Published:Updated:

`முதல்வரின் முகவரி' : எப்படி செயல்படப் போகிறது ஸ்டாலின் அரசு உருவாக்கிய புதிய துறை?

முதலமைச்சரின் தனிப்பிரிவு, உங்கள் தொகுதியில் முதல்வர் உள்பட முதல்வரின் குறைதீர் துறைகளை ஒருங்கிணைத்து ‘முதல்வரின் முகவரி’ என்று ஒரு புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த புதிய துறை? இந்த புதிய துறை எப்படி செயல்படப்போகிறது?

முதலமைச்சரின் குறைதீர்ப்புத் துறைகளை ஒருங்கிணைத்து ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இதற்கான அராசணை வெளியிடப்பட்டுள்ளது. ‘முதலமைச்சரின் தனிப்பிரிவு’, ‘முதலமைச்சரின் உதவி மையம்’, ‘ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு’, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை’ ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது

ஷில்பா பிரபாகர் சதிஷ்
ஷில்பா பிரபாகர் சதிஷ்

முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அலுவலரான ஷில்பா பிரபாகா் சதிஷ் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் தனிப்பிரிவில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள சிறப்பு அலுவலர் மற்றும் தனிப்பிரிவின் கீழ் தற்போது உள்ள பல்வேறு அலுவலகப் பிரிவு அலுவலர்கள், முதல்வரின் முகவரி துறையின் கீழ் செயல்படும் அலுவலர்கள் ஆகியோர் முதல்வரின் முகவரி துறையின் கீழ் பணிபுரிவார்கள். முதல்வரின் கட்டுப்பாட்டில் இந்த புதிய துறை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் முதல்வரின் முகவரி துறைக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்குகிற ஒருங்கிணைப்புத் துறையாக பொதுத்துறை செயல்படும் என்றும், பொதுத் குறைதீர்ப்பு மேற்பார்வை அலுவலர்களுக்கு தேவைப்படும் அனைத்து கட்டமைப்பு வசதிகள், தளவாடங்கள் மற்றும் பிற வசதிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தகவல் அழைப்பு மையம், 1100 என்ற உதவி எண் ஆகியவை மனுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்காகவும், தகவல்கள் பெறுவதற்காகவும், மனுக்களைப் பதிவுசெய்வதற்காகவும் இதர பணிகளுக்காகவும் இனி முதல்வரின் முகவரி துறையின் கீழ் இயங்கும் என்றும், அன்றாட செயல்பாடுகள் குறித்து பொதுத்துறை செயலாளர் உடன் கலந்தாலோசித்து முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலர் முடிவு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய துறை உருவாக்கப்பட்டிருப்பதன் நோக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து தலைமைச்செயலக வட்டாரத்தில் பேசியபோது, “முதல்வரின் முகவரி என்ற துறையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள முதல்வரின் தனிப்பிரிவு உள்ளிட்ட துறைகள் மற்றும் பிரிவுகள் என எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான செயல்பாடுகளைக் கொண்டவை. இவற்றுக்கு வரக்கூடிய மனுக்களும் கோரிக்கைகளும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. இதனால், அலுவலர்களுக்கு வேலைப்பளு, காலவிரயம், காலதாமதம் ஆகியவை ஏற்படுகின்றன. இதைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த பிரிவுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வரின் நேரடிப் பார்வையில் இயங்கும் என்பதால், வரக்கூடிய மனுக்களும் கோரிக்கைகளும் விரைந்து தீர்க்கப்படும்” என்றனர்.

கொரோனா மரணம்: `தமிழகத்தில் ரூ.50,000 இழப்பீடு... மற்ற மாநிலங்களில் எப்படி?!'

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். “பொதுமக்களிடமிருந்து அரசுக்கு வரும் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. ‘முதல்வரின் முகவரி’ துறையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பிரிவுகளுக்கு பொதுமக்களிடமிருந்து ஏராளமான கோரிக்கைகள் வருகின்றன. அவற்றில், ஒரே நபரிடமிருந்து ஒரே கோரிக்கை மனு பல பிரிவுகளுக்கும் வருகின்றன. உதாரணமாக, பட்டா வழங்குமாறு கோரும் ஒரு நபர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஒரு மனுவை அனுப்புகிறார், அதே மனுவை உங்கள் தொகுதியில் முதல்வர் துறைக்கும் அனுப்புகிறார். அந்த மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் குறைதீர்ப்பு கூட்டத்திலும் அவர் அளிக்கிறார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

ஒரே மனுவை எல்லா இடங்களிலும் பரிசீலனைக்கு எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் மனித உழைப்பு வீணாவதுடன், காலவிரயமும் ஏற்படுகிறது. ஒரு நிமிடத்தில் முடிய வேண்டிய பணிக்கு நான்கு ஐந்து நிமிடங்கள் ஆகின்றன. ஒருங்கிணைந்த ஒரே துறையாக இப்போது உருவாக்கப்பட்டுள்ளதால், மனுக்களை பரிசீலிப்பதும் நடவடிக்கை எடுப்பதும் எளிதான பணியாக மாறும். கால விரயம் தவிர்க்கப்படும். மக்களுக்கான அரசின் சேவையும் செயல்திறனும் இன்னும் அதிகரிக்கும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு