Published:Updated:

வதந்திக்குச் சிறை; தலைமைச் செயலகத்துக்கும் லாக்டௌன்? - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

"இன்றைக்கு முக்கியமானதொரு மீட்டிங் இருக்கிறது. டைப் செய்ய நேரமில்லை. எனவே செய்திகளை `வாய்ஸ் நோட்’டாக அனுப்பிவிடுகிறேன்" என்று `வாய்ஸ் நோட்’ அனுப்பிய கழுகார், அதன் பின் செய்திகளையும் அவ்வாறே அனுப்பினார்.

மெஸ்ஸில் தங்கும் டி.ஜி.பி!

திரிபாதி
திரிபாதி

தமிழக சட்டம் ஒழுங்குப்பிரிவு டி.ஜி.பி-யான திரிபாதிக்கு டி.ஜி.பி அலுவலகத்தின் முதல் மாடியில் அறை இருக்கிறது. அவரது அலுவலக வளாகத்தில் பலருக்கும் கொரோனா தொற்று உறுதியாகிள்ளது. ஆகையால், `தனக்கும் தன் மூலமாக தன் வீட்டிலுள்ளவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது' என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்போதெல்லாம் திரிபாதி தன் வீட்டுக்குப் போவதில்லை. இரவு நேரங்களில் எழும்பூர் ஐ.பி.எஸ். ஆபீஸர்ஸ் மெஸ் கட்டடத்திலுள்ள ஓய்வு அறையில் தங்கிவிடுகிறாராம்.

`கொரோனா நேரத்தில் இதெல்லாம் தேவையா?’

தலைமைச் செயலகத்தின் ஒன்பதாவது மாடி என்றாலே, அதிகாரிகள் அலறுகிறார்கள். செய்தித்துறை இயக்குநர் அலுவலகம் மற்றும் தொழில் துறை செயலாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், அந்த தளத்தையே மூடிவிட்டனர். அங்கியிருந்த ஒரு மூத்த அதிகாரி முதல்வர் அலுலகத்துக்கு மாறிவிட்டார். ஆனாலும் பழைய அறையையும் தன் வசம் வைத்திருக்கிறாராம். அந்த அறையில் மூத்த அதிகாரியின் அலுவலகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் தினமும் தீவிர `டிஸ்கஷன்’னில் இறங்கிவிடுகிறார்களாம். யாரும் வந்துவிடக் கூடாது என்று வாசலில் காவலுக்கு ஆள் போட்டுவிட்டு டிஸ்கஷன் அரங்கேறுகிறது. `கொரோனா நேரத்தில் இதெல்லாம் தேவையா?’ என மற்ற ஊழியர்கள் தலையில் அடித்துக்கொள்கின்றனர்.

தலைமைச் செயலகம் பூட்டப்படுமா?

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

அதி வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்று சென்னை தலைமைச் செயலக அதிகாரிகளை கலங்கடித்துள்ளது. எனவே, `கோயம்பேடு பாணியில் தலைமைச் செயலகத்தையும் சில வாரங்கள் பூட்ட வேண்டும். மூலை முடுக்குகளில் கிருமிநாசினி அடித்து சுத்தப்படுத்தினால்தான், கொரோனா வைரஸ் பரவாது. முக்கிய துறைகளை சென்னையில் வேறு பகுதியில் உள்ள அரசு கட்டடங்களில் தற்காலிகமாக மாற்ற வேண்டும்’ என்று ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.

`சபாஷ்’ போட வைக்கும் எல்.முருகன் மனைவி!

எல்.முருகன்
எல்.முருகன்

தமிழக பி.ஜே.பி-யின் தலைவரான எல்.முருகனின் மனைவி கலையரசி மயக்கவியல் மருத்துவர். எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பணியில் இருக்கிறார். கர்ப்பிணிகள், பிறந்த குழந்தைகளைக் கவனிக்கும் முக்கியமான துறை. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாள் முதல் இன்று வரை (மருத்துவமனை தரும் ரெஸ்ட் தவிர) விடுப்பு எடுக்காமல் பணி செய்து வருகிறாராம். மருத்துவர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளபடி ஐந்து நாள்கள் ஹோட்டல் அறையிலும் ஒன்பது நாள்கள் வீட்டிலும் தனிமைப்படுத்திக்கொள்கிறார். 14 நாள் கணக்கு முடிந்தவுடன் மீண்டும் பணியில் சேர்ந்துவிடுகிறார். சபாஷ்!

வெளியே பகை... உள்ளே உறவு!

சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளரும், கூட்டுறவுச் சங்கங்களின் தலைவராகவும் இருப்பவர் பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன். முதல்வருக்கு எல்லாமே இவர்தான். இவருடைய மகன் பிரவீன்குமார், முசிறி எம்.ஐ.டி கல்வி குழுமத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். பிரவீன்குமாரும் தி.மு.க மாநில இளைஞரணி துணை அமைப்பாளரும், திருவெறும்பூர் எம்.எல்.ஏ-வுமான மகேஷ் பொய்யாமொழியும் நகமும் சதையுமாக இருக்கின்றனராம். தமிழக அரசியலில் எதிரும் புதிருமாக உள்ள கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளுக்குள் நட்பு பாராட்டி வருவது பலரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.

