Published:Updated:

கறார் கார்த்தி சிதம்பரம்... ஓரங்கட்டப்பட்ட டி.ஜி.பி-க்கள்... டி.என்.பி.எஸ்.சி தேர்வு குழப்பம்... கழுகார் அப்டேட்ஸ்!

``எனக்கு அடுத்து ஒரு மீட்டிங் இருக்கிறது. செய்திகளை விரைவாகச் சொல்லிவிடுகிறேன்” என்றபடி வாட்ஸ்அப் ஸ்கீரினில் தோன்றினார் கழுகார்.

புதிய தேர்வுகள் வரும்...பழைய தேர்வுக்கான முடிவுகள் வராதா?

TNPSC
TNPSC

2018-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி-யால் அறிவிக்கப்பட்ட குரூப்-2 மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு முடிந்து, நேர்காணல்களும் நடத்தப்பட்டுவிட்டன. ஆனால், தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால், தேர்வெழுதியவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். `அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது நீட்டித்தாலும்கூட திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும்’ என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது. ``அட்டவணையில் உள்ள தேர்வுகள் நடத்துவதில் காட்டும் ஆர்வத்தை நடத்தி முடித்த தேர்வுகளின் முடிவுகள் வெளியிடுவதில் காட்டவில்லையே ஏன்?” என்று தேர்வு எழுதியவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

உரசும் உச்ச அதிகாரிகள்!

தமிழக சுகாதாரத் துறையில் உச்சத்தில் இருக்கும் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடையே உரசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாம். குறிப்பாக, நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியாக அறியப்பட்ட அந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது `மருந்து கொள்முதலில் ஊழல்’ என்கிற குற்றச்சாட்டை மற்றொரு அதிகாரி கசிய விட்டு வேடிக்கை பார்க்கிறாராம்.

கறார் கார்த்தி சிதம்பரம்!

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறந்த தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஸ்டாலின், ராமதாஸ், திருமாவளவன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் மதுக்கடைகளை திறந்ததற்கு எதிராக கருத்துகளை வெளிப்படுத்திய நிலையில், ``பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் தோல்வியில்தான் முடியும்’’ என்று சொல்லி அதிரவைத்திருக்கிறார் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி-யான கார்த்தி சிதம்பரம். இது சிவகங்கை காங்கிரஸ் மற்றும் தி.மு.க தொண்டர்கள் இடையே முணுமுணுப்பை ஏற்படுத்திவிட்டது. ``மதுபானங்களைத் தடை செய்தால் கள்ளச் சாராயம் பெருகும் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். தன்னுடைய கருத்திலிருந்து அவர் விலகமாட்டார்” என்று அவரது ஆதரவாளர்கள் விளக்கம் கொடுக்கின்றனர்.

டி.ஜி.பி-க்கள் ஓரம் கட்டப்பட்டது இதற்குதானா?

சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யான திரிபாதியைத் தவிர்த்து தமிழகக் காவல்துறையில் 11 டி.ஜி.பி-க்கள் உள்ளனர். அவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும்படியான பதவிகளில் இல்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் இந்த 11 பேரையும் எங்குமே அழைக்கவில்லை. கூடுதல் டி.ஜி.பி மற்றும் ஐ.ஜி ரேங்கில் உள்ளவர்களைத்தான் சிறப்புப் பணிக்கு அனுப்புகின்றனர். `சிறப்பு பணிகளின்போது முதல்வர் அலுவலக அதிகாரிகளுடன் நேரடியாக பேச வேண்டிவரும். அப்போது தங்களது நிர்வாகத் திறமையைக் காட்டி நல்ல பெயர் எடுத்துவிடுவார்கள்’ என்கிற அச்சம்தான் அந்த 11 பேரையும் ஒரங்கட்டியதற்குக் காரணம் என்கிறார்கள் காக்கிகள் வட்டாரத்தில்!

2021 சட்டமன்றத் தேர்தல்... ஊடக வழி பிரசாரங்கள்... எந்தக் கட்சிக்கு சாதகம்? #2021TNElection

இது ராஜேஷ்தாஸுக்குத் தெரியுமா?

கொரோனா ஊரடங்கில் டாஸ்மாக் மூடப்பட்டதால் பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சத் தொடங்கிவிட்டனர். சில இடங்களில் மட்டுமே நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். கிடைக்கிற லாபத்தில் ஒரு பங்கை போலீஸ் உண்டியலில் போட்டு விடுகிறார்களாம் கள்ளச்சாராய வியாபாரிகள். காவல்துறையையும், மதுப்பிரியர்களையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்துவதால் கள்ளச்சாராய விற்பனை அமர்க்களமாக நடக்கிறது. இந்தச் சூழலில், மதுவிலக்குப் பிரிவு சிறப்பாகச் செயல்படுகிறது என முதல்வர் அலுவலகம் பாராட்டியதைக் கேள்விப்பட்டு காவல்துறை அதிகாரிகள் சிலர் சிரிக்கின்றனர். இந்தத் தகவல் மதுவிலக்குப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி-யான ராஜேஷ்தாஸுக்குத் தெரியுமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மது ஆலைகளுக்கான ஆர்டர்... சங்கேத வார்த்தை!

கோட்டையின் கோல்டு பிரதிநிதியின் மருமகன்தான் மதுபான நிறுவனங்களுக்கான ஆர்டர்களை ஒகே செய்கிறவராம். கிஃப்ட் வந்ததும் துண்டு சீட்டில் பென்சிலில் கிறுக்கி கொடுத்து அனுப்புவாராம். அதுதான் சங்கேத வார்த்தை. இதே பாணியைத்தான், இதற்கு முந்தைய கோட்டை பிரதிநிதியின் இளவலும் பின்பற்றினாராம்.

சசியை வரவேற்க முதல் ஆள் ரெடி!

சசிகலா
சசிகலா

சசிகலாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க-வில் தென்மாவட்ட பிரமுகர்கள் குரல் உயர்த்த ஆரம்பித்துள்ளார்களாம். எப்போதுமே ஏடாகூடமாகப் பேசும் அமைச்சர், முதல்வரிடமே அடிக்கடி மல்லுக்கட்டும் அமைச்சர் என இருவர் ஏற்கெனவே சசிகலா ஆதரவு மனப்பான்மையை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர். அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மணிகண்டனும் லேட்டஸ்ட்டாக இவர்களுடன் இணைந்துள்ளார். மீண்டும் அமைச்சர் பதவி தரப்படும் என்கிற வாக்குறுதி நிறைவேற்றப்படாத கடுப்பில் இருக்கும் அவர், சசிகலா விடுதலை ஆனதும் முதல் ஆளாக அவரை வரவேற்கப் போவாராம்.

அதிருப்தியில் துறை உச்சங்கள்!

டாஸ்மாக் மேல் முறையீட்டு விவகாரம் தொடங்கி கல்வித்துறையில் டெண்டர் விவகாரம் வரை அதிருப்தியில் இருக்கிறார்களாம் சம்பந்தப்பட்ட துறையின் உச்சங்கள். டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல் செய்த மேல்முறையீட்டு மனுவில் தவறு உள்ளது என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, `எங்களை கலந்து ஆலோசிக்காமல் செய்தால் இப்படிதான்’ என்று முணுமுணுக்கிறதாம் டாஸ்மாக் உச்சத் தரப்பு. அதேபோல கல்வித்துறையில் சில டெண்டர்கள் தொடர்பாக துறையின் தலைமைக்கே தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டனவாம். இன்னொரு பக்கம் மின்சாரத்துறையில் முக்கிய அதிகாரி ஒருவர் துறையின் தலைமைக்கே கட்டுப்படுவதில்லையாம். எல்லாவற்றுக்கும் காரணம், முதல்வர் அலுவலகத்தில் இருக்கும் இருக்கு இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான்; அவர்கள் சொல்வதை மட்டும்தான் முதல்வர் கேட்கிறார் என்கிறார்கள் அதிருப்தியில் இருக்கும் மற்ற துறையினர்.

முதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்... யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு