Published:Updated:

அழகிரி vs பீட்டர்; ஊரடங்கில் 32 சொத்துகள் மாற்றம்; வருகிறது ஸ்கூல் பீஸ் அறிவிப்பு... கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

வாட்ஸ்அப் காலில் வந்த கழுகார், உழைப்பாளர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, செய்திகளை டைப் செய்ய ஆரம்பித்தார். எடுத்த எடுப்பிலேயே வந்துவிழுந்த செய்தி அதிரவைப்பதாக இருந்தது.

இதற்குத்தானா திறக்கப்பட்டது?

கொரோனா பரவலால் அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் அத்தியாவசியம் இல்லாத பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்குத் துறை அலுவலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும் பதிவுத்துறை அலுவலகங்களை மூடுவதற்கு அரசு மறுத்துவிட்டது. ஆனாலும், தமிழகம் முழுவதுமே எந்த அலுவலகத்திலும் பெரியதாக பத்திரப்பதிவு நடக்கவே இல்லை. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில்தான் பதிவுகள் நடக்கின்றன.

சார் பதிவு அலுவலகம்
சார் பதிவு அலுவலகம்

வருவாயும் பெரிய அளவில் இல்லை என்ற நிலையில், இந்த அலுவலகங்களைக் கட்டாயமாகத் திறந்து வைத்திருப்பதற்கு என்ன காரணமென்று கேள்வி எழுந்தது. வி.ஐ.பி-க்களின் பினாமி சொத்துகளை கைமாற்றும் முயற்சி நடக்கிறதோ என்றும் சந்தேகங்கள் கிளம்பின. அதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த வாரம் அதிமுக்கியப் புள்ளியின் மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் பெரும் மதிப்புடைய 32 சொத்து ஆவணங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனவாம். இந்தச் சொத்துகளை வாங்கியவர்கள் சாமானியர்களாக இருப்பதால் மிக முக்கியமான அரசியல்வாதிகளின் பினாமிகளாக இவர்கள் இருக்கக்கூடும் என்று மத்திய உளவுத் துறை அரசுக்கு நோட் போட்டிருக்கிறது.

கிருமி நாசினியில் கோல்மால்!

கிருமி நாசினி தெளிப்பு
கிருமி நாசினி தெளிப்பு
உ.பாண்டி

கொரோனா தடுப்புப் பணிக்காக அரசின் பணம் செலவழிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரமும் அதைப் பயன்படுத்தும்போது உபயோகம் செய்ய மூன்று செட் உடையும் ஊரக வளர்ச்சித்துறையால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு இயந்திரம் மற்றும் உடைக்கு 25,000 ரூபாய் செலவிட்டிருக்கிறார்கள். ஆனால், அவற்றின் மதிப்பு பத்தாயிரத்தைத் தாண்டாது என்று ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறது ஓர் இயக்கம். ஏற்கெனவே உள்ளாட்சித்துறை மீது பல்வேறு ஊழல் புகார்களும் இருக்கும் நிலையில் இந்த விவகாரமும் விரைவில் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அழகிரி இடத்துக்கு பீட்டரா?

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கும் அவரை தலைவர் பதவிக்குக் கொண்டுவந்த ப.சிதம்பரம் தரப்புக்கும் இப்போது ஏழாம் பொருத்தமாகிவிட்டதாம். மாநிலத் தலைவரை விரைவில் மாற்றிவிட்டு பீட்டர் அல்போன்ஸை அந்த இடத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்று தன் தந்தை ப.சிதம்பரம் மூலம் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறாராம் கார்த்தி சிதம்பரம். இதன் மூலமாக `சிறுபான்மையினரை தலைவராக நியமிக்க காங்கிரஸ் கட்சியும் அச்சப்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் நிராகரிக்கலாம்’ என்ற ஆலோசனையுடன் தலைமைக்கு இந்த கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறதாம்.

ரூ.1 கோடி நிவாரணம், அகவிலைப்படி, ரேபிட் டெஸ்ட் கிட்:  கொரோனா அரசியல்கள் குறித்து கே.எஸ்.அழகிரி

மயிலாடுதுறை மா.செ மல்லுக்கட்டு!

``சட்டமன்றத்தில் என் கன்னிப் பேச்சில் மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக உருவாக்கித் தர வேண்டும் என்று அம்மாவிடம் கோரிக்கை வைத்தேன். அந்தக் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றித் தந்திருக்கிறார். மயிலாடுதுறை மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படுமானால் அதை மிகச் சிறப்பாகச் செய்வேன்” என்று கூறியிருந்தார் மயிலாடுதுறை அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன். இது அருகிலுள்ள பூம்புகார் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜை உசுப்பேற்றி விட்டது. ராதாகிருஷ்ணன் பேச்சின் பின்னணியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இருப்பாரோ என்று சந்தேகிக்கிறாராம். எப்படியாவது மா.செ பதவியைக் கைப்பற்றிடக் காய் நகர்த்தி வருகிறாராம் பவுன்.

சீல்... கல்லா கட்டும் வருவாய்த்துறை!

நேரக் கட்டுப்பாட்டை மீறித் திறந்திருந்த கடைகளுக்குச் சீல் வைக்கப்படுகிறது. ஆனால், அடுத்த ஒரு வாரத்திலேயே ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்துக்கொண்டு கடையைத் திறக்க வருவாய்த் துறையினர் அனுமதி வழங்குகிறார்கள். இது வீடியோவிலும் அம்பலத்துக்கு வந்துள்ளது. குடியாத்தத்தை அடுத்த பரதராமியில் உள்ள மெடிக்கல் ஷாப் ஒன்றில் அந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர் போதையில் சென்று மாமூல் கேட்டுள்ளார். பணம் தர மறுத்துள்ளார் அங்கிருந்த பெண். போதையில் அட்டகாசம் செய்த கிராம நிர்வாக அலுவலரை வீடியோ எடுத்த அந்தப் பெண், சமூக வலைதளங்களிலும் பரப்பியுள்ளார். இதையடுத்து, அந்தக் கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக அந்த மெடிக்கல் ஷாப்புக்கு தாசில்தாரே நேரடியாகச் சென்று சீல் வைத்துள்ளார். இப்போது, இடைநீக்கம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டால்தான் மெடிக்கல் ஷாப்பை திறக்க அனுமதி கிடைக்கும் என்று மிரட்டி வருகிறார்களாம் வருவாய்த் துறையினர். இந்த நடவடிக்கைக்கு எதிராக வணிகர்கள் அமைப்புகள் களத்தில் குதிக்கத் தயாராகியுள்ளன.

பழனிமாணிக்கம் உதவவில்லையா?

முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழநிமாணிக்கம்
முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழநிமாணிக்கம்

``தஞ்சாவூர் தொகுதியின் தி.மு.க எம்.பி-யான பழனிமாணிக்கம் ஊரில் இல்லை; புதுச்சேரியில் அவரின் மகள் வீட்டில் இருக்கிறார்’’ என அவரின் ஆதரவாளர்கள் பேசிக்கொண்டிருந்த நிலையில், காணொலி மூலம் ஸ்டாலின் நடத்திய ஆலோசனையின்போது தஞ்சை சீனிவாசபுரம் வீட்டிலிருந்தபடியே பேசியுள்ளார் பழனிமாணிக்கம். ஆனாலும் உடன்பிறப்புகள் விடுவதாக இல்லை. ``கொரோனாவால் மூத்த நிர்வாகிகள் கடும் சிரமத்தில் உள்ளனர். உள்ளூரில் இருக்கும் பழனிமாணிக்கம் அவர்களுக்கு உதவவில்லை. போனில் நலம் விசாரிக்கவில்லை’’ என்று புலம்புகிறார்கள்

பள்ளிகள் கட்டண வசூலுக்கு க்ரீன் சிக்னல்!

பத்தாம் வகுப்புத் தேர்வு நடக்கவில்லை; ப்ளஸ் டூ ரிசல்ட் வரவில்லை; புதிய அட்மிஷனும் போட முடியாது; இருக்கிற மாணவர்களிடம் கட்டணமும் கேட்க முடியாது என்கிற நிலையில் கல்வித் துறையின் முக்கியப் புள்ளியிடமும் கோட்டை நிர்வாகியிடமும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சந்தித்து தங்கள் குறைகளைக் கொட்டியிருக்கிறார்கள்.

பள்ளிக் குழந்தைகள்
பள்ளிக் குழந்தைகள்
Representational image Only

கூடவே ஒரு பள்ளிக்கு இவ்வளவு எனச் சொல்லி `படியளந்தும்’விட்டார்களாம். இதனால், `ஆன்லைன் மூலம் பள்ளிகள் அட்மிஷன் போட்டுக்கொள்ளலாம். படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களிடம் இந்தாண்டுக்கான கட்டணத்தை வசூல் செய்யலாம்’ என்று உத்தரவு வரப்போகிறதாம். கொரோனா தடுப்புப் பணியில் தமிழக அரசின் செயல்பாட்டைப் பாராட்டி தனியார் பள்ளிகள் சார்பில் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். எப்படியெல்லாம் சம்பாதிப்பது என்பதைச் சொல்லிக்கொடுப்பதற்கு இவர்களே ஒரு பள்ளிக்கூடம் திறக்கலாமே என்று சத்தமின்றிச் சிரிக்கிறார்கள் பள்ளி நிர்வாகிகள்.

பாட்டி சுடும் இட்லி... கலகம் செய்யும் கழகங்கள்!

கமலாத்தாள் பாட்டி
கமலாத்தாள் பாட்டி

ஊரடங்கு உத்தரவு விலைவாசி உயர்வுக்கு வழிவகை செய்துவிட்டது. ஏற்கெனவே ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று ஆச்சர்யத்தில் ஆழ்த்திய கோவை கமலாத்தாள் பாட்டி, தற்போதைய விலைவாசி உயர்விலும் அதே விலையில் இட்லி விற்றுவருகிறார். கமலாத்தாள் பாட்டியின் இந்தச் செயல் பலரையும் நெகிழ வைத்து அவருக்கு உதவிகள் செய்து வருகின்றனர். கமலாத்தாள் பாட்டிக்கு உதவி செய்த தி.மு.க-வினர், ஸ்டாலினுடன் பாட்டியை வீடியோ காலில் பேச வைத்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து, அ.தி.மு.க-வினரும் அந்தப் பாட்டிக்கு 50 கிலோ அரிசி, 10,000 பணம் கொடுத்தனர். ``கமலாத்தாள் பாட்டிக்கு உதவி செய்தது நாங்கள்தான்... நீங்கள் அதைவைத்து வெற்று விளம்பரம் தேடுகின்றீர்கள்” என தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வருகின்றனர். பாட்டிக்கு உதவுவதில் பார்ட்டிகளுக்குள் போட்டி!

ஓ.பி.எஸ் வட்டாரத்தில் தி.மு.க எம்.எல்.ஏ?

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்
மிஸ்டர் கழுகு: கொரோனா குளறுபடிகள்... ஒத்துழைக்காத அதிகாரிகள்... திணறும் எடப்பாடி

பெரியகுளம் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ ஆனவர் சரவணக்குமார். இவரின் சமீபத்திய நடவடிக்கைகள் பற்றி அறிவாலயத்துக்குப் புகாராகப் போயிருக்கிறது. தேனி மாவட்ட முன்னாள் தி.மு.க மாவட்டச் செயலாளர் மூக்கையா, பெரியகுளத்தில் கொரோனா நிவாரண உதவிகள் செய்து கொண்டிருக்க... தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் அங்கே சென்றிருந்தனர். ஆனால், எம்.எல்.ஏ மட்டும், ஓ.பி.எஸ் பங்கேற்ற, நிகழ்ச்சிக்குப் போய்விட்டாராம். இதனால், கட்சியினர் கடுப்பாகிவிட்டனர். ``ஓ.பி.எஸ் வட்டாரத்தில் நெருக்கம் காட்டி வருகிறார் எம்.எல்.ஏ. வளர்த்துவிட்ட கட்சியை மறந்து, இப்படியெல்லாம் செய்வது எந்த வகையில் நியாயம்?” எனக் கட்சியினர் புலம்பி தலைமைக்குத் தகவல் தட்டியிருக்கிறார்கள்.

ஹெல்த் இன்ஸ்பெக்டர் போஸ்டிங்... கொரோனாவிலும் கொள்ளை!

தற்காலிக அடிப்படையில் 335 ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் அவுட்சோர்சிங் முறையில் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் துறை வி.ஐ.பி-யின் கல்லூரியில் படித்தவர்களாம். பிறகு, 2,215 தற்காலிக ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டனர். மூன்று மாதங்களுக்குத்தான் அவர்களுக்குப் பணி என்பது கவர்மென்ட் ஆர்டர். இவர்களின் மாதச்சம்பளம் 20,000 ரூபாய். மாதம் 5,000 ரூபாய் என்ற அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு என 15,000 ரூபாயை முக்கிய அதிகாரிக்கு முன்கூட்டியே கொடுத்துவிட வேண்டும். அப்படிக் கொடுத்தவர்களின் பெயர் பட்டியல் மட்டுமே அவுட்சோர்சிங் கம்பெனிக்கு அனுப்பப்பட்டன.

கோவிட் -19 கொரோனா
கோவிட் -19 கொரோனா

அதுபோக, பிராசசிங் சார்ஜ் என்ற பெயரில் ஒவ்வொருவரிடமும் 3,000 ரூபாயை அவுட்சோர்சிங் கம்பெனி பிடித்துக்கொள்கிறது. அதனால், அவர்களின் கைகளுக்கு வெறும் 12,000 ரூபாய்தான் கிடைக்கும். மூன்று மாதங்களுக்கு மட்டுமே பணி என்பது கவர்மென்ட் ஆர்டராக இருந்தபோதிலும், சில மாவட்டங்களில் ஆறு மாதங்களுக்குப் பணி நீட்டிக்கப்படும் என்று சொல்லி 30,000 ரூபாயையும், வேறு சில மாவட்டங்களில் ஓராண்டுக்குப் பணி நீட்டிக்கப்படும் என்று சொல்லி 60,000 ரூபாயையும் முன்கூட்டியே வசூலித்துள்ளார்கள். பாவப்பட்ட இந்த இளைஞர்கள் கையுறையோ, முகக் கவசமோ இல்லாமல் களத்தில் வேலை செய்துகொண்டிருப்பதுதான் இன்னும் பரிதாபம்.

அடுத்த கட்டுரைக்கு