Published:Updated:

முதல்வர் Vs வைத்திலிங்கம்... ஜல்லிக்கட்டு அறிக்கை Vs மல்லுக்கட்டும் அரசு! கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார்
கழுகார்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடிய கூட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பினார் கழுகார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடிய கூட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பிய கழுகார், ``இவர்கள்மீது கோபப்படுவதா... இல்லை இந்தளவுக்கு குடிக்கு அடிமையாகிக் கிடக்கிறார்களே என்று பரிதாபப்படுவதா எனத் தெரியவில்லை'' என்று வருத்தத்துடன் மற்ற செய்திகளைப் பகிர ஆரம்பித்தார்...

ரேஸில் ஜெயித்த இரண்டு ஏ.டி.ஜி.பி-க்கள்!

ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மாநில அரசு என்ன பதவி உயர்வு வழங்கியிருந்தாலும், அகில இந்திய அளவில் மத்திய உள்துறை தரும் பதவி உயர்வு அங்கீகாரம்தான் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு முக்கியமானது. சுமார் 80 பேர் 1991-ம் வருடம் இந்தியாவில் ஐ.பி.எஸ் பணியில் நுழைந்தனர். அவர்களில் தமிழகத்தில் மட்டும் 5 பேர் கூடுதல் டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கின்றனர். சில நாள்களுக்கு முன்பு மத்திய உள்துறை 80 பேருடைய பூர்வீகத்தை அலசி ஆராய்ந்து 17 பேருக்கு கூடுதல் டி.ஜி.பி அந்தஸ்தை வழங்கியிருக்கிறது. அம்ரேஷ் பூஜாரி, ஜெயந்த் முரளி ஆகியோருக்கு தற்போது ஓகே ஆகியிருக்கிறது. அவர்ளுக்கு தமிழக அரசு தந்த கூடுதல் டி.ஜி.பி அந்தஸ்தை மத்திய உள்துறையினர் அங்கீகரித்துள்ளனர்.

பாஸ் கொடுங்க பாஸ்!

`வந்தே பாரத்’ திட்டம் மூலம் அழைத்துவரப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்: என்னென்ன முன்னெச்சரிக்கைகள்?

தொழில்துறையில் பயங்கர குளறுபடியாம். சென்னை எல்லையையொட்டி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் உள்ளன. சொந்தமாகத் தொழில் நடத்தும் சிலருக்கு வீடு செங்கல்பட்டிலும் தொழிற்சாலை சென்னையிலும் இருக்கும். சிலருக்கு சென்னையில் வீடும் தொழிற்சாலை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என வேறு மாவட்டங்களிலும் இருக்கும். இவர்கள் தினமும் மாவட்ட எல்லையைக் கடந்து செல்ல வேண்டும்.

ஆனால், ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட பின்பும் கடந்த ஒருவாரமாக இவர்களில் பலரும் பாஸ் வாங்க முடியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனராம். இந்த விஷயத்தை மீடியாவைச் சேர்ந்தவர்கள் தொழில்துறை அமைச்சர் சம்பத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அவர் தனது பி.ஏ-வை கைகாட்டுகிறாராம். பி.ஏ-வைக் கேட்டால், தொழில்துறை செயலாளர் முருகானந்தத்தைக் கைகாட்டுகிறாராம். மொத்தத்தில், பாஸ் கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு முதல்வர்தான் தீர்வு காண வேண்டும் என்று புலம்புகின்றனர் தொழில் நிறுவனம் நடத்துகிறவர்கள்.

அமைச்சருக்கு சலாம்... ஏட்டுக்கு சவுக்கடியா?

நாகை மாவட்ட காவல் நிலையங்களில் இருந்த மதுபானங்களை அழிக்க வேண்டும் என்று அண்மையில் உத்தரவிட்டார் நாகை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம். கடலோரக் காவல் நிலையத்தின் ஏட்டு ஒருவர், அதில் நான்கு பாட்டில்களைச் சுட்டுவிட்டதாகப் புகார் எழுந்தது. உடனே, அவரை, ஆயுதப்படைக்கு மாற்றினர். அதுமட்டுமல்லாது உயர் அதிகாரி லெவலில் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்களாம் எஸ்.பி ஆபீஸ் அதிகாரிகள்.

இந்தநிலையில், ஆளுங்கட்சி புள்ளி ஒருவருக்குச் சொந்தமான டிராக்டரை திருட்டு மணல் கடத்திச் செல்லும்போது போலீஸார் பிடித்துவிட்டார்களாம். உடனே, அமைச்சரிடமிருந்து எஸ்.பி ஆபீஸுக்கு போன் வந்ததாம். இதையடுத்து மைக்குகளில் உத்தரவுகள் பறந்ததாம். திருட்டு மணலை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே கொட்டிவிட்டு டிராக்டரை உடனடியாக விடுவித்துவிட்டார்களாம். நமக்கு ஒரு சட்டம் ஆளுங்கட்சி புள்ளிகளுக்கு ஒரு சட்டமா என்று போலீஸாரே புலம்புகின்றனராம்.

ஜல்லிக்கட்டு அறிக்கை... மல்லுக்கட்டும் அரசு!

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையில் 1,951 பேர் விசாரிக்கப்பட்டனர். 1,500 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஜனவரி 20-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசிடம் அளிக்கப்பட்ட பிறகு, அது சட்டசபையில் தாக்கல் செய்யப்பட வேண்டும். கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். “அரசுக்கு எதிரான விஷயங்கள் அறிக்கையில் இருப்பதால் அதைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள்” எனக் கோட்டையில் பேச்சு ஓடுகிறது.

முதல்வர் vs வைத்திலிங்கம்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாலைகளை 5 வருடங்கள் பராமரிக்கும் வகையில் புதிய திட்டத்துக்கு அரசாணை வெளியிட்டார்கள். இதற்கான டெண்டரை ஆன் லைனில் நடத்தவும் அறிவிப்பு வெளியானது. இதை எதிர்த்து, தஞ்சையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கின்றனர். இப்படித் திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதற்குப் பின்னணியில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும் ராஜ்யசபா எம்.பி-யுமான வைத்திலிங்கம் செயல்படுவதாக அரசு நினைக்கிறதாம்.

வைத்திலிங்கத்தின் மகன் பிரபு சாலை அமைக்கும் பணிகளுக்கான டெண்டர் எடுத்துச் செய்து வருகிறார். அதோடு, வைத்திலிங்கத்துக்கு நெருக்கமான சிலரும் தஞ்சை மாவட்டத்தில் இந்தப் பணிகளைச் செய்து வருகிறார்களாம். எனவே, இந்த விவகாரத்தில் முதல்வருக்கும் வைத்திலிங்கத்துக்கும் மோதல்கள் நடந்ததாம். “வைத்திலிங்கத்துக்கும் முதல்வருக்கும் இடையே நடக்கும் பனிப்போர் இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது” எனக் கட்சியினர் நொந்துகொள்கின்றனர்.

மீனாட்சித் திருக்கல்யாணம்... கோழிக்கறி விநியோகம்... சிக்கலில் பா.ஜ.க!

மதுரை ஊமச்சிகுளம் பகுதி பா.ஜ.க இளைஞரணி சார்பாக வழங்கப்பட்ட கொரோனா நிவாரணத்தில் அரிசியுடன் ஒரு கிலோ கோழிக்கறியும் வழங்கப்பட்டது அந்தக் கட்சிக்குள்ளேயே சர்சையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இவர்கள் கோழிக் கறி வழங்கிய தினம் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நாளாம். சித்திரைத் திருவிழா தொடங்கிய நாளிலிருந்து பலர் விரதம் இருந்தார்கள். இந்தநிலையில், `பா.ஜ.க-வினரே கோழிக் கறி வழங்கி, சித்திரைத் திருவிழாவின் புனிதத்தைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றனர். மாநிலச் செயலாளரே அதை வழங்கியிருக்கிறார்'' என்று மாநில மற்றும் தேசியத் தலைமைக்குச் சிலர் புகார் அனுப்பியிருக்கின்றனர். நிவாரணப் பொருள்களுக்கான உதவிகளை வழங்கியவர், பா.ஜ.க மாநிலச் செயலாளர் ஸ்ரீனிவாசன்தான். இவர், முரசொலி நில விவாகரத்தை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்குக் கொண்டு சென்று பரபரப்புக் கிளப்பியவர்.

வாங்கிய பொருளுக்கு பணம் கேட்டால் வழக்கு!

