கெங்கவல்லி, ராசிபுரம், காட்டுமன்னார்கோயில் இந்த மூன்று தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடவும் முருகன் தரப்பில் தற்போதைக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.

எடப்பாடியைத் தோற்கடிக்க ஐபேக் வியூகம்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் மட்டும் ‘ஐபேக்’ டீம் ரகசிய சர்வே எடுத்துள்ளதாம். ‘சேலம் தெற்கு, எடப்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும் தி.மு.க பலவீனமாக இருக்கிறது; இந்தத் தொகுதிகளில் வன்னியர், நாடார் சமூக மக்களை ஒருங்கிணைத்து வியூகம் வகுத்தால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க முடியும்’ என்றும் கட்சித் தலைமைக்கு ரிப்போர்ட் போயிருக்கிறது என்கிறார்கள்.

சஸ்பெண்ட் அதிகாரி ரீ-என்ட்ரி! மிரளும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்...

சோமாஸ்கந்தர் சிலை வழக்கில் கைதாகி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் எம்.கவிதா, மீண்டும் அறநிலையத்துறைக்குள் நுழைந்துள்ளார். ‘தன் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை. விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கில், ‘துறை நிர்வாகமே இறுதி நடவடிக்கை எடுக்கலாம்’ என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில், கவிதா மீதிருந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்துசெய்வதற்கு கோப்புகள் நகர்ந்தன. ஆனால், ஆரம்பத்தில் இதில் கையெழுத்திட துறையின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி தரப்பில் மறுத்துவிட்டனராம். சமீபத்தில் நடைபெற்ற ஐஏஎஸ் பணியிட மாற்றத்தில் அந்த அதிகாரி மாற்றப்பட்டு வேறொருவர் வந்தவுடன், கவிதாவின் சஸ்பெண்ட் ரத்து கோப்பு கையெழுத்தாகியுள்ளது (செ.மு.ந.க.எண். 42570/2018/பி.1/நாள்.17.6.2020).

கவிதா
கவிதா

இதை சுட்டிக்காட்டி பேசுவர்கள், “சிலை கடத்தல் வழக்கில் விசாரணையை எதிர்கொண்டவர், இந்து அறநிலையத்துறையின் விசாரணைப் பிரிவின் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பதுதான் வேடிக்கை. மேலும், கவிதா குடியிருக்கும் மயிலாப்பூர் கபாலி நகர் குடியிருப்பில் கபாலீஸ்வரர் கோயில் ஊழியர்கள் மட்டுமே குடியிருக்க அனுமதியுண்டு. கவிதாவுக்கு எந்த அடிப்படையில் அங்கு வீடு ஒதுக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

நிறுவனத்தைக் கைப்பற்றிய சேலம் விஐபி!

சேலம்
சேலம்

சேலத்து ரகசியம் இது. சேலத்துக்கு அருகே, மரவள்ளிக் கிழங்கு மற்றும் மக்காச்சோளத்திலிருந்து சிலவிதமான பிரத்யேக பொருள்களைத் தயாரிக்கும் பெரிய நிறுவனம் ஒன்று இருக்கிறது. இந்த நிறுவனத்தில் மறைமுகப் பார்ட்னராக இருந்த முக்கிய ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர், பணமதிப்பிழப்பு சமயத்தில் அந்த நிறுவனத்தையே வாங்கிவிட்டாராம். தற்போது, அந்தப் பிரமுகரின் அக்கா மகன்தான் நிறுவனத்தை கவனித்துவருகிறார்.

“மக்களில் ஒருவன் நான்!” சீறிய பெரிய கருப்பன்

பெரிய கருப்பன்
பெரிய கருப்பன்

சமீபத்தில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மூலிகைச் செடிகள் மற்றும் உபகரணங்களை வழங்கியது திருப்பத்தூர் லயன்ஸ் கிளப். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் மற்றும் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள். திடீரென்று இந்த நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்த திருப்பத்தூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன், மக்கள் மத்தியில் அமர்ந்தார். அவரை கலெக்டர் மற்றும் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் மேடைக்கு அழைத்தனர். அப்போது, “நான் ஒன்றும் இங்கே விருந்தாளியாக வரவில்லை. மக்களில் ஒருவனாக வந்திருக்கிறேன்” என்று கோபமாகப் பேசியிருக்கிறார். தனது தொகுதியில் நிகழ்ச்சிகள் பலவற்றில் அவரை அழைப்பதில்லை என்கிற கோபத்தின் வெளிப்பாடே இது என்கிறார்கள் பெரியகருப்பனின் ஆதரவாளர்கள்.

காஞ்சி மடம் மருத்துவக்கல்லூரி இனி `கல்வித்தந்தை'க்கா... திருவனந்தபுரம் ட்விஸ்ட்! - கழுகார் அப்டேட்ஸ்

நீலகிரி அ.தி.மு.க கலாட்டா!

நீலகிரி அ.தி.மு.க மாவட்டச் செயலாளரான புத்திச்சந்திரனுக்கும் குன்னூர் எம்.எல்.ஏ-வான சாந்தி ராமு-வுக்கும் இடையே கோஷ்டி பூசல் உச்சத்தில் உள்ளது. “புத்திச்சந்திரன் பிறரிடம் வசூலித்த பணத்தில்தான் நிவாரணம் வழங்குகிறார். நாங்களோ சொந்தப் பணத்தில் நிவாரண உதவிகளைச் செய்கிறோம்” என்று அவரது ஆதரவாளர்கள் பிரசாரம் செய்யாத குறையாகத் தகவல் பரப்புகிறார்களாம். தவிர, “சாந்தி ராமு-வுக்கு மாவட்டச் செயலாளர் பதவி உறுதியாகிவிட்டது. சில தினங்களில் அறிவிப்பு வந்துவிடும்” என்றும் அவரின் ஆதரவாளர்கள் பகிரங்கமாகக் கூறுவதால், பலரும் இவர் பக்கம் சாய்ந்துவருகிறார்களாம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு