Published:Updated:

“அ.தி.மு.க நாசமாகப்போனால் எனக்கென்ன?” - கூல் கருணாஸ்!

கருணாஸ்
பிரீமியம் ஸ்டோரி
கருணாஸ்

என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. வேண்டப்பட்டவர்களுக்கு விருதுகள் கொடுக்கிற வேலைகள் மட்டும் நடந்துகொண்டிருக்கின்றன

“அ.தி.மு.க நாசமாகப்போனால் எனக்கென்ன?” - கூல் கருணாஸ்!

என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. வேண்டப்பட்டவர்களுக்கு விருதுகள் கொடுக்கிற வேலைகள் மட்டும் நடந்துகொண்டிருக்கின்றன

Published:Updated:
கருணாஸ்
பிரீமியம் ஸ்டோரி
கருணாஸ்

மூன்றாவது முறையாக அ.தி.மு.க பிளவுபட்டு, தனித்தனி அணியாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ‘ஒன்றிணைவோம்’ என்று அழைப்பு விடுக்கிறார் ஓ.பி.எஸ்; ‘நோ’ சொல்லி மறுக்கிறார் இ.பி.எஸ். இந்தச் சூழலில், கடந்த ஆட்சியில் அ.தி.மு.க-வுடன் ஒட்டும் உறவுமாக இருந்துவந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவரும், நடிகருமான கருணாஸிடம் சமீபகால அரசியல் நிலவரங்கள் குறித்துச் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“அ.தி.மு.க-வில் ஏற்பட்டிருக்கும் பிளவை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அ.தி.மு.க-வின் இன்றைய நிலைமைக்கு முழுக்க முழுக்க பா.ஜ.க-தான் காரணம். கடந்தகால அ.தி.மு.க ஆட்சியின்போது முதல்வரில் ஆரம்பித்து அமைச்சர்கள், முன்னாள் - இந்நாள் எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் என 137 நபர்களின் ஊழல் ஜாதகத்தையும் பா.ஜ.க தயார்நிலையில் வைத்திருக்கிறது. எனவே, அவர்கள் சொல்கிறபடி ஆடவில்லை யென்றால், இவர்கள் அத்தனை பேர் மீதும் உடனடி நடவடிக்கை பாயும். எனவே, பா.ஜ.க நடத்தும் பொம்மலாட் டத்தில், அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் ஆடிக்கொண்டிருக் கிறார்கள். முதலில், அ.தி.மு.க நாசமாகப்போனால் எனக்கென்ன?”

“ஓ.பி.எஸ்-ஸுக்கு டெல்லி துணை இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?”

“அப்படியெல்லாம் இல்லை. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., சசிகலா, தினகரன் என யாரும் பா.ஜ.க-வுக்கு முக்கியமில்லை. அவர்களது கட்சியை தமிழகத்தில் வளர்க்க, அ.தி.மு.க-வை அழிக்கிறார்கள்... அவ்வளவுதான்.”

“உங்களையும் பா.ஜ.க அழைத்ததாகச் சொல்கிறார்களே?”

“ஆமாம்... ‘சதுரங்க வேட்டை’ படத்தில் வருவதுபோல ஆசையைத் தூண்டுவார்கள், அதில் மயங்கி விழுந்தோம் என்றால் அவ்வளவுதான். பெட்ரோலிய வாரியத்திலும், துறைமுக வாரியத்திலும் பதவி தருவதாகச் சொல்லி அழைத்தனர். மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டினால் வருவதாகச் சொல்லியிருந்தேன். ஆனால், அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை; எனவே நானும் பா.ஜ.க-வுக்குச் செல்லவில்லை.”

“அ.தி.மு.க பிளவுக்கு ‘சமூகரீதியான’ பிளவுதான் காரணம் என்று சொல்லப்படுகிறதே?”

“அ.தி.மு.க-வை சாதிக் கட்சியாக, இன்னும் சொல்லப்போனால் கவுண்டர் கட்சியாக மாற்றிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கி, முதலில் பங்கெடுத்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில், அப்போது சுயேச்சைச் சின்னமாக இருந்த இரட்டை இலைச் சின்னத்தில், மாயத்தேவர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அ.தி.மு.க-வுக்கு முதல் வெற்றியைத் தேடிக்கொடுத்த சமூகம் தேவர் சமூகம். அப்படிப்பட்ட சமூகத்தைப் புறக்கணிப் பது சரியல்ல. எடப்பாடியுடன் இருக்கும் தேவர் சமூக ஆட்களுக்கு துளியும் சமூகப் பற்றில்லை. ஒன்றாகச் சேர்ந்து ஊழல் செய்ததால், இன்றும் ஒன்றாக ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்.”

“எடப்பாடிக்கு எதிராகப் பேசுவதைப் பார்த்தால், நீங்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுக்கிறீர்களா?”

“வாய்ப்பேயில்லை (சிரிக்கிறார்). ஓ.பி.எஸ் பற்றி பேசுவதற்கே ஒன்றுமில்லை. என்றைக்கு அவர் ஒரு தலைவர்போல நடந்திருக்கிறார்... எடப்பாடி ஒருவகையில் சுயநலவாதி என்றால், பன்னீர்செல்வமும் சுயநலவாதிதான். தன்னை நம்பி வந்தவர்களையே கைவிட்டவர்.”

“அ.தி.மு.க நாசமாகப்போனால் எனக்கென்ன?” - கூல் கருணாஸ்!

“தி.மு.க அரசின் செயல்பாடுகள் பற்றி உங்கள் கருத்து?”

“என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. வேண்டப்பட்டவர்களுக்கு விருதுகள் கொடுக்கிற வேலைகள் மட்டும் நடந்துகொண்டிருக்கின்றன. பள்ளிக்கல்வித்துறை நல்ல ‘வளமான’ துறையாக மாறியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். டிரான்ஸ்ஃபருக்கான தொகையும், டெண்டருக்கான கமிஷனும் கடந்த ஆட்சியைவிட அதிகமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். ஊழல் புரிந்த முன்னாள் அமைச்சர்கள்மீது நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவாதம் கொடுத்தார். ஊழல் செய்தவர்களுக்கு தண்டனைப் பெற்றுக்கொடுப்பதும் ஊழலற்ற ஆட்சிக்கான அடையாளம்தான். அதை ஏன் ஸ்டாலின் மறந்துவிட்டார்... ஒருவேளை, கிடா வெட்டிப் பங்குச்சோறு பிரிக்கிறார்களோ!”

“முதல்வராக ஸ்டாலின் இருந்தாலும், உதயநிதி, சபரீசன் போன்ற பவர் சென்ட்டர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?”

“கலைஞர் ஆட்சியில் இருந்தபோதும் இதே போன்ற நிலை இருக்கத்தானே செய்தது... இது ஒன்றும் புதிதல்ல. மரம் வளர வளர கிளைகள் உருவாகத்தானே செய்யும்?”

“தி.மு.க-வுக்கும், பா.ஜ.க-வுக்கும் இடையே அரசியல்ரீதியான மறைமுக உறவு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?”

“இவர்களுக்குத் தேவை என்றால் டீ பார்ட்டிக்கு வர முடியாது என்பார்கள், தேவை ஏற்பட்டால் செல்வார்கள். தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மோடிதான் பிரதமர். தேசத்தின் அடையாளமாக இருக்கும் பிரதமர் வருகையின்போது கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டனர். இப்போது அதே பிரதமரை வாழ்த்தி வரவேற்கிறார்கள். இதுதான் ‘திராவிட மாடல்’ அரசியலா... பா.ஜ.க-வுக்கு அன்று எதிர்ப்பைக் காட்டிவர்கள்; இன்று இனிப்பைக் காட்டுகிறார்கள்.”

“அ.தி.மு.க பிளவுபட்டிருக்கும் வேளையில், தேவர் ஜயந்தியின்போது தங்கக் கவசத்தை யார் அணிவிப்பது என்பதில் குழப்பமிருக்கிறதே?”

“அ.தி.மு.க கட்சி நிதியிலிருந்து தங்கக் கவசத்தை பரிசளித்தார் ஜெயலலிதா. அப்போதே, `கட்சி சார்பற்று பொதுவாகக் கொடுத்திருக்கலாம்’ என்று நான் சொல்லியிருந்தேன். அ.தி.மு.க தொண்டர்களுடைய நிதியிலிருந்து, உழைப்பிலிருந்து உருவாக்கப்பட்ட கவசம் அது. அதில் அரசியல் செய்தார்களேயானால் சர்வ நாசம் அடைவார்கள். அது யாராக இருந்தாலும் 48 நாள்களுக்குள்ளாக அதன் பலனை அனுபவிப்பார்கள். நான் சொன்னது நடந்தது என்றால் நான்தான் தமிழகத்தின் மிகப்பெரிய சாமியார்... எழுதிவைத்துக்கொள்ளுங்கள்!”