நாகை மாவட்டத்தின் வட திசையில் உள்ள காவல் நிலையத்தின் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர், வணிக நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு பொருள்களை வாங்கிக்கொண்டு பணம் கொடுப்பதில்லையாம். `கடைக்கு சீல் வச்சிடுவேன்’ என மிரட்டியே காரியம் சாதிக்கிறாராம். சமீபத்தில் ஒரு பழக்கடையில் 1,200 ரூபாய்க்குப் பழங்கள் வாங்கிய அந்த இன்ஸ்பெக்டர், ''கையில் பணமில்லை. ஏ.டி.எம்மில் எடுத்துத் தருகிறேன்" என்று கூறி சென்றுள்ளார். ஆனால், கொடுக்கவில்லையாம்.

சில நாள்கள் கழித்து கடைக்கு வந்த இன்ஸ்பெக்டரிடம் பணிவுடன் பணத்தைக் கேட்டிருக்கிறார் ஏழ்மையான அந்தப் பழக்கடைக்காரர். 700 ரூபாய் மட்டுமே கோபத்துடன் கொடுத்திருக்கிறார் இன்ஸ்பெக்டர். மறுநாள் காவல் நிலையம் வழியே டூவீலரில் சென்றுள்ளார் அந்தப் பழக்கடைக்கார். அவரை மடக்கி ஊரடங்கை மீறி ஊர் சுற்றியதாக வாகனத்தைக் கைப்பற்றி, வழக்கு போட்டுவிட்டது போலீஸ். வணிகர்கள் மத்தியில் இது கொந்தளிப்பை ஏற்படுத்த... இன்ஸ்பெக்டருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கத் தயாராகி வருகின்றனர் வணிகர்கள்.

மதுக் கடையைத் திறந்தது இதற்காகவா?

டாஸ்மாக்
டாஸ்மாக்

ஊரடங்கின்போது சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதுதொடர்பாக நெல்லை தாழையூத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துராமன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு போட்டார். 'ஊரடங்கின்போது தமிழகம் முழுவதும் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு மதுபான விற்பனையில் மோசடி நடந்திருப்பதால் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என மனுவில் வலியுறுத்தி இருந்தார். ஸ்டாக் எடுக்கப்படாத நிலையில், மதுபானக் கடைகள் மூடப்பட்டன. நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டால் கடைசிநாள் விற்பனையான பணத்தின் மதிப்பும் கடைகளில் உள்ள இருப்பும் வித்தியாசப்படும். இது அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால் பலத்தை எதிர்ப்புகளையும் மீறி அவசரமாக மதுக் கடைகளை அரசு திறந்தாக ஒரு பேச்சு அடிபடுகிறது.

தடுப்புச் சுவர்... வேலூர் கலெக்டர் அப்செட்!

வேகமான செயல்படக்கூடிய வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் கடந்த ஒரு வாரமாக சைலன்ட். அண்டை மாநிலமான ஆந்திராவிலிருந்து வேலூர் மாவட்டத்துக்குள் வாகனங்கள் நுழைவதைத் தடுக்கத் தமிழக எல்லையில் தடுப்புச் சுவர்களைக் கட்ட உத்தரவிட்டார் சண்முகசுந்தரம். ஆந்திர அரசு இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தியதால் 24 மணி நேரத்துக்குள் தடுப்புச் சுவர்களை இடித்து அகற்ற கலெக்டரை நிர்பந்தப்படுத்தியது அரசு.

குடி குடியைக் கெடுக்கும்! நேற்று... இன்று... நாளை ஒரு மீள் பார்வை- மயக்கம் என்ன? - 1 #BanTasmac

உடல் உழைப்பு, கட்டுமான பொருள்கள், நேரம் விரயமானதுதான் மிச்சம் என்று கலெக்டரிடம் கடிந்துகொண்டார்களாம். எல்லையில் வெடித்த தடுப்புச் சுவர் விவகாரமே அவரின் மௌனத்துக்குக் காரணம் என்கின்றனர். இந்த விவகாரத்துக்கு முன்னதாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் மரணமடைந்த தகவலை வேலூர் சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகம் தாமதமாகத் தெரியப்படுத்தியதால் கலெக்டர் கோபமடைந்தார். அதையடுத்து, சி.எம்.சி மருத்துவமனையின் தவறுகளை கலெக்டர் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டினார். இதனால் ஏற்பட்ட விளைவுகளும் கலெக்டர் மௌனத்துக்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் சிலர்.