ஒப்பந்ததாரர்களை மிரள வைத்த கலெக்டர்!

கோடப்பமந்து கால்வாய்
கோடப்பமந்து கால்வாய்

ஒரு காலத்தில் ஊட்டியின் வெள்ளி நீரோடையாக இருந்த கோடப்பமந்து கால்வாய், தற்போது மிதமிஞ்சிய கழிவுநீர் புரண்டோடும் சென்னையின் கூவம் நதி போல மாறிவிட்டது. சமீபத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பாதாள சாக்கடை புணரமைப்பு பணிகளை நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார். இந்த டெண்டரை எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகளை சரிகட்டும் வழக்கத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கும் சால்வை அணிவித்துப் பேச வந்தனர். ஆனால் கலெக்டரோ, ``எனக்கு பரிசுப்பொருள் வாங்கிப் பழக்கமில்லை. வேலையை ஒழுங்கா செஞ்சு முடிங்க போதும்” என காட்டமாகக் கூறிவிட, ஒப்பந்ததாரர்கள் மிரண்டுவிட்டனர். கால்வாய் கரையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வீட்டையும் ஏழு நாள்களுக்குள் அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார். கலெக்டரை கமிஷன் மூலம் சரிக்கட்டி டெண்டரில் சுருட்டலாம் என எண்ணியிருந்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

வதந்தி பரப்பினால் சிறை!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சென்னையில் இடமில்லாமல் கோவைக்கு மாற்றப் போவதாக சமீபத்தில் வதந்தி பரவியது. இந்தச் செய்தியை முற்றிலுமாக மறுத்து அறிக்கைவிட்டார் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இதேபோன்று, சென்னையில் முழு ஊரடங்கு அமலாகப் போவதாக செய்திகள் றெக்கை கட்டின. இதை மறுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``இதுபோல் யார் வதந்தியைப் பரப்பினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார். புதுக்கோட்டை பேயாடிக்கோட்டை அருகே இந்திய ராணுவத்தின் விமானம் விழுந்து நொறுங்கியதாக வாட்ஸ்அப் தகவல் டெல்லிவரை அதிர வைத்ததால், புதுக்கோட்டை கலெக்டர் வாய்ஸ் நோட் வழியாக விளக்கமளிக்கும் அளவுக்கு கொண்டுபோய்விட்டது. தினமும் ஒரு வதந்தியை யாராவது கொளுத்திப் போடுவதும், அதற்கு அரசு விளக்கமளிக்க ஓடுவதும் தொடர் கதையாகிவிட்டது. இதை ஒடுக்குவதற்காக, வதந்தி பரப்புவர்களைக் கண்டறிந்து கடுமையான பிரிவுகளில் சிறையில் அடைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளாராம். சைபர் க்ரைம், உளவுத்துறை பிரிவுகளைச் சேர்ந்த டீம் முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர். இனி வதந்தி பரப்பினால் சிறைதான்.

அடுத்த மாவட்டச் செயலாளர் யார்?

ஜெ.அன்பழகன்
ஜெ.அன்பழகன்

தி.மு.க-வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் கொரோனாவால் பலியானதனையடுத்து, ஜெ.அன்பழகனின் குடும்பம் முழுவதும் தங்களை பத்து நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது. அதற்குள்ளாக `சென்னை மேற்கு மாவட்டத்துக்கு யார் பொறுப்பாளர்?’ என்கிற போட்டி அதிகமாகியுள்ளது. கருணாநிதியின் மகனான தமிழரசுவின் ஆதரவுடன் சேப்பாக்கம் மதன்மோகன் மாவட்ட பொறுப்பாளர் பதவிக்கு முட்டி மோதுகிறாராம். ஜெ.அன்பழகனின் மகன் ராஜாவும் பொறுப்பாளர் பதவியை எதிர்பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது. மூன்று நாள்கள் துக்கம் முடிந்த பின்னர்தான் முடிவெடுப்பது என அமைதி காக்கிறது தி.மு.க தலைமை.

ஜெ.அன்பழகன் பொறுப்பு யாருக்கு? வலுக்கும்போட்டி... குழப்பத்தில் ஸ்டாலின்!

புதிய பொறுப்பில் ராதாகிருஷ்ணன்!

ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் வழக்கமாக சென்னை மாநகராட்சி அலுவலகம்தான் செல்வார். ஆனால், நேற்று (12.6.2020) காலை அங்கு செல்லாமல் நேராக எழிலகத்திலுள்ள தன்னுடைய வழக்கமான அலுவலகத்துக்கு நேராக வந்துவிட்டார். ராதாகிருஷ்ணன் எழிலகம் அலுவலகத்தில் இருந்தபோதே சுகாதாரத் துறை செயலாளராக பணிமாறுதல் ஆணை வந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு