Published:Updated:

பா.ஜ.க: ராக்கெட் புராஜெக்டும் 40 சீட் பிளானும்; `தளபதி இல்லம்' திறந்த உதயநிதி! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

``கோட்டைக்குச் செல்கிறேன். வாட்ஸ்அப் பார்க்கவும்’’ - ரத்தின சுருக்கமாகக் கூறிவிட்டு, அலைபேசியை கட் செய்தார் கழுகார். வாட்ஸ்அப்பில் வந்து விழுந்தன `பரபர’ தகவல்கள்!

பாண்டியனின் ராஜ்யத்தில் ஊடுருவிய பா.ஜ.க!

அ.தி.மு.க அமைப்புச் செயலாளரான மனோஜ் பாண்டியனின் சகோதரர் வினோத் பாண்டியன். சமீபத்தில் இவர் பா.ஜ.க-வில் ஐக்கியமானதை ஆச்சயர்த்துடன் பார்க்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ஏனெனில், பி.ஹெச்.பாண்டியனின் குடும்பம் பாரம்பர்யமாக அ.தி.மு.க வழி வந்தது. ``எப்படி விசாரித்தாலும், அவர் கட்சி மாறியதற்குக் காரணம் என்ன என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அவருக்கு அ.தி.மு.க-விலும் எந்த நெருக்கடியும் இல்லை. வழக்கறிஞரான வினோத் கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து தமிழக மின்வாரியத்துக்கான வழக்குகளை கவனித்துவருகிறார்.

வினோத் பாண்டியன்
வினோத் பாண்டியன்

இந்தப் பணிகள்கூட அவர் அ.தி.மு.க குடும்ப உறுப்பினர் என்கிற வகையில்தான் தரப்பட்டது. அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு அவர் பா.ஜ.க சென்ற மர்மம் என்ன?” என்று தலையைப் பிய்த்துக்கொள்கிறார்கள் அ.தி.மு.க பிரமுகர்கள். கடந்த சில நாள்களாக அப்செட்டாக இருந்தவர், திடீரென இப்படி ஒரு முடிவு எடுத்துவிட்டாராம். இது பற்றி அவரின் குடும்பத்துக்குக்கூடப் பெரிதாகத் தகவல் தெரியவில்லை! வினோத் தரப்பில் கேட்டால், ``அது அண்ணனோட தனிப்பட்ட விருப்பம்” என்று மட்டும் பதில் வருகிறது.

ஒருவேளை பா.ஜ.க-வில் கிட்னாப் பண்ணியிருப்பாங்களோ!

`ரா’ கண்காணிப்பில் தமிழக அமைச்சர்!

கொரோனா ஊரடங்குக்கு முன்பாக தமிழக அமைச்சர் ஒருவரின் உறவினர் ஹாங்காங் சென்றிருந்தார். அங்கிருந்தபடி மலேசியாவில் ரப்பர் தோட்டம் வாங்குவது, இந்தோனேஷியாவில் கிராம்பு தொழிற்சாலைகளில் முதலீடு செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது மீடியேட்டர்கள் சிலர், பிரபல வங்கி ஒன்றின் பெயரைச் சொல்லி, அதன்வழியாக பணத்தை முதலீடு செய்யும்படி கூறியிருக்கிறார்கள். அவரும் அந்த வங்கியில் பெரும் தொகையை கைமாற்றினார். நடுவே கொரோனா வந்துவிட்டது. வங்கிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அமைச்சரின் முதலீடுகளும் மூவ் ஆகவில்லை.

சம்பந்தப்பட்ட வங்கிமீது சில ஆண்டுகளாகவே ஹவாலா புகார், பயங்கரவாதிகளுக்கு நிதியை மாற்றிவிட்டது உள்ளிட்ட சர்ச்சைகள் வரிசைகட்டுகின்றன. இந்தியாவின் ரா, அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட் என உளவுப் பிரிவுகளும் அந்த வங்கியைக் கண்காணிக்கின்றன. இதெல்லாம் தெரியாமல் சில நூறு ‘சி’-க்களை வங்கிக்கு கைமாற்றியிருக்கிறது அமைச்சர் தரப்பு. சமீபத்தில் இந்த பரிவர்த்தனையை மோப்பம் பிடித்த `ரா’, மத்திய உள்துறையின் கவனத்துக்கும் இதைக் கொண்டு சென்றிருக்கிறதாம். `விரைவில் ரெய்டு களைகட்டலாம்’ என்கிறது டெல்லி வட்டாரம்.

சீவி சீவிச் சிங்காரிச்சாலும் உள்ளூர் தொழிலைப்போல வருமா!

``நோ ஆக்‌ஷன்!” அமுக்கிய கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சியில் உயரதிகாரி ஒருவர் பிளீச்சிங் பவுடர், பினாயில் போன்ற பொருள்களை வாங்கியதில் பெரும் தொகை பார்த்துவிட்டார். ஆதாரங்களுடன் சிக்கியதால், ஆட்சி மேலிடத்தில் அவரைக் கூப்பிட்டு செம டோஸ் விட்டிருக்கிறார்கள். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி

அப்படி எடுத்தால், அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் நடந்ததை ஒப்புக்கொண்டதுபோல ஆகிவிடும் என்பதுதான் காரணமாம்! அதனால், அந்த அதிகாரிக்குக் கீழிருந்த ஒருவரை மட்டும் மாற்றிவிட்டு, விஷயத்தைக் கமுக்கமாக அமுக்கிவிட்டது கோவை மாநகராட்சி.

பினாயில் போட்டுக் கழுவினாலும் ஊழல் கறை போகாதுப்பா!

பவர் பாலிடிக்ஸ்... இது முதுமலை ரகசியம்!

முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் பதவிக்கு வனத்துறையில் பெரும் டிமாண்ட் நிலவுகிறது. மத்திய அரசின் `டைகர் புராஜெக்ட்’ உள்ளிட்ட திட்டங்களிலிருந்து வரும் பெரும் தொகையைக் கையாளும் அதிகாரம்மிக்க பதவி அது. பல ஆண்டுகளாக அந்தப் பொறுப்பிலிருந்த ஶ்ரீனிவாஸ் ரெட்டி விடுவிக்கப்பட்டு, உலகநாதன் நியமிக்கப்பட்டார். ஐந்தே மாதங்களில் அவரும் விடுவிக்கப்பட்டு, கவுஷல் என்பவர் நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் பணியாற்றிவந்த நிலையில் அவரையும் மாற்றுவதற்கான ‘மூவ்’கள் மிகவும் ரகசியமாக நடக்கின்றன.

முதுமலை புலிகள் காப்பகம்
முதுமலை புலிகள் காப்பகம்

வெளியே தெரிந்தால் பலரும் போட்டிக்கு வந்துவிடுவார்கள் என்பதால், பழைய அதிகாரி ஒருவரே மீண்டும் இங்கு வருவதற்காக பவர் பாலிடிக்ஸை கையிலெடுத்திருக்கிறாராம். இதில் ஒரு லாபியாக பழங்குடிகளுக்கு வீடு கட்டியதில் முறைகேடுகள், யானை இறப்பு சர்ச்சைகள்... என கவுஷல் மீது புகார் கிளப்ப அவரது எதிர் முகாமினர் திட்டமிட்டிருக்கிறார்களாம். `டைகர் புராஜெக்ட்’டில் வரவிருக்கும் பெரும் தொகையை ஒருகை பார்க்கவே இந்த `மூவ்’ என்கிறார்கள் வனத்துறை வட்டாரத்தில்!

வனத்துறையா... `பணத்துறை’யா?

தலைமையைச் சுற்றும் பிரகாஷ்... அப்செட்டில் ஈரோடு முத்துசாமி!

ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருப்பவர் பிரகாஷ். கடந்த 2006-ம் ஆண்டு கட்சிக்குள் நுழைந்தவர், என்.கே.கே.பி.ராஜாவின் ஆசியுடன் இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்போதே அவர் `பணம் கொடுத்துத்தான் பதவியைப் பெற்றார்’ என்று சர்ச்சை வெடித்தது. அன்பில் பொய்யாமொழியின் நினைவுநாள் அன்று தவறாமல் திருச்சிக்குச் சென்று அஞ்சலி செலுத்துவது பிரகாஷின் வழக்கம்.

உதயநிதி
உதயநிதி

அந்த வகையில் மகேஷுக்கு நெருக்கமானார் பிரகாஷ். `அந்த நெருக்கத்தை வைத்துக்கொண்டு மாவட்டச் செயலாளரான முத்துசாமியை காலிசெய்ய காய்நகர்த்துகிறார்’ என்கிறார்கள். இப்போது மொடக்குறிச்சி தொகுதியைப் பெறுவதற்காக பிரகாஷ், உதயநிதியைச் சுற்றிச் சுற்றி வருவதால், முத்துசாமி தரப்பில் ஏகத்துக்கும் அப்செட் என்கிறார்கள்.

கெத்து காட்டுவாரா முத்துசாமி?

தளபதி இல்லம்... திறப்பாளர்: உதயநிதி! - இது கோவை கலாட்டா!

கோவை தி.மு.க கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரான மருதமலை சேனாதிபதி, சமீபத்தில் பிரமாண்டமான வீட்டைக் கட்டினார். அந்த வீட்டைத் திறந்துவைத்தவர் உதயநிதி. அந்த வீட்டுக்கு சேனாதிபதி வைத்திருக்கும் பெயர் `தளபதி இல்லம்.’

தளபதி இல்லம்
தளபதி இல்லம்

வீட்டின் கல்வெட்டில் `திறப்பாளர்: அண்ணன் உதயநிதி ஸ்டாலின்’ என்று பொறித்துள்ளார். எந்த இடத்திலும் கருணாநிதியின் பெயர் இல்லை. சேனாதிபதியின் `தொலைநோக்குப் பார்வை’யைப் பார்த்து உடன்பிறப்புகள் பிரமித்துப்போயிருக்கிறார்கள்!

கோட்டைக்குப் போக `மனக்கோட்டை’ கட்டுவாரோ!

ஜோசியர் அருள்வாக்கு... சிறையில் நாஞ்சில் முருகேசன்!

10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை சிறார் வதைசெய்த வழக்கில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாகர்கோவில் எம்.எல்.ஏ-வாக அவர் இருந்தபோது, அன்றைய நாகர்கோவில் நகரச் செயலாளர் நாஞ்சில் சந்திரனும் அவரும் சேர்ந்து ஒரு ஜோசியரை சந்தித்துள்ளனர். அந்த ஜோசியர் இருவரின் ஜாதகங்களையும் பார்த்திருக்கிறார். ``நாஞ்சில் சந்திரனின் அரசியல் எதிர்காலம் நன்றாக இருக்கும். ஆனால், நாஞ்சில் முருகேசனின் ஜாதகப் பலன் சுமார்தான்’’ என்று ஜோசியர் கூறினாராம்.

நாஞ்சில் முருகேசன்
நாஞ்சில் முருகேசன்

சில மாதங்களுக்குப் பிறகு நாஞ்சில் முருகேசனுக்கு அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்தாலும், அந்தப் பதவியில் அவரால் 13 நாள்கள் மட்டுமே நீடிக்க முடிந்தது. அப்போது ஜோதிடரின் அருள்வாக்கு நாஞ்சில் முருகேசனுக்கு நினைவுக்கு வந்ததாம். பதறிப்போனவர், தனக்குப் போட்டியாக நாஞ்சில் சந்திரன் உருவாகிவிடுவாரோ என்று எண்ணி, நகரச் செயலாளர் பதவியிலிருந்து சந்திரனைத் தூக்கிவிட்டாராம். ஆனால், இப்போது நாஞ்சில் முருகேசன் சிறையில் இருக்கிறார். சந்திரனோ அ.தி.மு.க மாவட்ட இலக்கிய அணித் தலைவர் பொறுப்பிலிருக்கிறார்.

அதானே அரசியல்!

`சசிகலா ரீ-என்ட்ரி’,  தினகரனுக்கு பா.ஜ.க-வின் `ஸ்கெட்ச்..!’ - டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்

குலசேகரப்பட்டினம் ஏவுதளம்... பா.ஜ.க-வின் ராக்கெட் பிராஜெக்ட்!

`தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும்’ என்பது அந்த மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை. கோரிக்கை விரைவில் நிறைவேறப் போகிறதாம். செப்டம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு அடிக்கல்நாட்டு விழாவை ஏற்பாடு செய்யும்படி பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது. ஏற்கெனவே இந்தத் திட்டம் தங்களால்தான் நிறைவேறியது என்று தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் மாறி மாறி உரிமை கொண்டாடிவரும் நிலையில், இதை முன்வைத்து பா.ஜ.க பெரிய அளவில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளது. ராக்கெட் ஏவுதளம் அமைவதையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொழிற்சாலைகளும் அமைக்கப்படும்; லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதைக் கையிலெடுக்கத் திட்டமிட்டிருக்கும் பா.ஜ.க., தென் மாவட்டங்களில் மட்டும் குறைந்தது எட்டு தொகுதிகளையாவது கைப்பற்றிவிட வேண்டும் என்கிற முனைப்பில் தீவிரமாக இருக்கிறது.

ராக்கெட் வேகம்னு சொல்லுங்க ஜி!

``நாளை நமதே!’’ - ஜெர்க் ஆன முருகன்!

பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி மோதல் தொடர்கிறது. ஆனாலும், `கூட்டணியை முழுவதுமாக உடைத்துவிட வேண்டாம்’ என்று பா.ஜ.க-வின் சில தலைவர்கள் எல்.முருகனிடமும், தேசியச் செயலாளர் பி.எல்.சந்தோஷிடமும் கூறியிருக்கிறார்களாம்.

எல்.முருகன்
எல்.முருகன்

``கூட்டணியில் 40 சீட் கேட்போம். அவர்கள் தந்தால் நமக்கு லாபம்தானே... தராவிட்டால் பார்த்துக்கொள்ளலாம். தைரியமா இருங்க ஜி, நாளை நமதே’’ என்று உசுப்பிப்பேற்றியிருக்கிறார்கள்.

இப்படி உசுப்பேத்தி... உசுப்பேத்தியே கட்சியை ரணகளம் பண்ணிவெச்சிருக்காங்க!

அடுத்த கட்டுரைக்கு