அர்ஜுனனுக்கு வந்த சோதனை!

கோவை உக்கடம், முத்தணண்குளம், சீரநாயக்கன்பாளையம் பகுதிகளில் நீர்நிலை அருகே வசித்தவர்களுக்கு மலுமிச்சம்பட்டி அருகே அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படிக் குடி வந்தவர்களின் ஓட்டுகள் பழைய தொகுதிகளில்தான் உள்ளன. வாக்குகளைத் தக்க வைத்துக்கொள்ள அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அருண்குமார், அம்மன் அர்ஜுனன் ஆகியோர் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்களது தொகுதிகளில் வரும் மக்களை மட்டும் பட்டியல் எடுத்து, நிவாரணப் பொருள்களை வழங்கினார்கள்.

அம்மன் அர்ஜுனன் வழங்கிய பொருள்களைவிட அருண்குமார் வழங்கிய பொருள்கள் அதிகம் என்பதால் பிரச்னை வெடித்தது. அதன்பின் அம்மன் அர்ஜுனன் வழங்கிய பொருள்கள் தரமில்லாமல் இருந்ததாகப் புகார் கிளம்பியது. “என்னய்யா பொருள் கொண்டு வந்துருக்கீங்க” என்று அம்மன் அர்ஜுனன் ஆதரவாளர்களைக் கிழி கிழி என்று கிழித்துவிட்டனர். இதனால், அம்மன் அர்ஜுனன் ஆதரவாளர்கள் பொருள்களைத் திருப்பி எடுத்துச் சென்றுவிட்டனர். இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அம்மன் அர்ஜுனன் வெறுத்துப் போனார்.

``அமைச்சர் எனக்குக் கொஞ்சம்தான் உதவி செஞ்சார். மீதி என் கை காசைப் போட்டு பண்ணிக்கிட்டு இருக்கேன். இதுக்கே ரூ.2.40 கோடி செலவாகிருச்சு. என் சக்திக்கு மீறி என்ன பண்ண முடியும்?” என்று புலம்புகிறார் அம்மன் அர்ஜுனன். அதே நேரத்தில், பொருள்கள் சரியில்லை என்று புகார் சொன்ன பெண்ணை தேடிப் பிடித்துக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, ``நான் யாரையும் புண்படுத்தறதுக்கு அப்படிச் சொல்லலை. சிலர் என்னை அப்படியெல்லாம் பேசச் சொன்னாங்க” என்று பேக் அடிக்க வைத்துவிட்டார்களாம்.

ஜெ நினைவு இல்ல சர்ச்சை... எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் விஷயத்தில் என்ன நடந்தது தெரியுமா?

நுண்ணறிவு பிரிவுக்கு நடந்த போட்டி

திருச்சி மாநகர காவல் நுண்ணறிவு உதவி கமிஷனர் கபிலன் கடந்த வாரம் ஓய்வு பெற்றார். அவர் இடத்தைப் பிடிக்க ஏக போட்டி. தனக்கு நெருக்கமான சீதாராமனுக்கு, தான் வகித்த பதவியைப் பெற்றுத்தர காய் நகர்த்தினார் கபிலன். நுண்ணறிவு பிரிவில் போதிய அனுபவம் இல்லாததால் சீதாராமனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மத்திய மண்டல உதவி கமிஷனர்களான பாலமுருகன், பிரான்ஸிஸ் சேவியர், சுகுமார் எனப் பலரும் மோதினார்கள். திருச்சி கமிஷ்னர் வரதராஜூ, டி.ஐ.ஜி அமல்ராஜ் ஆகியோரின் சாய்ஸாக இருந்தது ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் ராமச்சந்திரன். ‘பலரும் போட்டிப்போடும் நிலையில், அந்த இடம் தனக்கு வேண்டாம்.’ என கமிஷ்னரின் சிபாரிசை ஏற்க மறுத்துவிட்டாராம் ராமச்சந்திரன். இறுதியில் வீரமணி என்பவரை நியமித்துவிட்டனர்

அடுத்த கட்டுரைக்கு